Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞான சித்தியார் பகுதி-4
முதல் பக்கம் » சிவஞான சித்தியார்
சிவஞான சித்தியார் பகுதி-5
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2013
03:11

ஒன்பதாவது நூற்பா

292. பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
நீழல்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
ஆசைதரும் உலகம்எலாம் அலகைத்தே ராம்என்று
அறிந்து அகல அந்நிலையே ஆகும் பின்னும்
ஓசைதரும் அஞ்சு எழுத்தை விதிப்படி உச்சரிக்க
உள்ளத்தே புகுந்து அளிப்பன் ஊனமெலாம் ஓட.

சிவபெருமான் பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறிய இயலாத தன்மையினை உடையவன். அப்பெருமானை அவனுடைய திருவருள் வழியில் நின்று பதிஞானத்தால் தன் உள்ளத்தின் உள்ளே அன்பினோடும் தேடி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத போது இவ்வுலகியல் உணர்வு மேல் எழுதல் கூடும். உலகியல் உணர்வை வெறும் கானல் நீர். நொடிப் பொழுதில் மறையும் தன்மை உடையது என்று உணர்ந்து அதனை விட்டு நீங்கி இறைவன் திருவடியை விட்டு விலகாத ஆற்றலைத் தரவல்ல திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும். அந்நிலையில் திருவடி ஞானம் விளங்கி உயிரின் குற்றம் எல்லாம் நீங்குமாறு இறைவன் திருவருள் பாலிப்பான்.

முதல் அதிகரணம்

293. வேதம் சாத்திரம் மிருதி புராணம் கலைஞானம்
விரும்பு அசபை வைகரி ஆ தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வான எல்லாம் பாசஞானம்
நணுகிஆன்மா இவை கீழ் நாட லாலே
காதலினால் நான்பிரமம் என்னும் ஞானம்
கருதுபசு ஞானம் இவன் உடலில் கட்டுண்டு
ஓதிஉணர்ந்து ஒன்றுஒன்றாய் உணர்ந்திடலால் பசு ஆம்
ஒன்றாகச் சிவன் இயல்பின் உணர்ந்திடுவன் காணே.

மறைகள், சாத்திர நூல்கள், மிருதி நூல்கள், புராண வரலாறுகள், உயர்ந்த கலை ஞானங்கள், விரும்பத் தக்க அசபை என்ற மந்திரம் வைகரி முதலிய நால் வகை வாக்குகள், மண் முதல் நாதம் முடிவாக உள்ள தத்துவங்கள் ஆகிய இவற்றினால் உயிர் பெறும் அறிவு பாச ஞானம் எனப்படும். ஏனெனில் இவற்றால் விளைந்த அறிவு உலகியல் பற்றைத் தோற்று வித்து அதனால் உயிரை மீண்டும் பிறப்புக்கு உட்படுத்தும். உயிர் தன் முனைப்போடு நானே பிரமம் என்று கூறிக் கொள்ளும் அறிவு பசு ஞானம் எனப்படும். ஏனெனில் ஆன்மா ஆகிய இவன் உடல்களில் கட்டுண்டு நிற்பவன். தானாக அறியாமல் உணர்த்த உணரும் அறிவினை உடையவன். தானே அறியாமல் பொறிகளின் துணையால் ஒவ்வொன்றாய் உணர்ந்து வரும் இயல்பினை உடையவன். எனவே இவனைப் பசு என்றும் இவனது அறிவைப் பசு ஞானம் என்றும் பெரியோர் கூறுவர். இறைவனோ தன் வயமுடைய முற்றறிவினன். எனவே தான் இறைவன் பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் காண்டற்கு அரியவன் என்பர் மேலோர்.

294. கரணங்கள் கெட இருக்கை முத்தி ஆம் என்னின்
கதி ஆகும் சினை முட்டை கரு மரத்தின் உயிர்கள்
மரணம்கொண் டடி உறங்க மயங்கிமூர்ச் சிக்க
வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச்
சரணங்கள் புகும்நிழல்போல் தனை அடையும் சமாதி
தவிராது மலம் இதுவும் பசுஞானம் ஆகும்
அரணங்கள் எரித்தவன்தன் அடியை அறிவு இறந்து அங்கு
அறிந்திடீர்! செறிந்ததுகள் அகற்றிடீரே.

உயிர்கரணங்களோடு பொருந்தாது. அவற்றைக் கெடுத்திருத்தலே வீடுபேறு என்று சிலர் கூறுவர். இது பொருந்துவதன்று. ஏனெனில் சினையிலும் முட்டையிலும், கருவிலும், மரத்திலும் உயிர் உண்டு. உயிர் இருந்தும் அந்நிலையில் அவற்றுக்குக் கருவியும் கரணமும் இல்லை. எனவே அந்நிலையை வீடுபேறு என்று கூறுதல் அடாது. மேலும் இறப்பு நிலையிலும், உறக்க நிலையிலும், மயங்கி மூர்ச்சித்த நிலையிலும், உயிர்க் காற்றை அடக்கிய நிலையிலும், கொடிய நஞ்சு தலைக்கு ஏறிய நிலையிலும், கரணங்கள் செயல்படுவதில்லை ஆயினும் அவை எல்லாம் வீடுபேற்று நிலையாகா. வேறும் சிலர் யோக நிலையில் நின்று ஆன்மா தன்னுள் ஒடுங்கி நிற்பதே வீடுபேறு என்பர். காலைப் பொழுதிலும், மாலைப் பொழுதிலும் ஒருவனுடைய நிழல் அவனை விட்டு வெகு தொலைவுக்கு நீண்டு கிடக்கும், உச்சிப் பொழுதிலே அவனது நிழல் அவன் காலடியிலேயே அடங்கி நிற்கும். யோகநிலையில் உயிர் இவ்வாறே தன்னில் அடங்கி நிற்கும். அதுவே வீடுபேறு என்பது இவர்கள் கொள்கை. இக்கொள்கையும் பொருந்துவதன்று. ஏனெனில் சமாதி நிலையிலும் உயிரை விட்டு மலம் நீங்குவதில்லை. எனவே இதுவும் பசுஞானமேயாகும். முப்புரங்களை எரித்தவனாகிய சிவ பெருமானுடைய திருவடியைப் பற்றி அறிவு கடந்து அவனை அறியும் போதே மலமாக அகலும்.

295. சிவனை அவன் திருவடிஞா னத்தால் சேரச்
செப்புவது செயல் வாக்கு சிந்தை எல்லாம்
அவனை அணு காஎன்றும் ஆதலானும்
அவன்அடி அவ் ஒளிஞானம் ஆத லானும்
இவனும் யான் துவக்கு உதிரம் இறைச்சி மேதை
என்பு மச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ
அவம்அகல எனை அறியேன் எனும்ஐயம் அகல
அடி காட்டி ஆன்மாவைக் காட்டலானும்.

மனம், வாக்கு, மெய் ஆகியவற்றால் உயிர் சிவபெருமானை ஒருபோதும் அணுக இயலாது ஆதலானும், சிவபெருமானின் திருவடி ஒளிமயமான ஞானத்தைத் தரும் ஆதலாலும், ஆன்மாவாகிய இவனோ நான் தோல் குருதி, தசை, நரம்பு, எலும்பு, எலும்பின் உள்ளே உள்ள செங்குருத்து, வெண்ணீர் இவற்றால் ஆகியவனோ? அல்லது ஐம்பொறிகளின் கூட்டத்தால் ஆகியவனோ? என்று தன்னை உள்ள படி அறியாது உறுகின்ற ஐயத்தைத் திருவடி ஞானமே விலக்கும் ஆதலானும் சிவபெருமானை அவனுடைய திருவடி ஞானத்தின் துணை கொண்டே அறிதல் வேண்டும் என்று பெரியோர் கூறுவர்.

பதிஞானம் என்னும் திருவடி ஞானமே உயிருக்குத் தன்னையும் உணர்த்தித் தலைவனையும் உணர்த்தும் ஆதலால் இப்பாடலில் பதியை அறியும் முறையினைக் கூறினார்.

கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று சார்தலுமே தானெனக்கு
மரணம் பிறப்பென்று இவைஇரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி

(திருவாசம்-திருக்கோத்தும்பி-9) என்பது காண்க.

296. கண்டிடும் கண் தனைக்காண கரணம் காணா
கரணங்கள் தமைக்காணா உயிரும் காணா
உண்டிஅமர் உயிர் தானும் தன்னைக் காணாது
உயிர்க்குயிராம் ஒருவனையும் காணா தாகும்
கண்டசிவன் தனைக்காட்டி உயிரும் காட்டி
கண்ணாகிக் கரணங்கள் காணாமல் நிற்பன்
கொண்டு அரனை உளத்தில் கண்டு அடிகூடின் பாசம்
கூடாது கூடிடினும் குறித்து அடியின் நிறுத்தே.

புறப்பொருள்களை எல்லாம் காண்கின்ற கண்கள் தம்மைக் காண மாட்டா. தம்மைச் செலுத்துகின்ற உட்கரணங்களையும் அவை காண மாட்டா. அது போலவே மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய உட்கருவிகளும், வித்தியா தத்துவம் முதலிய உள் அந்தக்கரணங்களும் தம்மையும் காண மாட்டா, தம்மைச் செலுத்துகின்ற உயிரினையும் காணமாட்டா. அவற்றைப் போலவே வெளியுலகை அறிந்து வருகின்ற உயிரும் தன்னையும் காணாது. தனக்கு உயிர்க்கு உயிராய் விளங்கி உணர்த்தி வருகின்ற இறைவனையும் காணாது. இவை யாவற்றையும் அறிந்தாங்கு அறிந்து நிற்கின்ற இறைவன் தன்னியல்பையும் விளக்கி, உயிரின் இயல்பையும் விளக்கிக் காட்டுகின்ற ஞானமேயாக, கரணங்களால் அறியப்படாதவனாக நிற்பான். ஆதலால் அச் சிவஞானத்தையே துணையாகக் கொண்டு இறைவனைத் தன் அறிவின் உள்ளே கண்டு அவனது திருவடியைப் பற்றி நின்றால் பாசங்கள் அகலும். எப்போதேனும் பாசம் மீளவருமானாலும் சிவபாவனையை விடாது செய்து அவன் திருவடிக்கீழ் நிற்றல் வேணடும்.

கண்ணாகி என்ற சொல் உயிருக்கு அறிவினைக் காட்டுவதாகிய இறைத் தன்மையைக் குறித்தது. சிவஞான போதம் ஐந்தாம் நூற்பா இரண்டாம் அதிகரணத்தில் முதல் எடுத்துக்காட்டு வெண்பாவில் சொன்ன சிவன் கண்ணா என்று முதல் நூலாசிரியர் இச்சொல்லை இப் பொருளில் ஆண்டிருப்பதை ஒப்பு நோக்குக.

இரண்டாம் அதிகரணம்

297. குறித்து அடியில் நின்று, அட்ட குணம்எட்டுச் சித்தி
கோகநதன் முதல்வாழ்வு குலவுபதம் எல்லாம்
வெறுத்து, நெறி அறுவகையாவும் மேலோடு கீழ் அடங்க
வெறும்பொய் என நினைந்து இருக்க; மேலோடு கீழ் இல்லான்
நிறுந்துவது ஓர்குணம் இல்லான், தன்னை ஒரு வர்க்கும்
நினைப்பரியான், ஒன்றும் இலான், நேர்படவந்து உள்ளே
பொறுப்பு அரிய பேரன்பை அருளி அதன்வழியே
புகுந்திடுவன் எங்கும் இலாப் போகத்தைப் புரிந்தே.

இறைவன் திருவடியிலே உறைப்போடு நின்றால் புறச்சமயத்தார் கூறும் எட்டுவகைக் குணம், அட்டமாசித்திகள், நான்முகன் முதலிய வானவர் பதங்கள் எல்லாம் ஒரு பொருட்டன்று என்ற வெறுப்புத் தோன்றும். எனவே அவற்றை எல்லாம் ஒதுக்கி சிவபெருமான் திருவடியில் பொருந்தி நிற்றல் வேண்டும். அடிமுடி என்னும் வரையறைக்கு உட்படாதவனாகவும், இத்தகையவன் என்று ஒருவராலும் நினைப்பதற்கு அரியவனாகவும், குலம் குறி ஏதும் இல்லாதவனாகவும், விளங்குகின்ற சிவபெருமான் அறிவுக்கு அறிவாய் நேர்பட வந்து பேரன்பினை அருளி அதன் வாயிலாக எங்கும் காணுதற்கு அரிய இன்பத்தினை வழங்கி ஆட்கொள்வான்.

கோகநதம்-தாமரை, கோகநதன்-தாமரையை இருப்பிடமாகக் கொண்ட அயன்.

மூன்றாம் அதிகரணம்

298. கண்டஇவை அல்லேன் நான் என்று, அகன்று, காணாக்
கழிபரமும் நான் அல்லேன் எனக்கருதி, கசிந்த
தொண்டினொடும் உளத்து அவன்தான் நின்றகலப் பாலே,
சோகமெனப் பாவிக்க, தோன்றுவன்வேறு இன்றி
விண்டுஅகலும் மலங்கள் எல்லாம், கருடதியா னத்தால்
விடம்ஒழியு மதுபோல விமலதையும் அடையும்,
பண்டைமறை களும் அதுதான் ஆனேன் என்று
பாவிக்கச் சொல்லுவதுஇப் பாவகத்தைக் காணே.

சுட்டறிவுக்குப் புலப்படுகின்ற இவ்வுலகப் பொருள்கள் அனைத்தும் நான் அல்லேன் என்று அவற்றை விட்டு அகலுதல் வேண்டும். என்னறிவுக்கு எட்டாத பிரமப்பொருளும் நான் அல்லேன் என்பதைக் கருதி உணர்தல் வேண்டும். அவ்வாறு கருதி உணர்வதனால் உயிராகிய நான் பாசப்பொருளும் அல்லேன். பதிப்பொருளும் அல்லேன் என்று புலனாகும். அன்போடு உளம் கசிந்து தொண்டு செய்யும் அடியவர் உளத்தில் இறைவன் அத்துவிதக் கலப்போடு எழுந்தருளுவான். அந்நிலையில் அவன் நான் என்று பாவிக்க இறைவன் தோன்றித் தோன்றுவன். அதனால் உயிரின் மலங்கள் எல்லாம் உயிரை விட்டு அகலும், உயிர் தூய நிலையையும் அடையும், கருட தியானத்தால் பாம்பின் விடம் நீங்குவது போல சிவோகம் பாவனையால் உயிரைப் பற்றி நின்ற மலங்கள் ஒழிந்து உயிர் தூய்மை நிலையைப் பெறும். பண்டை மறை நூல்களும் அது நான் ஆனேன் என்று பாவிக்குமாறு வலியுறுத்தின. அதுவே இப்பாவகமாகும்.

சோகம்-ச+அகம். அதுநான் என்று பொருள்படும். சிவ+அகம்=சிவோகம். சிவனே நான் என்று பொருள்படும். வேதாந்தம் பிரமப் பொருளை அது என்ற சொல்லால் குறிக்கும். எனவே சோகம் என்பது வேதாந்தக் கருத்தும், சிவோகம் என்பது சித்தாந்தக் கருத்துமாகும்.
விமலதை-மலத்தில் நின்றும் நீங்கிய தூயநிலை. பண்டை மறைகள்-தொன்மையான மறைமுடிவைக் கூறும் உபநிடதங்கள்.

299. அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும்
அரன் உருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்டு
அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி
ஆன்மாவின் அஞ்செழுத்தாளல் இதயத்து அர்ச்சித்து
அஞ்செழுத்தால் குண்டலியின் அனலை ஓம்பி
அணைவு அரிய கோதண்டம் அணைந்து அருளின் வழிநின்று
அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்க,மதி அருக்கன்
அணைஅரவம் போல் தோன்றும், ஆன்மாவில் அரனே.

திருவைந்தெழுத்தின் துணை கொண்டு ஆன்மா சிவபெருமானுக்கு உடைமை என்பதையும் சிவபிரான் உடையானாக விளங்குபவன் என்பதையும் அறிதல் வேண்டும். சிவபெருமானுடைய திருஉருவமும் திருவைந்தெழுத்தால் அமைந்தது என்பதனையும் அறிந்திடல் வேண்டும். திருவைந்தெழுத்தை ஓதி உறுப்புக்களைத் தொட்டும், கைகளைத் தொட்டும் தூய்மை செய்து கொள்ளுதல் வேண்டும். இதயத்தைப் பூசைக்கு உரிய இடமாகவும், உந்தியை ஓமத்திற்கு உரிய இடமாகவும் புருவநடுவை தியானத்திற்கு உரிய இடமாகவும் கற்பித்துக் கொண்டு இதயத்தில் சிவபரம் பொருளை எழுந்தருளுவித்து வழிபடுதல் வேண்டும். திருவைந்தெழுத்தால் உந்தியில் உள்ள அருட்சத்தியை எழுப்பி, சேர்வதற்கு அரிய புருவநடுவில் அதனைச் சேர்த்து, திருவருளின் வழி நின்று திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும். இவ்வாறு செய்யும் வழிபாட்டால் கிரகண காலத்தில் ராகு, கேது ஆகிய இரண்டும் திங்களிடத்தும், கதிரவனிடத்தும் காணப்படுவதைப் போல ஆன்மாவினிடத்தில் சிவபெருமான் விளங்கித் தோன்றுவான்.

முந்திய பாடலில் பாவனையைக் கூறிய ஆசிரியர் இந்தப் பாடலில் வழிபாட்டுக்குரிய மந்திரமும் அதற்கு உரிய கிரியையும் கூறினார். திருவைந்தெழுத்தே சிவபெருமானுடைய திருமேனியாக அமையும் என்பது உண்மை விளக்கம் நூலில் விரித்து உரைக்கப்பட்டுள்ளது. அங்கநியாசம், கரநியாசம் என்பன வழிபாட்டிற்கு முன் உறுப்புகளையும் கைகளையும் தொட்டு மந்திரங்களால் தூய்மை செய்து கொள்ளுவதை உணர்த்தின. இங்கே அதற்குரிய மந்திரமாகத் திருவைந் தெழுத்தைக் கூறினார்.

ஒன்பது கோள்களுள் மற்றைய ஏழும் போல இராகுவும் கேதுவும் கண்களுக்குப் புலனாகா. அவை கிரகண காலத்தில் மட்டும் திங்களிலும் கதிரவனிலும் காணப்படும். அது போலப் பாசப் பொருளும், பசுப் பொருளும் உயிர்களுக்கு எல்லாக் காலத்தும் புலப்படும். பதிப் பொருள் புலப்படாது. இங்குக் கூறப்பட்ட பாவனை, மந்திரம், கிரியை ஆகியன நிகழ்ந்த போதே பதிப்பொருள் ஆன்மாவின் அறிவில் விளங்கித் தோன்றும் என்றார்.

குண்டலி-அருட்சத்தி, கோதண்டம்-வில் போன்று விளங்கும் புருவநடு, அருக்கன்-ஞாயிறு. அரவம்-இராகு கேது.

300. நாட்டும்இத யந்தானும் -நாபியினில் அடியாய்
ஞாலம் முதல் தத்துவத்தால் எண்விரல் நாளத்தாய்
மூட்டுமோ கினிசுத்த வித்தைமலர் எட்டாய்
முழுஇதழ்எட்டு அக்கரங்கள் முறைமையினில் உடைத்தாய்
காட்டு கமலாசனமேல் ஈசர், சதா சிவமும்
கலாமூர்த் தமாம்; இவற்றின் கண்ணாகும் சத்தி
வீட்டை அருள் சிவன் மூர்த்தி மானாகி சத்தி
மேலாகி நிற்பன்; இந்த விளைவு அறிந்து போற்றே.

உந்தியில் நிலமாகிய தத்துவம் கிழங்காகவும் அதனை அடுத்து இருபத்து மூன்று தத்துவங்களும் எட்டுவிரல் அளவுள்ள நாளமாகவும் தூவாமாயையின் காரியமாகிய வித்தியா தத்துவங்கள் ஏழும் சுத்தவித்தை ஆகிய தத்துவத்துடன் கூடிய எட்டு இதழ் வடிவமாகவும், அவ்விதழ்கள் எட்டும் பிரணவம் முதலிய எட்டு எழுத்துக்களை உடையதாகவும், ஈசுவரம், சதாசிவம் என்ற இரண்டுதத்துவங்களும் அறுபத்து நான்கு கேசர வடிவாகவும், சத்தி தத்துவம் அக்கேசரங்களுக்கு நடுவிலே உள்ள பொகுட்டு வடிவமாகவும், அதனில் காணப்படும் ஐம்பத்தொரு வித்து வடிவமாகவும் விளங்குகின்ற இதயகமலம் இறைவன் எழுந்தருளும் ஆசனமாகும். இவ்வாறு பாவித்து வீடுபேற்றை அருள வல்லவனாகிய சிவபெருமான் அச்சத்தியினும் மேலான மூர்த்திமானாக விளங்குவதாகக் கொண்டு உள்ளத்தின் உள்ளே கண்டு வழிபாடு செய்தல் வேண்டும்.

நாளம்-தண்டு. இதயத்தாமரை இங்கு உருவகிக்கப்பட்டது. இது அகவழிபாடு இயற்றுகின்ற முறைமையை உணர்த்திற்று. இதனை அந்தர் யாக பூசை என்பர். சிவஞான போதத்தில் ஒன்பதாம் நூற்பாவில் மண் முதல் நாளம் என்று தொடங்குகின்ற எடுத்துக்காட்டு வெண்பாவை இங்கு நினைவு கூர்க.

301. அந்தரியா கம்தன்னை முத்திசா தனமாய்
அறைந்திடுவர் அதுதானும் ஆன்மசுத்தி ஆகும்
கந்த மலர் புகை ஒளி மஞ் சனம் அமுது முதலாக்
கண்டனஎ லாம்மனத்தால் கருதிக் கொண்டு
சிந்தைதனில் அர்ச்சிக்க சிவனைஞா னத்தால்
சிந்திக்கச் சிந்திக்க தர்ப்பணத்தை விளக்க
வந்திடும்அவ் ஒளிபோல மருவி அரன் உளத்தே
வரவரவந் திடுவன்;பின் மலமானது அறுமே.

அகப் பூசையாகிய அந்தர் யாகம் என்னும் இவ்வழிபாடு வீடு பேற்றுக்கு உரிய நெறி என்று மேலோர் கூறுவர். இவ்வழிபாடு உயிருக்குத் தூய்மையை விளைவிக்கும், நறுமணப் பொருள்கள் மலர் நறும்புகை திருவிளக்கு திருமஞ்சனம் திருவமுது முதலாக விழபாட்டுக்கு உரிய எல்லாப் பொருள்களையும் மனத்தினால் கருதி அமைத்துக் கொண்டு சிவபெருமானைச் சிந்தனையில் எழுந்தருளுவித்து வழிபடுந்தோறும் கண்ணாடியைத் துடைத்தபோது மாசு அகன்று அது ஒளிவிடுவதைப் போல சிவபெருமான் உள்ளத்தே எழுந்தருளுவான். அதன்பின் உயிரின் மலமாசு நீங்கும்.

கந்தம்-நறுமணம், மஞ்சம்-திருமுழுக்குக்கு வேண்டிய நீர் முதலியன. தர்ப்பணம்-முகம் பார்க்கும் கண்ணாடி.

302. புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க வேண்டில்
பூமரத்தின் கீழ்உதிர்ந்த போதுகளும் கொண்டு
சிறந்து ஆருஞ் சீர்ச்சிவனை ஞானத்தால் அங்குச்
சிந்திக்கும் படிஇங்குச் சிந்தித்து போற்றி
அறம்பாவங் கட்குநாம் என் கடவேம் என்றும்
ஆண்டவனைக் கண்டக்கால் அகம்புறம் என் னாதே
திறம்பாதே பணிசெய்து நிற்கை அன்றோ
சீர்அடியார் தம்முடைய செய்தி தானே?

அகத்தில் கண்டவாறே புறத்திலும் ஒரு குறியில் கண்டு சிவன் திருவடியை வழிபடுதல் வேண்டும். அதற்குரிய துணைப் பொருட்கள் வேண்டுமாயின் அவற்றைப் பெறமுயன்று வருந்துதலும் பிறரை வருந்துதலும் ஆகாது எனக்கண்டு மரத்தின்கீழ் உதிர்ந்த பூக்களும் நீரும் பிறவும் கொண்டு அகத்தே வழிபட்ட தன்மையில் வழிபடுதல் வேண்டும். சிறந்து விளங்குகின்ற புகழினை உடைய சிவபெருமானை ஞானத்தால் அகத்தில் வழிபட்ட வண்ணமே சிந்தித்துப் புறத்திலும் போற்றி வழிபடுதல் வேண்டும், நம்மால் விளைகின்ற புண்ணிய பாவங்களுக்கு நாம் என் செய்வோம் என்று இரங்கி அகம், புறம் என்னும் வேறுபாடுகளைப் பாராட்டாமல் நெறி பிறழாமல் சிவப்பணி செய்து நிற்றலே சிறப்புடைய அடியாரின் செயலாகும் இதனானே புறப்பூசையும் ஆண்டைக்கு அங்கமாதல் கூறப்பட்டது என்பது சிவஞான முனிவர் உரை.

303. இந்தனத்தின் எரி பாலின் நெய் பழத்தின் இரதம்
எள்ளின் கண் எண்ணெயும்போல் எங்கும்உளன் இறைவன்
வந்தனை செய்து எவ்விடத்தும் வழிபடவே அருளும்
மலம்அறுப்போர் ஆன்மாவில் மலர் அடிஞா னத்தால்
சிந்தனை செய்து அர்ச்சிக்க சிவன் உளத்தே தோன்றி
தீ இரும்பை செய்வதுபோல் சீவன் தன்னைப்
பந்தனையை அறுத்துத் தா னாக்கித்தன் உருவப்
பரப்பெல்லாம் கொடுபோந்து பதிப்பன் இவன் பாலே,

விறகில் தீயினைப் போலவும், பாலில் நெய் போலவும், பழத்தில் சுவை போலவும், எள்ளினுள் எண்ணெயைப் போலவும் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். எனவே இறைவனை அகத்திலாயினும், புறத்திலாயினும் வணங்கி வழிபட்டால் அவர்களுக்கு அருள்பாலிப்பான். ஆயினும் தங்களைப் பற்றியுள்ள மலம் முற்றிலும் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சிவபெருமானை அவனுடைய செந்தாமரை மலர்போலும் திருவடி ஞானத்தினால் தங்கள் உள்ளத்தின் உள்ளே எழுந்தருளுவித்து அகவழிபாடு இயற்றுவார்கள். அத்தகைய அடியார்கட்கு இறைவன் விளங்கித் தோன்றி அவர்களது மலப்பற்றினை அறவே துடைத்து அருளுவான். நெருப்பில் இட்ட இரும்பு நெருப்பின் தன்மையை எல்லாம் பெறுவது போல இறைவனும் உயிரைத் தன் வண்ணம் ஆக்குவான். தனது பேரானந்தப் பெருஞ் செல்வம் முழுவதையும் உயிருக்கு அருளுவான்.

இப்பாடலால் அகவழிபாட்டின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டது. இறைவனுடைய எண்குணங்களும் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைய உயிருக்குரிய குணம் ஆகும்படி அத்துவித இயல்பால் உயிரினிடத்து விளங்கித் தோன்றுதல் இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது. அதுவே சிவாநந்தம் மேலிடுதல் என்று சிவஞான முனிவர் எடுத்துரைத்தார்.

பத்தாம் நூற்பா

304. இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல்லாம்
இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்
அவன் இவனாய் நின்றமுறை ஏகனாகி
அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம்
சிவனும் இவன் செய்தி எல்லாம் என்செய்தி என்றும்
செய்ததுஎனக்கு இவனுக்குச் செய்தது என்றும்
பவம்அகல உடனாகி நின்று கொள்வன் பரிவால்
பாதகத்தைச் செய்திடினும் பணி ஆக்கி விடுமே.

சிவபெருமான் தன்னை வழிபடும் அடியார்களுடன் பிரிப்பின்றி உடன் நிற்பான் என்றது முந்திய பாடலில் கூறப்பட்டது. அத்தகைய அடியார்கட்கு உலகில் நலம் தீங்குகள் செய்தவர்கே அச்செயல்களின் பயன் சென்று இசையும். அல்லாமல், அடியார்களுக்கு வின்னப்பயன் எய்தாது. தன் முனைப்பற்றுத் திருவருளில் ஒடுங்கித் தலைவன் செயலே தம் செயலாக அரன் பணியில் நிற்கும் இவ்வடியார்களுக்கு உயிரின் குற்றமாகிய மலமும் நீங்கும். சிவபெருமானும் அடியார்களின் செயல்கள் எல்லாம் தன் செயலாகவும், அடியார்களுக்குச் செய்த எல்லாம் தனக்குச் செய்தன எனவும் உடனாக நின்று ஏற்றுக் கொள்வான். அவ்வாறு கொள்ளவே அடியார்களின் பிறப்பு அகலும். அத்தகைய அடியவர்கள் சிவபிரான் மீது கொண்ட அன்பின் மிகுதியால் எப்போதேனும் தீங்கு செய்திடினும் இறைவன் அதனையும் தனது பணியாக ஏற்று அருளுவான்.

இப்பாடலில் இவன் என்ற சொல் அடியார்களைக் குறித்தது. அவன் என்ற சொல் சிவபெருமானைக் குறித்தது.

முதல் அதிகரணம்

305. யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும்
இக்கோணை ஞான எரியால் வெதுப்பி நிமிர்த்து
தான்செவ்வே நின்றிட அத் தத்துவன் தான் நேர
தனை அளித்து முன்நிற்கும் வினை ஒளித்திட்டு ஓடும்
நான் செய்தேன் எனும் அவர்க்குத் தான் அங்கு இன்றி
நண்ணுவிக்கும் போகத்தை பண்ணுவிக்கும் கன்மம்
ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால்
ஒருவருக்கும் யான் எனது இங்கு ஒழியாது அன்றே.

நான் பிறர்க்கு இன்ன நன்மை, தீமை செய்தேன், பிறர் எனக்கு இன்ன நன்மை, தீமை செய்தார் என்று கருதுவது யான் எனது என்னும் செருக்கினால் விளையும் மனக்கோட்டம் ஆகும். இத்தகைய மனக்கோட்டத்தை ஞானம் என்னும் நெருப்பால் காய்ச்சி அதனை நிமிர்த்துதல் வேண்டும்.... அவ்வாறு நிமிர்த்தி இறைவனின் திருவருள் வழியிலே தன்முனைப்பு இன்றி நிற்கவே இறைவன் நேராக வெளிப்பட்டுத் தோன்றி அருள்பாலிப்பான். அவனுடைய முன்னிலையில் நில்லாது ஞானமுடையாரின் வினைகள் ஒளித்துவிடும். இவ்வாறன்றி இதனை நான் செய்தேன் என்று தன் முனைப்போடு செயல்படுவோர்க்கு இறைவன் விளங்கித் தோன்றுதல் இலன். மேலும் அவர்கள் செய்யும் வினைக்கு ஏற்ற பயனையும் இறைவன் ஊட்டுவான். எனவே அவர்களுக்கு வேறு வினையும் தோன்றும். மாயையினால் ஆகிய கருவிகளைப் பொருந்தி அறியும் சிற்றறிவினின்றும் வழிபட்டு ஏகனாகி இறைபணி நிற்கும் ஞானம் உதித்தால் அன்றி, ஒருவருக்கும் யான் எனது என்னும் செருக்கு ஒழிவதில்லை.

கோண்-கோட்டம். இரும்புக் கம்பி முதலியன வளைந்து போகுமானால் அதனைத் தீயிலிட்டுக் காய்ச்சி அடித்து நிமிர்த்துவர். யான் எனது என்னும் செருக்கு மலத்தினால் விளைந்த கோட்டம். அதனை ஞானத் தீயிலிட்டுக் காய்ச்சி நிமிர்த்தினால் அன்றி நிமிராது என்று உருவகம் செய்தார்.

இரண்டாம் அதிகரணம்

306. இந்திரியம் எனைப்பற்றி நின்றே என்வசத்தின்
இசையாதே தன்வசத்தே எனைஈர்ப்பது இவற்றைத்
தந்தவன்றன் ஆணைவழி நின்றிடலால் என்றும்
தான் அறிந்திட்டு இவற்றினொடும் தனைஉடையான் தாள்கள்
வந்தனைசெய்து இவற்றின்வலி அருளினால் வாட்டி
வாட்டம் இன்றி இருந்திடவும் வரும்செயல்கள் உண்டேல்
முந்தனுடைச் செயல்என்று முடித்து ஒழுக வினைகள்
மூளா! அங்கு ஆளாகி மீனாள் அன்றே.

ஐம்பொறிகள் ஆன்மாவாகிய என்னிலிருந்து வேறுபட்டவை வினையின் பயனாக அவை என்னைப் பற்றி நின்றன. அவை என் வயத்தில் நிற்க இசையாமல் என்னைத் தம் வயத்தே ஈர்த்தன. இவ்வாறு நிகழ்வதும் அவற்றை எனக்களித்த இறைவனின் ஆணை வழியே ஆகும் என்று அறிந்து சிவஞானிகள் ஐம்பொறிகளுக்கும் தமக்கும் உடையானாக விளங்குகிற இறைவனுடைய திருவடிகளில் இடையறாது வழிபட்டு வருவர். ஐம்பொறிகளின் வலிமையைத் திருவருளின் வழிநின்று வாட்டுவர். தாம் வாட்டமின்றி இருப்பர். எப்போதேனும் நன்மை தீமைகள் வருமேனும் அதுவும் சிவன் செயலே என்று அவன் அருள் வழி நிற்பர். எனவே அவர்களுக்கு ஏறு வினைகள் மூளா. அவர்கள் சிவனடிக்கு ஆட்பட்டு நிற்பதனால் மீண்டும் ஐம்பொறிகளுக்குக் கட்டுப்படார்.

முந்தன்-இறைவன். இப்பாடலால் அரன் பணியில் நிற்றலும் இன்றியமையாதது என்றது ஆசிரியரால் உணர்த்தப்பட்டது. திருவாசகம் குழைத்த பத்தில் வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால். வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன் தன் விருப்பன்றே(பாடல் 6) என்று மாணிக்க வாசகர் அருளிச் செய்தமை இங்கு நினைவு கூர்க.

307. சலமிலன் ஆய் ஞானத்தால் தனை அடைந்தார் தம்மைத்
தானாக்கித் தலைவன் அவர் தாம் செய்வினை தன்னால்
நலமுடனே பிறர்செய்வினை ஊட்டி ஒழிப்பானாய்
நணுகாமல் வினை அவரை நாடிக் காப்பன்
உலகினில் என் செயல் எல்லாம் உன்விதியே நீயே
உள்நின்றும் செய்வித்தும் செய்கின்றாய் என்றும்
நிலவுவதோர் செயல்எனக்கு இன்று உன்செயலே என்றும்
நினைவார்க்கு வினைகள் எல்லாம் நீங்கும் தானே.

இறைவனாகிய நீயே எனக்குள் நின்று எனனைச் செயற்படுத்துகிறாய். ஆகையால் உலகில் எனக்கென்று ஒரு செயல் இல்லை. எல்லாம் உன் செயலே. எனக்கு வரும் நலம் தீங்குகளும் பிறரால் வருவன அல்ல. அவையும் உன் ஆணையின் வழியே நிகழ்வன என்று நினைகிற சிவஞானிகட்கு வினைகள் எல்லாம் நீங்கும். மெய்ஞ்ஞானத்தால் சிவபெருமான் திருவருளைப் பற்றிநிற்பவர்களுக்கு வினைகள் வந்து பொருந்தாமல் இறைவனே காப்பான். தன்னை அடைக்கலமாக அடைந்தவரைத் தலைவனாகிய சிவபெருமானே தன்னைப் போல் தூயராக்கி அருளுவான். மெய்யடியார் அல்லாத பிறருக்கு அவர்கள் செய்த வினையின் பயனை ஊட்டிக் கழிப்பான். ஆயினும் சிவ பெருமான் விருப்பு வெறுப்புகள் அற்றவனே.

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அல்லால், நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலன் என்ற அப்பர் பெருமானின் நமசிவாயத் திருப்பதிகத்தின் திருப்பாட்டு இங்குக் கருதத்தக்கது.

308. நாடுகளில் புக்குஉழன்றும் காடுகளில் சரித்தும்
நாகமுழை புக்கு இருந்தும் தாகமுதல் தவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தராய் இருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பில்
ஏடுதரும் மலர்க்குழலார்முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானம்
கூடுமவர் கூடரிய வீடும் கூடி
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்.

பல நாடுகளில் உள்ள புண்ணியப்பதிகளை வணங்கியும், புண்ணிய தீர்த்தங்களில் அடியும், காடுகளுக்குள்ளே அலைந்து திரிந்தும், குகைகளிலே புகுந்து யோக சாதனை புரிந்தும், பசி நீர்வேட்கை போன்றவற்றைப் பல காலம் பொறுத்துக் கொண்டு தவம் இயற்றியும் இவ்வாறு செயற்கரிய செய்த தவத்தினரும் சிவஞானம் பெற்றிலரேல் மீண்டும் பிறப்புக்கு உட்படுவர். இறைஞானம் பெற்றவர்கள் வாசமிகுமலர் அணிந்த மங்கையரோடு கூடி வாழினும் பிறர் சென்று சேர்வதற்கரிய வீடு பேற்றினை அடைந்து சிவ பெருமானின் சிவந்த குஞ்சித தாள்களைக் கும்பிட்டே இருப்பர்.

நின்மல ஞானம்-மலமாசு அகன்ற சிவஞானம். இதனையே மீண்டும் இறைஞானம் என்றும் கூறினார்.

309. அங்கித்தம் பனைவல்லார்க்கு அனல்சுடா தாகும்
ஒளடதம்மந்திரம் உடையார்க்கு அருவிடங்கள் ஏறா
எங்கித்தைக் கன்மமெலாம் செய்தாலும் ஞானிக்கு
இருவினைகள் சென்று அணையா முன்செய்வினை இங்குத்
தங்கிப்போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த
சக்கரமும் கந்தித்துச் சுழலு மாபோல்
மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா
மலங்களும்பின் காயமொடு மாயும் அன்றே.

அங்கித் தம்பனை என்ற வித்தை கைவரப் பெற்றவர்களை நெருப்புச் சுடாது. மருந்தாலும் மந்திரத்தாலும் தம் உடம்பைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பவர்களுக்குக் கொடிய நஞ்சும் ஊறு செய்யாது. அவை போலவே சிவஞானியர்களுக்கும் அவர்கள் எச் செயலைச் செய்தாலும் இருவினைப் பயன்களும் வந்து பொருந்தா. அவர்களுடைய நுகர்வினையும் தனது வலிமை கெட்டு வாதனை அளவாய் நின்று அவர்களைச் சிறிதளவே பற்றும். இது எவ்வாறெனில் குயவன் கலங்கள் வளைதற்காகச் சுழற்றி விட்ட சக்கரம் வனைந்து முடிந்த பின்னரும் சிறிது நேரம் சுழன்று அதன் பின் நிற்பதைப் போலாகும். பெருங்காயம் வைத்திருந்த பாத்திரத்தில் அதனை அகற்றி விட்ட பிறகும் அதன் மணம் மட்டிலும் தங்கியிருத்தல் போலவுமாகும். சிவஞானியர்களின் வினைப் பயனும் அவர்கள் உடம்பு உள்ள அளவு அவர்களை மெலிதாகப் பற்றும் மலங்கள் யாவும் அவர்கள் உடல் விடும் காலத்து முற்றிலும் மாயும்.

அங்கித்தம்பனை என்பது நெருப்பின் சூட்டைக் கட்டுப்படுத்தும் ஓர் ஆற்றல். எங்கித்தை-எங்கு என்ற சொல் இவ்வாறு மருவிற்று. கந்தித்தல்-மணத்தல். இங்கு -பெருங்காயம், சுழற்றுவதை நிறுத்திய பின் சக்கரம் சிறிது நேரம் சுழன்றாலும் அந்தச் சுழற்சி வேறு ஓர்கலன் வனையப் பயன்படாது. பெருங்காயம் இருந்த பாத்திரத்தில் உள்ள மணம் கறிக்கு உதவாது. அவை போன்றே சிவஞானியரின் பிராரத்த வினையும் அவர்களைத் தாக்காது வாதனை அளவாய்க் கழியும் என்பதனை விளக்க இவ்வுவமைகளை எடுத்துக் காட்டினார்.

பதினோராம் நூற்பா

310. காயம்ஒழிந் தால்சுத்தி னாகிஆன்மா
காட்டக்கண்டிடுந்தன்மை உடைய கண்ணுக்கு
ஏயும் உயிர் காட்டிக்கண் டிடுமாபோல
ஈசன்உயிர்க் குக் காட்டிக் கண்டிடுவன்; இத்தை
ஆயும் அறிவு உடையனாய் அன்பு செய்ய
அந்நிலைமை இந்நிலையில் அடைந்தமுறை யாலே.
மாயம் எலாம் நீங்கி அரன் மலர் அடிக்கீழ் இருப்பன்,
மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே.

காட்டக் காணும் தன்மை உடையது கண். அதாவது கண் தானாகக் காணும் இயல்புடையதன்று. உயிர் கண்ணுடன் பொருந்தி அதற்குப் பொருள்களைக் காட்டவும் காட்டும். தான் காணவும் காணும். இது உயிர் கண்ணுக்குச் செய்யும் பேருதவியாகும். அவ்வாறே இறைவன் உயிரோடு உடன் நின்று உயிருக்கு அறிவித்தலோடு மட்டும் அல்லாமல் தானும் அறிந்து உதவுவான். இறைவன் இவ்வாறு உயிருக்குக் காணும் உபகாரமும் காட்டும் உபகாரமும் புரிந்து வருகிறான் என்பதை நன்கு ஆராய்ந்து இறைவனிடம் மாறாத அன்பு செய்கிற இயல்பினை உடையவர் சிவஞானிகள். உடல் நீங்கிய பின் எய்துவதற்குரிய மல நீக்கத்தினை உடலோடு கூடியிருக்கும் பொழுதே கைவரப் பெற்றமையால் சிவஞானியர் இம்மையிலேயே எல்லா மலங்களிலிருந்தும் விடுபட்டு ஒரு போதும் மாறாத சிவானந்தப் பெரும் பேற்றினைப் பெற்று சிவபெருமான் திருவடிமலரின் கீழ் இருப்பர்.

காயம் - உடம்பு. அந்நிலைமை - உடம்பு ஒழிந்தபின் மலநீக்கம் பெற்றுத் தூயனாய் விளங்கும் தன்மை. இந்நிலையில் - உடம்போடு கூடி வாழும் இம்மையில்.

அத்துவித நிலை விளக்குவதாகிய காணும் உபகார மாத்திரையே ஈண்டுக் கூறப் புகுந்தார், இனிது விளங்குதற் பொருட்டு ஐந்தாம் சூத்திரத்துள் கூறிப் போந்த காட்டும் உபகாரத்தையும் அனுவதித்து உடன் கூறினார் என்பது சிவஞான முனிவர் உரை.

311. பரஞானத் தால்பரத்தைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க
வருஞானம் பலஞானம்; அஞ்ஞான விகற்பம்;
வாச்சிய வா சகஞானம் வயிந்தவத்தின் கலக்கம்
தருஞானம் போக ஞா திரு, ஞான, ஞேயம்
தங்கியஞா னம் சங்கற் பனை ஞான மாகும்
திருஞானம் இவைஎல்லாம் கடந்த சிவ ஞானம்;
ஆதலால் சீவன் முத்தர் சீவமேகண்டு இருப்பர்.

மேலாகிய உண்மை ஞானத்தால் சிவ பரம் பொருளைக் கண்டு அன்பு செய்பவர்கள் அப்பரம் பொருளையே உணர்ந்து கொண்டு நிற்பார்கள். உலகியற் பொருள்களைச் சற்றேனும் காணார். உலகத்துப் பொருள்களைக் காண்பதற்குரிய ஞானங்கள் என்பன பல வகைப்படும். அவை யாவும் சொல்லாலும் சொல்லால் உணரும் பொருளாலும் தோன்றுகின்ற ஞானமாகும். எனவே அவை ஐயத்øத் தருகின்ற ஞானமேயாகும். அதுவுமன்றி அவை மாயையைப் பற்றிக் கொண்டு வருவனவாகும். எனவே கலக்கத்தைத் தருவதாகும். கலக்கம் நீங்கும் படி சிந்தித்துத் தெளிகின்ற போது எழுவதாகிய அறிபவன், அறிவு, அறியப்படு பொருள் என வேற்றுமைப் படுத்திக் காணும் ஞானமும் பாவனை ஞானமேயாகும். இவற்றை எல்லாம் கடந்த சிவஞானம் ஒன்றே சிறப்புடைய ஞானமாகும். ஆதலால் இந்த ஞானம் கைவரப் பெற்ற சீவன் முத்தர் சிவன் ஒன்றையே கண்டிருப்பர். உலகத்துப் பொருளை நோக்கிப் பிராரத்த வாதனையில் அகப்படுவாரல்லர்.

பதார்த்தம்-சொல்லால் அறியப்படும் பொருள். பார்க்க வரும் ஞானம்-கருவி கரணங்களால் பெறப்படும் ஞானம். இது காட்சி, அனுமானம், உரை என்ற பல வகைப்பட்ட அளவைகளால் அறியவரும் ஞானம். எனவே பல ஞானம் என்றார். வாச்சியம்-பொருள் வாசகம்-சொல். இது நூல்களைக் கேட்டதனால் வரும் ஞானத்தைக் குறித்தது. வைந்தவம்-விந்துவிலிருந்து தோன்றியது. ஞாதிரு-அறிபவனாகிய உயிர். ஞானம்-அறிவு. ஞேயம் -அறியப்படு பொருளாகிய சிவம். சீவன்முத்தர் பிறிதொன்றினைப் பாரார் என்று கூறியதானால் பிராரத்தவினையின் வாதனையும் பற்றறக் கழியும் என்பது விளக்கப்பட்டது.

312. அநாதிஉடல்; ஒன்றினைவிட்டு ஒன்று பற்றிக் கன்மால்
ஆய்அழிந்து வருதலால் அந்தம் இல்லை
பின்ஆதி அருள் பெற்றவர்கள் நித்த உரு வத்தைப்
பெற்றிருக்கை முத்திஎனில் பெறும்பதமே; இதுவும்
இனாதுநிலை இதுதானும் காயம் உண்டேல்
இருங்கன்மம் மாயைமலம் எல்லாம் உண்டாம்
மனாதிதரும் உடல்ஆதி காரியத்தால் அநாதி
மலம் அறுக்கும் மருந்து அற்றால் உடன்மாயும் காணே.

உடம்பு என்பது அநாதி காலந்தொட்டே உயிருக்கு இடங்கொடுத்து வருவது. உயிர் பல்லூழிக் காலமாகத் தனது வினைக்கு ஏற்ப ஓர் உடம்பை விட்டும் மற்றோர் உடம்பைப் பற்றியும் தோன்றியும் அழிந்தும் வருவதனால் அதற்கு ஓர் முடிவில்லை, என்பர் சிலர். எனவே முத்திப் பேற்றை அடைந்தவர்கள் மற்றைய உடம்புகளைப் போல் அல்லாத நித்த உருவத்தைப் பெற்றிருப்பர் என்று இவர்கள் கூறுவார்கள். இத்தகைய உடம்பும் துன்பத்துக்கே கொள்கலமாகும். ஏனெனில் உடம்பு என்ற ஒன்று உள்ள வரை அதற்கு வினை உண்டு. மாயை உண்டு. ஆணவ மலமும் உண்டு. மேலும் அத்தகைய நிலை பதமுத்தி எனப்படுமே அல்லாமல் வீடு பேறு ஆகாது. மனம் முதலிய புரியட்டக உடம்பிலிருந்தும் தோன்றுகிற இவ்வுடம்பு காரியப்பட்டு வருவதனால் தோற்றம் உடையது என்றே கொள்ள வேண்டும். தோற்றமில் காலந் தொட்டே உயிரைப் பற்றிய மலநோய் தீருவதற்கு இவ்வுடம்பு மருந்தாகும். எனவே மலநோய் தீர்ந்தால் இவ் உடம்பு நீங்கும்.

இப்பாடலால் மாயையாகிய மலம் பற்றற நீங்குவது உணர்த்தப்பட்டது.

313. தெரிவுஅரிய மெய்ஞ்ஞானம் சேர்ந்த வாறே
சிவம்பிரகா சிக்கும் இங்கே சீவன்முத்தன் ஆகும்;
உரியமலம் ஒளடதத்தால் தடுப்புண்ட விடமும்
ஒள்எரியின் ஒளிமுன்னர் இருளும் தேற்றின்
வரபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போல் ஆகி
மாயாதே தன்சத்தி மாய்ந்து காயம்
திரியும்அள வும் உளதாய் பின்பு காயம் சேராத
வகைதானும் தேயும் அன்றே.

தெரிவதற்கு அரிய மெய்ஞ்ஞானம் பெற்றபோது உயிரினிடத்து சிவம் விளங்கித் தோன்றும். இந்நிலையில் உயிர் சீவன் முத்தனாகும் தன்மை பெறும். உடன் தோன்றியதாகிய ஆணவ மலம் தன் வலிமை குன்றி உடம்பு உள்ள அளவும் நின்று மற்றொரு பிறவிக்குக் காரணமாதல் இன்றி இவ்உடலோடுகூடத் தானும் அழியும். இது எவ்வாறு எனில் மருந்தால் தடுக்கப்பட்ட நஞ்சும், கொழுந்து விட்டு எரியும் ஒளிமுன்னர் இருளும், தோற்றாங் கொட்டை இடப்பெற்ற நீரின் கலங்கலும் போல ஆணவ மலத்தின் வலிமை குறைந்து இருக்கும் என்க.

சிவன் முத்தர்க்கு உடல் உள்ள அளவும் ஆணவ மலம் மெலிதாய் நிகழும் என்பதனை விளக்க ஆசிரியர் மூன்று உவமைகள் கூறினார். இந்த உவமைகளை எதிர்நிரல் நிறையாக வைத்துக் கண்டு கொள்க என்று அறிவுறுத்தினார் சிவஞானமுனிவர். தோற்றாங் கொட்டை இடப்பட்ட நீரின் கலங்கள் பரஞானம் பெற்றவர்களிடம் மாய்ந்து கிடக்கும் மலசத்தி ஏதேனும் ஒரு காரணத்தால் மேற்பட்டாலும் ஒட்டு இன்றி விலகுவதற்கு உவமையாயிற்று. ஒளியின் முன் இருள் இயைபு இன்றியும் தொலைவில் உள்ளது போலத் தோன்றுவதற்கு உவமையாயிற்று. மருந்தால் தடுக்கப்பட்ட நஞ்சு, ஆணவ மலம் சீவன் முத்தரிடத்து இயையாது எனினும் அந்நிலையில் மெலிவு பார்த்திருப்பதற்கு உவமையாயிற்று. இப்பாடலால் மெய்ஞ்ஞானியர்க்கு ஆணவமலம் பற்றற நீங்கும் முறைமை கூறப்பட்டது.

314. ஆணவந்தான் அனாதி அந்தம் அடையா தாகும்
அடையின் அந்த ஆன்மாவும் அழியும் எனில் செம்பில்
காணல்உறும் களிம்பு இரத குளிகைபரி சிக்கக்
கழியும் செம்பு உருநிற்கக் கண்டோம் அன்றே?
தாணுவின் தன் கழல் அணையத் தவிரும் மலம் தவிர்ந்தால்
தான் கத்தனாய் இருக்கை முத்தி அரன் தாளைப்
பூண வேண்டுவது ஒன்றும் இல்லை எனில் அருக்கன்
புகுதஇருள் போம் அடியிற் பொருந்தமலம் போமே.

ஆணவமலம் என்பது தோற்றமில் காலந்தொட்டே உயிரைப் பற்றி நிற்பது. அதுவும் நித்தப் பொருள் என்றே கொள்ளப் பெறும். எனவே அது ஒரு போதும் அழிவதில்லை. ஆணவம் அழியும் என்று கூறினால் அதனோடு உயிரும் அழியும் என்று கொள்ளுதல் வேண்டும் என்று சிலர் கூறுவர். அவர்கள் கொள்கை பொருத்தமுடையது அன்று. செம்போடு கூடியிருக்கும் களிம்பு, செம்பைப் பொன்னாக்கும் இரத குளிகையால் தொட்ட போது அழிந்து போவதைக் காண்கிறோம். அழிந்துபோன களிம்போடு செம்பின் உருவமும் அழிவதில்லை. அதன்பின் செம்பு பொன்னாய்த் திகழுமேயன்றிச் செம்பு அழிவதில்லை. அது போலவே, சிவபெருமானின் திருவடிஞானத்தை எய்திய உயிர்கள் ஆணவ மலத்தை விட்டு நீங்கித் தூய்மை பெறுமேயல்லாது அவை அழிவதில்லை. இவ்வாறு தூய்மை பெற்ற நிலையே வீடுபேறு எனப்படும். ஆதலால் சிவபெருமான் திருவடியை உயிர் பொருந்துதல் வேண்டும் என்று கூறுவது மிகை என்று வேறு சிலர் கூறுவர். இவர்கள் கொள்கையும் பொருந்தாக் கொள்கையே. குற்றமற்ற கண்ணாக இருந்தாலும் சூரிய ஒளி கண்ணொளியோடு கலந்தால் மட்டிலுமே இருள் நீங்கும். அதுபோலவே மெய்ஞ்ஞானம் பெற்ற போதும் உயிர் இறைவனது திருவடியைப் பொருந்தினாலே ஆணவ மலம் முற்றிலும் அகலும்.

ஆணவமலம் அழிகின்ற போதே உயிர் அழிந்து போகும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் பாடாணவாத சைவர். ஆணவ மலம் நீங்கினாலே உயிர்முத்தி நிலை எய்தும், உயிர்சிவன் திருவடியைப் பொருந்த வேண்டுவது இல்லை என்ற கொள்கையுடையவர் பேதவாத சைவர். இவர்கள் இருவர் கொள்கையையும் மறுத்துச் சைவ சித்தாந்தக் கொள்கையை ஆசிரியர் வலியுறுத்தினார்.

315. நெல்லினுக்குத் தவிடுஉமிகள் அநாதி யாயே
நெல்லைவிட்டு நீங்கும்வகை நின்றநிலை நிகழ்த்தீர்!
சொல்லியிடின் துகளற்ற அரிசியன்பால் இல்லை
தொக்கு இருந்து மற்ற ஒரு நெல் தோன்றி டாவாம்
மெல்ல இவை விடும் அறவே இவைபோல அணுவை
மேவும் மலம் உடல் கன்மம் அநாதி விட்டே நீங்கும்
நல்ல சிவ முத்தியின்கண் பெத்தான் மாவை
நணுகிநிற்கும் ஆதலால் நாசமும் இன்றாமே.

நெல்லுக்கு முளையும், தவிடும், உமியும் தோன்றும் போதே உடன் உள்ளனவாம். ஆயினும் தவிடு உமி முதலியன நீக்கப் பெற்ற பின் அரிசி நிலைபெற்று இருக்கும். சொல்லப் போனால் முளை, தவிடு, உமி என்பன அரிசியினிடத்து இல்லாமல் அகன்றன. தவிடு உமிகளை நீங்கிய அரிசி மீண்டும் நெற்பயிரைத் தோற்றுவிப்பது இல்லை. இதிலிருந்து முளை, தவிடு, உமி ஆகியன அரிசியை விட்டு அறவே அகன்று போயின என்பதை அறியலாம். அவ்வாறே தோற்றமில் காலந்தொட்டே உயிரைப் பற்றியிருந்த மலம், மாயை, கன்மம் ஆகியவையும் உயிரினிடத்து மெய்ஞ்ஞானம் தோன்றி, அவை முத்தி நிலை பெற்ற போது முற்றிலும் நீங்கும் என்று கொள்க. அப்படியானால் மலங்கள் அழியும் என்று கொள்ளலாமா என்ற வினா எழும். மலங்கள் அழிவதில்லை. ஏனெனில் மும்மலங்களும் முத்தியை அடைந்த உயிர்களை விட்டு நீங்கினாலும், கட்டு நிலையிலுள்ள உயிர்களிடத்து அவை காணப்படுவதால் அவற்றை நித்தப் பொருள் என்றே கொள்வதில் இழுக்கு இல்லை.

அணு-உயிர். பெத்தான்மா-கட்டு நிலையில் உள்ள ஆன்மா.

முதல் அதிகரணம்

316. எவ்விடத்தும் இறை அடியை இன்றி அமைந்து ஒன்றை
அறிந்து இயற்றி இடாஉயிர்கள்; ஈசன் தானும்
செவ்விதினில் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து
சேட்டிப்பித்து எங்குமாய்ச் செறிந்து நிற்பன்
இவ்வுயிர்கள் தோற்றும் போது அவனை இன்றித் தோற்றா
இவற்றினுக்கு அம் முதல் எழுத்துக்கு எல்லாமாய் நிற்கும்
அவ்உயிர்போல் நின்றிடுவன் ஆதலால் நாம்
அரன் அடியை அகன்றுநிற்பது எங்கே யாமே?

உயிரின் கட்டுநிலையிலாயினும் இறைவனுடைய பேரருளின் துணை இல்லாமல் எதனையும் அறிவதும் இல்லை. செய்வதும் இல்லை. இறைவனும் எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையாய் நிற்கும் அகர உயிரைப் போல உயிர்களோடு கலந்தே நிற்பான். அவனுடைய கலப்பால் உயிர்கள் அறிவும் செயலும் உடையனவாகும். இறைவன் உயிர்களோடும், உலகோடும் பிரிப்பின்றி நின்று யாவற்றையும் செயல்படுத்துவான். உயிர்கள் உடம்போடு கூடிப்பிறக்கும் காலத்து இறைவனையின்றித் தோன்றமாட்டா. எனவே நாம் அனைவரும் இறைவனை விட்டு அகன்று நிற்பது என்பது ஒரு போதும் இல்லை.

இரண்டாம் அதிகரணம்

317. எங்கும்தான் நிறைந்து சிவன் நின்றானாகில்
எல்லாரும் காணவே வேண்டுந்தான் என்னில்
இங்கும்தான் அந்தகருக்கு இரவி இருள் ஆகும்
ஈசன் அருட் கண்ணில்லார்க்கு ஒளியாயே இருளாம்
பங்கந்தான் எழும்பதுமம் பக்குவத்தை அடையப்
பரிதி அலர்த் திடுவதுபோல் பருவம்சேர் உயிர்க்குத்
துங்க அரன் ஞானக்கண் கொடுத்து அருளினாலே
சோதிக்குள் சோதியாய்த் தோன்றிடுவன் காணே.

சிவபெருமான் உயிர்களோடு கலந்து எங்கும் செறிந்து உயிர்களுக்கு உதவி வருவான் என்பது உண்மையானால் அவனை எல்லாரும் காணவேண்டும் அன்றோ? என்று சிலர் வினவக் கூடும். இவ்வுலகத்தில் ஒளிப் பிழம்பாக விளங்கும் கதிரவன் விளங்கித் தோன்றும் போது கூட வழி இல்லாதவர்களுக்கு இருளாகவே தோன்றும். அதுபோல இறைவனும் உயிருக்கு உதவி செய்யும் துணையாக எப்பொழுதும் உடன் நின்றாலும் அவனுடைய திருவருளாகிய அருட்கண் உடையோருக்கு அன்றி அவனை அறிதல் இயலாது. சேற்றில் தோன்றிய தாமரை மொட்டு பூக்கும் பருவம் எய்திய உடனே கதிரவனின் கதிர்கள் அதனை மலர்விக்கும். அது போலவே பக்குவம் உடைய உயிர்களுக்கு அல்லாமல் அருளாகிய கண்ணும் இறைவன் துணை இன்றிக் கிடைக்கப் பெறாது. உயிர்களின் பக்குவம் அறிந்து இறைவன் தன்னுடைய பெருங்கருணையால் அவற்றுக்கு அருட்கண்ணை வழங்குவான். அந்நிலையில் ஒளிக்கு ஒளியான ஈசன் உயிரின் அறிவுக்கு அறிவாய் நின்று உதவி வரும் அத்துவித நிலை இனிது விளங்கும்.

318. சென்று அணையும் நிழல்போலச் சிவன் நிற்பன் என்னில்
சென்று அனையும் அவன் முதலி சிவத்தை அணைந்து ஒன்றாய்
நின்றது உயிர் கெட்டு என்னில் கெட்டது அணைவு இன்றாம்
நின்றதேல் கேடு இல்லை அணைந்துகெட்டது என்னில்
பொன்றினதேல் முத்தியினைப் பெற்றவர் ஆர்? புகல் நீ
பொன்றுகையே முத்தியெனில் புருடன்நித்தன் அன்றாம்;
ஒன்றியிடும் நீரொடுநீர் சேர்ந்தாற்போல் என்னில்
ஒருபொருளாம் அதிபதியோடு உயிர் பொருளொன்று அன்றே.

வெயிலால் வாடிய வழிப் போக்கர்கள் சென்று சேர்வதற்கு ஏற்ற நிழலைத் தந்து நிற்கின்ற மரத்தினைப் போல இறைவன் எவ்வித மாற்றமும் இன்றி நிற்பான். பக்குவம் பெற்ற உயிர் அந்த நிழலைச் சேர்ந்து முத்தி இன்பத்தைப் பெறும் என்று ஈசுவர அவிகாரவாதிகள் கூறுவர். இவ்வாறு கூறினால் நிழலைச் சேர்ந்தவன் முதன்மை பெறுவான். இறைவனுக்கு முதன்மையும் தன்வயம் உடைமையும் இல்லை என்றாகி வழுவாய் முடியும்.

உயிர் கெட்டுத் தன்னை இழந்து சிவபெருமானை அடைந்து ஒன்றாகிப் போகும். அதுவே முத்திப்பேறு என்று பரிணாமவாதிகள் கூறுவர். அழிந்த பொருள் இன்னொரு பொருளோடு கூடும் என்று கொள்ளுவது பொருந்தாது. அவ்வாறு அன்று; உயிர் கெடாமலே கூடும் என்றால் கேடு இல்லாதவிடத்து இரண்டும் ஒன்றாகும் என்பதற்கு இயைபு இல்லை. உயிர் சிவத்தை அணைந்த பிறகே கெடும்என்றால் முத்தி பெறுபவர் யார் என்ற கேள்வி எழும். பெறுவான் இன்மையினால் பேறும் இல்லையாகும். உயிர் தன்னை இழத்தலே முத்திப் பேறு எனின் உயிர் நித்தப் பொருள் அன்று என்று கொள்ள நேரிடும். எனவே அதுவும் வழுவாகும். ஐக்கிய வாதசைவர் நீரும் நீரும் கலந்தாற் போல உயிர் சிவனடியைச் சேர்ந்து ஒன்றாகும். அதுவே முத்திப்பேறு என்பர். உயிரும் இறைவனும் ஒத்த தன்மை பெறாமையால் இக்கருத்தும், இந்த உவமையும் பொருந்தா.

319. செம்பு இரத குளிகையினால் களிம்பு அற்றுப் பொன்னாய்ச்
செம்பொனுடன் சேரும் மலம் சிதைந்தால் சீவன்
நம்பனுடன் கூடும் எனில் பொன்போல் அல்லன்;
நற்குளிகை போல அரன் நணுகுமலம் போக்கி
அம்பொன் அடிக் கீழ்வைப்பன் அரும்களங்கம் அறுக்கும்
அக்குளிகை தானும்பொன் ஆகாது; ஆகும்
உம்பர்பிரான் உற்பத்தி ஆதிகளுக்கு உரியன்;
உயிர்தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே.

இரத குளிகையினால் களிம்பு நீங்கிய செம்பு பொன்னாகிப் பொன்னுடனே கூடுவதைப் போல, மலத்தை விட்டு நீங்கிய உயிர் இறைவனுடன் கூடும் என்பர் பேதவாதிகள். இந்த உவமையில் செம்பு உயிருக்கும் இரத குளிகை இறைவனுக்கும் கூறப்பட்டன. குளிகையுடன் சேர்ந்த செம்பு பொன்னாகுமே ஒழியக் குறிகை பொன் ஆகாது. மல நீக்கம் பெற்ற உயிர் சிவத்துடன் சமமாகி ஐந்தொழிலையும் சிவன் போலவே நடத்தும் என்பர் சிவசமவாதிகள். அவர்கள் கொள்கையும் பொருந்தாது. ஐந்தொழிலையும் இயற்றும் வல்லமை விண்ணோர் பிரானாகிய சிவபெருமானுக்கே உரியது. வீட்டு நிலை எய்திய உயிரும் இறைவன் திருவடிக்கீழ் அவன் பேரருளால் வழங்குகிற சிவானுபவத்தை நுகர்வதற்கு மட்டுமே உரிமை உடையதாகும்.

பொன் குளிகை ஆகாது என்று உவமையை மறுத்து அது திட்டாந்த விரோதம் என்பார் நிரம்ப அழகிய தேசிகர்.

320. சிவன் சீவன் என்று இரண்டும் சித்து ஒன்றாம் என்னின்
சிவன் அருள்சித்து இவன் அருளைச் சேரும் சித்து அவன்தான்
பவம்கேடு புத்திமுத்தி பண்ணும்சித்து அவற்றில்
படியும் சித்து அறிவிக்கப்படும் சித்தும் இவன்தான்
அவன்தானே அறியும் சித்து ஆதலினால் இரண்டும்
அணைந்தாலும் ஒன்றாகாது அநந்நியமாய் இருக்கும்
இவன்தானும் புத்தியும் சித்து இவன் ஆமோ புத்தி?
இது அசித்துஎன் றிடில் அவனுக்கு இவனும் அசித்தாமே.

சிவனும் அறிவுடைப் பொருள். சீவன் எனப்படும் உயிரும் அறிவுடைப் பொருள். ஆகவே முத்தி நிலையில் இரண்டும் ஒன்றாகவே நிற்கும். அதை விடுத்து உயிர் சிவானுபவம் ஒன்றற்கே உரித்து என்று வேற்றுமைப்படுத்திக் கூறுதல் கொள்ளுதல் பொருந்தாதன்றோ? என்று சிலர் வினவுவர். இரண்டும் சித்துப் பொருளே ஆயினும் அவற்றிடையே வேற்றுமை பெரிது. சிவன் அருளே வடிவாய் அமைந்தவன். உயிரோ சிவனருளைச் சேரும் அறிவினை மட்டுமே உடையவன். சிவபெருமான் உயிர்களுக்குப் பிறப்பினை ஒழித்து, அறிவினை ஊட்டி, வீடுபேற்றை அளிக்க வல்லவன். உயிர் பிறப்பு முதலிய யாவற்றிலும் அழுந்துகிற இயல்புடையது. முற்றறிவுடையவன் ஆகையினால் இறைவன் தானே அறியும் இயல்புடையவன். உயிர் அறிவித்தால் மட்டுமே அறியும் இயல்பு உடையது. இக்காரணங்களினால் சிவத்தோடு கூடினாலும் உயிரும் சிவமும் ஒன்றாகா. தம்முள் வேற்றுமையின்றி நிற்கும். புத்திதத்துவம் அறிவு என்று சில நேரங்களில் கூறப்படும். ஆனால் உண்மையில் அறிவது உயிரே அன்றி புத்தி தத்துவமாகாது. உயிரோடு ஒப்பிடும் போது புத்திதத்துவம் அசித்தாவது போல, சிவனோடு ஒப்பிடும் போது உயிரும் அசித்தேயாகும்.

அந்நியம்- வேற்றுமையின்றி நிற்றல்.

321. இரும்பைக்காந் தம்வலித்தாற்போல் இயைந்து அங்கு உயிரை
எரிஇரும்பைச் செய்வதுபோல் இவனைத்தான் ஆக்கி
அரும்பு இத்துஇந் தனத்தை அனல் அழிப்பது போல் மலத்தை
அறுத்து அமலன் அப்பு அணைந்த உப்பேபோல் அணைந்து
விரும்பிப் பொன் னினைக்குளிகை ஒளிப்பதுபோல் அடக்கி
மேளித்துத் தான் எல்லாம் வேதிப்பான் ஆகி
கரும்பைத் தேனை பாலை கனியமுதை  கண்டை
கட்டியைஒத்து இருப்பன் அந்த முத்தியினில் கலந்தே.

காந்தம் தான் எந்த வேற்றுமையையும் அடையாமல் இரும்பைத் தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்ளுவதைப் போல இறைவன் தான் எந்த மாறுதலுக்கும் உட்படாமல் உயிரைத் தன் வழிப்படுத்துவான். நெருப்புத் தன்னோடு சேர்ந்த இரும்பைத் தன் வண்ணமாகவே ஆக்கி இரும்பிலிருந்து குறைபாடுகளை அகற்றுவதைப் போல இறைவனும் உயிரைத் தன் வண்ணமாக்கி அருளுவான். விறகினுள்ளே மறைந்திருந்த நெருப்பு வெளிப்பட்டவுடனே விறகையே விழுங்கி நெருப்பாகவே விளங்குவது போல இறைவனும் உயிரை மறைந்திருந்த மலமாசுகளை முற்றிலும் அகற்றித் தானாக்கி வைப்பான். நீரோடு கலந்த உப்பு, நீருக்கு உவர்ப்புத் தன்மையைக் கொடுத்து வேறற நிற்பது போல இறைவனும் மலத்திலிருந்து விடுப்பட்ட உயிரக்குத் தனக்குரிய எண் குணங்களையும் உயிரினிடத்துப் பதித்து அருளுவான். இரத குளிகையானது செம்பிற்குப் பொன்னின் இயல்பினை அளிக்கு மேலும் தன்னிடத்துப் போன்னின் இயல்பு தோன்றாத வண்ணம் விளங்குவது போல இறைவன் தான் மேலிட்டு நின்று ஐந்தொழில் நடத்துபவனாய் விளங்குவான். இத்தகைய முத்தி நிலையில் கரும்பு, தேன், பால், கனி, அமுது, கற்கண்டு, வெல்லக்கட்டி ஆகிய இவையெல்லாம் கலந்த கலவை போல உயிருக்குப் பேரின்பச் சுவையை இறைவன் வழங்குவான்.

இந்தனம்- விறகு. மேளித்து- கூட்டி, வேதித்தல்- இரச வாதம், செம்பு போன்றவற்றைப் பொன்னாக செய்தல்.

பன்னிரண்டாம் நூற்பா

322. செங்கமலத் தாள் இணைகள் சேரல் ஒட்டாத்
திரிமலங்கள் அறுத்து ஈசன் நேசரொடும் செறிந்திட்டு
அங்கு அவர்தம் திருவேடம் ஆலயங்கள் எல்லாம்
அரன் எனவே தொழுது இறைஞ்சி ஆடிப் பாடி
எங்கும்யாம் ஒருவர்க்கும் எளியோம் அல்லோம்
யாவர்க்கும் மேலானோம் என்று இறுமாப்பு எய்தி
திங்கள் முடியார் அடியார் அடியோம் என்று
திரிந்திடுவர்- சிவஞானச் செய்தி உடையோரே.

இறைவனுடைய செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை உயிர் சேர ஒட்டாது தடுத்து நின்ற மும்மலங்களையும் முற்றிலும் அறுத்து, சிவமெய்யன்பர்களோடு எப்பொழுதும் பயின்று, அடியார்களின் திருவேடத்தையும் சிவன் திருக்கோயிலையும் சிவன் எனவே கண்டு வழிபட்டு மகிழ்ச்சியின் மேலீட்டால் ஆடிப்பாடி, சிவபெருமான் திருவடியை அவன் அருளால் பெற்றமையால் இறும்பூது எய்தி, திங்களை அணிந்த திருமுடியை உடைய சிவபிரானின் அடியார்க்கு அடியராய்ப் பெருமிதத்துடன் வாழ்கின்ற பெருமக்களே சிவஞானம் பெற்ற சீவன் முத்தர் ஆவர்.

இரண்டாம் அதிகரணம்

323. ஈசனுக்கு அன்புஇல்லார் அடியவர்க்கு அன்பு இல்லார்
எவ்வுயிர்க்கும் அன்பிலார் தமக்கும் அன்பு இல்லார்
பேசுவதுஎன்? அறிவில்லாப் பிணங்களை நாம் இணங்கில்
பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர் விடு நீ;
ஆசையொடும் அரன் அடியார் அடியாரை அடைந்திட்டு
அவர்கருமம் உன்கரும மாகச் செய்து
கூசி மொழிந்து அருள்ஞானக் குறியில் நின்று
கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே.

சிவனடியாரிடத்து அன்பு இல்லாதவர்கள் சிவபிரானிடத்தும் அன்பு இல்லாதவரே, அத்தகையவர்கள் பிற உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுதல் இலர். அவர்களுக்குத் தம் மீதும் அன்பு இல்லை. அத்தகையவர்கள் உயிரோடு இருந்தும் அறிவற்ற பிணத்தினை ஒத்தவர்கள். இதற்கு மேலும் அவர்களைப் பற்றிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அவர்களோடு இணங்கி இருத்தல் மேலும் பிறப்பு இறப்புக்களில் நம்மை அழித்தும். ஆதலால் அவர்களை விட்டு நீங்கி இருத்தலே நலம் பயக்கும். சிவபிரானின் அடியார்க்கு அடியார்கள் கூட்டத்தில் அன்போடும் உன்னை இணைத்துக் கொண்டு அவர்களுடைய திருத்தொண்டையே உனது  தொண்டாகக் கொண்டு அவர்களுடன் பணிவோடு பேசியும் அவர்கள் குறித்த நெறியில் நின்றும் அவரை வணங்கியும் மகிழ்ந்து கூத்தாடி வாழ்வாயாக.

ஈசனுக்கு அன்புடைமை அவன் அடியவரைக் கண்டு நிகழும் அன்பின் அளவு பற்றியே தெளியப்படும் ஆகலான். அடியவர்க்கு அன்பு இல்வழி ஈசனுக்கு அன்புடையோர் போல் ஒழுகுதல் நாடக மாத்திரையே பிறிதில்லை என்பார், அடியவர்க்கு அன்பு இல்லார் ஈசனுக்கு அன்பில்லார் என்றும், எவ்வுயிர்க் கண்ணும் உளனாகிய ஈசனிடத்து அன்புடையார்க்கே அத் தொடர்பு பற்றி எவ்வுயிர்க்கும் அன்புடையராதல் கூடும் என்பார். ஈசனுக்கு அன்பு இல்லார் எவ்வுயிர்க்கும் அன்பிலாõர் என்றும், இவ்விடங்களில் அன்பில்லாதார் தம் உயிர்க்கு உறுதி செய்தி கொள்ளுவார் அல்லர் என்பார் தமக்கும் அன்பில்லார் என்றும் கூறினார். அன்பிலார் எல்லாம் தமக்கரியர் (குறள் அன்புடைமை, 2) என்புழித் தம்மென்றது உடம்பை நோக்கியாகலின் அஃது ஈண்டைக்கு முரணாமை அறிக என்பது சிவஞான முனிவர் உரை.

