Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தபுராணம் பகுதி-25
முதல் பக்கம் » கந்தபுராணம்
கந்தபுராணம் பகுதி-26
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 மார்
2011
05:03

அந்த அஸ்திரம் வீரபாகு உள்ளிட்ட அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யவே, ஆரவாரம் செய்த பானுகோபன் அவர்களின் கை, கால்களைக் கட்டி கடலுக்குள் தூக்கி வீசிவிட்டான். இந்த விபரம் முருகனுக்கு தெரிய வரவே, அவர் கோபத்துடன் தன் வேலாயுதத்தை கடல் மீது வீசி எறிந்தார். அது கண்டு கடலரசன் நடுங்கினான். அந்த வேல், மோகனாஸ்திரத்தின் பிடிக்கு அகப்பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எல்லாரையும் விடுவித்தது. கடலின் மேல்மட்டத்திற்கு வந்த பூதகணங்களும், வீரபாகுவும் முருகனை வாழ்த்தினர். தன்னை மடக்கிப்பிடித்த பானுகோபனை அழிப்பேன். அல்லது தீக்குளித்து இறப்பேன் என வீரபாகு சபதம் செய்தான். பானுகோபன் வெற்றிக்களிப்பில் தந்தையிடம் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒரு தூதுவன் வேகமாக வந்து வீரபாகு மீண்டும் தப்பி விட்டதைச் சொன்னான். அப்போது சூரனின் மகன் இரண்யன் வந்தான். தந்தைக்கு நல்ல புத்தி சொன்னான். சிவனால் தான் நாம் இவ்வளவு பாக்கியம் அடைந்தோம். அந்த சிவ மைந்தனையே அழிக்க துடிப்பது எவ்வகையிலும் நியாயமல்ல. மேலும், அவனை அழிக்கவும் முடியாது. இந்த முயற்சியில் நம் அசுரகுலம் அழிந்து விடும், என எச்சரித்தான். பத்மாசுரனோ பெற்ற மகன் மீதே எரிச்சல்பட்டான். இப்படியெல்லாம் பேசினால் அவனை விழுங்கி விடுவதாகச் சொன்னான். இரண்யன் வேறு வழியின்றி வீரபாகுவை எதிர்த்துச் சென்றான். ஆவேசமாகப் போரிட்டான். ஆனால், தாக்கு பிடிக்க முடியாமல் கடலுக்கு அடியில் மீன் வடிவில் ஒளிந்து கொண்டான். அடுத்து சூரனின் இன்னொரு மகனும், பத்ரகாளியின் பக்தனுமான அக்னிமுகன் போருக்கு கிளம்பினான். அவனுக்கே வெற்றி கிடைக்குமென அருள்பாலித்தாள் காளி. காளியே சொன்னபிறகு மாற்றாக என்ன நடந்து விடும் ? பராசக்தியின் அம்சமல்லாவா அவள் ! ஆனால், காளியின் வாக்கு இந்த இடத்திலே பொய்த்துப் போனது. வீரபாகு அக்னிமுகனை பந்தாடி விட்டான். தன் பக்தனைக் காப்பாற்ற காளியே சிங்கவாகனத்தில் வந்து வானில் நின்றபடி சூலத்துடன் வீரபாகுவை தாக்கினாள். தேவியே தன்னை எதிர்த்த நேரத்திலும் கூட வீரபாகு தயங்காமல் அவளுடன் போரிட்டான். பெண் என்பதால் அவளைக் கொல்லாமல் விண்ணில் பறந்து அவளது மார்பில் அடித்து கீழே தள்ளினான்.

காளிதேவி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சிங்கவாகனத்தில் ஏறி தன் இடத்திற்கு போய்விட்டாள். இதன் மூலம் காளி தோற்றதாக ஆகிவிடாது. அநியாயம் செய்வோர் நன்றாக இருக்கிறார்கள். நல்லவர்களைத் தான் தெய்வம் மேலும் மேலும் கஷ்டப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நம்மிடத்தில் அதிகமாகவே உண்டு. தவறு செய்தனாயினும் தன்னை வணங்கிய புண்ணியத்திற்காக காளி அவனுக்கு உதவினாள். அந்தக் காலம் முடிந்ததும் பின்வாங்கி விட்டாள். கெட்டவர்களுக்கு தெய்வம் துணை போவதில்லை என்பதையே இது காட்டுகிறது. காளி பின் வாங்கினாலும் அதுகண்டு கலங்காத அக்னிமுகன் வீரபாகுவுடன் கடுமையாக மோதினான். முடிவில் அவனும் விண்ணுலகையே அடைந்தான். தன் பிள்ளைகளையெல்லாம் பறிகொடுத்த பிறகு, தம்பி சிங்கமுகனை போருக்கு அனுப்பினான் சூரபத்மன். சிங்கமுகன் கொடூரமானவன். கந்தபுராண யுத்த காண்டத்தில் சிங்கமுகன் முருகனுடன் மோதிய காட்சியைப் படிப்பவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிங்கமுகன் ஆயிரம் சிங்கத்தலைகளை உடையவன். அவனுடைய மார்பைத் தகர்க்கவே முடியாத அளவுக்கு பலமைல் நீளமுள்ளதாக இருக்குமாம். முருகப்பெருமான் நேரில் களத்துக்கு வந்து விட்டார். இருவருக்கும் கடும் போர் நடந்தது. அவனது தலைகளை வெட்ட வெட்ட புதிது புதிதாக முளைத்தது. சிவனிடம் வரம் வாங்கும் போது, இவன் தன் தலைகளை வெட்டி யாகத்தில் போட்டவன். அதன் காரணமாக எத்தனை முறை வெட்டுப்பட்டாலும் மீண்டும் முளைக்கும் வரம் பெற்றவன். ஆனால், தன் சக்தியின் முன்னால் இந்த வரம் எடுபடாது என நிபந்தனை விதித்திருந்ததால், சிங்கமுகன் தன் தலைகளை இழக்க வேண்டியதாயிற்று.  முருகப்பெருமான் புதிது புதிதாக முளைத்த தலைகளைப் பார்த்து, இனி முளைக்காதே என அதட்டினார். அதற்குப் பயந்து அந்த தலைகள் மீண்டும் முளைக்கவில்லை. இப்படியாக 999 தலைகளை வெட்டிச் சாய்த்த பிறகு ஒரே ஒரு தலையுடன் போரிட்டான் சிங்கமுகன்.

