பதிவு செய்த நாள்
16
மார்
2011
12:03
ஸ்ரீராமா! அமைதி வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று தான். ஆனால், சில சமயங்களில் அந்த அமைதியே பலரது வாழ்வை முடித்து விடுகிறது. பேச வேண்டிய நேரத்தில், தேவையானதை, அளவோடு பேச வேண்டும். அந்த பேச்சு உயிரைக் காப்பாற்றும் சக்தியுடையது. நீ பேசாமல் இருந்தால், சீதாதேவி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் ருசுவானது போல் ஆகிவிடும். அதன் பிறகு அவள் உயிர் வாழ்வாளா? அன்புள்ளவனே! உனக்குத் தெரியாதா? உன் மனைவியைப் பற்றி! அவளது கற்பின் தீவிரத்தை இலங்கைத் தீயிலேயே உணர்ந்தவன் நீ! அந்த அக்னி பகவானே அந்த தேவியின் கற்புத்தீயின் உக்கிரம் தாளாமல், ஓங்கி எரிந்தவன் தாழப் பணிந்தான். ஸ்ரீசீதாவின் திருவடியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி எண்ணி மனம் மகிழ்ந்தான். அயோத்தியின் ராஜாதி ராஜனே! சீதையின் கற்புநெறியை நீ மட்டுமல்ல! நானும் அறிவேன், நல்லவர் அனைவரும் அறிவர், என்றவர், மேலும் தொடர்ந்தார். பாவமே இல்லாத ராமனே! உன் காதலியின் கற்புத்திறனை பூமியிலுள்ளோர் மட்டுமல்ல! கற்புக்கே இலக்கணமாகத் திகழும் விண்ணவப் பெண்மணியான அருந்ததியும் கூட ஏற்றுக் கொள்வாள். அவள் எனது ஆஸ்ரமத்திலேயே இத்தனை நாளும் தங்கியிருந்தாள். அப்போது அவளைப் பற்றி நான் மிகத்தெளிவாக அறிந்து கொண்டேன். உன்னைத் தவிர அவளுக்கு வேறு எண்ணமே இருந்ததில்லை. உன்னை அடைவதற்காக லலிதா விரதமும் அனுஷ்டித்து, இப்போது அந்த அம்பிகையின் அருளால் உன் முன் வந்திருக்கிறாள். அவளை நீ ஏற்பதே முறை, என்றார்.
சீதாதேவியோ எவ்வித தன்னிலை விளக்கமும் அளிக்கவில்லை. ராமபிரான் இப்போது தான் தன் மவுனத்தைக் கலைத்தார். முனிவர் பெருமானே! தாங்கள் சொன்னது என் மனைவி கற்புநெறி தவறாதவள் என்பதை வானவர்களும், நானும் முன்பேயே அறிவோம். ஆனால், கடல்சூழ்ந்த இந்த உலகிலுள்ள மக்களில் ஒரு பகுதியினருக்கு அவளது கற்பு நெறி மீது ஏற்பட்ட சந்தேகம் நீங்கினால் தான், நான் அறிந்ததை இந்த உலகமும் அறியும். எனவே, சீதாதேவி மீண்டும் தன் கற்புத்திறனை இந்த பூவுலகிலுள்ளோர் அறியும்படியாக நிரூபிக்க வேண்டும். சீதா மீண்டும் நெருப்பில் இறங்கியாக வேண்டும். அப்படி நிரூபித்தால் தான், நான் அவளை ஏற்க முடியும், என்றார். தன் வாழ்வில் பலமுறை நொறுங்கிப்போயிருக்கும் சீதாதேவி, இப்போது தவிடு பொடியாகி விட்டாள். கட்டிய கணவர் என்னை நம்புகிறாராம்! விண்ணுலக தேவர்கள் என்னை நம்புகிறார்களாம்! இதோ, இங்கிருக்கும் வால்மீகி முனிவர் என் கற்புத்திறன் அருந்ததியை விட உயர்ந்தது என்று சான்று வழங்கியிருக்கிறாராம்! ஆனாலும், ஊரார் சொல்வது தான் பெரிதாகப் போய் விட்டதாம்! இலங்கையில் அத்தனை பேர் முன்னிலையில், வானரங்கள் முன்னிலையில் என்னை சந்தேகம் கொண்டு, தீயில் இறங்கச்சொன்னார். நான் என் கற்புத்திறனை நிரூபித்து விட்டாலும், என் உடலை நெருப்பு சுடாவிட்டாலும், என் மனம் சுட்டதே! அந்த மனச்சூடு தணியும் முன்பு, மீண்டும் ஒருமுறை யாரோ சொன்னார்கள் என்பதற்காக, ஒன்றுமே சொல்லாமல், காட்டுக்கு விரட்டி விட்டார். இப்போது, மீண்டும் தீயில் குதி, என்கிறார். நாளை வேறு யாராவது சந்தேகப்பட்டால், மீண்டும் தீக்குள் குதிக்க வேண்டும்! இதை விட நான் இறந்தே போகலாம். நான் இந்த பூமியில் வாழ விரும்ப வில்லை, அவளது மனக்குமுறல், அவளைப் பெற்ற தாயான பூமாதேவியை உருக்கி விட்டது.
(சீதாதேவியை ஜனகமகாராஜா, தான் செய்ய இருந்த யாகநிலத்தை பொன் ஏர் கொண்டு உழுதபோது, கிடைத்தவள் என்பதால், அவள் பூமாதேவியின் மகளாகிறாள். ஜனகரும், அவர் மனைவி சுநைனாவுமே சீதாவை வளர்த்த பெற்றோர் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்) இருப்பினும், பொறுமையின் சின்னமான அவள், என்ன தான் நடக்கிறது என கண்ணீருடன் கவனித்துக் கொண்டிருந்தாள். சீதாதேவியின் எண்ண அலைகள் விரிந்தன. என் அன்பரே! கொஞ்சம் சிந்தித்துப் பாரும். தாம்பத்ய வாழ்வு என்பது இன்பம் என்ற மலர்களையும், துன்பம் என்ற முள்மரங்களையும் சுமந்து வரும் ஆறு போன்றது. நீர் என்னை மகிழ்ந்து பாராட்டியிருக்கிறீர்! நான் இன்பமடைந்திருக்கிறேன். உமக்கு பட்டாபிஷேகம் நிறுத்தப்பட்டு, காட்டுக்கு புறப்பட்ட போது, உம்மோடு வந்து சிரமப்பட்டாலும், அதிலும் இன்பமே அடைந்தேன். கடும் கோபத்துடன் நீர் என்னுடன் இலங்கையில் என் கற்பு பற்றி சந்தேகித்துப் பேசிய போது கூட, நான் கோபித்தாலும், அதிலுள்ள நியாயத்தை ஏற்று தீக்குளித்தேன். ஆனால், திரும்பத்திரும்ப அதையே செய்யச் சொன்னால்...நான் என்ன பொம்மலாட்ட பொம்மையா! ஆட்டியபடியெல்லாம் ஆடுவதற்கு! ஊர் சொல்லட்டுமே! உம் மனைவியின் கற்பில் சந்தேகமிருக்கிறது என்று! நீர் என்ன செய்திருக்க வேண்டும்! என் மனைவியின் கற்பில் குறை கண்டவர்களை வெட்டிச்சாய்ப்பேன் எனச் சொல்லி அதைச் செய்திருக்க வேண்டாமா! அப்படி செய்திருந்தால், யாராவது வாயைத் திறந்திருப்பார்களா! இந்தக்கதி எனக்கு வந்திருக்குமா? என்னை காட்டுக்கு அனுப்பினால், ஊரார் என்ன நினைப்பார்கள்? சீதா தவறு செய்திருக்கிறாள் போலிருக்கிறது, அதனால் தான் நம் மன்னன் அவளைக் காட்டுக்கு அனுப்பியிருக்கிறார் என்று தானே நினைப்பார்கள்! என் மீது அபிமானம் கொண்டவர்கள் கூட சந்தேகிக்கத்தானே செய்வார்கள்! ராமா, நீர் செய்வது எந்த வகையில் முறை? என குமுறியவள், சிவபெருமான் நெற்றிக்கண்ணை மன்மதன் மீது எப்படி பிரயோகித்தாரோ, அதே வேகத்தில், அதே கோபத்தில், படபடவென வார்த்தைகளை உதிர்த்தாள். நெஞ்சு கொதிக்கும் போது வார்த்தைகளின் வேகம், வில்லில் இருந்து விடுபட்ட அம்பைப் போல் இருக்கும். வால்மீகி முனிவரே! என் கணவரே சொல்லி விட்டார், இன்னொரு முறை தீயில் இறங்கு என்று. அவர் சொன்ன பிறகும் மறுத்துப் பேச எனக்கென்ன அதிகாரமிருக்கிறது? கிண்ணத்திலுள்ள நஞ்சை வாயருகே கொண்டு சென்றால், அது உயிரைக் கொல்லாது. அதையே உள்ளிறக்கி விட்டால், உயிர் பறந்து விடும். அதுபோல், மக்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசினார்கள் என்றால், அதுபற்றி நான் கவலை கொண்டதில்லை, கொள்ளப்போவதுமில்லை. ஆனால், உள்ளிறங்கும் விஷம் போல, என் காதலரே என்னைத் தீயில் தள்ளத்துடிக்கிறாரே! அதுதான் என்னைக் கொல்கிறது, என ஆவேசத்துடன் கண்ணீருடனும் கதறினாள். தன் மகளின் நிலை பொறுக்காத பூமாதேவி, கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள். பூமியில் சிறு அதிர்வு ஏற்பட்டதை அந்த சபையிலுள்ளோர் உணர்ந்தனர்.