பதிவு செய்த நாள்
16
மார்
2011
12:03
சகோதரனின் நிலை கண்ட அவன் கொதித்துப் போனான். நண்பர்கள் மூலம் நடந்ததை அறிந்த அவன், ஒரு சிறுவனை இவ்வாறு கட்டிப்போட வெட்கமாக இல்லையா? என லட்சுமணனிடம் கேட்டான். லட்சுமணன் அப்போதும் கூட பொறுமையாக, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் குதிரையை கட்டிப்போட்டு தர மறுத்ததால் ஏற்பட்ட விளைவே இது என்பதை என எடுத்துச் சொன்னான். தன் பங்கிற்கு குசனும், ராமபிரானின் யாகம் நியாயமற்றது என்பதையும், மனைவியின்றி அஸ்வமேத யாகம் நடத்துவதை ஒருக்காலும் ஒப்புக்கொள்ள முடியாது என்றும், முடிந்தால் தங்களை வென்று குதிரையை அவிழ்த்துச் செல்லும்படியும் பிடிவாதமாகச் சொன்னான். பின்னர் நாகாஸ்திரத்தின் பிடியில் இருந்து கருடாஸ்திரத்தை ஏவி சகோதரனை விடுவித்தான். இருவரும் இப்போது லட்சுமணனுடன் போருக்கு தயாராயினர். இரண்டு சிறுவர்களுடன் போரிட வேண்டி வந்ததே என மனம் வருந்திய லட்சுமணன், அண்ணனின் உத்தரவை நிறைவேற்ற பல அஸ்திரங்களை அந்த சிறுவர்கள் மீது எய்தான். எல்லாவற்றுக்கும் பதிலடி கொடுத்த லவகுசர், இறுதியாக லட்சுமணனையே ஆயுதம் ஏதும் இல்லாமல் செய்தனர். இந்திரஜித்தை வென்ற அந்த மாவீரன், இளம் சிறுவர்கள் முன் அவமானப்பட்டு நின்றான். இதென்ன அதிசயம் என ஆச்சரியப்பட்டு நின்ற வீரர்களையும் ஆயுதமின்றி நிர்மூலமாக்கினர் லவகுசர். குனிந்த தலையுடன் லட்சுமணன் நிற்க, போர்க்களத்தில் இருந்து ஒருவன் மட்டும் தப்பித்து ராமபிரானிடம் ஓடினான்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி! ஒரு அதிசயத்தைக் கேட்டீர்களா! பத்து தலை ராவணனின் மகனும், யாராலும் வெல்ல முடியாத சக்தியுடையவனுமான இந்திரஜித்தின் மகனையே ஒரு அம்பால் தலையறுத்த நம் மாவீரர் லட்சுமணனை, சத்ருக்கனரை வென்ற அதே வீரச்சிறுவர்கள் வென்றார்கள் ஐயனே என்றான். எல்லாம் அறிந்த அந்த நாராயண மூர்த்தியின் அவதாரமான ராமபிரான், அப்படியா! நடக்க முடியாதது நடந்து விட்டதா? ஆஹா...அப்படியானால், அவர்களை வெற்றி கொள்ள யாருமே இல்லையா? சரி... ராமாஸ்திரம் ஒன்றே அவர்களை அடக்கும் சக்தியுடையது என்றால், அதை விடுப்பதைத் தவிர வேறென்ன வழி! நானே அவர்களை அடக்கி, குதிரையைக் கொண்டு வருகிறேன், என அவனிடம் சொல்லியனுப்பினார். லவகுசர் மிகுந்த ஆனந்தத்துடன் இருந்தனர். வால்மீகி முனிவர் தங்களுக்குப் போதித்த ராமாயண சரித்திரத்தில், லட்சுமணனின் திவ்ய பங்கு குறித்து குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். வெல்ல முடியாத இந்திரஜித்தை வென்ற லட்சுமணனே தங்களிடம் வீழ்ந்ததை எண்ணி மகிழ்ச்சியில் மூழ்கிப் போயினர். நண்பர்களின் நிலையை சொல்லவும் வேண்டாம். இங்கே இப்படியிருக்க, சீதாபிராட்டி லலிதா பூஜையைத் துவங்கினாள். ஒவ்வொரு நாளும் தாமரை மலர்களை மகன் கொண்டு வந்து கொடுக்க பூஜை அமர்க்களமாக நிறைவேறிக் கொண்டிருந்தது. ஒன்பது நாள் பூஜையில் எட்டுநாட்கள் கடந்து விட்டன.