தன் வேலாயுதத்தால் அந்த தலையைச் சீவி விட்டார் சிங்காரவேலன். சிங்கமுகனின் சரித்திரம் முடிந்தது. சிங்கமுகனின் மனைவியர்கள் எல்லாம் தீயில் மூழ்கி இறந்து விட்டனர். இறுதியாக சூரபத்மன் முருகனுடன் போருக்கு வந்தான். நான்கு நாட்கள் உலகமே நடுங்கும்படியான யுத்தம் நடந்தது. அப்போது கருணைக்கடவுளான கந்தன் விஸ்வரூபம் எடுத்தார். அவரது காலடியில் இந்த உலகம் கிடந்தது. எல்லாமே தனக்குள் அடக்கம் என்பதை அவர் அவனுக்கும், இந்த உலகத்துக்கும் காட்டினார். அந்தக் காட்சியால் சூரன் ஞானம் பெற்றான். அவனது துர்க்குணங்கள் மறைந்தன. கந்தனைக் கண்கொட்டாமல் பார்த்து வணங்கினான். பின்னர் கந்தன் தன் உருவைச் சுருக்குவே, தான் பார்த்த காட்சி அவனுக்கு மறந்து துர்க்குணம் தலை தூக்கியது. மீண்டும் போரிட்டான். கந்தன் வேலை எறியவே, அவன் மாமரமாக மாறி நின்றான். அந்த வேல் மரத்தை இரண்டாகக் கிழித்தது. அப்போது சூரன் ஒரு பகுதி மயிலாகவும், ஒரு பகுதி சேவலாகவும் மாறினான். மயிலை அடக்கி அதன் மீது ஏறி உலகமெல்லாம் வலம் வந்த முருகன். சேவலை தன் கொடியில் இடம் பெறச் செய்து விட்டார். தன் கணவரின் ஆயுள் முடிந்தது என்பதைத் தெரிந்து கொண்ட சூரபத்மனின் பட்டத்தரசி பத்மகோமளாவும் மற்ற மூவாயிரம் மனைவியரும் இறந்து போனார்கள். சூரபத்மன் முழு ஞானம் பெற்று முருகனுக்கே காலமெல்லாம் சேவகம் செய்தான். பகைவனுக்கும் அருளிய அந்த வண்ண வடிவேலனுக்கு, வெற்றிப் பரிசாக இந்திரன் தன் வளர்ப்பு மகள் தெய்வானையைத் திருமணம் செய்து கொடுத்தான். திருப்பரங்குன்றத்தில் நடந்த அந்த இனிய நிகழ்ச்சியை தேவர்கள் கண்டு மகிழ்ந்தனர். கஷ்டங்கள் வரும் போது அழைத்தால் நம்மை தேடி வருவான் வடிவேலன்.

 
மேலும் கந்தபுராணம் »
temple news
இந்து சமயத்தில் மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. அதில் ஒன்று கந்தபுராணம். வாசகர்களின் வசதிக்காக கந்தபுராணம் ... மேலும்
 
temple news
தன் காலில் கிடந்த காஷ்யபரை நோக்கி புன்முறுவல் பூத்தாள் மாயா.முனிவரே ! தாங்கள் என் காலிலேயே சரணடைந்து ... மேலும்
 
temple news
அந்த அன்பான வருடலில் ஆறுதல் பெற்று திரும்பினார் காஷ்யபர்.அங்கே அவரது தந்தை பிரம்மா நின்று ... மேலும்
 
temple news
முதியவராய் வந்தவர், வானத்ததில் எழுந்தருள ரிஷப வாகனம் ஓடோடி வந்து அவரைத் தாங்கியது. ஆம்... முதியவராக ... மேலும்
 
temple news
அழகாபுரி அரசன் குபேரன் அசுரப்படையின் அத்துமீறல் கண்டு அதிர்ந்து போனான். அவனுக்கு அசுரர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar