Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ஸ்ரீரங்கம், சமயபுரம் கோவிலில் தைப்பூச விழா கோலாகல துவக்கம்!
ஜனவரி 18,2013
அ-
+
Temple images

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில், தைப்பூச திருவிழா கோலாகலமாக துவங்கியது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தைத்தேரோட்டம் வெகு பிரசித்திப் பெற்றது. தேரோட்டத்துக்கான முகூர்த்தக்கால் நேற்று காலை ஊன்றப்பட்டது. இன்று காலை, 6.20 மணி முதல், 7 மணிக்குள், மகர லக்னத்தில் கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவங்குகிறது. வரும், 21ம் தேதி மாலை, 6 மணிக்கு, நம்பெருமாள் கருட வாகனத்திலும், 24ம் தேதி திருச்சிவிகையிலும், உபயநாச்சியார்களுடன் பூந்தேரிலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஸேவை சாதிக்கிறார். 25ம் தேதி குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருள்கிறார். முக்கிய திருவிழாவான தைத்தேரோட்டம், 26ம் தேதி நடக்கிறது. அதிகாலை, 3.30 மணிக்கு, நம்பெருமாள் உபய நாச்சியாருடன் புறப்படாகி, 4 மணிக்கு தைத்தேர் மண்டபத்தை அடைகிறார். 5.50 முதல், 6.20 மணிக்குள், மகர லக்னத்தில் தேரில் எழுந்தருளுகிறார். 6.30 மணிக்கு தேர்வடம் பிடிக்கும் வைபவம் நடக்கிறது. சமயபுரம் சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தைப்பூசத் திருவிழா, நேற்று காலை, 7.30 மணியளவில், மகர லக்னத்தில், தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்ற வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்று மாலை, உற்சவ அம்மனுக்கு அபிஷேகமும், மஹா தீபராதனையும் நடந்தது. இரவு, மர கேடயத்தில் அம்மன் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 25ம் தேதி வரை, காலை, மாலை இருவேளைகளும் அம்மன் புறப்பாடாகி, பல்லக்கு, சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷ வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து, மீண்டும் மூலஸ்தானம் சென்றடைகிறார். வரும், 25ம் தேதி, பிரசித்திப்பெற்ற தை தெப்போற்சவம் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு, உற்சவ அம்மனுக்கு அபிஷேகம், 7 மணிக்கு மஹா தீபராதனை நடக்கிறது. இரவு, 8 மணிக்கு, திருத்தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, 11 மணிக்கு, திருவீதியுலா வந்து ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். மறுநாள் (26ம் தேதி) காலை, 9 மணிக்கு, கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி, வழிநடை உபயம் கண்டருளி, நொச்சியம் வழியாக வடதிருக்காவிரி (கொள்ளிடம்) சென்றடைகிறார்.

அரங்கன் சீர்: 26ம் தேதி மாலை, 6 மணிக்கு, அம்மன் தீர்த்தவாரியும், 7 மணி முதல், 9 மணி வரை, பக்தர்களுக்கு தரிசனமும் அளிக்கிறார். இரவு, 9 மணிக்கு, அண்ணன் ரங்கநாதரிடமிருந்து, தங்கை சமயபுரம் மாரியம்மன் சீர் பெறுகிறார். அதிகாலை, ஒரு மணிக்கு, மஹா அபிஷேகம் கண்டருளும் அம்மன், 3 மணி முதல், பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். 27ம் தேதி காலை, 6 மணிக்கு, கொள்ளிடத்தில் இருந்து, கோவில் ஆஸ்தான மண்டபத்தை அம்மன் வந்தடைகிறார். அம்மனுக்கு அபிஷேகம் நடந்தபின், கொடி இறக்கம் மற்றும் அம்மன் திருவீதியுலாவுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, இணை கமிஷனர்கள் ஸ்ரீரங்கம் கல்யாணி, சமயபுரம் தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.