பதிவு செய்த நாள்
16
மார்
2011
12:03
மகனே! எங்களுடன் பேசமாட்டாயா? உன் தாய் படும் வேதனை உனக்கு புரியவில்லையா? பின்னிரவு வேளையில் நீ வேதம் ஓதுவது என் காதுகளில் இப்போதும் இனிமையாக ஒலிக்கிறது. மகனே! இனி எங்களை அழைத்துப் போக யார் இருக்கிறார்கள்? உன்னைத் தவிர யாருடைய உதவி எங்களுக்கு கிடைக்கும்? அன்புச்செல்வமே! சற்றே பொறு. எமனுடைய ராஜ்யத்திற்கு உடனே போய் விடாதே. நாங்களும் உன்னோடு வருகிறோம். யமலோகத்தில், தர்மராஜாவைக் கண்டு, ஐயனே! எங்கள் மகனை எங்களுக்கு திருப்பிக்கொடு என கேட்பேன். அவன் தர்மத்தின் வடிவம். அனாதைகளான எங்களுக்கு நிச்சயம் உன்னை மீண்டும் தருவான். இதோ நிற்கும் தசரதனின் கையால் நீ இறந்தது இப்பிறவியிலோ, முற்பிறவியிலோ நீ செய்த பாவத்தால் அல்ல. எந்தப் பாவமும் செய்யாத அப்பாவிகளும், உலகிலுள்ள பாவிகளால் கொல்லப்படத்தான் செய்கிறார்கள். அதில் நீயும் ஒருவன். ஆக, பாவம் என்பது பூண்டோடு வேரறுக்கப்பட வேண்டும். பாவமில்லாத உலகில் தான் நல்லவர்களால் வாழ முடியும். நீ இந்த பாவபூமி பிடிக்காமல் போய் விட்டாயோ? மகனே! உனக்கு வீரர்கள் அடையும் உலகம் கிடைக்கும். இந்த உலகத்தில் மாவீரர்களான ஸகரன், தீலிபன் போன்றோர் வாழ்ந்தனர். அவர்கள் எந்த உத்தம லோகத்தை அடைந்தார்களோ அந்த லோகத்தை நீயும் அடைவாய். இவ்வுலகில் பிறந்து வேதம் படித்து, மந்திரங்களை உச்சரித்து, தெய்வமே துணையென வாழ்பவன் மரணமடைந்ததும் எந்த புண்ணிய லோகத்தை அடைவானோ, அந்த லோகத்திற்கு செல்வாய். தனது மனைவியிடம் மட்டும் அன்பு கொண்டு, ஏக பத்தினி விரதனாக வாழ்ந்து, மரணமடைபவன் எந்த லோகம் செல்வானோ அங்கே நீ செல்வாய்.
பசுக்களை தானம் செய்தவர்கள், யாகம் செய்பவர்கள், பெரியவர்களுக்கு பணிவிடை செய்கிறவர்கள், விரதங்களை சரியாகக் கடைபிடிப்பவர்கள், நல்லதொரு காரணத்துக்காக அக்னியில் விழுந்து உயிர் துறப்பவர்கள், கங்கையும், யமுனையும் சேருமிடத்தில் உயிர் விடுகிறவர்கள் ஆகியோர் எந்த லோகத்தை அடைவார்களோ அவ்விடத்தை அடைவாய். அதே நேரம், எங்களை புத்திர சோகத்துக்குள்ளாக்கி உன்னைக் கொன்றவன், வாழும் காலத்திலேயே கோர கதிக்கு ஆளாவான் எனச்சொல்லி புலம்பி, அவனுக்குரிய கிரியைகளைச் செய்தனர். அப்போது அந்த இளைஞன் பிரகாசமான ஒளியுடன் எழுந்தான். இந்திரன் புஷ்பக விமானத்துடன் அங்கு வந்து அவனை ஏற்றிக் கொண்டான். அந்த இளைஞன் தனது பெற்றோரிடம், உங்களுக்கு சேவை செய்ய கிடைத்த பாக்கியத்தால், இந்திரனே நேரில் வந்து என்னை தேவலோகத்துக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளான். அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்த உங்களுக்கு நன்றி எனக்கூறி புறப்பட்டான். பின்னர் அந்த முதியவர் என் தந்தையிடம், அரசனே! புத்திர சோகத்தால் நீ தவித்து மரணத்தை தழுவுவாய். அதேநேரம் நீ அறியாமல் பாவம் செய்தவன் என்பதால், உன்னை கொலைப்பாவம் அணுகாது எனச்சொல்லி, கட்டைகளை அடுக்கி அக்னி மூட்டி தன் மனைவியுடன் இறங்கினார். அவர்கள் சொர்க்கம் சென்றனர். அதன் காரணமாக அவர் என்னைப் பிரிய வேண்டியதாயிற்று. பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளையும் தொடரும். நான் காட்டிலே உங்கள் அன்னை சீதையைப் பிரிந்தேன். துயரத்தில் தவித்தேன். ராவணனிடம் இருந்து மீட்டபிறகு, அவள் இலங்கையிலே தீக்குளித்து தன் கற்புத்திறனை நிரூபித்தும் கூட, அயோத்தியில் சிலர் நம்பாததால், மீண்டும் பிரிந்தேன். என்னால் உங்கள் சிறிய தந்தை லட்சுமணனும் இல்லற சுகத்தை இழந்து என்னுடன் காட்டில் திரிந்தான். வாசலில் விடப்படும் பாதுகையை அரியாசனத்தில் ஏற்றினான் பரதன். சத்ருக்கனனும் அவனுக்கு துணையாகவே இருந்தான், என்றார்.
லவகுசர் தங்கள் தந்தைக்கு ஏற்பட்ட கதியைப் புரிந்து கொண்டனர். பின்னர் லவகுசரை அழைத்துக் கொண்டு ராமபிரான் யாகசாலைக்கு சென்றார். யாகம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. பின்னர், தன் மகன்களுக்கும், தம்பிமார்களின் குழந்தைகளுக்கும் தனி நாடுகள் அமைத்துக் கொடுப்பது பற்றிய யோசனையில் ராமன் ஆழ்ந்தார். அப்போது, வாயிற்காவலன் வந்து நின்றான். மகாபிரபு! தங்களைக் காண ஒரு முனிவர் வந்திருக்கிறார். தாங்கள் அனுமதி அளித்தால்... என்றதும், அவரை உடனே உள்ளே வரச்சொல், என்றார் ராமன். அந்த முனிவரின் தேஜஸை சொல்லால் விளக்க முடியாது. உதட்டிலே ஏதோ ஒரு விஷமப்புன்னகை. ராமபிரான், அவரை வரவேற்று ஆசனத்தில் அமரச் சொன்னார். ராமா! ஆசனத்தில் அமர்வது இருக்கட்டும். நான் யார் என்பதை முதலில் தெரிந்து கொள், என்றதும், சுவாமி! வீடு தேடி வந்தவர்கள் பகைவரே ஆயினும் அவர்களை உபசரிப்பது தர்மங்களில் ஒன்று. தாங்கள் தர்மமே வடிவான முனிவர், என்று சொல்லும் போது, தர்மமே என்பதை சற்று அழுத்தி உச்சரித்தார். வந்த முனிவருக்கு சந்தேகம். தன்னை யாரென பரம்பொருளின் அவதாரமான ராமன் கண்டுபிடித்து விட்டாரோ என்று. இருப்பினும், அந்த உணர்வை முகத்தில் காட்டாமல், ராமா! நான் பிரம்மனால் உன்னிடம் அனுப்பப்பட்ட தூதன். நீயும் நானும் தனிமையில் பேச வேண்டியுள்ளது. இவ்விடத்தில் நமக்கு பணிசெய்ய ஒரு சேவகன் கூட இருக்கக்கூடாது. அறைக்கதவை மூடி விட வேண்டும். யாரேனும் உள்ளே வராமல் இருக்க வாசலில் தகுந்த காவலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியானால் தான் நான் வந்த விஷயத்தைச் சொல்ல முடியும், என்றார். ராமபிரான் முனிவரின் கட்டளையை உடனே ஏற்றார். லட்சுமணனை அழைத்தார். லட்சுமணா! இந்த முனிவருடன் நான் முக்கிய ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இந்த அறைக்குள் யாரையும் விடாதே. காவலைப் பலப்படுத்து. நீயே தலைமைக் காவலனாக இருந்து உள்ளே யாரும் வராமல் பார்த்துக் கொள், என்றார். அண்ணன் சொல் தட்டாத அந்த தம்பி என்ன ஏதென்று கேட்காமல், உடனே வாசலில் காவலுக்கு நின்றான். அப்போது அவனைத் தேடி வந்தது தீவினை.