பதிவு செய்த நாள்
16
மார்
2011
12:03
ராமபிரானோ தன் முடிவில் உறுதியாக இருந்து விட்டார். அப்போது சீதாதேவி, என் கணவர் என்னை தீயில் இறங்கு என சொல்வது மட்டுமல்ல, இதுவரை அவர் எனக்குச் செய்த எல்லாமே எனக்கு செய்யப்பட்ட நன்மை என்றே கருதுகிறேன். ஆனாலும், அவர் என் கற்பின் மீது ஊரார் சொல்லுக்காக நிரூபிக்கத் துடிப்பதை என்னால் பொறுக்க முடியவில்லை. இனியும், நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. எனவே, எங்கிருந்து பிறந்தேனோ, எந்தத்தாய் என்னைப் பெற்றாளோ, எல்லோருக்கும் பெற்ற தாய் யாராக இருந்தாலும், முடிவில் எந்தத்தாயிடம் அடைக்கலமாவார்களோ அந்தத்தாயிடமே செல்கிறேன், என்றவள், அம்மா! பூமி மாதா! நல்வினை தீவினை ஆகியவற்றை அறுத்தெறிந்தவரும், தவங்கள் பல இயற்றியவருமான விஸ்வாமித்திர முனிவர், இதோ இங்கே வீற்றிருக்கிறாரே தசரத புத்திரர் ஸ்ரீராமர்...இவரை எங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அந்த முனிவர் செய்த யாகத்திற்கு இடையூறு செய்த அரக்கர்களை ஒழித்து விட்டு வந்த மாவீரனான இவர், என் தந்தை கொடுத்த சிவதனுசு என்னும் வில்லை ஒடித்தார். யாராலும் தூக்கக்கூட முடியாத அந்த வில்லை ஒடித்ததால், பலசாலியான இவருக்கு என்னை என் தந்தை ஜனகர் மணம் செய்து வைத்தார். இந்த கரிய நிறத்தானை, கார்மேக வண்ணனைத் தவிர வேறு எந்த மன்னனையும் என் திருமணத்துக்கு முன்போ, பின்போ நான் மனத்தாலும் வாக்காலும் நினைக்கவில்லை என்பதும், அவர்களைப் பற்றி பேசியது கூட இல்லை என்பதும் உண்மையானால், நிலமகளே! என் தாயே! நீ வருக! என்னை உன்னிடமே மீண்டும் எடுத்துச் செல், என்றாள் ஆவேசத்துடன்.
கற்பு நிறைந்த மங்கை, பழி போடப்பட்ட மங்கை, உலகிலேயே துன்பங்களை அதிகம் அனுபவித்த மங்கை...கட்டளை இட்டிருக்கிறாள். எந்த ஒரு தேசத்தில் பெண்கள் துன்பப்படுத்தப்படுகிறார்களோ, அந்த நாட்டின் நிம்மதி முற்றிலும் குலைந்து போய் விடும் என்பதே சரித்திரம் கூறும் உண்மை. சீதாதேவி தொடர்ந்தாள். அம்மா! என்னைப் பெற்ற பூமாதேவியே! உலகிலுள்ளோரின் வணக்கத்துக்கு உரியவளே! என்னை வருந்திப் பெற்றவளே! என்னுடைய கற்பின் மீது என் கணவர் ஊராருக்காக சந்தேகப்படுகிறார். ஆனால், என் கற்பும், கற்புக்கரசியான அருந்ததியின் கற்பும் ஒரே தன்மையுடையது என்பது உண்மையானால், நிலத்தை பிளந்து கொண்டு எழுந்து வா, என்று ஆணை பிறப்பிக்கும் குரலில், அயோத்தியே அதிரும் வகையில் அரற்றினாள். பூமியிலுள்ள மற்ற தாய்மார் பெற்ற பிள்ளைகளுக்கு துன்பம் ஏற்பட்டாலே, பூகம்பத்தை உண்டாக்கி அநியாயக்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும், முன்ஜென்மத்தில் பாவங்கள் பல புரிந்து, தனக்கு பாரமாக இருப்பவர்களையும் அழித்து விடும் பூமிமாதா, தான் பெற்ற பிள்ளைக்காக இத்தனை நாளும் பொறுமை காத்தாள். ஆனால், தன் மகளின் பெண்மைக்கே களங்கம் வந்தால் விட்டு வைப்பாளா என்ன! ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளால் தாங்கப்படுபவளும், நிலை பெற்ற கற்பினையுடையவளும், உலகத்து செல்வத்தையெல்லாம் தன் மேனியில் கொண்டவளும், மலைகள் எனப்படும் மார்புகளைத் தாங்கியவளும், மேகம் என்ற கூந்தலை உடையவளும், அலைகடல்களை ஆடையாக உடுத்தியவளுமான பூமாதேவி அதிர்ந்தாள். உலகமே நடுங்கியது.
