பதிவு செய்த நாள்
16
மார்
2011
12:03
ராமபிரானால் அனுப்பப்பட்ட தூதன், வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து, சீதாதேவியும், தாங்களும் அயோத்திக்கு எழுந்தருள வேண்டும் என ஸ்ரீராமன் என்னிடம் தகவல் சொல்லி அனுப்பியுள்ளார், என்றான். ஒரு மகாசரிதம் முடியப்போகிறது என்ற உணர்வு வால்மீகியை ஒருபுறம் வருந்தச் செய்தாலும், ஸ்ரீமன் நாராயணனும், அவரது தேவியான லட்சுமியும் பூலோகத்தில் படும் கஷ்டம் போதும் என்ற உணர்வு மேலோங்கி, அவர்களை வைகுண்டம் அனுப்பி வைக்க தானும் ஒரு காரணியாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியும் அடைந்தார். தூதனிடம், தூதனே! ஸ்ரீசீதாபிராட்டியார், தன் மணாளனை மீண்டும் அடைய வேண்டி, லலிதா விரதத்தை துவங்கியிருக்கிறாள். ஒன்பது நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். விரதம் முடிந்ததும், அவர்கள் நிச்சயம் ஒன்று சேர்வார்கள். ஸ்ரீராமச்சந்திரனிடம் இன்னும் சில நாட்கள் பொறுத்து நாங்கள் வருவதாகச் சொல்லி விடு, என்றார். தூதனும் சிரம்தாழ்த்தி விடை பெற்றான். லலிதா விரதம் எனப்படும் நவநாள் விரதம் வெற்றிகரமாக நிறைவேறியது. அந்த அம்பிகை சீதாபிராட்டிக்கு அருள்பாலித்தாள். சீதா! உன் கணவனை நீ காண்பாய். ஆனால், நீ யார் என்பதை உணர்ந்து கொள். பூமியில் பிறப்பது தெய்வாம்சமாயினும், அதற்கும் முடிவு உண்டு என்பதை நீ அறியாமல் இல்லை. நீ பூமாதேவி பெற்றெடுத்த மகள். உன் கணவனைக் கண்டு ஆசிபெறு. அயோத்தி மக்களின் முன்னால் உன் கற்புத்திறனை நிரூபி. பின்னர், உன்னைப் பெற்ற பூமாதேவியை அடைந்து விடுவாய். இந்த உலகம் உள்ளளவும் உன்னை வணங்கும், என ஆசியருளினாள். சீதாதேவி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அவள், வால்மீகி முனிவருடன் அயோத்திக்கு புறப்பட்டாள். சீதாதேவி வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த அயோத்திமக்கள் அவள் வரப்போகிறாள் எனத் தெரிந்ததும், ஆனந்தமாக வரவேற்பளிக்க காத்திருந்தனர். ஸ்ரீராமபிரான் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அந்த இனிய வேளையில், சீதாதேவியும், வால்மீகி முனிவரும் அரண்மனைக்கு வந்து கொண்டிருந்தனர். மெலிந்த தேகத்துடன் தலை குனிந்து வந்த சீதாவைப் பார்த்த அயோத்தி நகரப் பெண்கள் கண்ணீர் வடித்தனர். ஐயையோ! அரசனுக்கு மகளாகப் பிறந்து இவள் என்ன சுகத்தைக் கண்டாள்! ஜனகமகாராஜா கூட இவளது துன்பம் கண்டு, ராமபிரானின் குடும்பத்தினரிடம் எதுவுமே பேசவில்லையே! பெண் பிள்ளையைத் திருமணம் செய்து கொடுத்து விட்டால், அவளுக்கு வரும் இன்ப துன்பங்களை அவளே சமாளித்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கணத்தை மிகச்சரியாக கடைபிடிக்கிறார் என்றாலும், ஊர் மக்களில் ஒரு சிலர் சந்தேகப்பட்டார்களே என்பதற்காக, அவளைக் காட்டிற்கு அனுப்பிய தங்கள் மன்னனை தட்டிக் கேட்கவோ, அறிவுரை சொல்லவோ செய்திருக்கலாமே! அம்மா சீதா! நீ எப்படி மெலிந்து விட்டாய்! எங்கள் ஊருக்கு வரும் போது எவ்வளவு அழகாக இருந்தாய். உன்னைக் காணவே மனம் பதைக்கிறதே! என வாய் விட்டுச் சொல்லியபடியே, அவளது துயர முகம் காண சகியாமல் கண்களை மூடிக் கொண்டனர். பெண்ணுக்கு தானே தெரியும் இன்னொரு பெண் படும் துயரம்! வயதில் மூத்த சில பெண்கள், நாங்களும் கஷ்டம் அனுபவிக்காமல் இல்லை! பெண்ணாகப் பிறந்தாலே கஷ்டம் தான். ஆனால், இவளைப் போல், திருமணம் முடிந்த நாளில் இருந்து கஷ்டப்படும் ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை! இவளளவுக்கு எங்களில் யாரும் துன்பம் அனுபவிக்கவும் இல்லை, என வருந்தி கண்ணீர் விட்டனர்.
அரண்மனைக்குள் நுழைந்த சீதாபிராட்டி ராமபிரான் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. இத்தனை நாள் கழித்து மணாளனைப் பார்க்கிறோம், ஆசையுடன் அந்த கார்மேக வண்ணனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ளினாலும், அவரது உத்தரவு கிடைக்கவில்லையே! அது மட்டுமா! தெய்வமாய் இருந்தாலும், மானிடப்பிறவி எடுத்து விட்டாளே! ஊராரின் சந்தேகத்துக்காக தன் வாழ்வை பலி கொடுத்தானே என்ற உணர்வும் உந்தி நின்றது. உணர்ச்சிப்பிழம்பாய் நின்ற அவள், அத்தனையையும் உள்ளுக்குள் அடக்கியதன் விளைவு, கண்ணீராகக் கொட்டியது. பெண்கள் எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். எதையும் சகிக்கும் வல்லமை கொண்டவர்கள். இருந்தாலும், உணர்ச்சி மேலிட்டு விட்டால், கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. எவ்வளவு தைரியசாலி பெண்ணாயினும், கண்ணீர் மட்டும் என்னவோ அவளது உடைமையாகத்தான் இருக்கிறது! சீதாதேவியும் கண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்தாள். மகளின் கண்ணீர் துளிகளை பூமிமாதா காணச்சகியாமல், தனக்குள் உறிஞ்சிக் கொண்டிருந்தாள். அப்போது, சீதாபிராட்டி வெள்ளை ஆடை அணிந்திருந்தாள். கணவனைப் பிரிந்தவர்களுக்கு வெள்ளை ஆடை தகுந்த பாதுகாப்பளிக்கும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தும். வளைந்த மேனி நிமிரவில்லை. ராமனைக் காணும் ஆவல் உந்த கண்கள் மேலெழும்பத் துடித்தது. இருப்பினும் அடக்கமாக நின்றாள். ராமபிரான் விரிகின்ற ஒளிக்கதிர்களையுடைய சூரியனின் ஒளிக்கற்றைகளைப் போல் ஒளிவீசும் நவரத்தின மாலைகளையணிந்து சிம்மாசனத்தில் இருந்தார். வால்மீகியைக் கண்டதும் எழுந்து வந்து நமஸ்காரம் செய்தார். அவரது பாதங்களில் மலர் தூவி அர்ச்சித்தார். அவரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று ஒரு ஆசனத்தில் அமர வைத்தார். வீட்டிற்கு பெரியவர்கள் வந்தால், இளையவர்கள் அவர்களை இப்படித்தான் உபசரிக்க வேண்டும். பெருசு வந்துட்டியா போன்ற மரியாதைக் குறைவான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தக் கூடாது. சீதாதேவியிடம் ராமபிரான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளும் அமைதியாக நிற்க, இந்த இக்கட்டான மவுனச் சூழ்நிலையை வால்மீகி முனிவர் தான் கலைத்தார்.