பதிவு செய்த நாள்
03
ஆக
2022
12:08
திருநெல்வேலி: நெல்லையில்ஆடி 18ம்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு இன்று (3ம்தேதி) சீர்வரிசை வழங்கி ஆரத்தி நடக்கிறது. இந்தியாவில் நதிகளை தெய்வமாக வழிபடும் பாரம்பரியம் உள்ளது.
ஆடி மாதம் துவங்கும் தட்சிணாயனத்தில் நீர்நிலைகளில் விவசாயம் செழிக்கவும், வாழ்வு சிறக்கவும் வேண்டி மக்கள் வழிபாடு நடத்துவர். இதர விழாக்களை ஒதுக்கி விட்டு மக்கள் இறைவழிபாட்டில் ஈடுபடுவர். அம்மன் கோயில்களில் விழா நடக்கும். ஆடி மாதம் 18வது நாள், ஆடி 18ம்பெருக்கை முன்னிட்டு நெல்லையில் தாமிரபரணி நதியை கர்ப்பிணி போல பாவித்து கருப்பு வளையல், கருகுமணி, மஞ்சள், தேங்காய், பழம், இதர பூஜைப்பொருட்களை படித்துறையில் வைத்து பூஜை செய்து தாமிரபரணி நீரை தலையில் தெளித்து ‘ஜெய் தாமிரபரணி’ என பல முறை உச்சரித்து மங்கலப்பொருட்களை தாமிரபரணிக்கு படைப்பர். பெண்கள் குடும்பத்துடன் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு மாங்கல்ய சரடுகளைப் புதுப்பிப்பர். இதன் மூலம் பெண்களுக்கு மாங்கல்யத்துவம் நீடிக்கும், தம்பதி ஒற்றுமை, ஆயுள் விருத்தி ஏற்படும், மகிழ்ச்சி நிலவும் என்பது ஐதீகம். ஆடி 18ம்பெருக்கை முன்னிட்டு இன்று மாலை 4 மணிக்கு நெல்லை ஜங்ஷன், சிருங்கேரி சாரதா மண்டபத்தில் இருந்து பெண்கள் சீர்வரிசைப்பொருட்களுடன் தாமிரபரணி கரையில் உள்ள தைப்பூசமண்டபத்திற்கு வருகின்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்து ஆரத்தி நடக்கிறது. மக்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். உலக நதிகளில் நட்சத்திர அந்தஸ்து (விசாகம்) தாமிரபரணிக்கு மட்டும் உண்டு, நதி தேவதைகளில் மகாநதி என வியாச பகவான் தாமிரபரணியைப் போற்றுகிறார், தாமிரபரணியில் ஆடிப்பெருக்கை கொண்டாடுவது சிறப்பானது என பக்தர்கள் கூறுகின்ற னர். ஏற்பாடுகளை நெல்லை விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பினர் செய்துள்ளனர்.