1. ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு தரு கோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான் தரும் ஒரு வாரணத்தின் தாள்கள் உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத் திருகுஓட்டும் அயன்திருமால் செல்வமும் ஒன் றோஎன்னச் செய்யும் தேவே.
திருமுடியிலே கங்கை யாற்றினையும் வளைந்த அழகிய பிறையினையும் கொன்றை மாலையினையும் அணிந்த சிவபெருமான் அருளிய மூத்தபிள்ளையார், ஒற்றைக் கொம்பும் இரண்டு அகன்ற செவிகளும் மூன்று மதங்களும் தொங்குகின்ற திருவாயும் ஐந்து கரங்களையும் உடைய ஒப்பற்ற யானைமுகப் பெருமான் ஆவார். உருகிய உள்ளத்தோடு அன்பால் இடைவிடாது இரவும் பகலும் அப்பிள்ளையாரது திருவடிகளை வணங்குவோரது சிந்தைத் திருக்கை ஓட்டுவார். பிரமன் திருமால் ஆகியோரது பதங்களும் ஒரு பொருட்டாகாத வண்ணம் யாவற்றுக்கும் மேலான வீட்டின்பத்தையும் தன் அடியார்களுக்கு வழங்குவார். சிந்தைத்திருகு- சிந்தையிலே எழுகின்ற கோட்டம். அதனை ஓட்டுதலாவது கோட்டமில்லாத நேரான பாதையில் செலுத்துதல்.
முதலும் நடுவும் இறுதியும் அளவற்ற பேரொளிப் பிழம்பாகவும் அருளாகிய சிவஞானத்தையே தன்னுடைய திருமேனி ஆகவும் கொண்டு தன் பெருங்கருணையினாலே உலகமனைத்தையும் ஈன்ற உமையம்மையைத் தம் இடப்பாகத்திலே அடக்கி வானோர்களுக்கு மகுடம் போன்று விளங்கி உலகம் எல்லாம் போற்றப் பிறைமதியை அணிந்த சடைகள் தாழுமாறு ஒளிமிக்க திரு அம்பலத்திலே திருநடனம் புரிகின்ற சிவபெருமானது திருவடிக் கமலங்களை நமது தலையிலே தாங்கி அவரிடத்துத் தளராத பேரன்பு விளையும்படி வழிபடுவோம்.
சக்தி வணக்கம்
3. ஈசன் அருள் இச்சை அறிவு இயற்றல் இன்பம் இலயமொடு போகம் அதிகாரம் ஆகித் தேசுஅருவம் அருவுருவம் உருவமாகித் தேவியுமாய்த் தேசமொடு செல்வமாகிப் பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் அவையளித்துப் பிறப்பினையும் ஒழித்திட்டு ஆசு அகலும் அடியர் உளத்து அப்பனுடன் இருக்கும் அன்னை அருட் பாதமலர் சென்னி வைப்பாம்.
இறைவனுடைய அருள் அவனது சத்தியாகும். அது அவனை விட்டு ஒருபோதும் நீங்காது. ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞான சத்தி, கிரியாசத்தி என்று இவ்வாறு பெயர் பெற்று வழங்கும். இலயம், போகம், அதிகாரம் என்று மூன்று கூறுகளாகி ஒளிமிக்க இறைவனுக்கு அருவம், அருவுருவம், உருவம் என்ற வடிவங்களும் ஆகும். அவனது துணைவியுமாகும். உலகெலாம் ஆகி உலகத்துப் பொருள்கள் எல்லாமாகி விளங்கும். எண்ணுதற்கரிய உயிரை எல்லாம் பிறப்புட்படுத்துக் காத்து அவற்றின் வினைக்கு ஈடாக இன்பத் துன்பங்களையும் கூட்டுவித்து உரிய பக்குவம் எய்திய உயிர்களின் பிறப்பினையும் அறுக்கும். வீட்டு இன்பத்தையும் தரும். குற்றமற்ற அடியவர் உள்ளத்தில் அப்பனோடும் எழுந்தருளியிருக்கும் அம்மையின் அருட்பாதமலர்களைத் தலைமீது கொண்டு வணங்குவோம்.
விநாயகர் வணக்கம்
4. இயம்புநூல் இருந்தமிழின் செய்யுள் ஆற்றால் இடையூறு தீர்ந்து இனிதுமுடிய வேண்டித் தயங்குபேர் ஒளியாகி எங்கும் நின்ற தலைவனார் மலைமாது தன்னோடு ஆடிப் பயந்த ஐங்கரம் நாற்றோள் முக்கண் இருபாதப் பரியது ஒரு நீள்கோட்டுப் பெரிய பண்டிக் கயம்தன் அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் கருத்திலுற இருத்திமிகக் காதல் செய்வோம்.
இப்போது இயம்பப் புகும் இப்பெருந்தமிழ் நூல் ஐந்து இலக்கணங்களும் பொருந்தி இடையூறு இன்றி இனிது நிறைவேறுவதை விரும்பி நிலைபெற்ற பேரொளியாய் எவ்விடத்தும் நிறைந்த இறைவன் பார்வதி அன்னையோடு கூடிப்பயந்த ஐந்து கரங்களும் நான்கு தோள்களும் மூன்று கண்களும் இரண்டு திருவடிகளும் பருத்து நீண்ட ஒற்றைக் கொம்பும் பெருத்த வயிறும் உடைய யானை முகத்து விநாயகப் பெருமானின் திருவடித்தாமரைகளை விரும்பிச் சிந்தையில் அகலாது இருத்தி அன்பு பாராட்டுவோம்.
முருகப்பெருமான் வணக்கம்
5. அருமறை ஆகமம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக்கு ஓத்துஉரைக்கும் அருட்குருவாம் குருளை திருமறை மாமுனிவர்முனி தேவர்கள்தம் தேவன் சிவன் அருள்சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம் பொரும்அறையார் கழல்வீரர் வீரன்கையில் பூநீர் கொண்டு ஓவாது போற்றும் அடியார்கள் கருமறையா வகைஅருளிக் கதிவழங்கும் கந்தன் கழல்இணைகள் எம்சிரத்தில் கருத்தில் வைப்பாம்,
அரிய மறைகளும் ஆகமங்களும் வேத அங்கங்களும் அரியகலை நூல்களும் கற்றுத்தேர்ந்த அகத்திய முனிவர்க்கு ஞானசிரியனாக விளங்குபவன் என்றும் இளைய முருகப் பெருமான். திருமறைகள் வல்லபெரு முனிவர்களுக்கு முனிவன். தேவர்களுக்குத் தேவன், சிவபெருமான் திருவருளால் உதித்த திருமகன். தவத்தில் நிலைபெற்றவர்களுக்கு வழிபடு கடவுள். ஒலிக்கின்ற கழல் அணிந்த வீரர்களின் வீரன். பூவும் நீரும் கொண்டு இடைவிடாது வழிபடுகின்ற தனது அடியார்கள் கருப்பையினுள் புகுந்து மீண்டும் பிறவா வண்ணம் அவர்களுக்கு வீடுபேற்றினை அருளுகின்ற கந்தப் பெருமான். அவனுடைய திருவடிமலர்கள் இரண்டினையும் எமது தலை மீதும் கருத்தினிலும் வைத்துப் போற்றுவோம்.
6. பண்டை மறைவண்டு அரற்றப் பசுந்தேன் ஞானம் பரிந்துஒழுகச் சிவகந்தம் பரந்து நாறக் கண்டவர் இருதய கமலமுகைகள் எல்லாம் கண்திறப்பக் காசினி மேல்வந்த அருட்கதிரோன் விண்டமலர்ப் பொழில் புடைசூழ் வெண்ணெய் மேவும் மெய்கண்ட தேவன்மிகு சைவநாதன் புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வோம்.
தொன்மையான மறைகளாகிய வண்டுகள் ஒலிக்கவும். சிவஞானமாகிய சுவைமிக்க தேன் அருளோடு பிலிற்றவும், சிவமணம் எங்கும் பரந்து மணக்கவும் பக்குவமிக்க அடியார்களது இதய கமலங்கள் மலரவும் இந்த உலகத்தில் தோன்றி அருளியவர்மெய்கண்டதேவநாயனார். விரிந்த மலர்ப் பொழில்கள் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் திருவெண்ணெய் நல்லூரில் மேவிய அப்பெருமான் சைவசித்தாந்தத்துக்குத் தலைமைபூண்ட ஞானாசிரியன். அத்தகைய ஞானக் கதிரவனின் திருவடிகள் தாமரை மலர்களை வென்றவை. அத்திருவடிகளை எப்பொழுதும் எமது தலைமேல் கொண்டு போற்றி வணங்குவோம்.
7. மால்அயன் மாமறை அறியா ஆதிமார்க்கம் வையகத்து ஆகமம் வேதம் மற்றும் உள்ள நூலையெலாம் உணர்ந்து இறைவன் கழலே நோக்கும் நோன்மை அருந்தவர் முன்யான் நுவலுமாறு வேலையுலாவும் திரைகள் வீசி யேறி வேறுஏழும் ஒன்றாகி நின்றபோது சாலவும்ஆன் குளப்படியில் தங்கி நின்ற சலமதுதான் நேர் என்னும் தன்மைத்தாலோ.
திருமாலும் நான்முகனும் நான்மறைகளும் அறிவதற்கு அரிய தொன்மையான சைவநெறியினை நான் சொல்லப் புகுகிறேன். உலகத்தில் ஆகமம் வேதம் மற்றும் உள்ள கலைத்துறைகள் யாவற்றையும் உணர்ந்து இறைவன் திருவடிகளிலே சிந்தையைச் செலுத்தித் தவம் முதிர்ந்த பெரியவர் முன் நான் சொல்லத் தொடங்குவது எத்தகையது எனின் அலைமோதும் ஏழு கடல்களும் ஒன்று சேர்ந்து நின்ற இடத்திலே பசுவின் குளம்படி பதித்த பள்ளத்தில் நீர் தேங்கி நின்றது போல் ஆகும்.
அருந்தவர் ஏழு கடல்களும் ஒருங்கே திரண்டது போன்றவர்கள் நானோ பசுவின் காற்குளம்பு பதிந்த இடத்தில் தேங்கிய நீர் போன்றவன் என்று அவையடக்கம் கூறினார்.
குளப்படி- குளம்பு+ அடி. சலம்- நீர்.
8. நீடுபுகழ் உலகுதனில் மைந்தர் மாதர் நேயமொடு தாம்பயந்த புதல்வர் வாயில் கூடுமொழி மழலையொடு குழறி ஒன்றும் குறிப்பு அரிது ஆயிடினும் மிகக் குலவிப் போற்றி மாடு நமக்கு இது என்று கொண்டு வாழ்வார் அதுபோல மன்னுதமிழ்ப் புலமையோர் என் பாடுகவிக்குற்றங்கள் பாரார் இந்நூல் பாராட்டா நிற்பர் அருட் பரிசினாலே.
புகழ்மிக்க இந்த உலகத்தில் ஆடவரும் மகளிரும் அன்போடு பெற்றெடுத்த தம்முடைய மக்களின் மழலை மொழியை அது குழறல் ஆயினும் பொருளற்றதாயினும் தமக்குக் கிடைத்த செல்வம் எனப் போற்றிப் பாராட்டி மகிழ்வர். அதுபோலவே நிலைபெற்ற தமிழ்ப் புலவர்களும் என் பாடலில் காணப்படும் கவிக்குற்றங்களைப் பாராமல் அருள் தன்மையினால் இந்நூலைப் பாராட்டுவார்கள்.
மாடு- செல்வம்
நூற் சிறப்பு
9. சுத்தவடிவு இயல்பாக உடையசோதி சொல்லிய ஆகமங்கள் எலாம் சூழப்போயும் ஒத்துமுடியும் கூட ஓரிடத்தே ஒருபதிக்குப் பலநெறிகள் உளவானாற் போல் பித்தர்குணம் அதுபோல ஒருகால் உண்டாய்ப் பின்னொருகால் அறிவின்றிப் பேதையோராய்க் கத்திடும் ஆன்மாக்கள் உரைக்கட்டில் பட்டோர் கனகவரை குறித்துப் போய்க் கடற்கேவீழ்வார்.
ஞானமே தனக்கு இயல்பான வடிவாகக் கொண்ட இறைவன் உலகவர்க்குப் பயன்படுத்துவதற்காகப் பலவகைப்பட்ட ஆகமங்களை அருளிச் செய்தான். அவை பல்வேறு வகைப்பட்ட சமயங்களுக்கு உரியனவாயினும் எல்லா ஆகமங்களிலும் கூறப்பட்ட ஞானபாதப் பொருள்கள் சுற்றிப்போயினும் ஓர் இடத்திலேயே சென்று முடிவடைவனாம். ஒரே ஊருக்குப் பலவழிகள் இருப்பினும் அவை யாவும் அவ்ஊரையே நோக்கிச் செலுத்துவது போன்றது இது, ஞானத்தால் தெளிவடைந்த பெரியோர்கள் உண்மையை அறிவார். அவர்களைப் போல் அன்றி ஒருகால் அறிந்தும் ஒருகால் அறியாது பித்தரைப்போல் உழல்கின்ற பேதையர் மதநூற்களுக்குக் கட்டுப்பட்டு பொன்மலையை நோக்கிச் செல்ல விரும்பியவன் வேறு திசையிலே சென்று கடலில் வீழ்ந்தது போலத் தம் கொள்கையே சிறந்தது என்று உரத்துக் கூறித்திரிவர்.
நூற்கு அதிகாரியும்- நூல் வழியும்- நூற் பெயரும்
10. போதமிகுத் தோர், தொகுத்த பேதை மைக்கே பொருந்தினோர் இவர்க்கு அன்றி, கதிப்பால் செல்ல ஏதுநெறி எனும் அவர்கட்கு அறிய முன்னாள் இறைவன் அருள் நந்திதனக்கு இயம்ப நந்தி கோதில் அருட் சனற்குமா ரர்க்குக் கூறக் குவலயத்தின் அவ்வழிஎம் குருநாதன் கொண்டு தீது அகல எமக்கு அளித்த ஞான நூலைத் தேர்ந்து உரைப்பன் சிவஞான சித்தி என்றே.
பண்டைத் தவத்தினால் கருவிலே திரு உடையராய்த் தோன்றிய ஞானம் உடையார்க்கு நூலின் துணை தேவையில்லை. இது போலத் தமது பேதைமையினால் உலக வாழ்க்கையில் பொருந்தினோர்க்கும் நூல் தேவையில்லை. இவர்கள் இருவருக்குமின்றி வீட்டு நெறியைத் தலைப்பட உரியவழி எது என்று தேடும் சத்திநிபாதம் வாய்க்கப் பெற்றவர்களுக்காகவே சிவபெருமான் இந்த ஞான நூலினை நந்தி பெருமானுக்கு உரைத்தருளினார். அவர் குற்றமற்ற அருளுடைய சனற்குமார முனிவருக்கு அருளிச் செய்தார். அவ்வாறு வழிவழியாக ஆசிரியப் பரம்பரையிலே வந்த இந்த நூலை எமது ஞானகுரவராகிய மெய்கண்டநாதர் கொண்டருளினார். எங்களது குற்றம் யாவும் நீங்குமாறு அவர் அருளிச் செய்த நூலை நன்கு தேர்ந்து சிவஞான சித்தி என்ற பெயருடன் யான் உரைக்கலுற்றேன்.
நூற் கருத்து
11. இறைவனையும் இறைவனால் இயம்பும் நூலும் ஈண்டு அளவும் பொருள் இயம்பும் வேண்டும் செய்தி முறைமைகளும் பெத்தமொடு முத்தி யெல்லாம் மூதுலகில் எமக்கு இயன்ற முயற்சி யாலே சிறையுலவும் புனல்நிலவித் தோன்றும் பேய்த்தேர்ச் செய்கைபோல் உண்டாய பொய்கொள் மார்க்கத் துறைபலவும் கடாவிடையால் சொல்லிப் போக்கித் துகள்தீர இந்நூலில் சொல்ல கிற்பாம்.
இறைவனைப் பற்றியும் இறைவன் அருளிச் செய்த முதல் நூல்களைப் பற்றியும் அளவைகளைப் பற்றியும் அந்நூல்களால் அறியப்படும் பொருள்களின் இயல்பு பற்றியும், மெய்ப் பொருளை நாடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய செயல் முறைமைகள் பற்றியும், கட்டுநிலை பற்றியும், வீட்டுநிலை பற்றியும் இந்நூலில் எடுத்துரைக்கலுற்றேன். தொலைவிலிருந்து பார்க்கும் போது கரை மோதும் குளத்து நீர்போல் தோன்றி அணுகிப் பார்க்கும் போது கானல் நீராக மறைகின்ற பொய்ம்மை நிறைந்த பிற சமயக் கொள்கைகளை வினா விடைகளால் கூறி அவற்றின் பொய்மையை மாற்றி, மனமாசு அகல ஞானபாதத்தின் மெய்ந் நெறியை இந்நூலில் சொல்லத் தொடங்கினேன்.
இது வரை உள்ள பகுதி சிவஞான சித்தியார் பரபக்கத்தோடு சேர்ந்தது.