பதிவு செய்த நாள்
16
மார்
2011
12:03
அத்திரி முனிவர் என்ற புகழ் பெற்ற முனிவர் இருந்தார். இவரது மனைவி அனுசூயா. ரிஷிபத்தினியான இவளது கற்புத்திறனை சொல்லி மாளாது. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை குடித்த பிறகே தன் பணிகளைத் துவக்குபவள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர், இவளது கற்புக்கு சோதனை வைத்த போது, அவர்களையே குழந்தைகளாக்கி, முப்பெரும் தேவியரையும் தாலிப்பிச்சை கேட்க வைத்த சக்தி வாய்ந்தவள். இத்தனைக்கும் அத்திரியின் திருவடிகளே காரணம். பெரும் தவவலிமை மிக்கவர். இவரது செல்வபுத்திரரே துர்வாசர். ரொம்பவும் கோபக்காரர். அவர் அரண்மனைக்குள் வந்தார். லட்சுமணன் வில்லுடன் வாசலில் காவலுக்கு நிற்பதைப் பார்த்தார். லட்சுமணா! நான் அத்திரி புத்திரன் துர்வாசன். நான் உன் சகோதரனிடம், முக்கியமான ஒரு விஷயம் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. என்னை உள்ளே அனுமதி, என்றார். அண்ணனோ யாரையும் உள்ளே விடக்கூடாது எனச்சொல்லியிருக்கிறார். முனிவரோ கோபக்காரர். சபிக்கக்கூடியவர். என்ன செய்வதென லட்சுமணனுக்குப் புரியவில்லை. இருப்பினும் அவன் மிகுந்த பணிவுடன் அவரை வணங்கி, தவசிரேஷ்டரே! பொறுத்தருள வேண்டும். தாங்கள், என் சகோதரரிடம் சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்லுக. தாங்கள் சொல்வதை உடனே நிறைவேற்றி வைக்கிறேன். தற்போது அண்ணா, யாரையும் அனுமதிக்க வேண்டாம் என எனக்கு உத்தரவிட்டிருக்கிறார், என்றான்.
துர்வாசரோ ஆவேசப்பட்டார். ஏ லட்சுமணா! ராமனை இங்கே வரச்சொல். அப்படி சொல்ல மறுத்தால், உன் ரகுவம்சமே அழிந்து போகும்படி சாபம் கொடுத்து விடுவேன். இங்கே, ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள், என எச்சரித்தார். லட்சுமணனுக்கு தெரியும். துர்வாசர் சொன்னதைச் செய்பவர் என்று. மேலும், தவசீலர்களைக் காக்க வைப்பது சிரமம் என்பதையும் அவன் அறிவான். இதற்கிடையே உள்ள சென்ற முனிவர் ராமபிரானிடம் பேச ஆரம்பித்தார். ராமா! என்னை யாரென நீ உணர்ந்துவிட்டாய் என்றே நம்புகிறேன், என்றதும், ராமபிரான் ஏதுமறியாதவர் போல், இல்லை சுவாமி! தாங்கள் யார்? சொல்லுங்கள், என்றதும், வந்தவர் தன் நிஜ உருவத்திற்கு மாறினார். கதாயுதம் தாங்கி, பெரிய மீசையுடன், ஆஜானுபாகுவான தோற்றத்தில் திகழ்ந்த அவரை ராமபிரான் வணங்கினார். எமதர்மராஜாவா! தாங்கள் என் இருப்பிடம் தேடி வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாங்களால் தான் உலகில் தர்மம் நிலைத்திருக்கிறது. தாங்கள் ஒருவர் இல்லாவிட்டால், இவ்வுலகில் எல்லாமே நிரந்தரம் என ஜீவன்கள் நினைக்கத் துவங்கி விடும். மனிதன் ஒரே ஒரு விஷயத்திற்கு தான் அஞ்சுகிறான். அது நிச்சயம் என்பதும் அவனுக்கு தெரியும். இருப்பினும், அஞ்ஞானத்தால் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறான். தங்கள் பூமி தர்மபூமி. தர்மத்தின் நாயகரே! என்ன விஷயமாக என்னைத் தேடி வந்தீர்கள்? என்றார். ராமா! பிரம்மன் என்னை அனுப்பி வைத்தார். நீ ஏதுமறியாதவன் போல் என்னிடம் பேசுகிறாய். நாராயணான நீ பாற்கடலில் இருந்து தாயார் லட்சுமியுடனும், ஆதிசேஷனுடனும், சங்கு, சக்கரத்துடனும் பூமிக்கு வந்தாய். அவற்றை உன் உறவுகளாக்கி, லட்சுமண, பரத, சத்ருக்கனர்களை உருவாக்கிக் கொண்டாய்.
தாயார் லட்சுமியே பூமாதேவியின் வயிற்றில் பிறந்து, ஜனக மகாராஜாவின் புத்திரியாக வளர்ந்து உன்னை அடைந்தாள். அநியாயத்தை அழிக்க பிறந்த நீ, ராவணனை வதம் செய்தாய். உன் பிறப்பின் நோக்கம் முடிந்து விட்டது. இந்த அவதாரத்தை முடித்து, வைகுண்டம் எழுந்தருள வேண்டும் என்பதை நினைவூட்டவே இங்கு வந்தேன். பிரம்மனே பூமியில் மானிடராய் பிறப்பவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கிறார். அவர்களில் சிலர் தெய்வப்பிறவிகளாகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே, மரணத்தை முன் கூட்டியே அறிவிக்கும் பொறுப்பு எனக்கு தரப்படுகிறது. ஸ்ரீராமசந்திரா! நீ லோகநாயகன். உன் காலம் முடிந்து விட்டதால், உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளேன், என்றார் எமதர்மன். அந்நேரத்தில், லட்சுமணன் கதவைத் தட்டினான். இதனால் கோபமடைந்து தன்னை தன் சகோதரனோ, வந்திருக்கும் முனிவரோ அழித்தாலும் பரவாயில்லை என நினைத்துக் கொண்டான். என்றைக்கானாலும், இந்த உடல் அழியப்போவது தானே! நம் குலம் காக்க, இந்த உடல் போனால் போகட்டும் என்று நினைத்தே துணிந்து இதைச் செய்தான். கதவைத்தட்டுவது இன்னாரென புரிந்து விட்டதாலும், எமதர்மராஜனிடம் உரையாடல் நிறைவு பெறும் நிலைக்கு வந்துவிட்டதாலும், ராமபிரான் கதவைத் திறந்தார். அப்போது, எமதர்மன் தன்னை மீண்டும் முனிவர் வடிவத்திற்கு மாற்றிக் கொண்டார். அண்ணா! தங்களைக் காண துர்வாச முனிவர் எழுந்தருளியுள்ளார். தாங்கள் முக்கிய ஆலோசனையில் எடுப்பதை எடுத்துச் சொல்லியும், தங்களைக் காண அனுமதிக்கா விட்டால், நம் குலம் அழியும்படியான சாபத்தைக் கொடுத்து விடுவேன் என்கிறார். இந்நிலையிலேயே தங்களை அழைக்கும்படி ஆயிற்று, என்றான். லட்சுமணா! உள்ளே இருப்பது எமதர்மராஜா. கருமையான கொம்புகளையும், அனல் கக்கும் விழிகளையும் கொண்ட எருமைக்கடா வாகனன். அவரை அனுப்பி விட்டு வருகிறேன், என சொல்லி விட்டு, உள்ளே சென்றார். எமதர்மராஜனே! பிரமன் சொன்னபடியே வருகின்றேன். இப்போது, நீர் செல்லலாம், என்றான். எமதர்மராஜனும் மறைந்து விட்டார். பின்னர் துர்வாசரிடம் வந்த ராமபிரான், அவரை வணங்கி ஆசனத்தில் அமர்த்தி, தவமுனிவரே! தங்களைக் காக்க வைத்ததற்காக என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்த காரணத்தை தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன், என்றார்.