தன் கணவனை அடைவது உறுதி என்ற நம்பிக்கையும் அவள் மனதில் தளிர்விட்டது. ஆனால், சோதனைகளையே சந்திக்கப் பிறந்தவள் அல்லவா அவள்! இந்த உலகத்தில் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத சந்தேகம் என்ற சோதனையையே அனுபவித்துக் கொண்டிருப்பவள் அல்லவா அந்த நல்லவள்! கணவன் என்ன தான் நல்லவன் என்றாலும், ஊரார் சொல்லுக்கு அஞ்சி, காட்டுக்கு அனுப்பி விட்டானே! இது ஒன்று போதாதா! ஊரார் தன்னை பழித்துத் தூற்ற! கட்டியவனே ஒதுக்கி விட்டான் என்றால், அவளிடம் ஏதோ தவறு இருக்கத்தான் வேண்டும் என்று நல்லவர்கள் கூட தன்னைப் பற்றி எள்ளி நகையாடுவார்களே! இப்படி இக்கட்டான சூழ்நிலையில் கண்ணீரே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருந்த ஜனககுமாரி...ராஜா வீட்டு குழந்தையான சீதா சற்றே மகிழ்ச்சியில் மூழ்கினாள் என்று தான் சொல்ல வேண்டும். ராமபிரான் அப்போது உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்தார். தான் நாராயண மூர்த்தி என்பதும், உலகில் தர்மத்தை நிலைநிறுத்த வந்ததையும், மீண்டும் வைகுண்டம் செல்லும் நாள் நெருங்குவதையும் உணர்ந்தார். ஆம்...லவகுசர் யாரென்பதை ஊராருக்கு அறிவித்தாக வேண்டும். அவர்களிடம் நாட்டின் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும், உலகையே காக்கும் தீரர்கள் அவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, என் தேவியின் கற்பின் மகிமையை அயோத்தி மக்கள் அறியச் செய்ய வேண்டும். சீதாதேவியை மீண்டும் அயோத்திக்கு வரவழைக்க வேண்டும். அவளது கற்பின் திறன் முன்னால் அருந்தததியின் கற்பும் வெட்கப்படும் என்பது எல்லாருக்கும் புலப்பட வேண்டும். இலங்கையில் எப்படி தீமூட்டி அங்கிருந்தவர்கள் சீதாவின் கற்புநெறியை உணர்ந்தார்களோ, அதே போல், அயோத்தி மக்களும் அவள் கற்புக்கரசி என்பதை மீண்டும் அவள் அனலுக்குள் மூழ்கி வெளிவருவதைக் காண வேண்டும், என முடிவெடுத்தார். பின்னர் ஒரு தூதனை அழைத்தார். தூதனே! நீ உடனடியாக வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் செல். அங்கே, சீதாபிராட்டி தங்கியிருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டு, அயோத்திக்கு வரும்படி நான் சொன்னதாக முனிவரிடம் சொல், என்றார். தூதன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். ஆம்...லட்சுமி மீண்டும் அயோத்தியில் கால் பதிக்கப் போகிறாள். ராமராஜ்யம் இன்னும் மேலோங்கி விளங்கப்போகிறது. உலகம் செழிக்கப் போகிறது என எண்ணியபடியே குதிரை ஒன்றில் ஏறி வால்மீகி ஆஸ்ரமம் நோக்கி விரைந்தான். அப்போது அஸ்தமன நேரம். ஆஹா...மீண்டும் சீதாபிராட்டி தீயில் குதிக்கப் போகிறாள். அவள் உடலை அக்னி சுடுவான்! இந்தக் கொடுமையைக் காணும் சக்தி எனக்கில்லை என்றபடியே சூரியபகவான் செவ்வானில் மறைந்து போனார்.