பூமி விரிந்தது. அம்மா! சீதா! அழாதே மகளே! உன் கற்பே உலகில் சிறந்தது. அருந்ததியின் கற்பை விட உன் கற்பே உயர்ந்தது. உலகம் உள்ளவரை சீதையின் கற்புத்திறன் பேசப்படும். ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தானே அந்த நாராயணன்...அவனே ராமனாய் இங்கே அமர்ந்திருக்கிறான். அவனுக்கு மட்டுமே நீ சொந்தமாக இருந்தாய் மகளே! இனியும் நீ இந்த பூமியின் மேல் வாழத் தேவையில்லை. நீ நாராயணனின் துணைவி என்பதை நினைவுபடுத்துகிறேன். பூமியின் உன் காலம் முடிந்து விட்டது. நீ என்னோடு வா மகளே! என கை நீட்டி அழைத்தாள். பெற்றவளின் மார்பில் முகம் புதைத்து அழுதாள் சீதா. அவளை அள்ளி அணைத்தபடியே, மீண்டும் நிலம் பிளக்க, ராமனிடம் உத்தரவு கூட பெறாமல், தன் மகளை உள்ளே அழைத்துச் சென்று விட்டாள் அந்தத்தாய். நல்லவர்கள் பூமியில் நீண்ட காலம் வாழ்வதில்லை என அரற்றுகிறோம். நல்லவனுக்கு பூமியில் என்ன வேலை? அவன் வைகுண்டத்திலோ, பாதாள லோகத்திலோ வாழ வேண்டியவன் அல்லவா! பூமாதேவி என்ற தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டியவன் இங்கேயிருந்து ஏன் அவஸ்தைப்பட வேண்டும் என்று தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது போலும்! ராமபிரான் ஆத்திரமடைந்தார். இந்தச் சபையில் கூடியிருக்கும் அயோத்தி மாநகர மக்களே! சீதையின் கற்புத்திறனை புரிந்து கொண்டீர்களா? அவள் களங்கமற்றவள் என்பதை நான் அறிவேன். நான் இதுவரை யாருக்கும் எந்தத்தீமையும் செய்தது இல்லை. பிறருக்கு நன்மை செய்வதே என் வாழ்வின் குறிக்கோளாக இருந்திருக்கிறது. ஆனால், நான் அனுபவித்ததோ கடும் சோதனைகளைத் தான். இப்போது என்ன நடந்து விட்டது? ஊரார் சொல்லை மறுக்க, அவளைத் தீக்குளிக்கச் சொன்னேன், அவளோ, தன் தாயை அழைத்தாள். அந்தத்தாயும் வந்தாள், மகளை அழைத்துக் கொண்டு போய் விட்டாள். இது என்ன நீதி? இந்த பூமாதேவி எப்படிப்பட்டவள் என்பது எனக்குத் தெரியாதா? என்றவர் பூமாதேவியை சிறுமைப்படுத்தும் வார்த்தைகளை பேசினார். அகத்திய முனிவரால் ஒரு உள்ளங்கையால் அள்ளிக் குடிக்கப்பெற்ற மிகச் சாதாரணமான கடல் அலைகளை சுமப்பவள், குளிர்ந்த பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமான் பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஏற்பட்ட பாவத்திற்கு விமோசனம் தந்த திருமால், வாமன அவதாரமெடுத்து வந்த போது, அவனது இரண்டே அடிகளுக்குள் அடைக்கலமானது, பொன்னாலும், மணியாலும் தன் முடிகளை அலங்கரித்துக் கொண்ட ஆதிசேஷன் என்ற பாம்பால் தாங்கப்படுவது, ஒரு காலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தில் இந்த பூமாதேவி மூழ்கிக் கிடந்த போது, திருமால் வராக அவதாரமெடுத்து தன் கொம்பின் மீது தாங்கி வந்தது...இப்படிப்பட்ட பூமாதேவிக்கு என் மனைவியை, என் கண் முன்னாலேயே தூக்கிச் செல்லும் தைரியம் எங்கிருந்து வந்தது? ராமபிரான் தன் ஆசனத்தில் இருந்து கொதித்தெழுந்தார்.