மூன்றாம் அதிகரணம்

324. அறிவுஅரியான் தனை அறிய யாக்கை ஆக்கி
அங்கு அங்கே உயிர்க்குயிராய் அறிவுகொடுத்து அருளால்
செறிதலினால் திருவேடம் சிவன் உருவே ஆகும்
சிவோகம்பா விக்கும் அத்தால் சிவனும் ஆவர்
குறியதனால் இதயத்தே அரனைக் கூடும்
கொள்கையினால் அரன் ஆவர் குறியொடுதாம் அழியும்
நெறியதனால் சிவமேயாய் நின்றிடுவர் என்றால்
நேசத்தால் தொழுதிடு நீ பாசத்தார் விடவே.

அறிவுக்கு எட்டாதவனாகிய சிவபரம் பொருள், உலகத்தில் உள்ளவர் தன்னை அறியும் பொருட்டுத் திறுநீரு, அக்கமணி மாலை முதலியன அணிந்த திருவேடத்தைத் தன் மெய்யன்பர்களுக்குக் கொடுத்து எல்லா விடங்களிலும் உயிர்க்கு உயிராக அறிவினை விளக்கித் தனது திருவருளால் அவ்வன்பர்களோடு கலந்து நிற்பான். எனவே மெய்யடியார் திருவேடமும் சிவன் உருவேயாகும். அத்தகைய அடியார்கள் தாமே சிவம் என்னும் சிவோகம் பாவனையைக் கைக் கொண்டு ஒழுகுவதால் அவர்கள்  சிவமே ஆவர். தமது இதயத்திலே சிவபெருமானை ஒரு குறியின் கண் நிறுத்தி வழிபடுவதனாலும்  அவர்கள் சிவமாகவே விளங்குவர். இவ்வாறு குறியிலே நிறுத்தி வழிபடுகிறோம் என்ற நினைப்பும் முனைப்பும் அற்றுப் போகும் தன்மையால் உயிரறிவு என்ற ஒன்று இல்லாமல் சிவமேயாய் நிலை பெறுவர். ஆதலால் திருவேடம் தாங்கிய சிவனடியார்களைச் சிவன் எனவே கருதி அன்போடும் தொழுதிடுக. அவ்வாறு தொழுவதனால் பாசம் முற்றிலும் நீங்கும்.

325. திருக்கோயில் உள் இருக்கும் திருமேனி தன்னைச்
சிவன் எனவே கண்டவர்க்குச் சிவன் உறைவன் அங்கே;
உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும்
உளன்எங்கும் இலன் இங்கும் உளன் என்பார்க்கும்
விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்
மந்திரத்தில் வந்து உதித்து மிகும் சுரபிக்கு எங்கும்
உருக்காண ஒண்ணாத பால்முலைப்பால் விம்மி
ஒழுகுவதுபோல் வெளிப்பட்டு அருளுவன் அன்பர்க்கே.

திருக்கோவிலிலே எழுந்தருளி இருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சிவன் எனவே கண்டு வழிபடும் சரியை நெறி நிற்பவர்களுக்குச் சிவபிரான் வெளிப்படாது நின்று அருள் பாலிப்பான். அருவப் பொருளாகிய சிவபிரான் ஓதுதற்குரிய மந்திரங்களால் சிவலிங்கம் முதலிய திருஉருக்களை மேற்கொண்டனன் எனக் கருதி வழிபடும் கிரியை நெறியினருக்கும், உள்ளமே கோயிலாக எழுந்தருளிய சிவபிரான் திருமேனியிலும் வீற்றிருந்து வழிபாட்டை ஏற்று அருளுவான் என்று வழிபடும் யோகிகளுக்கும் விறகைக் கடைந்த போது தோன்றுகிற தீயைப் போலவும் கறந்த போது தோன்றுகின்ற பாலினைப் போலவும் அவரவர் விரும்பிய வண்ணம் தோன்றி அருள்புரிவான். இம்மூவகையினரும் இவ்வாறாக, மெய்யன்பர்களாகிய சிவஞானிகளுக்குப் பசுவின் உடல் முழுவதும் நிறைந்து இருந்தும் கண்ணால் காண முடியாத பால் அதன் மடியிலே விம்மி ஒழுகுவது போல வெளிப்பட்டு அருளுவான்.

நால்வகை நெறியில் நின்றவர்களுக்கும் திருக்கோவில் வழிபாடு இன்றியமையாதது என்று இந்தப் பாடலால் விளக்கப்பட்டது. இப்பாடலில் அன்பர் என்ற சொல் சிவஞானிகளைக் குறித்தது.

326. ஞான யோகக் கிரியா சரியை நான்கும்
நாதன் தன் பணி ஞானி நாலினுக்கும் உரியன்
ஊனம்இலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
யோகி கிரி யாவான்தான் ஒண் கிரியை ஆதி
ஆன இரண்டி னுக்குஉரியன் சரியையினில் நின்றோன்
அச்சரியைக் கேயுரியன் ஆகலினால் யார்க்கும்
ஈனம்இலா ஞானகுரு வேகுருவும் இவனே
ஈசன் இவன் தான் என்றும் இறைஞ்சி ஏத்தே.

ஞானம் யோகம் கிரியை சரியை என்ற நால்வகை நெறிகளுமே இறைவன் திருவருளைப் பெறுவதற்குரிய நெறிகளாகும். இவர்களுள் ஞானநெறியில் ஒழுகுபவர்கள் நான்கு நெறிகளுக்கும் உரியவர்கள். யோக நெறியில் நிற்பவர்கள் சரியை கிரியை யோகம் என்ற மூன்றினுக்கும் உரியவர்கள். கிரியை நெறியில் நிற்பவர்கள் சரியை கிரியை என்ற இரண்டினுக்கும் உரியர். சரியை வழி ஒழுகுவோர்க்கு அது ஒன்றே உரியது. இந்நால்வகை நெறியிலும் நிற்பார்க்குக் குறைவற்ற ஞானாசிரியனது துணை இன்றியமையாது வேண்டப்படும். திருக்கோவில் உள்ளிருக்கும் திருமேனியும், மெய்யடியார் திருவேடமும் ஞானாசிரியரின் வேறல்ல என்பதை உணர்ந்து வழிபடுதல் வேண்டும்.

இப்பாடலால் குருவழிபாட்டின் இன்றியமையாமை எடுத்துரைக்கப்பட்டது.

327. மந்திரத்தால் மருந்துகளால் வாய்த்தயோ கத்தால்
மணிஇரத குளிகையினால் மற்றும் மற்றும்
தந்திரத்தே சொன்ன முறை செய்ய வேத
சகலகலை ஞானங்கள் திரிகால ஞானம்
அந்தம்இலா அணிமாதி ஞானங்கள் எல்லாம்
அடைந்திடும் ஆசான் அருளால் அடிசேர் ஞானம்
வந்திடும் மற்று ஒன்றாலும் வாரா தாகும்;
மற்றவையும் அவன் அருளால் மருவும் அன்றே.

மந்திரத்தாலும், மருந்தாலும், சிறந்த யோகத்தாலும், மணி எனப்படும் இரதகுளிகையினாலும் பல்வேறுபட்ட நூல்களிலே விதிக்கப்பட்ட ஒழுகலாறுகளாலும் ஒருவனுக்கு வேதங்களும் எல்லா வகையான கலை ஞானங்களும் முக்காலத்தையும் அறியும் அறிவு அணிமா முதலிய எண் பெருஞ்சித்திகளும் கைவரப் பெறுதல் கூடும். ஆனால் இறைவனுடைய திருவடியைச் சேர்வதற்கு உரியதாகிய ஞானம் ஞான ஆசிரியரின் துணை இன்றி வராது. ஞானாசிரியன் துணை இருந்தால் முதலில் கூறப்பட்ட அறிவும் ஆற்றலும் எளிதில் கைவரும்.

328. பரம்பிரமம் இவன் என்றும் பரமசிவன்தான் என்றும்
பரஞானம் இவன் என்றும் பராபரன்தான் என்றும்
அரன்தரும்சீர் நிலை எல்லாம் இவனே என்றும்
அருட்குருவை வழிபடவே அவன் இவன்தான் ஆயே
இரங்கியவா ரணம் ஆமை மீன் அண்டம் சினையை
இயல்பினொடும் பரிசித்தும் நினைந்தும் பார்த்தும்
பரிந்துஇவை தாம் ஆக்குமா போல்- சிவமே ஆக்கும்,
பரிசித்தும் சிந்தித்தும் பார்த்தும் தானே.

யாவற்றையும் கடந்து நிற்கும் உயர்ந்த சொரூப சிவனும் குருவே என்றும், தடத்த சிவனும் குருவே என்றும், உயரிய ஞானமும் இவன் வடிவே என்றும், திருக்கோவிலின் உள்ளிருக்கும் திருமேனிகள் எல்லாம் குருவடிவே என்றும், அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காக இறைவன் மேற்கொண்ட திருமேனிகள் எல்லாம் குருவின் வடிவங்களே என்றும் தேறி ஞானாசிரியரை வழிபடுதல் வேண்டும். அவ்வாறு வழிபட்டால் சிவபெருமான் குருவை ஆவேசித்து நின்று, கோழி தன் முட்டையைத் தொட்டும், ஆமை தன்  முட்டையை நினைந்தும், மீன் தன் முட்டையைப் பார்த்தும் பரிவோடு தம் வடிவம் ஆக்குவது போல ஞானாசிரியனும் உயிரைத் தொட்டும், நினைந்தும் நோக்கியும் சிவமே ஆக்கி அருள் பாலிப்பான்.

சிவஞான சித்தியார் சுபக்கம் முற்றிற்று.

 
மேலும் சிவஞான சித்தியார் »
காப்பு - கணபதி வணக்கம்1. ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன்நால்வாய் ஐங்கரத்தன் ஆறுதரு கோட்டம் ... மேலும்
 
சுபக்கம் - காப்புஒரு கோட்டன், இருசெவியன், மும்மதத்தன்நால்வாய், ஐங்கரத்தன், ஆறுதருகோட்டுஅம் பிறைஇதழித் ... மேலும்
 
சாதாக்கியம்- சதாசிவம்.87. ஒருவனே, இராவ ண ஆதி பாவகம் உற்றாற் போலத்தருவன், இவ் உருவம் எல்லாம்; தன்மையும் ... மேலும்
 
245. அறிபொருள் அசித்தாய் வேறாம்; அறிவுறாப் பொருள் சத்து என்னின்அறிபவன் அறியானாகில் அது இன்று பயனும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar