Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞான சித்தியார் பகுதி-1 சிவஞான சித்தியார் பகுதி-3
முதல் பக்கம் » சிவஞான சித்தியார்
சிவஞான சித்தியார் பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2013
03:11

சுபக்கம் - காப்பு

ஒரு கோட்டன், இருசெவியன், மும்மதத்தன்
நால்வாய், ஐங்கரத்தன், ஆறு
தருகோட்டுஅம் பிறைஇதழித் தாழ்சடையான்
தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகு ஓட்டு அன்பொடும் வணங்கி, ஓவாதே
இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகுஓட்டும்; அயன்திருமால் செல்வமும் ஒன்றே
என்னச் செய்யும், தேவே.

பாயிரம் - மங்கல வாழ்த்து

2. அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருள் ஆய், வேறு ஆம்
குறியது உடைத்தாய், வேத ஆகமங்களின் குறி இறந்து, அங்கு
அறிவினில் அருளால் மன்னி, அம்மையோடு அப்பன் ஆகி,
செறிவு ஒழியாது நின்ற சிவன் அடி சென்னி வைப்பாம்.

ஆறு வகைப்பட்ட ஒவ்வொரு சமயமும் சிந்தித்துத் தெளிந்த பொருளாகவும், அவற்றின் வேறாகவும், வேதங்களிலும் ஆகமங்களிலும் விரித்துரைக்கின்ற பொருளுக்கு அப்பாற்பட்டதாகவும், நம்முடைய அறிவில் தனது பேரருளால் நிறைந்து உயிர்த் தொகுதிகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் விளங்கி எங்கும் நிறைந்திருக்கின்ற சிவபெருமானுடைய திருவடிகளை நம் தலை மீது சூடி வணங்குவோமாக.

சமயங்கள் பற்பல. அவற்றைப் புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்று நான்கு வகையாக வகுத்துக் கூறுவர். ஒவ்வொரு வகையிலும் ஆறு சமயங்கள் உள்ளன என்றும் கொள்ளுவர். இவருள் ஒவ்வொருவரும் முதற்கடவுள் என்று கொள்கின்ற பரம்பொருள். அதன் இயல்பு, வீடு பேறு பற்றிய கோட்பாடுகள் தம்முள் மாறுபட்டவனாக இருக்கும். ஆயினும் சைவசித்தாந்தப்படி எடுத்துரைக்கப்படுகின்ற சிவபெருமானே முதற்பெரும் கடவுளாவான். எந்தச் சமயத்தின் நெறி நின்று எந்தப் பெயரைக் கூறி எவர் வழிபட்டாலும் அந்த வழிபாடு சிவபெருமானுக்கே உரியது என்பதை அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய் என்ற சொற்றொடரால் விளக்கினார். எல்லாச் சமயத்தினரும் தத்தம் கடவுளின் சிறப்பைக் கூற இக்கருத்தையே பயன்படுத்துவர். எனவே வேற்றுச் சமயத்தவரும் மறுக்காத வண்ணம் மாதவச் சிவஞான முனிவர் இச்சொற்றொடருக்குத் தமது பொழிப்புரையால் உரை கண்டிருக்கிறார். அறுசுவைச் சமயத்து அவ்வவர் ஓர்க்கும் பொருளாய் என்று அமைத்து அவர் உரை வரைகிறார். ஓர்க்கும் என்பது ஆராய்ந்து அறிகின்ற என்ற பொருளைத் தரும். ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப், பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (குறள் 3 5 7) என்பதைக் காண்க.

அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்து அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து (7- 55- 9) என்ற சுந்தரர் தேவாரம் இங்கே நினையத்தக்கது.

3. என்னைஇப் பவத்தில் சேராவகை எடுத்து, என் சித்தத்தே
தன்னைவைத்து, அருளினாலே தாள்இணை தலைமேல் சூட்டும்
மின் அமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ்- மெய்கண்டான் நூல்
சென்னியில் கொண்டு, சைவத் திறத்தினைத் தெரிக்கல் உற்றாம்.

எண்ணற்ற பிறப்புகளாகிய, எல்லையும் ஆழமும் காணமுடியாத பிறவிக்கடலிலே விழுந்து தடுமாறும் என்னை அதிலிருந்து தன்னுடைய அருட்கையால் எடுத்து என் அறிவில் தனது திருவருள் விளங்குமாறு திருவுளம் கொண்டு தன் அருளால் தனது திருவடிகளை என் தலைமேல் சூட்டியவரும், மின்னலொடு கூடிய மேகங்கள் சூழ்ந்த சோலைகளுடைய திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளி விளங்குபவரும் ஆகிய மெய்கண்டார் அருளிய திருநூலைத் தலைமையாகக் கொண்டு சைவசித்தாந்தத்தின் மெய்ப்பொருள் உண்மையை யாம் விளக்கத் தொடங்குவோம்.

பவம்- பிறவி, பிறவியைப் பெருங்கடலாகக் கூறுவது பெரியோர் மரபு (குறள் 10) எடுத்து என்ற சொல்லாலே பிறவிக் கடலில் இருந்து தமது அருட்கையினால் எடுத்து என்ற பொருளை ஆசிரியர் குறிப்பால் பெற வைத்தார்.

மெய்கண்ட தேவ நாயனாரால் அருளப்பட்ட நூல் சிவஞான போதம் என்ற பெயருடன் விளங்குகிறது. ஆசிரியர் அப்பெயரை இங்குக் குறிக்கவில்லை என்பதும் மெய்கண்டான் நூல் என்று மட்டிலுமே குறித்தார் என்பதும் நினையத்தக்கன.

சென்னியில் கொண்டு என்பதற்கு சிவஞான முனிவர் சிரத்தானமாகக் கொண்டு என்று உரை வகுத்தார். அதாவது தலை மேல் தாங்கி என்று கொள்ளாமல் அந்த நூலையே தலைமை நூலாகக் கொண்டு என்று பொருள் காணவேண்டும் என்பது முனிவர் கருத்து.

4. பண்டை நல் தவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன்- மார்க்கர்
கண்டநூல் ஓதி வீடு காதலிப் பவர்கட்கு ஈசன்-
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகலல் உற்றாம்.

முன்னைப் பிறவிகளில் ஈட்டிய தவத்தினால் இந்தப் பிறவியில் பக்குவம் பெற்ற மெய்ஞ்ஞானிகளாகத் தோன்றிய அருளாளர்களுக்கு இறைவன் தானாகவே எழுந்தருளி வந்து வீடுபேற்றை அருளுவான். ஆகையினால் அவர்கள் நூல்களைப் பயின்றும் ஆராய்ந்தும் அறிய வேண்டிய தேவை இல்லை. எனவே இந்த நூல் அவர்களுக்காக எழுதப்படவில்லை. நன்னெறியிலே ஒழுகியவர்கள் உயிர்கள் உய்வடைவதன் பொருட்டு எழுதியருளிய நூல்களைப் பயின்று வீடு பேறு அடைதல் வேண்டும் என வேட்கை உடையவர்களுக்காக இந்நூலைக் கூறல் உற்றாம்.

மூன்று வகைப்பட்டது ஆருயிர்த் தொகுதி என்று சைவசித்தாந்தம் கொள்ளுகிறது. அவர்கள் முறையே விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் எனப்படுவர். இவர்களுக்கு இறைவன் குருவுமாகத் தோன்றி அருள்பாலிக்கும் போது தன்மை, முன்னிலை, படர்க்கை என்று மூவிடங்களிலும் நின்று ஞானத்தை வழங்குவான்.

இந்தப் பாடலிலும் மாந்தர்கள் மூன்று வகையாகக் குறிக்கப்பட்டனர். ஆயினும் மேலே கூறப்பட்ட வகையிலிருந்து இந்தப் பகுப்பு சற்றே வேறுபட்டது. பாடலில் இரண்டு வகையினரைப் பற்றி ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது வகையைக் குறிப்பால் பெற வைத்தார். இப்பகுப்பின்படி உயிர்கள் சாமுசித்தர், வைநயிகர், பிராகிருதர் என மூவகைப்படும்.

சாமுசித்தர் என்பவர் முந்திய பிறவிகளிலே ஈட்டிய நற்றவத்தினால் மீண்டும் உலகில் தோன்றி இந்தப் பிறவியில்வீடு பேறு அடையும் மேலான தகுதி வாய்ந்தவர்கள். அவர்களை இறைவனே முன் வந்து ஆட்கொள்ளுவான். எனவே அவர்கட்கு நூலின் துணை தேவை இல்லை.

வைநயிகர் என்பவர் விநயம் உடையவர்கள் எனப்படுவர். அவர்களே அருளாளர்களின் நூலைத் துணைக்கொண்டு நிலைத்தன இவை, நிலையாதன இவை என்று உணர்ந்து பொய்தீர் ஒழுக்க நெறி நின்று வீடு அடைவதற்கு உரியவர்கள். இறைவன் திருவடிகளைச் சார்வதற்கு உரிய நெறி இது என்று காட்டும் இந்நூல் அவர்கள் பொருட்டே ஆசிரியரால் உரைக்கப்பட்டது.

மூன்றாவது வகையினராகிய பிராகிருதர் பற்றி ஆசிரியர் கூறாது விடுத்தார். அவர்கள் உலக இன்பங்களை விரும்பி உழல்பவர் ஆவர். எனவே அவர்களுக்கு ஞான நூல்களால் பயன் ஏதும் இல்லை.

அவையடக்கம்

5. மறையினால், அயனால், மாலால், மனத்தினால், வாக்கால், மற்றும்
குறைவுஇலா அளவி னாலும் கூறஒணாது ஆகி நின்ற
இறைவனார் கமல பாதம் இன்று யான் இயம்பும் ஆசை
நிறையினார் குணத்தோர்க்கு எல்லாம் நகையினை நிறுத்தம் அன்றே.

மறைகளாலும், அயனாலும், திருமாலாலும், மனத்தினாலும், வாக்கினாலும் குறைவுபாடில்லா அளவைகளினாலும் இத்தகையது என்று அறிவதற்கு அரியதாக விளங்குகின்ற இறைவனது தாமரை மலர் போன்ற பாதங்களை இந்நூலினிடத்து எடுத்துரைக்கப் புகுந்த எனது ஆவல் சான்றாண்மை நிறைந்த பெரியோர்க்கு எல்லாம் நகைப்பினை விளைவிக்கும் அன்றே.

நான்மறைகளும் சிவபெருமானுடைய இயல்பினை எடுத்துரைக்க வல்லன அல்ல. எனவே அவை இதுவன்று இதுவன்று என்றே கூறுவனவாகும் என்பர். இங்கு மறையினால் என்றது பாச அறிவால் அறியப்படாமையைக் குறித்தது. அயனும் திருமாலும் தேடி அறியாத இயல்பினை உடையவன் இறைவன் என்பது அவன் பசு ஞானத்தால் அறியப்படாதவன் என்பதைக் குறித்தது. சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாதவன் என்பதும் பாசஞானத்துக்கும் பசுஞானத்துக்கும் எட்டாதவன் என்பதைக் குறிக்கும்.

குறைவற்ற அளவைகள் என்பது இறைவன் சிற்றறிவாகிய உயிர்களால் அளவை இலக்கணத்தின் துணை கொண்டு அறியப்படாதவன் என்பதைக் குறித்தது.

சிவஞான முனிவர் இங்கே கூறப்பட்டவற்றுள் புராணங்களையும் இதிகாசங்களையும் மிருதிகளையும், மீமாம்சை, தருக்கம் முதலியவற்றையும் அடக்கிக் காட்டுவார். இவ்வாறு நூலாசிரியர் அவை அடக்கம் கூறினார்.

ஆசங்கை நீக்கல்

6. அருளினால் ஆக மத்தே அறியலாம்- அளவி னாலும்
தெருளலாம் - சிவனை, ஞானச் செய்தியால், சிந்தை யுள்ளே
மருள் எலாம் நீங்கக் கண்டு, வாழலாம்; பிறவி மாயா
இருள் எலாம் இரிக்கல் ஆகும்; அடியரோடு இருக்க லாமே.

இத்தனை அரியவனாகிய இறைவனது இயல்பு அறிவதற்கு அருமையானதே. ஆயினும் ஒப்பற்ற சிவபரம் பொருளைப் பற்றிய அறிவினை அப்பெருமான் அருளிச் செய்த ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்த சிவஞானிகளின் அருள் உபதேசத்தால் கேட்டு அறியலாம். அவ்வாறு கேட்டதை அளவைகளின் துணைக்கொண்டு சிந்தித்தும் அறியலாம். சிந்தித்தவற்றை சிவஞானத்தின் துணை கொண்டு மாசறத் தெளியலாம். இவ்வாறு ஒழுகுவதனால் மாயாத பிறவிக்குக் கார பாசத்தளையை நீக்கலாம். சிவனடியாரோடு கூடி நிட்டை மேற்கொண்டு சிவானந்தம் கைவரப் பெற்று இருக்கலாம்.

அவையடக்கச் செய்யுளில் சிவபெருமான் அறிதற்கு அரியவன் என்பதனை ஆசிரியர் எடுத்துரைத்தார். அதனைக் கற்பவர்களுக்கு இறைவன் ஒரு வகையாலும் அறியப்படாத தன்மை உடையவனோ என்ற ஐயம் தோன்றும். சைவசித்தாந்தத்தின் கருத்துப்படி சிவபெருமான் பாசஞான, பசுஞானங்களால் அறியப்படாதவன். ஆயினும் பதிஞானத்தில் அறியப்படுவன் என்பதை இப்பாடலில் கூறி ஐயத்தைத் தெளிவிக்கிறார் ஆசிரியர் அருள் நந்திசிவம். இக்கருத்தின் விரிவு இந்நூலின் ஆறாம் நூற்பாவில் ஆசிரியரால் கூறப்படும்.

இறைவனை அறிவதற்கு நான்கு படிநிலைகள் கூறப்படும். அவை கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பன. இவை நான்கும் ஆராய்ச்சி அநுபூதி என்ற இரண்டுள் அடங்கும். கேட்டலும் சிந்தித்தலும் ஆராய்ச்சி எனவும், தெளிதலும், நிட்டை கூடலும் அனுபூதி எனவும் பெருமக்களால் உணர்த்தப்படுகின்றன.

அளவை இலக்கணம்

7. அளவை காண்டல், கருதல், உரை, அபாவம், பொருள், ஒப்பு ஆறு என்பர்;
அளவை மேலும் ஒழிபு, உண்மை, ஐதி கத்தோடு, இயல்பு என நான்கு
அளவை காண்பர்; அவையிற்றின் மேலும் அறைவர்; அவை எல்லாம்
அளவை காண்டல், கருதல், உரை என்ற இம்மூன்றில் அடங்கிடுமே.

அளவை என்பது காண்டல் அளவை, கருதல் அளவை உரை அளவை, இன்மை அளவை, பொருள் அளவை, உவமை அளவை, என்று ஆறு வகைப்படும் என்பர். சிலர் இவற்றுக்கு மேலும் ஒழிபு அளவை, உண்மை அளவை, ஐதிக அளவை, இயல்பு அளவை, என்ற நான்கனையும் கூட்டி அளவைகள் பத்து வகைப்படும் என்று கூறுவர். வேறுசிலர் இப்பத்துக்கு மேலும் அளவைகள் உண்டு எனக் கொள்வர். இவ்வாறு அளவைகளைப் பலவகைப்படுத்திக் கூறினாலும் அவை யாவும் காண்டல் அளவை, கருதல் அளவை, உரை அளவை எனும் மூன்றனுள் அடங்கும்.

அளவை என்பது வடமொழியில் பிரமாணம் என்ற சொல்லால் குறிப்பிடப்படும். பிரமா என்ற சொல் அறிவு என்ற பொருளைத் தரும். எதன் வழியாக அறிவு பெறப்படுகிறதோ அது பிரமாணம் ஆகும். அளவையை அறிவு அளவை என்றும் வழங்குவர். ஆங்கிலத்தில் இது எபிஸ்டமாலஜி எனப்படும்.

உலகத்துப் பொருள்களை எண்ணல் அளவை, நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை போன்றவற்றால் அளந்து காண்பது போல மெய்ப்பொருள் இயலில் கூறப்படும் கருத்துக்களை அளந்து அறிவதற்கு அளவை இயல் பயன்படுகிறது. அளவையில் குறை இருந்தால் அளக்கப்படும் பொருளினைப் பற்றிய அறிவும் குறையுடையதாய் முடியும். அதனால் தான் அளவை இயல் இன்றியமையாததாகக் காணப்படுகிறது. இது முதல் பதினான்கு பாடல்கள் அளவை இலக்கணம் பற்றிக் கூறுகின்றன.

காண்டல் அளவை என்பது காட்சி என்றும், பிரத்தியட்சப் பிரமாணம் என்றும் வழங்கும். ஒரு பொருளைக் கண் முதலிய ஐம் பொறிகளாலும் நேர் முகமாக அறிதல் காண்டல் அளவை ஆகும்.

கருதல் அளவை என்பது அனுமானப் பிரமாணம் எனவும் கூறப்படும். ஒரு பொருளை நேர்முகமாகக் காண முடியாத போதும், அதனை ஒருபோதும் விட்டு நீங்காத தன்மை உடைய மற்றொரு பொருளைக் கண்டு முதலில் கூறப்பட்ட பொருள் உள்ளது என்று கருதி அறிதல் கருதல் அளவை ஆகும். எடுத்துக்காட்டாக தீயோடு விட்டு நீங்காத தன்மையை உடையது புகை. விட்டு நீங்காத் தன்மையை அவிநா பாவம் என்ற சொல்லால் குறிப்பர். தொலைவில் ஓரிடத்தில் புகை எழுவதைக் கண்டு நெருப்பு கண்ணுக்குப் புலனாகாத போதும் அங்கே நெருப்பு உள்ளது. என்று அறிந்து கொள்வது கருதல் அளவையின் பாற்படும்.

உரைஅளவை ஆகமப் பிரமாணம் என்றும், சத்தப் பிரமாணம் என்றும், ஆப்தவாக்கியம் என்றும் வழங்கப்படும். கண்டும் கருதியும் அறிய முடியாத பொருள்களைப் பற்றி நூல்களின் வாயிலாக அறிதல் உரை அளவை ஆகும். இங்கு நூல்கள் எனப்பட்டன. இறைவனால் அருளப்பட்டனவும், இறைவனின் மெய்யடியார்களால் அருளப்பட்டனவுமாகிய மெய்ந்நூல்களையே குறிக்கும்.

இன்மை என்பது உண்டு என்னும் அறிவுக்கு எதிராக உணரப்படுவதாகும். இதனை அபாவம் என்றும் வழங்குவர். எடுத்துக் காட்டாக முயலுக்குக் கொம்பு இல்லை என்பது இன்மை அளவையால் அறியப்படுவதாகும்.

பொருள் என்று ஆசிரியர் குறிப்பிட்ட அளவை வடமொழியில் அருத்தாபத்தி என்று வழங்கும். இங்ஙனம் அன்று எனில் இது கூடாது என்று உய்த்து அறிவது அளவையால் பெறப்படும். எடுத்துக் காட்டாக ஒருவர் உண்ணா நோன்பு இருப்பதாகச் சொல்லுகிறார். என்று வைத்துக் கொள்வோம். பகற்பொழுது முழுவதும் அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்கிறது. அவர்கள் முன்னிலையில் அவர் எதையுமே உண்ணவில்லை பத்துப் பதினைந்து நாள் கழிந்த பிறகு அவர் மேனி வாடாமல் இருப்பாரானால் யாருமே அறியாமல் இரவில் அவர் உண்ணுகிறார் என்பதனை உய்த்து அறியலாம். இதனைப் பகல் உண்ணான் பருத்திருப்பான் என்ற சொற்களால் கூறுவர். இதுவே அருத்தாபத்தி அளவையாகும்.

செய்யுளில் ஒப்பு என்ற சொல்லால் குறிக்கப்படுவது உவமை அளவை என்றும் கூறப்படும். காட்டுப் பசுவை அறியாத ஒருவன் அது எவ்வாறு இருக்கும் என்று கேட்டால் வீட்டுப் பசுவை ஒத்து இருக்கும் என்று விளக்குவது இந்த அளவைக்கு எடுத்துக் காட்டு.

சிறப்பித்துச் சொல்லப்படுகிற மேற்கூறிய ஆறு அளவைகளையும் தவிர மேலும் நான்கு அளவைகள் கொள்ளப்படும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவற்றுள் முதலாவது ஒழிபு அளவை. இதற்கு பாரிசேட அளவை என்றும் பெயர் வழங்கும். இதற்கு எடுத்துக்காட்டாக மகாபாரதக் கதையிலிருந்து ஒரு நிகழ்ச்சியைக் கூறுவர். அக்காலத்தில் ஆயிரம் யானை வலிமை உடையோர்கள் நால்வர் இருந்தனர். அவர்கள் சல்லியன், சராசந்தன், கீசகன், பீமசேனன் என்பவர்கள். விராட நாட்டில் கீசகன் இனந்தெரியாத ஒருவனால் மற்போரில் கொல்லப்பட்டான். அந்நாட்டில் சல்லியனும், சராசந்தனும் இல்லை. எனவே கீசகனைக் கொன்றவன் அஞ்ஞாதவாசத்தில் இருந்தவனாகிய பீமனாகத்தான் இருத்தல் வேண்டும் என்று உய்ந்து அறியப்படும்.

உண்மை என்பது சம்பவ அளவை என்று வடமொழியில் கூறப்படும். என்னிடம் ஆயிரம் பொற்காசுகள் உள்ளன என்று நான் கூறும்போது என்னிடம் நூறு பொற்காசுகள் உண்டு என்பது சொல்லாமலே பெறப்படும். ஏனெனில் நூறு, ஆயிரத்துள் அடங்கும் என்பது உலகறிந்த உண்மை.

ஐதிகம் என்பது வழிவழியாக வழங்கி வரும் வழக்கமாகும். இம்மரத்தில் பேய் ஒன்று குடி இருக்கிறது எனும் போது தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்டு வந்த ஒரு செய்தியை அது உணர்த்துகிறது.

இயல்பு என்பது சுபாவ அளவை  என்று கூறப்படும். சொற்களுக்கு நேரடியாகப் பொருள் கொள்ளுவது இந்த அளவையினுள் அடங்கும். மரம் என்ற தமிழ்ச் சொல் இயல்பாக நின்று மரம் என்ற பொருளை உணர்த்தும் என்று அறிவது இந்த அளவையுள் அடங்கும்.

மா மரத்தைக் காட்டல் என்ற பாடம் பிழையானது என்றும் மரம் மரத்தைக் காட்டல் என்பது சரியான பாடம் என்றும் பெரும் புலவர் க. வச்சிரவேல் முதலியார் அவர்களும் மகா வித்துவான் சி. அருணை வடிவேல் முதலியார் அவர்களும் கொள்ளுகின்றனர்.

இவ்வாறு பத்து அளவைகள் கூறப்படினும் அவை யாவும் காட்சி, கருதல், உரை எனும் மூன்றனுள் அடங்கும். இன்மையும், இயல்பும் காட்சி அளவையில் அடங்குவன. பொருள், ஒழிப்பு, உண்மை என்ற நான்கு அளவைகளும் கருதல் அளவையில் அடங்குவன. ஐதிகம் என்பது உரை அளவையில் அடங்கும்.

8. மாசுஅறு காட்சி, ஐயம் திரிவு இன்றி, விகற்பம் முன்னா
ஆசுஅற அறிவது ஆகும்; அனுமானம் அவினாபாவம்
பேசுறும் ஏதுக் கொண்டு, மறைபொருள் பெறுவது ஆகும்;
காசு அறும் உரை இம்மானத்து அடங்கிடாப் பொருளைக் காட்டும்.

குற்றமற்ற காண்டல் அளவை என்பது முதலில் நிருவிகற்பமாய் அறியப்பட்டு, அதன் பின்னர் ஐயம், திரிபு ஆகியன இல்லாமல் எதனையும் தெளிவுறக் கண்டு அறிவதாகும். அனுமான அளவையானது கண்ணுக்கு நேரே புலப்படாமல் மறைந்திருக்கும் ஒரு பொருளை அதனை விட்டு நீங்கா இயல்பினைக் காரணமாகக் கொண்டு உய்த்து அறிவதாகும். இவ்விரண்டு அளவைகளிலும் அடங்காத பிற பொருள்களைத் தெளிவுற உணர்த்துவது உரை அளவை ஆகும்.

காட்சி அளவை கண்ணுக்கு நேரே புலப்படும் பொருள்களை அறிகின்ற ஆற்றல். இது முதலில் பொதுவாக ஒரு பொருள் எதிரே தோன்றுகிறது என்ற அளவிலேயே நிகழும். இவ்வாறு நிகழ்வதை நிருவிகற்பக் காட்சி என்பர். அதாவது வேறுபாடுகள் ஏதுமற்ற பொதுக் காட்சி இதுவாகும். விகற்பம்- வேறுபாடு. இப்பாடலில் ஆசிரியர் விகற்பம்முன்னா என்று கூறியதனை நிருவிகற்பக் காட்சியை முன்னதாகக் கொண்டு என்று பொருள் காண வேண்டும். நிருவிகற்பம் என்றது தலைக்குறையாக விகற்பம் என்று இங்குக் குறிக்கப்பட்டது. அதனை அடுத்து நிகழ்வது சவிகற்பக் காட்சி எனப்படும். வேற்றுமையோடு பொருந்திய காட்சியறிவு சவிகற்பம் எனப்படும். ஒரு பொருளை இது இன்னது என்ற தெளிவுற அறிவதாகும். இவ்வாறு அறியும் போது இது யாதோ என்ற ஐயமும், ஒன்றை மற்றொன்றாக அறிகின்ற திரிபும் இல்லாது இருத்தலே ஆசிரியரால் மாசு அறு காட்சி எனப்பட்டது.

கருதல் அளவை என்பது மறைந்திருக்கும் ஒரு பொருளின் விட்டு நீங்காத இயல்பினைக் கொண்டு அதன் இருப்பை அறிவதாகும். ஓர் அறைக்குள் நுழைந்தவுடன் மல்லிகைப்பூவின் மணத்தை நுகர்கிறோம். மலர் கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் அங்கே மல்லிகை மலர் உண்டு என்று அறிவது இந்த அளவையுள் அடங்கும். அவிநாபாவம்- வீட்டுநீங்காத் தன்மை. அதனைக் காரணமாகக் கொண்டே அனுமானம் நிகழும். வழக்கமாகக் கூறப்படும் எடுத்துக்காட்டு புகை உள்ள இடத்தில் நெருப்பு உண்டு என்று அறிதலாகும்.

மேற்கூறிய இரண்டு அளவைகளுக்கும் அடங்காத பொருள்களைப் பற்றி அருளாளர்களும் சான்றோர்களும் மொழிந்த நூலைக் கொண்டு அறிவது உரை அளவை ஆகும். விண்ணுலகம் பாதாள உலகம் முதலியவற்றின் இருப்பினை இந்த அளவையின் அடிப்படையிலே அறிகிறோம்.

9. கண்ட பொருளை இரட்டுறவே கருதல் ஐயம்; திரியவே
கொண்டல் திரிவு ஆம்; பெயர், சாதி, குணமே, கன்மம், பொருள் என ஐந்து
உண்டு அவ்விகற்ப உணர்வினுக்கு; பொருளின் உண்மை மாத்திரத்தின்
விண்டல் இல்லா அறிவு ஆகும்- விகற்பம் இல்லாக் காட்சியே.

எதிரே தோன்றுகிற ஒரு பொருளை இது இன்னது எனத் தெளிவுபட உணராமல் பொதுவாக ஒரு பொருள் உள்ளது என்று காணும் காட்சியை நிருவிகற்பக் காட்சி என்பர். இதுவே முதலில் நிகழ்வது. அதன் பின்னர் அப்பொருளின் பெயர், இனம், பண்பு, தொழில் பொருள் என்ற ஐந்து வகை இயல்புகளும் வேறுபடுத்தித் தெளிவுறக் காண்பது சவிகற்பக் காட்சி எனப்படும். அப்பொருளைக் காணும் போது இதுவோ அதுவோ என்று ஐயத்தோடு காண்பது ஐயக்காட்சி எனப்படும். ஒன்றை மற்றொன்றாகக் காண்பது திரிவுக்காட்சி எனப்படும்.

விகற்பம்- வேறுபாடு. நிருவிகற்பம்- வேறுபாடு அற்றது. சவிகற்பம்- வேறுபாட்டுடன் கூடியது.

எதிரே ஒரு மரம் தோன்றுகிறது. அதனைப் பொதுவாக அறிதல் நிருவிகற்பக் காட்சி. எதிரே தெரிவது ஒரு மரம் (பெயர்) அது மாமரம் (இனம்). இம்மரம் இன்னின்ன பண்புகள் உடையது (பண்பு)  இது இப்போது பூத்துக் காய்த்து விளங்குகிறது (தொழில்). இம் மரத்தில் நல்ல கனிகளும் பழுத்துள்ளன. எனவே இது தேமாமரம் (பொருள்) இவ்வாறு அறிவதே சவிகற்பக் காட்சி.

10. காண்டல் வாயில், மனம், தன்வே தனையோடு, யோகக் காட்சி என
ஈண்டு நான்காம்; அனுமானம் தனக்கும் பிறர்க்கும் என்று இரண்டாம்;
மாண்ட உரைதந் திரமந்திரத்தோடு உபதே சச்சொல் என மூன்றாம்;
பூண்ட அளவைக்கு எதிர்புலன் தன் இயல்பு, பொது என்று இரண்டாமே.

காட்சி அளவையை நான்கு வகைகளாகப் பிரிப்பர். அவை முறையே வாயிற் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி என்பனவாகும். கருதல் அளவையும் தன் பொருட்டு என்றும், பிறர் பொருட்டு என்றும் இரண்டாகக் கொள்ளப்படும. மான்புடைய உரை அளவை மூன்றாகக் கூறப்படும். அவை தந்திரம், மந்திரம், உபதேசம் என்பனவாகும். இங்கே கூறப்பட்ட அளவைகளால் அறியப்படும் பொருள்களின் இயல்பு இரண்டாகக் கொள்ளப் பெறும். அவை முறையே தன்னியல்பு எனப்படும் சிறப்பியல்பும், பொது இயல்பும் என்று இரு வகைப்படும்.

இதனை அடுத்து வருகிற இரண்டு பாடல்களால் இங்கே விளக்கப்பட்ட நான்கு வகைக் காட்சிகளும், தன்னியல்பு பொது இயல்பு என்பனவும் ஆசிரியரால் விளக்கப்படுகின்றன.

11. அன்னிய சாதி யும்தன் சாதியும் அகன்று நிற்றல்,
தன்இயல்பு அன்னியத்தைத் தவிர்ந்துதன் சாதிக்கு ஒத்தல்
துன்னிய பொது, இயற்கை; சொன்ன இவ்விரண்டி னுள்ளே
மன்னிய பொருள்கள் யாவும் அடங்கிடும், மானம் உற்றால்.

சிறப்பு இயல்பு எனப்படுவது வேற்று இனப் பொருள்களின் தன்மையையும் தன் இனப் பொருள்களின் தன்மையையும் விட்டு நீங்கித் தனக்கே உரிய இயல்புகளோடு விளங்குவது ஆகும். பொது இயல்பு எனப்படுவது வேற்று இனப் பொருள்களின் இயல்பில் இருந்து நீங்கியும் அதே நேரத்தில் தன் இனப் பொருள்களின் இயல்புகளோடு ஒத்தும் விளங்குவதாகும். இவ்விரண்டு இயல்புகளுள்ளே காட்சி முதலிய அளவைகளின் துணை கொண்டு அறியப்படும் பொருள்கள் யாவும் அடங்கும்.

விலங்கினங்களுக்குள்ளே பசு என்பது ஓர் இனம், எருமை குதிரை முதலியன விலங்குகளே ஆயினும் அவை வேற்று இனமாகும். இத்தகைய இனப்பாகுபாடு பார்த்த அளவிலேயே புலப்படுவது ஆகும். இதனையே பாடலில் அன்னிய சாதியைத் தவிர்த்து தன் சாதிக்கு ஒத்தல் என்று ஆசிரியர் குறிப்பிட்டார்.

நம் வீட்டுப் பசு கருப்பு நிறத்தையும் குட்டைக் கொம்புகளையும் உடையதாகவும் திமில் இல்லாததாகவும் இருக்கிறது. எனவே இந்தப் பசு, பொதுவாக எல்லாப் பசுக்களுக்கும் உரிய இயல்புகளோடு விளங்கினும் தனக்கு எனச் சில அடையாளங்களை உடையது ஆகிறது. இதுவே தன்னியல்பு என்று கூறப்படும் சிறப்பு இயல்பு ஆகும்.

12. உயிரின் ஓடுஉணர்வு- வாயில் ஒளிஉரு ஆதி பற்றிச்
செயிர்உரு விகற்பம் இன்றித் தெரிவது இந் திரியக் காட்சி;
அயர்வுஇல் இந்திரிய ஞானம், ஐம்புலன் சார்ந்து, உயிர்க்கண்,
மயர்வுஅற, வந்த ஞானம் மானதக் காண்டேல் ஆமே.

உயிரின் அறிவு தொழிற்படும்போது அது பொருள்களை நோக்கிச் செல்லுகிறது. அப்போது அவ்வறிவு கண் முதலிய ஐம் பொறிகளையும், அப்பொறிகளுக்குத் துணையாக உடன் நிற்கும் தீ முதலிய ஐம்பூதங்களையும் அப்பூதங்களுக்கு முதற்காரணமாய் விளங்கும் உருவம் முதலிய ஐந்து தன் மாத்திரைகளையும் பொருந்தி நின்றே அறியும். ஐயம், திரிபு என்ற குற்றங்கள் இன்றி ஒரு பொருளை அதனுடைய பெயர், இனம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் பொதுமையாக அறிகின்ற அறிவு இந்திரியக் காட்சி எனப்படும். இது பொறி வழி அறியும் அறிவு எனப்படும். இவ்வாறு முதலில் எழுந்த அறிவு ஐம்புலன்களோடு பொருந்தி அறிந்த பின்னர் மீண்டும் மறக்கப்படாது சித்தத்தில் நிலை பெற்றுப் பெயர் இனம் முதலிய வேறுபாடுகளுடன் புத்தி தத்துவத்தின் தொழிற்பாட்டால் இன்னது எனத் தெளிவாக அறிகின்ற அறிவு மானதக் காட்சி எனப்படும்.

உயிரின் ஓடுஉணர்வு என்ற சொற்கள் அளவை பற்றிக் கூறப்படுகின்ற கருத்துக்கள் அனைத்திலும் கூட்டி உரைக்கப்படும் என்று மாதவச் சிவஞான முனிவர் உரை வரைகிறார்.

முதலில் கூறப்பட்ட இந்திரியக்காட்சி என்பது வாயிற்காட்சி எனவும் நிருவிகற்பக்காட்சி எனவும் கூறப்படும். மானதம் என்பது மனத்தின் தொழிற்பாட்டை முதலில் கொண்டு நிகழ்வது. ஆதலால் அது மனத்தின் வழி வந்த அறிவு ஆகும். ஒளி- நெருப்பு. உருஆதி- உருவம் முதலிய தன் மாத்திரைகள். செயிர்- குற்றம். அயர்வு இல்- மறத்தல் இன்றி. மயர்வு- மயக்கம்.

13. அருந்துஇன்பத் துன்பம் உள்ளத்து அறிவினுக்கு அராகம் ஆதி
தரும் தன்வே தனையாம் காட்சி; சமாதியால் மலங்கள் வாட்டிப்,
பொருந்திய தேச கால இயல்புஅகல் பொருள்கள் எல்லாம்,
இருந்து, உணர்கின்ற ஞானம் யோகநல் காண்டல் ஆமே.

தன் வேதனைக் காட்சி எனப்படுவது உயிர் அராகம் முதலிய ஐந்து தத்துவங்களாலும் செலுத்தப்பட்டு நுகர்கின்ற இன்பதுன்பங்களை இத்தகையது என்று அறிவதாகும். எட்டுவகை உறுப்புகளைக் கொண்ட யோகப் பயிற்சியினால் மலங்களைக் கெடுத்து இருந்த இடத்தில் இருந்தவாறே தேச கால இயல்புகளின் எல்லைக் கடந்து எவ்விடத்தும் எக்காலத்தும் உள்ள பொருள்களை உள்ளவாறே அறிகின்ற அறிவு யோகக் காட்சி எனப்படும்.

அராகம் ஆதி- அராகம் முதலியன. அராகம் முதலிய தத்துவங்களாவன காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்பனவாகும். இவை வித்தியாதத்துவங்களுள் அடங்கும். உயிர் இவ்வைந்து தத்துவங்களோடு பொருந்தும் போதே அதற்கு இன்ப துன்ப உணர்வுகள் தோன்றும் என்பர். சத்துவகுணம் பொருந்தும் போது இன்பமும், தாமதகுணம் பொருந்தும் போது துன்பமும் விளையும். வேதனை என்ற சொல் இக்காலத்தில் துன்பத்தை மட்டும் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் அது நுகர்வு என்றே பொருள்படும். உயிரின் இன்ப துன்ப உணர்வுகளைத் தன் வேதனைக் காட்சி என்பர். வடமொழியில் இது ஸ்வவேதனா பிரத்யட்சம் என்று வழங்கும்.

யோகக் காட்சி எனப்படுவது இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி, என்ற எட்டு உறுப்புகளைக் கொண்ட யோக நெறியிலே நின்று அதனால் உயிரைக் கட்டியிருக்கும் மும்மலங்களையும் ஆற்றல் இழக்கச் செய்யும் யோகியரின் காட்சித்திறமாகும். அவர்கள் ஓரிடத்தில் ஒரு காலத்தில் இருந்த படியே இருந்து, விண்ணுலகம் மண்ணுலகம் கீழ் உலகம் ஆகிய மூன்று இடங்களிலும் இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் ஆகிய முக்காலத்தும் நிகழ்வனவற்றை உள்ளவாறே காண்பர்.

14. பக்கம் முன்றின், மூன்று ஏது உடைய பொருளைப் பார்த்து உணரத்
தக்க ஞானம் தன் பொருட்டாம்; பிறர்தம் பொருட்டாம் அனுமானம்,
தொக்க இவற்றால் பிறர்தெளியச் சொல்லல் ஆகும்; அச்சொல்லும்
மிக்க அன்னு வயத்தினொடு வெதிரே கச்சொல் என இரண்டாம்.

பக்கம் என்பது மூன்று வகைப்படும். அவை முறையே பக்கம், சபக்கம், விபக்கம் என்பன. ஏது என்பதும் மூன்று வகைப்படும். அவை இயல்பு, காரியம், அநுபலத்தி எனப்படும். ஏதேனும் ஓர் ஏதுவை வைத்து விட்டுநீங்காத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளைக் கருதி அறிவது தன் பொருட்டு அனுமானம் எனப்படும். இவ்வாறே பக்கத்தோடு பொருந்திய மூன்று ஏதுக்களைக் கொண்டு தான் கருதி அறிந்ததை மற்றையோர் அறிய அறிவிக்கும் அளவை பிறர் பொருட்டு அனுமானம் எனப்படும். இவ்வாறு பிறருக்கு அறிவிப்பதும் உடன்பாட்டு வகை என்றும், எதிர்மறை வகை என்றும் இரண்டாகும்.

பக்கம் என்பது வடமொழியில் பட்சம் எனப்படும். அந்நுவயம் என்பது உடன்பாட்டு முறையையும், வெதிரேகம் என்பது எதிர்மறையையும் குறிப்பனவாகும். இங்குக் கூறப்பட்ட பக்கம், ஏது என்பன இதனை அடுத்து வரும் இரண்டு பாடல்களாலும் விளக்கப்படுகின்றன.

15. மூன்று பக்கம்; பக்கம், நிகர் பக்கம், நிகரில் பக்கம் எனத்
தோன்றும்; பக்கம் துணிபொருளுக்கு இடம் ஆம்; உவமை நிகர்பக்கம்;
ஆன்றபொருள் சென்று அடையாத இடம்ஆம், நிகரில்பக்கம் முதல்
ஏன்ற இரண்டும் பொருள் உண்மைக்கு இடமாம், ஒன்று பொருள் இன்றாம்.

முற் கூறப்பட்ட பக்கம் என்பது பக்கம், சபக்கம், விபக்கம் என மூன்றாகும். இவற்றுள் பக்கமாவது கருதி உணரப்படும் பொருள் உள்ள இடமாம். சபக்கம் என்பது கருதி உணரும் பொருளுக்குச் சான்றாக எடுத்துக் காட்டப்படும் பொருள் உள்ள இடமாகும். விபக்கம் என்பது அப்பொருள் பொருந்தாத எதிர்மறையான இடமாகும். இவை மூன்றனுள் முதலில் கூறப்பட்ட பக்கம், சபக்கம் என்பன பொருள் உண்டு என்று அறிவதற்கு இடமாகும். முன்றாவதாகிய விபக்கம் அப்பொருள் இல்லை என்று அறிவதற்கு உரிய இடமாகும்.

கருதல் அளவையில் ஐந்து உறுப்புகள் உள்ளதாக வைத்துக் காணுதல் வேண்டும். அதனைக் கீழ்காணுமாறு கொள்ளுதல் வேண்டும்.

1. இம்மலையில் தீ உண்டு - மேற்கொள்
2. புகை உடைமையால் - காரணம்
3. எங்கே புகை உண்டோ அங்கே தீ உண்டு: அடுக்களையைப் போல - எடுத்துக்காட்டு
4. இங்கே புகை உண்டு (ஆதலால்) - பொருத்திப் பார்த்தால்
5. இங்கே தீ உண்டு - முடிப்புரை.

மேற்கோள் என்பதனைப் பிரதிக்ஞை என்றும், காரணம் என்பதனை ஏது என்றும், எடுத்துக்காட்டு என்பதனை திருஷ்டாந்தம் என்றும், பொருந்திப் பார்த்தல் என்பதனை உபநயம் என்றும், முடிப்புரையை நிகமனம் என்றும் வடமொழியில் கூறுவர்.

பாடலில் சபக்கம், விபக்கம் என்ற வடசொற்களை நிகர் பக்கம், நிகரில் பக்கம் என்று ஆசிரியர் அருள் நந்திசிவம் ஆண்டிருப்பதைக் காண்க.

மேலே காட்டப்பட்ட எடுத்துக்காட்டில் மேற்கோள் அல்லது துணிபொருள் தீ. அது இருக்கும் இடமாகிய மலை பக்கம் எனப்படும் அடுக்களை சபக்கம் ஆகும். இதனை எதிர்மறையாகக் காணும்போது பொய்கையில் தீ இல்லை என்று கூறப்படும். இவ்வாறு துணிபொருள் இல்லாத இடம் விபக்கம் ஆகும்.

16. ஏது மூன்று ஆம்; இயல்பு, காரியத்தோடு, அநுபலத்தி; இவை
ஓதின், இயல்பு மரம்மரத்தைக் காட்டல்; உறுகா ரியம்புகைதன்
ஆதியாய அனல்காட்டல் ஆகும்; அநுபலத்தியது
சீதமின்மை பனியின்மை காட்டல் போலும், செப்பிடினே.

ஏது என்று மேலே (பதினாலாம் பாடலில்) கூறப்பட்டதும் மூன்று வகைப்படும். அவை இயல்பு, அனுபலத்தி என்பன. இவற்றுள் இயல்பு என்பது ஒரு பொருளை சுட்டிக்காட்டி இது இன்னது என்பதாகும். காரியம் என்பது புகையைக் கண்டவிடத்து அதற்குக் காரணமாக உள்ள நெருப்பு உண்டு என்று காட்டுதலாகும். அனுபலத்தி என்பது ஒன்று இன்மையை வைத்து மற்றொன்றின் இன்மையை உணர்வதாகும்.

இயல்பு எனப்பட்டது, ஒரு சொல் தன் ஆற்றலால் இயல்பாகவே பொருளை உணர்த்துதல் ஆகும்.

காரிய ஏது என்பது புகை என்னும் காரியம் தனக்குக் காரணமான நெருப்பின் இருப்பை உணர்த்துவது ஆகும். அநுபலத்தி (அநுபலப்தி) என்பது இல்லை என்னும் உணர்விற்குப் புலனாவது. உபலத்தி- விளங்குதல், அனுபலத்தி- விளங்காமை. இதற்கு எடுத்துக்காட்டாக இப்போது குளிர் இல்லை பனி இன்மையால் என்பது கூறப்படும் இதனை மாற்றி இப்போது பனி இல்லை குளிர் இன்மையால் என்றும் கூறப்படும். காரியத்தின் இன்மையைக் கொண்டு காரணத்தின் இன்மையையும், காரணத்தின் இன்மையைக் கொண்டு காரியத்தின் இன்மையையும் உணர்தல் அநுபலத்தியில் அடங்கும்.

17. புகையால் அனல் உண்டு, அடுக்களைபோல் என்னப் புகறல், அந்நுவயம்;
வகையாம் அனல்இ லாஇடத்துப் புகைஇன்று ஆகும் மலரினொடு
முகைஆர் நீரிற் போல்என்று மொழிதல் வெதிரே கச்சொல்; இவை
தொகைஆர் உறுப்புஐந் தொடும்கூடச் சொல்லு வாரும்உளர், துணிந்தே

மேலே பதினான்காவது பாடலில் கூறப்பட்ட அந்நுவயம் என்பது உடன்பாட்டு முறையாகும். இங்கே புகை இருப்பதால் நெருப்பு உண்டு, அடுக்களையைப் போல என்று விளக்குவது இந்த வகையைச் சாரும். இதற்கு மாறாக நெருப்பு இல்லாத இடத்தில் புகையும் இல்லாது இருக்கும். மலரும் அரும்பும் நிறைந்த தாமரைப் பொய்கையைப் போல என்று எதிர்மறையாகக் கூறுவது வெதிரேகம் எனப்படும். இவை இரண்டும் ஐந்து உறுப்புகளை உடையனவாக வரையறுத்துக் கூறப்படும்.

இப்பாடலில் கூறப்பபட்ட உடன்பாடு (அந்நுவயம்) வெதிரேகம் (எதிர்மறை) என்ற இரண்டில் உடன்பாட்டுக்கு உரிய ஐந்து உறுப்புகளும் பதினைந்தாம் பாடலின் விளக்கத்தில் காட்டப்பட்டன.

வெதிரேகம் என்பதற்கு உரிய ஐந்து உறுப்புக்களும் பின்வருமாறு அமையும்.

1. இம்மலை தீயுடையது - மேற்கொள்
2. புகைஉடைமையால் - காரணம்
3. எங்கே தீ இல்லையோ அங்கே புகை இல்லை; பொய்கை போல - எடுத்துக்காட்டு
4. இம்மலை புகையின்மையை உடையதன்று - பொருத்திப் பார்த்தல் ஆதலால்
5. இம்மலை தீயுடையதே - முடிப்புரை

18. போது நாற்றத் தால்அறிதல், பூர்வக் காட்சி அனுமானம்;
ஓதும் உரையால் அறிவின் அளவு உணர்தல், கருதல் அனுமானம்;
நீதியால் முன் கன்மபலம் நிகழ்வது இப்போது இச்செய்தி
ஆதி யாக வரும்பயன் என்று அறிதல், உரையால் அனுமானம்.

கருதல் அளவை எனப்படும் அனுமானமும் மூன்று வகைப்படும். முன்பே மல்லிகை மலரின் மணத்தினை அறிந்தவன் ஒருவன் ஓர் அறைக்குள்ளே நுழைந்த போது அங்கு மல்லிகையின் நறுமணம் வீசுவதை  முகர்ந்து பூவைக் கண்ணால் காணாத போதும் இங்கே மல்லிகை மலர் உண்டு என உணர்தல் பூர்வக் காட்சி அனுமானம் எனப்படும். ஒருவன் பேசுவதைக் கேட்டு அவன் சொற்களின் ஆழத்தையும் நுட்பத்தையும் கொண்டு இவன் அறிவால் மிக்கவன்; கல்வியால் நிறைந்தவன் என்று உய்த்து உணர்வது கருதல் அனுமானம் எனப்படும். இந்தப் பிறவியில் முறையாக வந்து பொருந்துகின்ற இன்ப துன்பங்கள் முந்திய பிறவியில் செய்த நல்வினை தீவினைகளின் பயன் என்று அருள் நூல்கள் உரைப்பதைக் கொண்டு, இப்பிறவியில் செய்யும் நல்வினை தீவினைகள் இனி வரும் பிறவியில் இன்பமும் துன்பமுமாக நம்மை வந்தடையும் என்று உய்த்து உணரும் அறிவுரை அளவையால் வரும் அனுமானம் ஆகும்.

பூர்வம் என்பது முந்தியது என்று பொருள் தரும். முன்பே அறிந்திருந்த அறிவின் துணை கொண்டு இப்போது உய்த்து உணர்வதால் இது பூர்வக்காட்சி அனுமானம் எனப்பட்டது.

ஒருவன் வாயிற் பிறக்கும் சொற்களைக் கொண்டே அவனது அறிவின் ஆழத்தையும் குடிப் பெருமையையும் அறியலாம் என்பதனை நிலத்திற் கிடந்தமை கால் காட்டும் காட்டும், குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல் (குறள் 959) என்ற திருக்குறளும் வலியுறுத்தும்.

அருள் நூல்களாகிய ஆகமங்கள் முதலியன கூறுவனவற்றை அடிப்படையாகக் கொண்டு அவை கூறாது விடுத்தனவற்றையும் உய்த்து உணர்வது உரையால் அனுமானம்.

19. அநாதியே அமலன் ஆய அறிவின்நூல் ஆக மம்தான்
பின்ஆதிமா றுஇன்றிப் பேணல் தந்திரம்; மந்தி ரங்கள்,
மனாதிகள் அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை, ஆகும்;
தன் ஆதிஈறு இலாதான் தன்மை உணர்த்துதல், உபதே சம்தான்.

தோற்றமில் காலந் தொட்டே பாசத் தளைக்கு உட்படாத முழுமையான அறிவுடைய இறைவன் தன் பெருங்கருணையால் அருளிச் செய்த நூல்கள் வேத ஆகமங்கள் ஆகும். இவையே உரை அளவை என்று மேலோரால் கொள்ளப்படுகின்றன. ஆகமங்கள் மூன்று கலைகளை உடையனவாக விளங்குகின்றன. அவை முறையே தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை என்பன. இவற்றுள் தந்திர கலை என்பது கன்மகாண்டம் எனப்படும் கிரியை முறைகளைப் பற்றித் தெரிவிப்பதாகும். மந்திர கலை என்பது உபாசனா காண்டத்தின் அடிப்படையில் மனம் முதலிய அந்தக் கரணங்களைத் தம் போக்கில் செல்ல விடாது தடுத்து நிறுத்தித் தான் வழிபடும் தெய்வத்தை மனம் ஒன்றி வழிபடும் முறைமையைத் தெரிவிப்பது ஆகும். உபதேச கலை என்பது ஞான காண்டத்தின் அடிப்படையில், பிறப்பும் இறப்பும் அற்ற இறைவனிவன் இலக்கணங்களையும் அவனுக்கு வேறான பசுபாசங்களின் இயல்புகளையும் இறைவன் திருவடியைச் சார்ந்தே பசுக்கள் பாசத்தை நீக்க வல்லன என்பதையும் தானே ஓதி உணர்வதையும் பிறர்க்கு உணர்த்தும் முறைமையினையும் தெரிவிப்பதும் ஆகும்.

தந்திரம் என்பது நூல் என்ற பொருளைத் தருவது. மந்திரம் என்பது தன்னை நினைக்கிறவனைக் காப்பாற்றுவது என்ற பொருளைத் தரும். உபதேசம் என்பது அறிவிப்பது என்ற பொருளைத் தருவது. ஆசிரியர் இங்கே ஆகமத்தைப் பற்றி மட்டிலுமே கூறியுள்ளார். எனினும் இந்நூலில் 267ம் பாடலில் வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள் என்று கூறியிருப்பதனால் இங்கு ஆகமங்களுடன் வேதங்களையும் சேர்த்துக் கூறுதல் ஆசிரியரின் கருத்து என்பதை உணரலாம். அறிவின் என்ற சொல் இயல்பாகவே முற்றுணர்வுடைய இறைவனைக் குறித்தது.

20. ஈண்டு பக்கப் போலி நான்கு; ஏவிப் போலி ஒரு மூன்றாய்,
வேண்டும் எழுமூன்று ஆகும்; விளங்கு உவமைப் போலி ஈரொன்பான்
காண்டும்; தோல்வித் தானம் இரண்டு, இருபத்து இரண்டாம்; கருதில், இவை
யாண்டும் ஒழிவர்; அவை எல்லாம் அளக்கில் அறுபத்து ஐந்தாகும்.

கருதல் அளவையில் உறுப்புகளாக விளங்குகின்ற பக்கம், ஏது, உவமை என்ற மூன்றிலும் பிழை நேருமானால் அவை போலி எனப்படும். அவற்றின் வகைகளையும் பிறரோடு வாதிடும் போது தோல்விக்கு இடமான  தோல்வித் தானத்தின் வகைகளையும் இந்தப் பாடலில் பட்டியல் இட்டுக் காட்டுகிறார். பக்கப் போலி என்பது நான்கு வகைப்படும். ஏதுப்போலி மூன்று வகைப்பட்டு விரித்துச் சொல்லுங்கால் இருபத்து ஒன்று ஆகும். உவமை பற்றிய போலி இரண்டு வகைப்பட்டு, விரித்துக் கூறும் போது பதினெட்டு ஆகும். தருக்கமிடும் போது பேசத் தெரியாமை காரணமாக மயங்கப் பேசுவதும், பேசாது இருத்தலும் என்ற இரண்டும் தோல்வித்தானம் எனப்படும். இவற்றை விரித்து உரைக்கும் போது அது இருபத்திரண்டு ஆகும். ஆகவே இவை யாவும் கூட்டிப் போலிகள் அறுபத்து ஐந்து எனப்படும்.

வடமொழியில் மேலே கூறப்பட்ட போலிகள் மூன்றும் பட்சா பாசம், ஹேத்துவாபாசம், திருஷ்டாந்தாபாசம் என்று வழங்கும். தோல்வித்தானம் என்பது நிக்ரகஸ்தானம் என்று வழங்கும். ஆபாசம் என்பது போலி என்ற பொருளைத் தருவது.

அளவை இயலில் பிழைகள் நேர்ந்தால் அளந்து அறிவதிலும் பிழைகள் நேரிடும். ஆதலால் அவற்றை அறிந்து நீக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்பதை வலியுறுத்த ஆசிரியர் இப்பாடலை இங்கே அமைத்தார்.

இத்தகைய பிழைகளைப் பற்றிய விரிவான செய்திகள் சிவஞான சித்தியாருக்கு சிவாக்கிர யோகிகள் இயற்றிய உரையில் விரித்துக் கூறப் பட்டுள்ளன. (திருவாடுதுறை ஆதினப்பதிப்பு 1965) அவ்வாறே துத்துக்குடி திரு பொ. முத்தையா பிள்ளை அவர்கள் சிவஞான சித்தியாருக்கு எழுதிய பொழிப்புரையில் இவை விளக்கமாகச் சொல்லப்பட்டன. (முதற்பதிப்பு 1914)).

முதற் நூற்பா

21. ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உரைத்திடும் உலகம் எல்லாம்
வருமுறை வந்து நின்று போவதும் ஆதலாலே,
தருபவன் ஒருவன் வேண்டும்; தான் முதல் ஈறும் ஆகி,
மருவிடும் - அநாதி முத்த சித்து உரு மன்னி நின்றே.

ஒருவன் என்றும் ஒருத்தி என்றும்  ஒன்று என்றும் கூறப்படுகின்ற இவ்வுலகத்துப் பொருள்கள் யாவும் முறையே தோன்றி முறையே நிலைத்து முறையே அழிகின்றன. ஆதலால் இவ்வுலகம் முழுவதையும் தோற்றுவிக்கின்ற காக்கின்ற இறுதியில் ஒடுங்குகின்ற இறைவன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படுகிறான். அவன் தோற்றமும் ஈறும் இல்லாதவன். உலகத் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் மீளத் தோற்றுவிப்பதற்கும் அவனே முதல்வன் ஆவான். அத்தகையவன் அநாதி முத்த சித்துருவாக என்றும் நிலைபெற்றவன்.

சிவஞான போதம் முதல்நூற்பாவில் அவன் அவள் அது எனும் அவை என்று ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் குறித்தார். ஆயினும் அந்நூற்பாவின் முதல் அதிகரணத்தின் மேற்கோளாக ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் என்று விரித்துரைத்தார். அதனை அடியொற்றியே இந் நூலாசிரியரும் ஒருவனோடு ஒருத்தி என்று இப்பாடலைத் தொடங்குகிறார்.

வருமுறை வந்து நின்று போவதும் என்பதனை முறைப்படி வந்து, முறைப்படி நின்று, முறைப்படி போவது என்று கூட்டிப் பொருள் காண வேண்டும். எனவே உலகம் தோன்றுதலும், நிலை பெறுதலும், ஒடுங்குதலும் முறையாக நிகழ்கின்றன என்பது பெறப்படும்.

இறைவனை அநாதி முத்த சித்து உரு என்ற சொற்களால் ஆசிரியர் குறிப்பிட்டார். அநாதி என்றதனால் கால எல்லைக்கு அப்பாற் பட்டவன் என்பது உணர்த்தப்பட்டது. அநாதி முத்தன் என்றதனால் அவன் தோற்றமில் காலந்தொட்டே மலப் பிணிப்பு இல்லாதவன் என்பதும் உணர்த்தப்பட்டது. சித்து உரு என்ற சொற்கள் அவன் அறிவே வடிவானவன் என்பதை உணர்த்தின. தருபவன்  ஒருவன் வேண்டும் என்றதனால் உலகம் அனைத்திற்கும் ஒரு வினைமுதல் இன்றியமையாது வேண்டப்படும் என்பதைக் குறிப்பிட்டார். மருவிடும் என்பதனை மீளவும் மருவுவிக்கும் அதாவது தோன்றச் செய்யும் என்று பொருள் காணவேண்டும்.

இவ்வாறு முதல் நூலாகிய சிவஞான போதத்தில் முதல் நூற்பாக் கருத்தை இப்பாடலில் தொகுத்துக் கூறிய ஆசிரியர் இதனை அடுத்து வரும் பாடல்களில் அந்நூற்பாவின் மூன்று கூறுகளையும் முறையே விரித்துக் கூறுகிறார்.

22. உதிப்பதும்ஈறும் உண்டென்று உரைப்பது இங்கு என்னை ? முன்னோர்
மதித்துஉலகு அநாதி யாக மன்னியது என்பர்- என்னின்,
இதற்குயான் அனுமா னாதி எடேன்; இப்பூ தாதி எல்லாம்
விதிப்படி தோற்றி மாயக் காணலான், மேதி னிக்கே.

இந்தஉலகம் தோற்றமும் அழிவும் உடையது என்று எப்படிக் கூற முடியும்? உலகம் தோன்றியதைக் கண்டார் இல்லை. அது போலவே உலகம் முற்றிலும் அழிந்ததையும் கண்டார் இல்லை. காட்சி அளவைக்குப் புலப்படாதவை எல்லாம் ஏற்றுக் கொள்ளத் தக்கன அல்ல என்பர் முன்னோர். ஆதலால் இவ்வுலகம் என்றும் நிலைபெற்று விளங்குவது என்றும் கூறுவர் என்று உலகாயதர்கள் மறுத்தல் கூடும். இக்கொள்கையை மறுத்தற்குக் கருதல் முதலிய அளவைகளை  மேற்கொள்ள வேண்டியதில்லை. உலகத்தில் உள்ள பொருள்கள் யாவும் பூதங்களின் கூட்டால் விளைந்தன. அவற்றுள் ஒவ்வொன்றும் இறைவனின் ஆணையின்படி தோன்றியும் நின்றும் அழிந்தும் வருதலைக் காட்சி அளவையினாலேயே கண்டு உணர முடியும். எனவே இதன் தொகை யாகிய உலகமும் தோன்றி நின்று அழியும் தன்மை உடையது என்று காட்சி அளவையினாலே பெறப்படும்;

 23. இயல்புகாண் தோற்றி மாய்கை என்றிடில், இயல்பி னுக்குச்
செயலது இன்று; இயல்பு செய்தி செய்தியேல், இயல்பது இன்றாம்,
இயல்பதாம், பூதம் தானே; இயற்றிடும் செய்தி என்னில்,
செயல்செய்வான் ஒருவன் வேண்டும்; செயல்படும், அசேத னத்தால்.

உலகாயதர் உலகைத் தோற்றுவிப்பதற்கு ஓர் இறைவன் வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தோன்றுவதும் அழிவதும் உலகத்தின் இயல்பு எனவே இவற்றை நடத்துவதற்கு இறைவன் ஒருவன் வேண்டுவதில்லை என்பர். இயல்பு என்பது தன்மை. தோன்றுவது ஒரு தன்மை. அழிவது என்பது மற்றொரு தன்மை. இந்த இரு வேறுபட்ட செயல்கள் ஒரு பொருளுக்கு இயல்பு என்று கூற இயலாது. அவ்வாறு அன்று  இவ்வாறு வேறுபட்ட செயல்களே உலகத்துக்கு இயல்பு என்று அவர்கள் மறுத்தல் கூடும். அப்படியானால் உலகத்துக்கு இயல்பு என்பதே ஒன்று இல்லாமல் இரு வேறுபட்ட செயல்களே உள்ள என்று முடியம். அதனாலேயே அவர் கொள்கை மறுக்கப்பட்டது. இதற்கு மாறாக இவ்வுலகம் நான்கு பூதங்களின் கூட்டம். அவையே கூடியும் பிரிந்தும் இவ்வுலகத்தைத் தோற்றுவித்தும் அழிவித்தும் வருகின்றன என்று ஒரு சாரார் கூறக் கூடும். நாற்பூதங்களும் தோன்றி அழிவனவாகவும் அறிவற்றவனாகவும் உள்ளதால் அவற்றைச் செயல்படுத்துவதற்கு ஓர் இறைவன் அவற்றினும் வேறாக வேண்டும். அவனால் அறிவற்ற பொருள்கள் செயல்படுகின்றன என்பதும் உணரப்படும்.

24. நிலம், புனல், அனல், கால் காண நிறுத்திடும், அழிக்கும் ஆக்கும்,
பலம்தரும்; ஒருவன் இங்குப் பண்ணிட வேண்டா என்னின்-
இலங்கிய தோற்றம் நிற்றல் ஈறு, இவைஇசைத லாலே,
நலம் கிளர், தோற்றம் நாசம் தனக்குஇலா, நாதன் வேண்டும்.

உலகாயதர்களின் கருத்துப்படி நிலம், நீர், நெருப்பு, காற்று என்று நான்கு பூதங்களே உள்ளன. அவையே தம்முட் கூடி உலகமாகத் தோன்றி நின்று அழிகின்றன. இவற்றைக் கண் கூடாகக் காண முடிகிறது. இதற்கெனத் தனி ஒரு இறைவன் வேண்டுவதில்லை என்பர் அவர். இந்த நான்கு பூதங்களும் தனித்தனியே தோன்றி நின்று அழிவ தாகிய முத்தொழில்களுக்கும் உட்படுகின்றன. ஆதலால் இவை நான்கும் கூடிமற்றைப் பொருள்களைச் செயல்படுத்தும் என்பது பொருந்தாது. இவற்றைச் செயல்படுத்தும் தலைவன், தனக்கு ஒரு தோற்றமும் அழிவும் இல்லாத மேம்பாட்டினை உடையனவாக இருத்தல் வேண்டும் என்பது பெறப்படும்.

25. சார்பினில் தோன்றும் எல்லாம்; தருபவன் இல்லை என்னில்
தேரின்; இல் லதற்கோ தோற்றம், உள்ளதற் கோ? நீ செப்பாய்
ஓரின், இல் லதுவும் தோன்றாது; உள்ளதேல் உதிக்க வேண்டா;
சோர்விலாது இரண்டும் இன்றி நிற்பது தோன்றும் அன்றே.

எல்லாப் பொருள்களும் கணந்தோறும் தோன்றிக் கணந்தோறும் அழியும். ஆனாலும் அவை நிலைத்து இருப்பன போல நமக்குத் தோன்றுகின்றன. எனவே முந்திய கணத்தினில் தோன்றிய பொருள் அடுத்த கணத்தில் தோன்றிய பொருளுக்குச் சார்பாக விளங்குகிறது என்று சிலர் வாதிடுவர். ஆகையினால் இந்த உலகத்தைத் தோற்று வித்தவன் ஒருவன் இல்லை என்று சிலர் வாதிடுவர். அவ்வாறாயின் இல்லாத பொருள் தோன்றுகின்றதா, உள்ள பொருள் தோன்றுகின்றதா என்று கூறுக. ஆராய்ந்து பார்க்கின் இல்லாத பொருள் தோன்றாது உள்ள பொருள் எனில் அது தோன்ற வேண்டுவதில்லை. இவ்விரண்டும் அன்றி உள்ள பொருளாய் கண்ணிற்குப் புலப்படாது இருந்த ஒன்றே காரியப்பட்டுத் தோன்றுவதாகும்.

இந்தப் பாடல் உட்பட மூன்று பாடல்கள் மாத்தியமிகர் சமணர் சவுத்திராந்திகர் ஆகிய மூவரின் கொள்கையை மறுப்பதாக அமைந்தன. சவுத்திராந்திகர் பொருள்கள் கணம் தோறும் தோன்றிக் கணம் தோறும் அழியும் இயல்பினை உடையன என்ற கொள்கையை ஏற்பவர்கள். இது கணபங்க வாதம் என்று கூறப்படும். பொருள்கள் தோன்றி அழியும் போது முந்தியகணத்தில் தோன்றியது பிந்திய கணத்தில் தோன்றுவதற்குச் சார்பாக இருக்கும் என்பதும் இவர்கள் கொள்கை. இல்லாத பொருளே தோன்றும் என்பதும் இவர்கள் கருத்து, இக்கருத்தின் அடிப்படையில் உலகத்தைத் தோற்றுவிக்கும் இறைவன் ஒருவன் வேண்டா என்பது இவர்கள் வாதமாகும்.

உள்ள பொருளே தோன்றும் இல்லாத பொருள் தோன்றாது என்ற கொள்கை சற்காரிய வாதம் எனப்படும். இதன்படி காரணத்தில் நுட்பமாக இருந்த  ஒன்று காரியத்தில் வெளிப்பட்டுத் தோன்றுவதே தோற்றம் ஆகும். சவுத்திராந்திகர்கள் சற்காரிய வாதத்தை ஏற்றுக் கொள்வதில்லை. சைவ சித்தாந்தம் சற்காரிய வாதத்தை ஏற்றுக் கொள்ளும்.

 26. உள்ளதும் இலதும் இன்றி நின்றது ஒன்று உளதேல், உண்டாம்;
இல்லதேல் இல்லை ஆகும்; தோற்றமும் இசையாதாகும்;
உள்ளகாரணத்தில் உண்டாம் காரியம் உதிக்கும்; மண்ணில்
இல்லதாம் படம் கடாதி எழில்தரும் - இயற்றுவானால்;

உள்ளதும் இன்றி இல்லாததும் இன்றி இன்னது என்று வரையறுத்துக் கூறமுடியாத ஒரு பொருளே தோன்றும் என்று பவுத்தருள் மற்றொரு சாரார் கூறுவர். அப்படி ஒரு பொருள் உலகத்தில் உண்டோ? உண்டு எனில் அதனை உள் பொருளாகவே கொள்ளுதல் வேண்டும். இல்லை என்று விடையிறுத்தால் அது இல்லாமலே ஒழியும் என்பதன்றி அதற்குத் தோற்றம் உண்டு என்று கூறுதல் இயலாதாகும். ஒழிபு அளவையின் அடிப்படையில் இதனைக் கருதிப் பார்த்தால் உள்ளதாகிய ஒரு பொருளே காரணத்தில் இருந்து காரியப்பட்டு ஓர் இறைவனால் தோற்றுவிக்கப்படும் என்பது புலனாகும். மண்ணில் இருந்து ஆடை தோன்றுவது இல்லை. ஆனால் மண்ணில் இருந்து குடம், பானை போன்ற பொருள்கள் வினை முதல்வனாகிய குயவனால் அழகுறத் தோன்றுவனவாகும்.

சற்காரிய வாதத்தை வலியுறுத்தி, உள்ள பொருளில் இருந்தே உளதாகிய மற்றொரு பொருள் வினைமுதலாகிய ஒருவனால் இயற்றப்படும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டது. பட்டம்- ஆடை. மண்ணிலிருந்து ஆடை தோன்றுவதில்லை. மண்ணிலிருந்து குடம் முதலிய பொருள்கள் இயற்றுவோனால் எழில் பெறத் தோன்றும் என்று பொருள் காண்க.

27. ஒரு பொருள், ஒருவன் இன்றி உளது இலது ஆகும் ஏன்னில்,
தருபொருள் உண்டேல் இன்றாம் தன்மை இன்று; இன்றேல் உண்டாய்
வருதல் இன்று; இலது காரியம், முதல் உளதாகும், என்னில்,
கருதுகா ரியமும் உண்டாய், தோற்றமும் கருத்தா வால்ஆம்.

பொருள் என்பது அதனைத் தருபவன் ஒருவன் இல்லாமல் தானே தோன்றித் தானே அழியும் எனக் கொண்டால் என்ன என்று சமணர்கள் வினவுவர். ஏனெனில் சமணர் ஒரு பொருளைப் பற்றிக் கூறும்போது அது உள்ளதுமாம் இல்லதுமாம் என்று கூறும் கொள்கை உடையவர். இவ்வாறு இரண்டு தன்மை ஒரு பொருளுக்குக் கூற இயலாது. அது உள்பொருளாயின் அதற்கு இல்லையாம் தன்மை இல்லை. ஒரு பொருள் இல்பொருளாயின் அது உள்ளதாய் தோன்றுதல் இல்லை. அவ்வாறு அன்று ஒரு பொருள் காரணவடிவாய் உண்டு காரிய வடிவாய் இல்லை என்பதுதான் எங்கள் கருத்து என்று அவர்கள் மறுமொழி கூறக்கூடும். காரணப் பொருளிலேயே காரியமும் நுட்பமாய் அடங்கி நிற்கும். பின்னர் அதுவே வினை முதலாகிய கருத்தாவால் பருப்பொருளாய் வெளிப்பட்டுத் தோன்றும். எனவே தருபவன் ஒருவன் வேண்டும் என்பது பெறப்படும்.

28. காயத்தின் அழிவு தோற்றம் கண்டனம்; உலகில் காணாம்;
நீ இத்தை உரைத்த வாறு இங்கு என்? எனின், நிகழ்த்தும் - உண்மை
மாயத்த உலகம் பூநீர் தீவளி வானம் ஆதி
ஆய இத்தான் ஒன்றின் ஒன்று தோன்றி நின்று அழிதலாலே,

உடம்புகள் தோன்றுவதையும், அழிவதையும் நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் உலகம் முழுவதும் தோன்றுவதையும் முழுவதும் அழிவதையும் ஒருவரும் கண்டதில்லை. அப்படி இருக்க உலகம் முழுவதும் ஒருசேரத் தோன்றும் என்றும், ஒரு சேர அழியும் என்றும் எப்படிக் கூறலாகும் என்று சிலர் வினவுவர். இப்படித் தோன்றி அழிவனவாகிய பொருள்களும் உலகமும் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகிய இவை யாவும் கலந்த மயக்கத்தால் தோன்றியனவே. அவை ஒன்றில் ஒன்று தோன்றிச் சில காலம் நின்று அதன் பின்னர் அழிவது தனித்தனிப் பொருளுக்குப் பொருந்துவது போலவே இவ்வுலகம் முழுவதற்கும் பொருந்தும்.

உடல் முதலியனவே தோன்றி நின்று அழிவன உலகம் முற்றும் தோற்றக் கேடுகளுக்கு உட்படாது என்பது மீமாஞ்சகர்களுடைய கொள்கை. அவர்களை மறுக்கவே ஆசிரியர் இப்பாடலை அருளினார். மாயத்த உலகம் என்பதனால் தோன்றி அழியும் உலகம் என்பதை உணர்த்தினார்.

29.  ஓர்இடம் அழியப் பின்னும் ஓர்இடம் நிற்கும்; ஒக்கப்
பாரிடம் அழிவது இன்றாம் என்றிடில் பயில்வித்து எல்லாம்
கார் இடம் அதனில் காட்டும் அங்குரம்; கழியும் வேனில்;
சீர் உடைத்து உலகு காலம் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும்.

நிலம், மலை, கடல் என்று பலவகைப்பட்ட பகுப்புடைய இவ் உலகம் ஒரு பகுதியில் அழிவதையும் மற்றொரு பகுதியில் தோன்றுவதையும் கண்டதுண்டு. உலகம் முழுவதும் ஒரு சேர அழிவதில்லை. அப்படி அழிந்தாலும் அது மீண்டும் தோன்றும் என்று கூறுவதற்கு இடமில்லை என்று சிலர் வாதிடுவர். அவ்வாறன்று மழைக் காலத்தில் வித்துக்கள் எல்லாம் முளைவிட்டுப் பயிராக வளர்வதைக் காண்கிறோம். வேனிற்காலம் வந்தபோது அப்பயிர்கள் யாவும் ஒருங்கே வாடி அழிந்து போவதையும் காண்கிறோம். அது போலவே இவ்வுலகமும் கால எல்லைக்கு உட்பட்டு ஒரு சேரத்தோன்றி ஒருங்கே அழியும் என்பதையும் உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஐயம் எழுப்புபவர்கள் மீமாஞ்சகர்கள். அவர்களை இப்பாடலால் ஆசிரியர் மறுத்தார். பாரிடம் - உலகம். காரிடம் - கார் காலம். அங்குரம்- முளை.

30. காலமே கடவுளாகக் கண்டனம். தொழிலுக்கு என்னில்
காலமோ அறிவு இன்றாகும்; ஆயினும்; காரியங்கள்
காலமே தரவே காண்டும், காரணன் விதியினுக்குக்
காலமும் கடவுள் ஏவலால், துணைக் காரணம்காண்.

இவ்வுலகம் உரியகாலத்தில் தோன்றி உரிய காலத்தில் அழிகின்றது. ஆதலால் இவ்வுலகத்துக்குத் தோற்றத்தையும் அழிவையும் தரவல்ல கடவுள் காலமே ஆகும் என்று கொண்டால் என்ன என்று சிலர் வினா எழுப்புவர். அக்கொள்கை பொருந்தாது. ஏனெனில் காலம் என்பதும் அறிவற்ற சடப்பொருள். எனவே அது தானாகச் செயற்படும் ஆற்றல் அற்றது. ஆயினும் முற்றறிவு உடைய இறைவனது ஏவலின் வழியே எல்லாச் செயல்களையும் இயற்றுவதற்குக் காலம் துணைக்காரணமாக அமையும். அது நிமித்த காரணம் ஆகமாட்டாது.

இப்பாடலும் மீமாஞ்சகரை மறுப்பதற்கு எழுந்தது. இவ்வுலகத்தின் தோற்றத்திற்கு முற்றறிவு உடைய இறைவனே நிமித்த காரணன் ஆவான். காலம் என்ற அறிவற்ற பொருள் இறைவனுக்குத் துணைக்காரணம் ஆவதன்றி அதுவே வினைமுதல் ஆவதில்லை.

31. அழிந்தபின் அணுக்கள் தாமே, அகிலமாய் வந்து நின்று
கழிந்திடும், கன்மத்து, என்னில் கன்மமும் அணுவும் கூட
மொழிந்திடும் சடமே ஆகி முடிதலான், முடியா செய்தி;
ஒழிந்திடும், அணுரூபங்கள் உலகு எலாம் ஒடுங்கும் அன்றே.

இப்போது காணப்படுகிற இவ்வுலகம் அழியும்போது பரமாணுக்களாக ஒடுங்கும். உலகம் அழியமே தவிர பரமாணுக்கள் அழிவதில்லை. எனவே இப்பரமாணுக்கள் வினை காரணமாகத் தம்முட் கூடி மீண்டும் உலகமாகத் தோன்றும் என்று சிலர் கொள்ளுவர். இவர்கள் கொள்கையும் பொருத்த மற்றது. ஏனெனில் வினையும் அணுக்களும் அறிவற்றன. எனவே அவை தாமாகச் செயல்பட மாட்டா. மேலும் உலகம் அழியும் காலத்தில் நுண்ணியவாகிய வடிவுடைய அணுக்களும் ஒடுங்கும் என்பதே பொருந்தும். அவ்வணுக்கள் மீண்டும் கூடி உலகமாக வடிவு எடுக்கும் என்பது பொருந்தாது.

தார்க்கிகர், சவுத்திராந்திகர், வைபாடிகர், ஆசீவகர் ஆகியோர் உலகத்தின் தோற்றத்துக்குக் காரணம் பரமாணுக்களே என்ற கொள்கை உடையவர்கள். இப்பாடலில் ஆசிரியர் அவர்கள் கொள்கையை மறுத்தார்.

32. காரண அணுக்கள் கெட்டால் காரிய உலகு இன்று என்னில்,
காரணம் மாயை ஆகக் காரியம் காணலாகும்;
காரணம் மாயை என்னை? காண்பது இங்கு அணுவே? என்னில்,
காரணம் மாயை யேகாண் காரியம் அணுவில் கண்டால்,

உலகத்துக்குக் காரணம் அணுக்களே. எனவே அப்பரமாணுக்கள் அழியுமானால் காரியப் பெருளாகிய இவ்வுலகம் இல்லாமல் போகும் என்பார் சிலர். உலகிற்கு முதற்காரணமாவது பரமாணுக்கள் அல்ல மாயையே ஆகும். எனவே மாயையிலிருந்து உலகம் மீண்டும் காரியப் பட்டுத் தோன்றும் என்பதே சித்தாந்தம். இதனை மறுத்து இவ்வுலகில் பரமாணுக்களே முதற்காரணமாகக் காணப்படுவது அல்லாமல் மாயை அன்று என்று மறுப்பர். அணுக்களும் காரியப் பொருள்களே ஆதலால் அவற்றை உலகத்திற்கு முதற் காரணமாகக் கொள்ளுதல் இயலாது என்பதனை உணர்க.

செய்யுளின் இறுதியில் வருகின்ற கண்டால் என்ற சொல் காண்டலால் என்ற சொல்லின் திரிபு ஆகும்.

33.காரியம் என்பது என்னை, காரண அணுவை? என்னில்,
காரியம் அவயவத்தால் கண்டனம், கடாதி போல;
காரியம் உருவம் எல்லாம் அழிதரும் காரணத்தால்;
காரிய உறுப்பு இல்மாயை தரும் எனக் கருதிடாயே.

அணுக்கள் பலசேர்ந்து ஒரு பொருளாக வடிவம் கொள்ளுகின்றன. அவ்வாறு இருக்க உலகிற்கு முதற்காரணம் ஆகிய பரமாணுக்களைக் காரியப் பொருள் என்று எவ்வாறு கூறக் கூடும் என்று சிலர் கேட்பர். பல அணுக்கள் கூடி ஒரு பொருள் ஆகிறது என்று சொல்லும் போதே அணுக்களுக்கு உருவம் உண்டு என்பது புலப்படும். உருவம் உடைய அணுக்கள் உறுப்புக்களும் உடையவனே என்பதும் விளங்கும். ஆதலால் நீங்கள் கூறும் அணுக்களும் குடம் முதலிய பொருள்கள் போல உருவமும் உறுப்புக்களும் உடையனவே. உருவமும் அவயவப் பகுப்புமுடைய எல்லாப் பொருள்களும் அழியும் என்பதே நியதி. ஆதலின் அணுக்களும் அழிவனவே. எனவே உருவம் அற்றதும் அழிவில்லாத நித்தப் பொருளும் ஆகிய மாயையே உலகத்துக்கு முதற் காரணமாகும் என்று கருதி உணர்க.

அணு காரண வாதம் பேசுவோர் பல அணுக்கள்  கூடி ஒரு பொருள் தோன்றும் என்பர். இவ்வாறு அவை தம்முட் கூடுவது சையோகம் என்னும் சொல்லால் குறிக்கப்படும். சையோகம் - ஒன்றோடு ஒன்று சேர்தல். இவ்வாறு சேர்வதற்கு வடிவமும் உறுப்புக்களும் தேவை. எனவே அவை அழியும் என்று சொல்லப்பட்டது. இவை இரண்டும் அற்ற மாயை முதற் காரணம் எனப்பட்டது.

34. தோற்றமும் நிலையும் ஈறும் மாயையின் தொழிலது என்றே
சாற்றிடும், உலகம்; வித்துச் சாகாதி அணுக்களாக
ஏற்றதேல், ஈண்டு நிற்கும்; இல்லதேல், இயைவது இன்றாம்;
மாற்றம் நீ மறந்தாய்; இத்தால் மாயையை மதித்திடாயே.

தோற்றமும் இருப்பும் ஒடுக்கமும் ஆகிய முத்தொழில்களுமே மாயையின் செயல்பாடு என்று ஆன்றோர்கள் கூறுவர். மிகச் சிறிய வித்தின் உள்ளே இலை கிளை முதலிய மரத்தின் உறுப்புகள் யாவும் முன்பே நுட்பமாய் அமைந்திருந்தன. அதனால் தான் மரம் வளர்ந்து பெரிதான உடன் அவை பருமைநிலை அடைந்து கண்ணுக்குத் தோன்றுகின்றன. அவ்வாறு இல்லையேல் வித்திலிருந்து பெரியதாகிய மரம் ஒன்று தோன்றாது. இந்த உண்மையே நீ மறந்தனை. மேலோர் வழக்கும் உலக நடப்பும் ஆகிய இவற்றைக் கொண்டு மாயையே உலகத்துக்கு முதற் காரணம் என்பதனை அறிவாயாக.

சாகாதி- கிளை முதலியன.

35. மாயையின், உள்ள வஞ்சம், வருவது போவது ஆகும்;
நீ அது இங்கு இல்லை என்னில், நிகழ்ந்திடும், முயலின் கோடு
போய் உகும் இலைகள் எல்லாம் மரங்களின் புக்குப் போதின்
ஆயிடும், அதுவும்; என்னில், காரணம் கிடக்க ஆமே.

மாயையிலே நுட்பமான வடிவில் இவ்வுலகம் எல்லாம் ஒடுங்கி இருக்கிறது. அதன் பின்னர் இறைவன் திரு உள்ளக் குறிப்பினால் இவ்வுலகம் மாயையிலிருந்து பருவடிவோடு தோன்றும். இவ்வாறு தோன்றிய உலகம் மீண்டும் ஒடுங்கும். ஏனெனில் உள்ள பொருளே தோன்றும். இந்த முறைமை இல்லை எனின் முயலுக்குக் கொம்பு முளைக்கும் என்று கொள்ள நேரிடும். இதனை ஒத்துக் கொள்ளாதவர்கள் அப்படியானால் ஒரு மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் மீண்டும் அந்த மரத்திலேயே தானாக ஒடுங்கித் தோன்றுதல் வேண்டும் அல்லவா என்று வினா எழுப்புவர். மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் சருகுகளாகி மண்ணின் சாரமாய்க் கலந்து பின்னும் அம்மரத்தின் இலை தோன்றுவதற்குக் காரணமாகும் என்பது உண்மையே. ஆனால் அப்படித் தோன்றுவது உரிய காலம் முதலியன ஒருங்கு கூடிய போதே ஆகும்.

பாடலின் முதல் அடியில் உள்ள வஞ்சம் என்ற சொல் பிரபஞ்சம் என்பதன் திரிபு. பிரபஞ்சம் பிரபஞ்சமாகி வஞ்சம் என்று தலைக் குறைந்து நின்றது.

முயலுக்கு ஒரு போதும் கொம்பு இல்லை உலகறிந்த உண்மை. உள்ள பொருள் தோன்ற வேண்டியதில்லை. இல்லாத பொருளே தோன்றும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால் முயலுக்கும் ஒரு காலத்தில் கொம்பு முளைக்கும் என்று கூறுவதைப் போன்றது அது. எனவே உள்ளதே தோன்றும் இல்லாதது தோன்றாது என்ற சற்காரிய வாதமே ஏற்றுக் கொள்ளத் தக்கது என்று வலியுறுத்துகிறார்.

மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகள் ஒடுங்கித் தாமாகவே மீண்டும் அந்த மரத்தின் இலைகளாகத் தோன்றுமோ என்ற கேள்விக்கு ஆம் என்று விடையளிக்கிறார். உதிர்ந்த சருகுகள் மண்ணில் ஆற்றல் வடிவில் ஒடுங்கி உரிய காலத்தில் இலைகளாகத் தோன்றுதற்குரிய உரமாகிறது என்றார்.

36. கருதுகாரணம் உண்டாகக் காரியம் உள்ள தாகி
வருதலால், அநாதி வையம்; மற்றுஒரு கடவுள் இத்தைத்
தருதலால், ஆதியாகச் சாற்றல் ஆகும்; மாயைக்கு
ஒருவன் ஆர்என் இங்கு என்னில், உள்ளவாறு உரைப்ப, கேள் நீ,

இங்கே ஒரு ஐயம் பிறரால் எழுப்பப்படும். உள்ள பொருளே தோன்றும் என்ற சற்காரிய வாதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் உலகம் தோன்றி  நின்று அழியும் என்று கூறலாமா? உலகத்தை என்றும் உள்ள பொருள் என்றல்லவா கொள்ள வேண்டும் என்பது அந்த ஐயம். அதற்கு இப்பாடலில் விடை தருகிறார்.

காரணமாகிய ஒன்று உள் பொருளாக இருக்க அதிலிருந்து தோன்றும் காரியமும் உள் பொருளாகவே இருக்கும் என்பது முன்னோர் விளக்கப் பட்டது. ஆதலால் இவ்வுலகம் உள் பொருளேயாம். எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் இவ்வுலகத்தைத் தோற்றுவித்து ஒடுக்குவதால் நிலை வேறுபாடு பற்றி இவ்வுலகத்தை அழியும் பொருள் என்றும் கூறலாம்.

அழியும் பொருள் என்றும் கூறலாம் என்பதில் உள்ள உம்மை உலகம் நித்தப் பொருள் என்றே துணியப்படும் என்பதை உணர்த்திற்று.

இந்தப் பாடலில் மாயைக்கு ஒருவன் யார் என்று தொடங்குகின்ற பகுதிக்கு உரிய பொருள் இதனை அடுத்த பாடலோடு கூட்டிப் பொருள் உரைக்கப்படும்.

37. புத்திமற் காரியத்தால் பூதாதி புருடன் தானும்,
அத்தனு கரணம் பெற்றால், அறிதலால் அவற்றை மாயை
உய்த்திடும் அதனால் மாயைக்கு உணர்வு ஒன்றும் இல்லை என்றே
வைத்திடும் அதனால்- எல்லாம் வருவிப்பான் ஒருவன் வேண்டும்.

மாயைக்கு ஒருவன் யார் என் இங்கு என்னில் உள்ளவாறு உரைப்பக் கேள் நீ என்ற முன் பாடலின் இறுதிப் பகுதியை இங்கே சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.

மாயையையும் செயல்படுத்துபவனாகிய ஓர் இறைவன் ஏன் என்று கேட்பின் அதற்கு உரிய விடையை உள்ளபடி கூறுவேன் கேட்பாயக. பூதம் முதலிய இவ்வுலகம் அனைத்தும் அறிவுடைய ஒரு பொருளால் இயற்றப்படுவனவே ஆகும். உயிராகிய புருடனும் அறிவுடைப் பொருளே ஆயினும் முதலில் எதனையும் அறியாது இருந்து அதன் பின்னர் உடல் கருவி ஆகியவற்றைப் பெற்ற பிறகே அறிகின்ற தன்மை உடையவனாகிறான். உடல், கருவி முதலியனவும் மாயையை முதற்காரணமாகக் கொண்டே தோன்றுகின்றன. மாயையோ அறிவற்ற பொருள் என்றே கொள்ளப்படும் இவற்றின் அடிப்படையில் பார்த்தால் ஒழிபு அளவையினால் இவ்வனைத்திற்கும் வேறாய் மாயையிலிருந்து பூதம் முதலிய உலகப் பொருள் யாவற்றையும் தோற்றுவிக்கிற கடவுள் ஒருவர் வேண்டும் என்று அறியலாம்.

புத்திமற்காரியம்- அறிவோடு பொருந்திய செயல். இது வடசொல் முடிபு. மண்ணிலிருந்து குடத்தினைத் தோற்றுவிக்கிற அறிவினை உடைய வினைமுதல் ஒருவன் வேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்திற்று. பூதாதி அறிவற்றது. புருடன் என்னும் ஆன்மா உடல் கருவி இவற்றைப் பெற்ற பிறகே அறிகிறான். மாயையும் அறிவற்றது. இவை மூன்றுக்கும் வேறாக உலகத்தைத் தோற்றுவிக்கிற ஒரு கடவுள் உளன் என்று ஆசிரியர் நிறுவினார்.

38. காரியகாரணங்கள் முதல் துணை நிமித்தம். கண்டாம்-
பாரின்மண் திரிகை பண்ணு மவன் முதல் துணை நிமித்தம்;
தேரின் மண் மாயை ஆக திரிகைதன் சத்தி ஆக
ஆரியன் குலால னாய் நின்று ஆக்குவன்- அகிலம் எல்லாம்.

ஒரு பொருள் தோன்றுவதற்கு மூன்று காரணங்கள் வேண்டும். அவற்றை முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்பர். சான்றாக ஒருகுடம் வனையப்படுவதற்கு முதற்காரணம் மண். அதனை வனைவதற்கு உதவியாக இருக்கிற சக்கரம் போன்றன துணைக்காரணம். குடத்தை வனைபவனாகிய குயவன் நிமித்த காரணன். தேர்ந்து பார்த்தால் இவ்வுலகம் முதலிய எல்லாப் பொருள்களையும் தோற்றுவிப்பதற்கு உரிய முதற்காரணம் மாயை ஆகும். எனவே அது மண் போன்றது. இறைவனுடைய சத்தி, சக்கரத்தைப் போன்று துணைக் காரணம் ஆகும். சிவபெருமான் குயவனைப் போன்று நிமித்த காரணன் ஆவான்.

திரிகை- சக்கரம். ஆரியன்- இங்குச் சிவபெருமான். குலாலன்- குயவன்.

39. விந்துவின் மாயை ஆகி, மாயையின் அவ்வியத்தம்
வந்திடும்; விந்துத் தன்பால் வைகரி ஆதி மாயை,
முந்திடும் அராகம் ஆதி; முக்குணம் ஆதி மூலம்;
தந்திடும், சிவன வன்தன் சந்நிதி தன்னில் நின்றே.

முதற்காரணம் என்று கூறப்பட்ட மாயை தூய மாயை என்றும் தூவாமாயை என்றும் இரண்டு வகைப்படும். தூய மாயையிலிருந்து தூவா மாயை தோன்றும். அதிலிருந்து பிரகிருதி மாயை தோன்றும். தூயமாயையிலிருந்து வைகரி முதலிய நான்கு வகைப்பட்டவாக்குகளும் தோன்றும். தூவாமாயையிலிருந்து அராகம் முதலிய தத்துவங்கள் ஐந்தும் தோன்றும். அதன்பின் தோன்றும் பிரகிருதி மாயையிலிருந்து குணதத்துவம் முதலாகக் கூறப்பட்ட இருபத்து நான்கு தத்துவங்களும் தோன்றும். இவை இறைவனுடைய திரு உள்ளக் குறிப்பின் படியே அவனுடைய அருட் சத்தியின் முன்னிலையில் தோன்றுவனவாகும்.

மாயை ஒன்றே தூய மாயை, தூவா மாயை என்று இரண்டு வேறு பெயர்களைப் பெறும். குன்றிமணியின் ஒரு பகுதி சிவப்பு நிறம் உடையதாகவும் மற்றொரு பகுதி கருமை நிறம் உடையதாகவும் இருப்பதைப் போல இவ்வேறுபாடு என்பர். இருவகை மாயையும் வேறுவேறு. தூய மாயையிலிருந்து தோன்றியதே தூவா மாயை என்று கொள்வாரும் உளர்.

விந்து என்பது தூயமாயை ஆகிய சுத்த மாயையைக் குறிக்கும். ஆணவ மலத்தோடும் கன்மங்களோடும் விரவாமல் நிற்பதால் இது சுத்த மாயை எனப்படும்.

அசுத்தமாயை என்பது மல கன்மங்களோடு விரவி இருப்பது ஆகும். இதுவே தூவாமாயை எனப்பட்டது. இதனை அதோமாயை என்றும் கூறுவர். இதிலிருந்து பருப்பொருளாய்த் தோன்றுவது பிருகிருதி மாயை என்பர். மான் என்றும் இது வழங்கப்படும்.

இவ்வாறு முதற்காரணமாகிய மாயை மூன்று வகைப்பட்டது. இவ்வாறு தோன்றும் முறைமை பின்னர் விரித்துக் கூறப்படும்.

40. வைகரி செவியில் கேட்ப தாய், அத்த வசனம் ஆகி,
மெய்தரும்; உதான வாயு மேவிட விளைந்த வன்னம்,
பொய்யற அடைவு உடைத்தாய், புந்திகா ரணமது ஆகி,
ஐயம் இல் பிராண வாயு அடைந்துஎழுந்து, அடைவு உடைத்தாம்.

முந்திய பாடலில் கூறப்பட்ட நான்கு வகை வாக்குகளில் வைகரி எனப்படுவது சொல்லுவோன் செவிக்கும் கேட்போன் செவிக்கும் கேட்பதாய் இருக்கும். பொருளை உணர்த்தும் சொல்லாக விளங்கும். சொல்லுபவனும் கேட்பவனும் அறிவு விளக்கம் பெறுவதற்குக் காரணமாக இருக்கும். உடம்பிலே தோன்றுகின்ற உதானன் எனும் காற்று உந்தி எழுவதால் இது தோன்றும். நுட்பமாகப் பிரிந்து பல வøயாகத் தோன்றுகின்ற எழுத்துக்களை உடையதாகும். இது உயிர்க்காற்றால் மேல் எழுந்து பொய்மை இலாமல் புறத்தே ஒலிவடிவாக வருகின்ற இயல்பினை உடையதாகும்.

அத்தம்- பொருள். பொய்யற்ற- திரிபின்றி. அடைவு- முறைமை நால்வகை வாக்குகளும் பற்றிக் கூறத் தொடங்குகிற ஆசிரியர் முதலில் பருமையான வைகரி வாக்கைக் குறிப்பிட்டது ஒடுக்க முறைமை பற்றி என்கிறார் சிவஞான முனிவர். தோற்ற முறைமை பற்றிக் கூறினால் முதலில் சூக்குமை வாக்கைப் பற்றி ஆசிரியர் கூறியிருப்பார். வைகரி என்ற சொல் விகாரப்பட்டு அதாவது வேற்றுமைப்பட்டுத் தோன்றும் வாக்கு என்ற பொருளைத் தரும்.

41. உள்உணர் ஓசை ஆகி, செவியினில் உறுதல் செய்யாது-
ஒள்ளிய பிராண வாயு விருத்தியை உடையது அன்றி,
தெள்ளிய அக்கரங்கள் சிந்திடும் செயலது இன்றி-
மெள்ளவே எழுவது, ஆகும் மத்திமை, வேற தாயே.

மத்திமை வாக்கு என்பது செவியில் கேட்கப்படாததாய் மெல்லிய ஒலி உடையதாக சொல்லுபவருடைய கழுத்தில் விளங்குவதாக அவர் தனக்குள்ளே உணர்கின்ற ஓசையாகும். உயிர்க் காற்றின் தொழிற்பாடு இல்லாமல் உதானன் என்னும் காற்றின் தொழிற்பாடு மட்டிலுமே உடையது. ஆகையினால் எழுத்துக்கள் நுட்பமாகத் தோன்றிடும் எனவே பல், நா, இதழ் முதலிய உறுப்புகளில் பட்டு வெளியிலே தோன்றாத இயல்புடையது இம் மத்திமை என்னும் வாக்கு.

பாடலின் இறுதி அடியில் வேறதாய் என்று கூறியது இதற்கு முன் கூறப்பட்ட வைகரி வாக்குக்கும் இதன் பின் ஆசிரியர் கூற இருக்கிற பைசந்தி வாக்கிற்கும் வேறாக என்ற பொருளைத் தரும்.

42. வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறு விபாகம் ஆகி,
தோற்றுதல் அடைவு ஒடுக்கி, சொயம்பிர காசம் ஆகி,-
சாற்றிய மயிலின் அண்டம் தரித்திடும் சலமே போன்று- அங்கு
ஆற்றவே உடையதாகி, பைசந்தி, அமர்ந்து நிற்கும்.

பைசந்தி வாக்கு எனப்படுவது மயிலின் முட்டையை ஒத்தது என்று உவமை கூறப்படும். மயிலின் நிறங்கள் யாவும் மயில் முட்டையில் உள்ள நீரில் அடங்கி இருக்கின்றன. எனினும் அவை தனித்தனி தோன்றாமல் ஒடுங்கி உள்ளன. அது போலவே பல வகைப்பட்ட எழுத்துக்களும் பிரிந்து தோன்றுவதற்கு மத்திமையே காரணம் ஆயினும் அவை சிறிதும் தெரியாதவாறு தன்னுள் அடக்கிக் கொண்டு சிந்தையின் நிற்றலும் நிருவிகற்ப உணர்வுக்குக் காரணமாக நிற்றலும் ஆகிய இரண்டு இயல்புகளையும் உடையதாகி விளங்கும். வன்னம், - எழுத்து, நிறம் என்று இரு பொருள் பட நின்றது.

விபாகம் - பிரிவு, சுயம்பிரகாசம்- தானாக ஒளியுடையதாதல்.

43. சூக்கும வாக்கது உள்ஓர் சோதியாய், அழிவது இன்றி,
ஆக்கிடும், அதிகாரத்திற்கு அழிவினை, தன்னைக் கண்டால்,
நீக்கம் இல் அறிவு, ஆனந்தம், முதன்மை, நித் தியம்உடைத்தாய்,
போக்கொடு வரவு இளைப்பும் விகாரமும் புருடன் இன்று; ஆம்.

சூக்கும வாக்கு என்பது மூவகை உடம்பினுக்குள்ளே சொல்லுவதற்கு அரிய அறிவு வடிவாய் விளங்குவது, இதற்கு முன் கூறப்பட்ட வைகரி, மத்திமை, பைசந்தி என்பனவற்றைப் போல் தோன்றுதலும் ஒடுங்குதலும் இல்லாதது. அதனால் சூக்குமை நிலைபேறு உடையது. மற்றைய மூன்று வாக்குகளையும் இதுவே தோற்றுவிக்கும். சூக்குமை வாக்கை உள்ளபடி உணர்ந்தவனுக்கு நீங்காத பேரறிவும், ஆனந்தமும், விடுதலையும் நிலைபேறும் தரவல்லது. இறப்பும் பிறப்பும் அதனால் வரும் இளைப்பும் வேறுபாடுகளும் இல்லாமல் ஆக்கும் இயல்பு உடையது.

சூக்கும வாக்கு பரசரீரம் எனப்பட்ட காரண உடம்பு, கஞ்சுக உடம்பு, பூதஉடம்பு இவற்றினுக்குள்ளே நாத மாத்திரையாக விளங்குவதனால் அது சுத்தமாயா வடிவமாக நிலைபெறும் எனப்பட்டது.

44. நிகழ்ந்திடும் வாக்கு நான்கும் நிவிர்த்தாதி கலையைப் பற்றித்
திகழ்ந்திடும் அஞ்ச தாக; செயல்பரி ணாமம் அன்று
புகழ்ந்திடும் விருத்தி ஆகும் படம்குடில் ஆனால் போல;
மகிழ்ந்திடும் பிரமம்; அன்று மாமாயை என்பர் நல்லோர்.

இவ்வாறு கூறப்பட்ட நான்கு வாக்குகளும் நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளையும் பற்றுக்கோடாகக் கொண்டு ஐந்தாக விளங்கும். இவை சிவ தத்துவம் முதலிய ஐந்து தத்துவங்களில் இருக்கும். சூக்குமை ஒன்றே ஐந்து வகைப்படுவது, விருத்தி என்ற காரியப்பாடே அன்றிப் பரிணாமம் என்ற வகையில் அடங்குவன அல்ல. விருத்தி என்ற காரியப் பாட்டிற்கு எடுத்துக் காட்டு துணியே கூடாரமானது போல என்பதாகும். சத்தப் பிரமவாதிகள் இதனையே பிரமம் என்பர். சைவசித்தாந்தத்தின் படி தூய மாயையின் வடிவு எனப்படும்.

ஒரு பொருள் மற்றொரு பொருளாகக் காரியப் பட்டுத் தோன்றும் போது அநத மாற்றம் பல பெயர்களைப் பெறும். இவற்றுள் சமுதாயம் ஆரம்பம், விவர்த்தனம் என்பன. சைவ சித்தாந்தத்தில் ஏற்கப்படுவன அல்ல. சைவசித்தாந்தத்தில் ஏற்கப்படும் காரியப்பாடுகள் பரிணாமம், விருத்தி என்ற இரண்டே ஆகும். பரிணாமம் என்பது ஒன்று திரிந்து மற்றொன்றாக மாறுவதைக் குறிக்கும். அதுவும் இரண்டு வகைப்படும். ஒன்று முழுவதும் பரிணாமப்படுதல் எனவும் மற்றொன்று ஒரு பகுதியே பரிணாமப்படுதல் எனவும் கொள்ளப்பெறும். பால் தயிராக உறைவது முற்றிலும் பரிணாமப்படுதலுக்கு எடுத்துக் காட்டு நெய்யில் புழு தோன்றுவது ஒரு பகுதி பரிணாமப்படுவதற்கு எடுத்துக்காட்டு. சுத்தமாயையின் காரியம் விருத்தி எனப்படும். அசுத்த மாயையின் காரியம் பரிணாமம் எனப்படும்.

ஐந்து கலைகள் என்பன பருமையிலிருந்து நுட்பத்தை நோக்கிவரிசைப் படுத்திக் கூறும் போது நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை எனப்படும். ஐந்து கலைகளில் உள்ள உலகங்கட்கும் வாக்குகள் முறையே வைகரி மத்திமை பைசந்தி சூக்குமை அதிசூக்குமை என்பனவாகும்.

பாடலின் இறுதி அடியில் சத்தப்பிரம வாதிகளின் கொள்கையை ஆசிரியர் மறுத்தார். அவர்களின் கொள்கைப்படி வாக்குகளே பிரமம் எனப்படும். நல்லோர் ஆகிய சைவ சித்தாந்திகள் அவற்றைப் பிரமம் என்று கொள்ளுவதில்லை. இவை சுத்த மாயாவடிவம் என்றே கொள்ளப்படும்.

45. வித்தைகள் வித்தையீசர் சதாசிவர் என்று இவர்க்கு
வைத்துறும் பதங்கள், வன்னம், புவனங்கள், மந்தி ரங்கள்
தத்துவம், சரீரம் போகம், கரணங்கள் தாம் எலாமும்
உய்த்திடும், வைந்த வம்தான், உபாதானமாகி நின்றே,

மேலே கூறப்பட்ட வாக்குகளுக்கு மட்டிலுமே அல்லாமல் வைந் தவம் எனப்படும் தூயமாயை, மந்திரேசுரர் மந்திரமயேசுரர் அணு சதாசிவர் ஆகிய இவர்களுக்கு வேண்டப்படும் அத்துவாக்களுக்கும் முதற்காரணமாக இருந்தே செலுத்தும் அத்துவாக்கள் என்பன எழுத்துக்களும் பதங்களும், மந்திரங்களும், தத்துவங்களும், புவனங்களும், உடல் நுகர்வு கரணங்கள் ஆகியவையும் என்க.

வித்தைகள் என்றது மந்திரேசுரரை, அவர்கள் சுத்தவித்தியா தத்துவத்தில் இருப்பவர். வித்தை ஈசர் என்பது மந்திரமயேசுரரை, அவர்கள் அநந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர். ஏகஉருத்திரர், திரிமூர்த்தர், சீகண்டர், சிகண்டி என்னும் எண்மர் ஆவர். இவர்கள் யாவரும் ஈசுர தத்துவத்தில் வாழ்பவர் என்பர்.

சதாசிவர் என்றது இங்கே அணுசதாசிவரைக் குறித்தது. அவர்கள் பிரணவர், சாதாக்கியர், தீர்த்தர், காரணர், சுசீலர், ஈசர், சூக்குமர், காலர், தேகேசுரர், அம்பு என்னும் பதின்மர் ஆவர். இவர்கள் சாதாக்கிய தத்துவத்தில் வாழ்ந்து சதாசிவ மூர்த்தியை வழிபடுவோர் ஆவர்.

மந்திரேசுரர் மந்திரமயேசுரர் அணுசதாசிவர் ஆகிய இவர்களுக்கு வேண்டிய பதம், வன்னம், புவனம் தத்துவம், உடல், நுகர் பொருள்கள், கருவிகள் ஆகிய அத்துவாக்கள் யாவற்றுக்கும் தூய மாயையே முதற் காரணம் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது.

46. மூவகை அணுக்க ளுக்கும் முறைமையில் விந்து ஞானம்
மேவினது இல்லை ஆகில், விளங்கிய ஞானம் இன்றாம்;
ஓவிட விந்து ஞானம், உதிப்பதுஓர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்தன் சேவடி சேரலாமே.

மேலே கூறப்பட்ட வாக்குகள் யாவும் மந்திரேசுரர் மந்திரமயேசுரர் அணுசதாசிவர் ஆகியோருக்கு மட்டும் அல்லாமல் மூன்று வகை உயிர்களுக்கும் முறையாகப் பொருந்தவில்லையாயின் அவர்களுக்கு விளங்கிய ஞானம் இல்லையாகும். ஆதலால் அனைவருக்கும் வாக்குகளின் துணை இன்றியமையாது வேண்டப்படும். ஏனெனில் வாக்குகளின் துணை இன்றியமையாது வேண்டப்படும். ஏனெனில் வாக்குகளின் துணையைக் கொண்வே சவிகற்ப ஞானம் தோன்றும். இவ்வாக்குகள் தன்னிலும் வேறாக ஒருவரால் காணப்பட்டு நீங்கும் எனில் அந்நிலையில் அவனுக்கு மெய்யுணர்வு தோன்றும். அவன் விடைக் கொடியை உயர்த்திய சிவ பெருமானது திருவடியைச் சென்று சேர்வான்.

அணுக்கள்- உயிர்கள், மூவகை அணுக்கள் என்றது விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர் என்பவர்களே ஆகும். இவர்கள் முறையே ஒரு மலம் உடையார், இருமலம் உடையார், மும்மலம் உடையார் எனப்படுவர். வாக்குகள் வழியாக வரும் அறிவு உலகத்துப்பொருள்களை அறிவதற்கே துணையாக இருக்கும்  என்பதும், அதனை நீங்கிய அறிவு பேரின்பத்தை நல்கி இறைவன் திருவடியில் சேர்க்கும் என்பதும் இப்பாடலால் உணர்த்தப்பட்டன. திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் இறைவனை வாக்கிறந்த பூரணமாய் என்று கூறியதை இங்கே நினைவுகூர்க.

47. அருவினில் உருவம் தோன்றி அங்காங்கி பாவம் ஆகி,
உருவினில் உருவமாயே உதித்திடும்; உலகம் எல்லாம்,
பெருகிடும் சுருங்கும்; பேதா பேதமோடு அபேதம் ஆகும்;
ஒருவனே எல்லாம் ஆகி அல்லவாய் உடனும் ஆவன்.

யாவற்றினும் நுண்ணியதாகிய மாயையிலிருந்து கலை முதலிய தத்துவங்கள் தோன்றும். அதன் பின்னர் அவற்றினும் பருமை உடைய மூலப்பகுதியும் அதனினும் பருமையாகிய குணதத்துவமும் தோன்றும். இவ்வாறு நுட்பத்திலிருந்து பருமை நோக்கியே எல்லாப் பொருள்களும் தோன்றி ஐம்பூதங்களகவும் ஆண் பெண் முதலிய உயிர்க் கூட்டங்களாகவும் வளர்ந்தும் தேய்ந்தும் வரும். இவையாவும் பரிணாமப்பட்டுத் தோன்றுவதால் ஒரு வகையில் வேற்றுமையும் மற்றொரு வகையில் வேற்றுமை இன்றியும் விளங்கும். உள்ளதே தோன்றும் என்ற முறையில் வேற்றுமை இன்றியே தோன்றும். இவை யாவும் இறைவன் திருமுன்பே அவன் திருவுள்ளக் குறிப்பாலேயே தோன்றுவன ஆதலால் இறைவன் உலகத்துப் பொருள்களோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்பான்.

அங்கம் -  உறுப்பு. அங்கி- உறுப்பினை உடையது; உயிர். நையாயிகர் கொள்கையின் அடிப்படையில் காரண காரியப் பொருள்கள் பெரும்பாலும் தம்முள் வேற்றுமை உடையன என்பது பொருந்தாது. ஆதலால் உலகத்துப் பொருள்கள் வேறும் அன்று என்று அக்கொள்கையை விலக்கினார். பேதா பேதத்தையும் அபேதத்தையும் உடன்பட்டார். இறைவன் முன்னிலையிலே உலகம் தோன்றும் என்பது மேலே 39-வது பாடலில் சின்னவன் தன் சன்னதி தன்னில் நின்றே தோன்றும் என்பதனை வலியுறுத்திற்று.

48. அருஉரு ஈனாதாகும்; விகாரமும் அவிகா ரத்தின்
வருவதும் இல்லை என்னின் வான், வளி ஆதி பூதம்
தருவது தன்னின் மேக சலனசத் தங்க ளோடும்
உருவமின் உருமேறு எல்லாம் உதித்திடும்; உணர்ந்து கொள்ளே.

அருவப் பொருள் உருவப் பொருளைத் தோற்றுவிக்காது. மாறுபாடு அற்ற பொருளில் இருந்து மாறுபாடு உடைய பொருளும் தோன்றாது. அதாவது உங்கள் கொள்கைப்படி மாயை வேறுபாடு அற்றது அதிலிருந்து வேறுபட்ட பொருள்கள் எவ்வாறு தோன்றும்? என்று சிலர் தடை எழுப்புவர். ஐம்பூதங்களில் வானம் என்பது அருவாகவும் வேற்றுமை அற்றதாகவும் உள்ளது. மற்றைய பூதங்களான காற்று முதலிய நான்கும் வானில் இருந்தே தோன்றுகின்றன என்பதை நீங்களும் உடன்படுகிறீர்கள். அருவமும் வேறுபாடு அற்றதும் ஆகிய விண்ணில் மேகங்களும் அசைவும் ஓசைகளும் உடைய மின்னல் முதலியனவும் தோன்றுகின்றன. எனவே அருவமான மாயையிலிருந்து உலகத்துப் பொருள்கள் யாவும் தோன்றும் என்ற கொள்கையும் பொருத்தமுடையதே.

அவிகாரம்- வேறுபாடு அற்றது. வளி- காற்று. உருமேறு- இடி.

49. மண்ணினில் கடாதி எல்லாம் வருவது, குலாலனாலே;
எண்ணிய உருவம் எல்லாம் இயற்றுவன், ஈசன் தானும்;
கண்ணுகாரியங்கள் எல்லாம் காரணம் அதனில் காண்பன்;
பண்ணுவது எங்கே நின்று? இங்கு, என்றிடில், பகரக்கேள், நீ.

மண்ணினில் இருந்து குயவன் குடம் பானை முதலியவற்றைத் தோற்றுவித்தல் போல இறைவனும் மாயையிலிருந்து தான் நினைத்த உருவங்களை எல்லாம் இயற்றுவான் என்றீர்கள். குயவன் தான் தோற்றுவிக்கிற யாவற்றையும் முதற்காரணமாகிய மண்ணிலிருந்தும் துணைக் காரணமாகிய சக்கரத்தின் துணை கொண்டும் தோற்றுவிக்கிறான். இறைவன் எவற்றிலிருந்து உலகைத் தோற்றுவிக்கிறான் என்று சிலர் கேட்பர். அதற்கு உரிய விடையைக் கூறுகிறேன் கேட்பாயாக.

கடாதி- குடம் முதலியன. குலாலன்- குயவன். கண்ணுகாரியங்கள்- கருதிய காரியங்கள்.

50. சீலமோ உலகம் போல தெரிப்பரிது; அதனால் நிற்கும்
கோலமும் அறிவார் இல்லை; ஆயினும் கூறக்கேள் நீ;
ஞாலம் ஏழினையும் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும்
காலமே போலக் கொள் நீ நிலைசெயல் கடவுட் கண்ணே.

உலகத்துப் பொருளைச் சொல்லால் கூறி உணர்த்துதல் இயலும். ஆனால் இறைவனின் இயல்போ அவ்வாறு கூறுவதற்கு அரியது. ஏனெனில் அவன் சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்பவன். இறைவனுடைய இயல்புகளை முழுவதும் அறிந்தவரும் இலர். ஆயினும் உவமை காட்டி அவனுடைய தன்மை இத்தகையது என்று காட்டி ஒருவகையாகக் கூறி விளக்க முற்படுவேன். அதனைக் கேட்பாயாக. உலகம் ஏழினையும் தோற்றுவித்து நிலை நிறுத்திப் பின்னர் அழித்திடுவது காலமே என்பது எல்லாரும் ஏற்றுக் கொள்வது. அத்தகைய காலத்திற்குப் பற்றுக்கோடு ஆவது எதுவும் இல்லை. ஆனால் காலம் எல்லாச் செயல்களுக்கும் பற்றுக்கோடு ஆகும்.

இறைவனும் இவ்வுலகத்தைச் செயற்படுத்தும் போது தான் யாவற்றுக்கும் பற்றுக் கோடாகவும் தனக்கு ஒரு பற்றுக்கோடு இல்லாதவனாகவும் நின்று தன் சத்தியினாõல் யாவற்றையும் செய்வான் என்று உணர்க.

51. கற்றநூல் பொருளும்  சொல்லும் கருத்தினில் அடங்கித் தோன்றும்
பெற்றியும், சாக்கி ராதி உயிரினில் பிறந்து ஒடுக்கம்
உற்றதும் போல, எல்லா உலகமும் உதித்து ஒடுங்க,
பற்றொடு; பற்றது இன்றி நின்றனன், பரனும் அன்றே,

பல நூல்களை ஒருவன் கற்ற போது அவற்றின் பொருளும் சொல்லும் புத்தி தத்துவத்தை ஒட்டி நின்று ஆன்ம அறிவில் ஒடுங்கிப் பின்னர் வேண்டுங்கால் தோன்றும். ஆயினும் இவற்றால் ஆன்ம அறிவு தொடக்குறுதல் இல்லை. அது போலவே உலகங்கள் யாவற்றையும் தோற்றுவித்து அழிக்கும் இறைவன் அவற்றால் தொடக்குறுதல் இல்லை. உயிர் என்பது ஐந்து நிலை வேறுபாடுகளுக்கு உட்படுவது. அவை நனவு முதலியன. இவை நிகழ்வதற்குக் காரணம் கருவிகள் ஆன்மாவோடு கூடுதலும் பிரிதலும், இந்த நிலை வேறுபாடுகளால் ஆன்மாவும் தொடக்குறுவது போல் இறைவனும் உலகங்கள் அனைத்தும் தன்பால் ஒடுங்கி உதிப்பத் தானும் இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று நிலைவேறுபாடுகளுக்கு உட்பட்டும் நிற்பான்.

இந்தப் பாடலில் இறைவன் பற்றொடு நின்றே பற்றது இன்றி நின்றனன் என்ற கருத்து விளக்கப்படுகிறது. இறைவன் பற்று இன்றி நின்றதற்குக் கற்ற நூல் பொருளும் சொல்லும் கருத்தினில் அடங்கித் தோன்றும் பெற்றி ஆசிரியரால் உவமையாகக் கூறப்படுகிறது. கற்ற நூலின் பொருளும் சொல்லும் ஆன்மாவின் அறிவில் பதிந்து கிடந்து மீண்டும் தோன்றும் போது அறிவில் மாற்றம் ஏதும் நிகழ்வதில்லை. அதாவது ஒரு முறை படித்து அறிவில் பதிந்த பாடலை ஒரு முறை கூறியவுடன் அறிவிலிருந்து அது அழிவதில்லை. அது போல இறைவன் பற்று இன்றி நின்றான் என்றார்.

நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு அடங்கல் என்பன ஆன்மாவின் ஐந்து நிலைவேறுபாடுகள் எனப்படும். அவை முறையே சாக்கிரம் சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என வழங்கும். நிலை வேறுபாட்டை வடமொழியில் அவத்தை என்பர். இந்த நிலை வேறுபாடுகள் கருவிகள் உயிரோடு கூடுவதாலும் பிரிவதாலும் ஏற்படுகின்றன. இவற்றால் ஆன்மா நிலை வேறுபாடுகளை அடைகிறது. இறைவனும் இவ்வுலகத்தைத் தோற்றுவித்து நிலை நிறுத்தி ஒடுக்கும் போது இலயம் போகம் அதிகாரம் என்ற மூன்று நிலை வேறுபாடுகளை அடைகிறான் என்பர். அது பாடலில் பற்றொடு நின்றனன் என்ற சொற்களால் குறிப்பிடப்பட்டது.

இவ்விரண்டு கருத்துக்களையும் எதிர் நிரல் நிறையாகக் கொள்க என்று சிவஞான முனிவர் உரைவரைந்தார்.

52. உயிர் அவை ஒடுங்கிப் பின்னும் உதிப்பது என் அரன்பால் என்னில்
செயிர் உறு மலத்தின் ஆகும்; சிதைந்தது ஏது என்னில் சித்தத்து
அயர்வு ஒழிகாரியங்கள் அழியும்; காரணம் கிடக்கும்;
பயில்தரு காரியம்பின் பண்டுபோல் பண்ணும் - ஈசன்

உயிர்கள் யாவும் தமக்கு ஒடுக்கம் வந்த போது ஒடுக்கத்தைச் செய்கிற கடவுளிடத்தில் ஒடுங்கி, மீளவும் தோன்றும் போது அவனிடத்தில் இருந்தே தோன்றும் என்கிறீர்கள். அது  எதற்காக என்று சிலர் வினவுதல் கூடும். உயிர்களோடு தோற்றமில் காலந் தொட்டே பொருந்திய குற்றமாகிய ஆணவ மலம் உயிர்களை விட்டு நீங்குவதற்காக உலகம் மீளவும் இறைவனால் தோற்றுவிக்கப்படுகிறது. உயிர்களைப் பொருந்திய ஆணவ மலம் சிதைந்து ஒழியவில்லை எனில் ஒடுக்கம் நிகழ்ந்த போது அழிந்தது யாது? என்று மேலும் ஒரு வினா எழும். உயிர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்துவதனால் இளைப்படைந்து விடுகின்றன. அவ்வாறு அயர்வினைத் தந்த காரியங்கள் அழியும். அவையும் அழியும் எனினும் தத்தமது காரணங்களில் வினையோடு ஒடுங்கி நிற்கும். தோற்றுவிக்கும் காலத்து இறைவன் இவற்றை ஒடுங்கியவாறே தோன்றுமாறு செய்வான்.

மீண்டும் தோற்றுவிக்கப்படுவதானால் உலகம் ஏன் ஒடுக்கப்படல் வேண்டும்? உயிரைக் கட்டி நின்ற ஆணவமலம் ஒடுக்க காலத்திலும் அழிய வில்லையானால்  அழிந்தது தான் எது என்று கேட்பவர்களுக்கு விடையாக இப்பாடலை ஆசிரியர் அருளினார். உலகம் என்பது உயிரோடு கூடிய உலகம் என்று உரை வரைந்தார் சிவஞான முனிவர். சித்தத்து அயர்வு உறு என்பது உயிரின் அறிவினிடத்து நிகழ்ந்த இளைப்பு எனப் பொருள்படும். இதன் பின் வரும் 57வது பாடலில் ஆக்கம் அவ்வவர் கன்மம் எல்லாம் கழித்திடல் என்ற பகுதியில் இக்கருத்து ஆசிரியரால் மேலும் விளக்கப்படுகிறது.

53. தோற்றுவித்து அளித்துப் பின்னும் துடைத்தருள் தொழில்கள் மூன்றும்
போற்றவே உடையன், ஈசன் புகுந்தது விகாரம் என்னில்?
சாற்றிய கதிரோன் நிற்க, தாமரை அலரும்; காந்தம்
காற்றிடும் கனலை; நீரும் கரந்திடும்- காசி னிக்கே.

இப்பெரிய உலகத்தைத் தோற்றுவிப்பதும், நிலை நிறுத்துவதும், அதன் பின்னர் ஒடுக்குவதும் ஆகிய மூன்று தொழில்களையும் சிவபெருமானாகிய இறைவன் ஒருவனே செய்வான் என்கிறீர்கள். இச் செயல்களில் ஈடுபடுகிற அவன் வேறுபடுவான் அல்லனோ என்று சிலர் வினாவுவர். இறைவன் வேறுபாடு அடையமாட்டான். வானத்தில் தோன்றும் கதிரவன் தன் நிலையில் திரியாது இயங்குகிறான். கதிரவன் தோன்றியதும் இவ்வுலகில் உள்ள சூரிய காந்தக் கற்கள் நெருப்பைக் கக்குகின்றன. தாமரை இதழ்கள் மலர்கின்றன. நிலத்தில் உள்ள நீர் ஆங்காங்கு வற்றுகிறது. உலகத்தில் இந்த மாற்றங்கள் ஏற்படும் போதும் கதிரவன் மாற்றம் இன்றியே விளங்குகிறான். அதுபோலவே தான் மாற்றம் இன்றி நின்றே இறைவன் இவ்வுலகத்தை முத்தொழிற்படுத்துவான்.

காலுதல் என்பது உமிழ்தல் என்று பொருள் தரும். கான்றிடும் என்பது இங்கு பிறவினை வாய்பாட்டால் காற்றிடும் என்று வந்தது. விகாரம்- வேறுபாடு.

54. உரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக்கு உலகம் ஓத
வரைத்து ஒரு வனுக்கே ஆக்கி வைத்தது இங்கு என்னை? என்னின்
விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள்-
புரைத்த அதிகார சத்தி புண்ணியம் நண்ண லாலே.

படைத்தல், காத்தல், ஒடுக்குதல் என்ற மூன்று தொழில்களும் நான் முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூன்று கடவுளர்களுக்கு உரியன என்று உலகத்தில் பெரு வழக்கமாக இருக்க இம்மூன்று தொழில்களையும் சிவபெருமான் ஒருவனே செய்வான் என்று கூறினீர்கள் அது எவ்வாறு பொருந்தும்? என்று சிலர் கேட்பர். மணம் மிக்க தாமரை மலரில் வாழ்கின்ற அயனும் திருமாலும் தங்கள் புண்ணியச் சிறப்பால் படைத்தலும், காத்தலும் ஆகிய உயர்ந்த அதிகார ஆற்றலைச் சிவபிரானது ஏவலால் பெற்றனர். முத்தொழிலும் இயற்றும் வல்லமை சிவபெருமான் ஒருவனுக்கே உண்டு என அறிக.

விரை- மணம், புரை- உயர்வு அதிகாரசக்தி- இயற்றும் ஆற்றல்.

55. இறுதியாம் காலம் தன்னில் ஒருவனே இருவரும் தம்
உறுதியில் நின்றார் என்னில் இறுதிதான் உண்டாகாதாம்;
அறுதியில் அரனே எல்லாம் அழித்தலால் அவனால் இன்னும்
பெறுதும் நாம் ஆக்கம் நோக்கம் பேர் அதி கரணத்தாலே.

உலகத்திற்கு இறுதி வருகின்ற ஒடுக்க காலத்தில் சிவபெருமான் ஒருவனே நிலைபெற்று இருப்பான். அவனைத்தவிர மற்றை இருவராகிய அயனும் திருமாலும் நிலைபெற்றிராமல் ஒடுக்கமுறுவர். ஏனெனில் அவ்விருவரும் ஒடுக்கப்படாமல் எஞ்சி இருந்தால் அக்காலத்தைச் சங்காரக் காலம் என்று கூறுவது பொருந்தாது. ஒடுக்கத்தைச் செய்யும் சங்காரக் கடவுள் தவிர மற்ற யாவையும் எல்லோரும் ஒடுக்கத்திற்கு உட்படுவர். சங்காரக் கடவுளாகிய சிவபெருமான் யாவற்றுக்கும் ஒடுக்கத்தைச் செய்து தான் ஒருவனே எஞ்சி நிற்பான். சிவபெருமானே ஒடுங்கிய உலகங்களுக்குப் பெரியதோர் ஆதாரம் ஆதலால் அவனே உலகத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கும் நிலை நிறுத்துவதற்கும் உரியவன் ஆவான்.

அறுதிஇல் அரன்- ஈறு இல்லாத சிவபெருமான். ஆக்கம்- தோற்று வித்தல்; நோக்கம்- காத்தல். அதிகரணம்- ஆதாரம்.

56. சொன்னஇத் தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னில்,
முன்னவன், விளையாட்டு என்று மொழிதலும் ஆம்; உயிர்க்கு
மன்னிய புத்தி முத்தி வழங்கவும், அருளான் முன்னே
துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதும், சொல்ல லாமே.

மேலே கூறப்பட்ட படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் சிவபெருமான் செய்தற்குரிய காரணம் யாது எனச் சிலர் கேட்பர். அவை அவனுடைய திருவிளையாடல் என்று கூறுதலும் உண்டு. அது மட்டும் அல்லாமல் உயிர்களுக்கு இம்மை, மறுமை, விடு என்னும் இவற்றை வழங்கவும் இறைவன் முத்தொழில் செய்கிறான் என்றும் கூறுவர். மேலும் உயிர்களைப் பற்றியுள்ள மும்மலங்களையும் தன் அருளால் நீக்குவதற்கு எனவும் கூறுவர் பெரியோர்.

முன்னவன் விளையாட்டு என்ற சொற்களால் ஆசிரியர் குறித்ததற்கு காரணம் இறைவன் முத்தொழில்களையும் மிக எளிதில் செய்கிறான் என்பதேயாகும். காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி (திருவாசகம்- திருவெம்பாவை 12). ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம் (திருவாசம்- திருவெம்பாவை 11) என்ற திருவாக்குகள் இங்கு நினையத்தக்கன. மொழிதலும் என்ற உம்மை எதிரது தழுவிய எச்ச உம்மை. ஏனெனில் அதனைத் தொடர்ந்து வருகின்ற கருத்துக்களையும் அந்த உம்மை சுட்டிற்று. இதனை அடுத்த பாடலில் இறைவனின் செயல்கள் யாவும் அவனது பேரருளே என்பது விளக்கப்படுகிறது.

57. அழிப்புஇளைப்பு ஆற்றல்; ஆக்கம் அவ்வவர் கன்மம் எல்லாம்
கழித்திடல்;  நுகரச் செய்தல், காப்பது; கன்ம ஒப்பில்
தெழித்திடல் மலங்கள் எல்லாம் மறைப்பு; அருள் செய்தி தானும்
பழிப்புஒழி; பந்தம்வீடு பார்த்திடில் அருளே, எல்லாம்.

இறைவன் உலகத்தை ஒடுக்குவது உயிர்கள் இளைப்பாறுவதன் பொருட்டே ஆகும். உலகத்தை மீண்டும் தோற்றுவிப்பது உயிர்களின் வினை முழுவதையும் கழித்து அவற்றுக்கு மலக் கட்டினை நீக்குவதற்கு ஆகும். உலகத்தைக் காப்பது உயிர்களின் வினைப்பயனை அவை நுகரச் செய்வதற்கு ஆகும். மறைப்பு எனப்படுவது உயிர்களுக்கு இருவினை ஒப்பு நிகழுமாறு செய்து அவற்றின் மலங்களை நீக்குவதற்கு ஆகும். அருளல் என்பது பாசத்தை நீக்கி சிவப்பேற்றை வழங்குவதற்கு ஆகும். எனவே இறைவனின் ஐந்தொழில்களும் ஆராய்ந்து பார்க்கும்வழி அவனுடைய அருட் செயல்களே ஆகும். இவற்றுள் சில மறத்தொழில் போலும் என்று பழித்தலை ஒழிக.

முந்தியப் பாடலில் இறைவனின் தொழில்கள் மூன்று என்றார் ஆசிரியர். இப்பாடலில் அவற்றை ஐந்து என விரித்துக் கூறினார். மறைத்தல் என்னும். தொழில் காத்தலில் அடங்கும். அருளல் என்னும் தொழில் ஒடுக்குதலில் அடங்கும். இறைவனின் ஐந்தொழில்களுமே அவனுடைய மாறாத பேரருளால் நிகழ்வன என்பதனை இப்பாடலில் கூறினார். தெழித்திடல்- நீக்குதல். பாடலின் இறுதி அடியில் வருகின்ற பழிப்பு ஒழி என்ற சொற்கள் பழித்தலை ஒழிவாயாக என்று முன்னிலை வியங்கோள் ஆயிற்று.

58. அருவமோ, உருவா ரூபம் ஆனதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவு? எனக்கு உணர்த்துஇங்கு ! என்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனதும் அன்றி நின்ற
உருவமும் மூன்றும், சொன்ன ஒருவனுக்கு, உள்ள வாமே.

இறைவனின் வடிவம் அருவமா, அருஉருவமா, அல்லது அவை இரண்டும் அன்றி நிலைபெற்ற உருவமா என்று எனக்கு உணர்த்துக எனின், அருவமும், அருஉருவமும், உருவமும் ஆகிய மூன்றுமே முன்னே கூறப்பட்ட இறைவனின் இயல்புகளாம் என்று அறிக.

கருத்தா- வினை முதல் சொன்ன ஒருவனுக்கு என்று இப்பாடலின் இறுதி அடியில் கூறப்பட்ட இறைவன் இந்நூலின் இருபத்து ஒன்றாம் பாடலில் அநாதி முத்தசித்து உரு என்று விதந்து கூறப்பட்டவன். எனவே அவன் காலங்கடந்தவன் கட்டுக்களிலிருந்து நீங்கியவன் அறிவே வடிவானவன் என்ற கருத்துக்கள் பெறப்படும்.

59. நண்ணிடும் உருவம் என்னின், நமக்குஉள உருவம் போலப்
பண்ணிட ஒருவன் வேண்டும்? இச்சையேல், பலரும் இச்சை
கண்ணிய உருவம் கொள்வோம், யாம், பெரும் கடவுள் தானும்
எண்ணிய, யோக சித்தர் போல், உரு இசைப்பன் காணே

இறைவனுக்கு உருவம் உண்டு என்று கொண்டால் நமக்கு உள்ள உருவத்தை ஆக்குதற்கு ஒரு தலைவன் வேண்டும் என்று கொண்டது போல அவனது உருவத்தையும் தோற்றுவித்தற்கு ஒரு தலைவன் வேண்டும் என்றாகும். அவ்வாறு அன்று இறைவன் தான் நினைத்த வடிவத்தைத் தானே மேற் கொள்ளுவான் என்றால் அத்தகைய ஆற்றல் தம் போல்வார் பலருக்கும் இருத்தல் வேண்டும். ஆனால் நாம் கருதிய உருவத்தை மேற்கொள்ள இயலாது என்பது எல்லாரும் அறிந்தது. தலைவனாகிய கடவுள் யோக சித்தர்களைப் போலத் தான் விரும்பிய உருவத்தை மேற்கொள்ளுவான்.

60. வித்தக யோக சித்தர் வேண்டுருக் கொள்ள மாபோல்,
உத்தமன் கொள்வன் என்னின், அவர்களில் ஒருவன் ஆவன்;
அத்தகை யவர்கள் எல்லாம் ஆக்குவது அருளால்; ஆங்கு
வைத்தது மாயை என்னின், வடிவெலாம் மாயை ஆமே?

வித்தகமுடைய யோக சித்தர்கள் தாம் விரும்பிய வடிவத்தை எடுத்துக் கொள்ளுவதைப் போலவே இறைவனும் தான் விரும்பிய வடிவத்தை எடுத்துக் கொள்ளுவான் என்று கூறினால் இறைவனும் அவர்களுள் ஒருவன் என ஆவான் அல்லனோ. அவ்வாறு அன்று. அத்தகைய சித்தர்கள் எல்லாம் தாம் விரும்பிய வடிவத்தை எடுத்துக் கொள்வது இறைவன் அருளாலே ஆகும். இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைவன் ஆதலால் இவனுக்கு அருள் பாலிப்பர் ஒருவரும் இலர். யோக சித்தர்கள் கொள்ளுவது மாயையில் இருந்து தோன்றிய வடிவமாகும். எனவே வடிவங்கள் எல்லாம் மாயையின் காரியங்கள் அல்லவோ என்ற வினா எழும்.

இதற்கு முந்திய பாடலிலும் இந்தப் பாடலிலும் ஒரே கருத்து தொடர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இரண்டும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன. இரு பாடல்களும் வினாவாகவும் இனி வருவது விடையாகவும் அமையும்.

61. மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவம் ஆகும்;
ஆயஆ ணவம் அகன்ற அறிவொடு தொழிலை ஆர்க்கும்
நாயகன் எல்லா ஞானத் தொழில்முதல் நண்ண லாலே,
காயமோ மாயை அன்று; காண்பது சத்தி தன்னால்.

மாயையால் வருகின்ற உருவங்கள் யாவும் ஆணவ மலத்தின் தொடர்பினால் உயிர்களுக்கு இறைவனால் வழங்கப்படுகின்றன. உயிர்கள் ஆணவ மலத்தினால் பற்றப் பட்டிருப்பதால் அவற்றின் அறிவும் தொழிலும் சிற்றறிவும் சிறு தொழிலும் ஆகும். தலைவனாகிய இறைவனோ எல்லா ஞானத்துக்கும் எல்லாத் தொழில்களுக்கும் உரிய தன்மை உடையவன். ஆதலால் அவனுடைய வடிவம் மாயையால் ஆகியது அன்று, அவனது சத்தியே அவனுக்கு வடிவமாகும்.

அகறல்- நீங்குதல், ஆர்த்தல்- பொருந்துதல். சத்தி என்று இங்கே கூறியது இறைவனது திருவருள் ஆகும்.

62. சத்தியே வடிவுஎன் றாலும், தான்பரி ணாமம் ஆகும்
நித்தமோ அழியும் அத்தால் நின்மலன் அருவே என்னில்
அத்துவா மார்க்கத்து உள்ளான்- அலன்; இவன் அருமை தன்னை;
புத்திதான் உடையை போல இருந்தனை; புகலக்கேள்நீ;

சிலர் இங்கு ஒருதடையை எழுப்புவர். இறைவனது வடிவம் மாயையின் காரியம் அன்று என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம். அவனது வடிவம் என்பது அவனது சத்தியே என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆயினும் அவன் ஓர் உருவத்தைக் கொண்டவன் என்னும் போது அவனது சத்தி அவனது வடிவமாகப் பரிணமித்தது என்று கொள்ள நேரிடும். அவ்வாறு கொண்டால் அத்தகைய வடிவமும் அழிவுறும் ஆதலால் இறைவன் அருவமானவன் என்று கொண்டால் என்ன? அவ்வாறு அன்று. இறைவன் அத்துவாக்கள் ஆறனையும் கடந்து நிற்பவன். அவற்றுக்கு உட்பட்டவன் அல்லன். அத்தகைய பெருமை உடைய இறைவனின் அருமையை அறிவுடையவன் போலத் தோன்றும் உனக்குச் சொல்லுவேன் கேட்பாயாக.

அத்துவாக்கள் என்பன ஆறு ஆகக் கொள்ளப்படும். அவை மந்திரம், பதம், வன்னம், புவனம், கலை தத்துவம் என்பன. அத்துவா என்ற சொல் வழி என்ற பொருளைத் தரும். சொல் உலகும், பொருள் உலகும், ஆகிய அனைத்தும் அத்துவாக்களுக்கு உட்பட்டவை. இறைவன் அத்துவாக்களைக் கடந்தவன்.

63. உலகினில் பதார்த்தம் எல்லாம் உருவமோடு அருவம் ஆகி
நிலவிடும்; ஒன்று ஒன்று ஆகா; நின்ற அந்நிலையே போல
அலகுஇலா அறிவன்தானும் அருவமே என்னில் ஆய்ந்து
குலவிய பதார்த்தத்து ஒன்றாய்க் கூடுவன்; குறித்திடாயே.

உலகத்தில் உள்ள பொருள்கள் யாவும் அருவமாக அல்லது உருவமாக அல்லது அருஉருவமாக விளங்குவன அவற்றில் ஒன்று மற்றொன்று ஆக முடியாது. அவை நின்ற நிலையிலேயே நிற்கும். முற்றறிவுடைய இறைவனையும் அருவம் என்று கொண்டால் அவனும் உலகப் பொருள்களுள் ஒன்றாக ஆவான். இதனை ஆராய்ந்து தெளிவாயாக.

உலகத்துப் பொருள்கள் யாவும் மூன்று வகைகளிலே அடங்கும். இவற்றுள் உருவம் என்பது எல்லாரும் அறிந்தது. எனவே எடுத்துக் காட்டுத் தேவை இல்லை. அருவப் பொருள் என்பது விண் போன்றது. அருஉருவம் என்பது நிலவின் கதிர் போன்றது. ஏனெனில் நிலவின் கதிர் ஒன்றின் மீது படியும் போது உருவம் உடையதாகவும் படியாத போது அருவமாகவும் தோன்றுகிறது. இவற்றில் ஒரு தன்மை உடைய பொருள் மற்ற இரு தன்மைகளையும் அடைய இயலாது. எனவே இறைவனை அருவம் என்று கொண்டால் அவன் மற்ற இரு தன்மைகளையும் எய்தமாட்டான் என்று ஆகும். எனவே அவனும் உலகியல் பொருளில் ஒன்றாகவே கருதப்படுவான்.

64. பந்தமும் வீடும் ஆய பதபதார்த்தங்கள் அல்லான்;
அந்தமும் ஆதி இல்லான்; அளப்பிலன் ஆதலாலே
எந்தை தான் இன்னன் என்றும் இன்னது ஆம் இன்னது ஆகி
வந்திடான் என்றும் சொல்ல வழிக்கொடு மாற்றம் இன்றே.

எந்தையாகிய இறைவன் சொல் உலகம் பொருள் உலகம் ஆகிய இரண்டையும் போலக் கட்டுக்கு உட்படுபவனும் அல்லன். கட்டுக்களில் இருந்து விடுபடுபவனும் அல்லன். அவனுக்குத் தோற்றமும் இல்லை. இறுதியும் இல்லை. அவனுடைய இயல்பை அளவைகளின் துணை கொண்டு அறிய இயலாது. ஆதலால் அவனுடைய வடிவு இத்தகையது என்றும், உயிர்களுக்கு அருள்பாலிப்பதற்காக இன்ன வடிவை ஏற்பான் என்றும். இன்ன வடிவை மேற்கொள்ள மாட்டான் என்றும் சொல்லுவதற்கு இயலாது.

பதம்- சொல். பதார்த்தம்- சொல்லால் குறிக்கப்படும் பொருள். திருஞான சம்பந்தர் திருப்பாசுரத்தில் எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ என்று அருளியதை இங்கே நினைவு கூர்க. அளப்பிலன் என்ற சொல்லால் இறைவன் அளவைகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது விளக்கப்பட்டது. இந்நூலின் ஐந்தாவது பாடலில் குறைவிலா அளவினாலும் கூறொணாது ஆகி நின்ற இறைவனார் கமலபாதம் என்றதும் நினையத்தக்கது.

65. குறித்தது ஒன்று ஆக மாட்டாக் குறைவு இலன் ஆதலானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பு ஒடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமையானும்
நிறுத்திடும் நினைந்த மேனி- நின்மலன் அருளினாலே.

இறைவன் தான் விரும்பிய வடிவத்தை மேற்கொள்ள இயலாத குறைபாடு இல்லாதவன். அவன் முற்றறிவும், பேராற்றலும் உடையவன். வேண்டுதல் வேண்டாமை இலாதவன். எனவே உயிர்கள் மீது கொண்டே பேரருளினால் தான் நினைத்த வடிவை நினைத்த போதே கொள்ளும் ஆற்றல் உடையவன்.

உயிர்களின் உடல்கள் அவற்றின் வினைப் பயனுக்கு ஏற்ப இறைவனால் அவற்றுக்குத் தரப்பட்டவை. எனவே உயிர்கள் தாம் விரும்பிய வடிவை அடைய இயலாத குறைபாடு உடையவை. இறைவன் வினையின் நீங்கியவன் ஆகையினாலே அத்தகைய குறைபாடு இவனுக்கு இல்லை. உயிர்கள் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையன. இறைவனே பேரறிவும் எல்லாம் வல்ல பேராற்றலும் உடையவன். உயிர்கள் வெறுப்பும் விருப்பும் உடையன. இறைவனோ வேண்டுதல் வேண்டாமை இலான். அதனால் அவன் நினைத்த போது நினைத்த வடிவத்தைத் தன் அருளினால் கொள்ள வல்லவன். ஆர் ஒருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் (அப்பர் தேவாரம்- திருப்பூவணம் 11) என்பதும் காண்க.

66. ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவு கொண்டு
காரணன் அருளானாகில் கதிப்பவர் இல்லையாகும்.
நாரணன் முதலாய் உள்ள சுரர் நரர் நாகர்க்கு எல்லாம்
சீர்அணி குருசந்தானச் செய்தியும் சென்றிடாவே.

இறைவன் தனது அளவற்ற கருணையினால் திருஉருவம் கொண்டு ஆரணங்களையும், ஆகமங்களையும் அருளிச் செய்திலனேல் உயிர்கள் வீடு பேறு அடைதல் இயலாது ஆகும். திருமால் முதலிய தேவர்கட்கும் மானுடர்க்கும் நாகர் முதலியோர்க்கும் சிறப்புடைய குரு மரபில் வைத்து அருள் பாலிப்பதும் செல்லாதாகும்.

கதிப்பவர்- நற்கதி அடைவர். குரு சந்தானச் செய்தி- ஆசிரியத் திருமரபில் வைத்து அருள் உபதேசம் வழங்குதல். இறைவன் உருவத் திருமேனி கொள்ள வேண்டுவதன் இன்றியமையாமை இப்பாடலில் கூறப்பட்டது. உயிர்கள் உணர்த்தினால் அன்றித் தாமாக உணரமாட்டாதவை. ஆதலால் மறைகளும் ஆகமங்களும் குருமரபும் அவற்றுக்குத் துணையாதல் வேண்டும் என்பது கருத்து.

67. உருஅருள்; குணங்களோடும் உணர்வு அருள்; உருவில் தோன்றும்
கருமமும் அருள்; அரன்தன் கரசரணாதி சாங்கம்
தரும் அருள்; உபாங்கம் எல்லாம் தான் அருள் தனக்கு ஒன்று இன்றி
அருளுரு உயிர்க்கு என்றே ஆக்கினன் அசிந்தன் அன்றே.

சிவபெருமானின் திருவடிவம் அருளே. ஆதலால் அவனுடைய ஐந்தொழில்களும் அத்திருவருளில் இருந்து தோன்றுகின்ற பண்புகளும் அருளே ஆகும். அவன் திருஉருவில் காட்சி தருகின்ற திருக்கை, திருவடி முதலிய உறுப்புக்களும் அத்திருவடிவில் அவன் ஏந்தியுள்ள மான், மழு மூவிலைச் சூலம் ஆகியனவும் அருளே வடிவானவை ஆகும். அவன் உடுத்தியுள்ள ஆடையும் புனைந்துள்ள மாலையும் போன்றனவும் அருளின் வடிவே ஆகும். தனக்கு என அவன் திருவடிவம் மேற்கொள்வது இலன். அவன் மேற்கொள்ளும் திருமேனி உயிர்களின் பொருட்டே ஆகும்.

உரு- திருமேனி. குணங்கள்- இறைவனுக்கு உரிய எண்குணங்கள். கருமம்- அவனது ஐந்தொழில்கள். கரசரணாதி- திருக்கை திருவடி முதலியன. சாங்கம்- உறுப்பை விட்டு நீங்காது அவன் ஏந்தியுள்ள மூவிகைச் சூலம், மான், மழு முதலியன. உபாங்கம்- உறுப்பில் பூண்டுள்ள ஆடை, மாலை போன்றவை. அசிந்தன்- உயிர்களின் சிந்தனைக்கு எட்டாதவன்.

68. உலகினை இறந்து நின்றது அரன் உரு என்பது ஓரார்;
உலகு அவன் உருவில் தோன்றி ஒடுங்கிடும் என்றும் ஓரார்;
உலகினுக்கு உயிரும் ஆகி உலகும் ஆய் நின்றது ஓரார்;
உலகினில் ஒருவன் என்பர் உருவினை உணரார் எல்லாம்.

தனது திருவருளால் இறைவன் திருமேனி கொண்டது உயிர்களின் பொருட்டே. எனினும் அரன் திருவடிவம் உலகினைக் கடந்தது என்பதை இவ்வுலகினர் உணரமாட்டார். இறைவன் திரு உருவில் இருந்தே உலகம் தோன்றி ஒடுங்கும் என்பதனையும் உணரார். இறைவனே உலகத்துக்கு உயிராய் விளங்குகிறான் என்பதனையும், அவனே உலகு ஆக நின்றதனையும் உணரார்.. இவ்வாறு சிவபெருமானின் இயல்பினை உணராத மாந்தர் தாம் கூறும் கடவுளரில் சிவபிரானும் ஒருவன் என்று கொள்வர்.

சுருதிகள் சிவபெருமானை விசுவாதிகள் (உலகைக் கடந்தவன்) என்றும், விசுவகாரணன் (உலகத்தோற்றத்துக்குக் காரணமானவன்) என்றும், விசுவ அந்தர்யாமி (உலகத்துக்கு உள்ளே நிறைந்தவன்) என்றும் விசுவரூபி (உலகே வடிவானவன்) என்றும் கூறுவதை உணராத மாந்தர் சிவபெருமானையும் தாம் கூறும் ஏனைக் கடவுளரில் ஒருவன் என்றே அறியாமையால் கூறுவர் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது.

69. தேவரின் ஒருவன் என்பர். திருஉரு சிவனே; தேவர்
மூவராய் நின்றது ஓரார்; முதல் உருப்பாதி மாதர்
ஆவதும் உணரார்; ஆதி அரி அயற்கு அறிய ஒண்ணா
மேவுஉரு நிலையும் ஓரார்; அவன் உரு விளையும் ஓரார்.

சிவபெருமானுடைய திரு உருவத்தினையும் அவனுடைய மேம்பாட்டையும் அறிய இயலாதவர் நான்முகன், திருமால், உருத்திரன் என்னும் மூவரில் அவனும் ஒருவன் என்பார். சிவபெருமானே அருளராயும் நின்றதை இவர் உணரார். மாது ஒரு பாகனாய் அருளுவரை இவர்கள் உணரார். திருமாலும் நான்முகனும் திருமுடியும் திருவருளைத் தேடிக் காணாத பெருமை உடையவன் சிவபெருமான் என்பதை இவர்கள் உணரார். அருவமும் உருவமும் அரு உருவமும் ஆகிய அவற்றைக் கடந்தவனாகவும் இருப்பவன் சிவபெருமான் என்பதை இவர்கள் உணரார்.

70. போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்;
யோகியாய் யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்;
வேகி ஆனாற் போல் செய்த வினையினை வீட்டல் ஓரார்;
ஊகியா முடர் எல்லாம்  உம்பரின் ஒருவன் என்பர்.

சிவபெருமான் திருமேனி கொள்ளும் போது போக வடிவம் மேற்கொண்டு உயிர்களுக்கு இன்ப வாழ்க்கையை அருளுவான் என்பதையும் உணரமாட்டார். சில நேரங்களில் அவன் யோகத் திருமேனி மேற்கொண்டு உயிர்களுக்கு வீடு பேறு அருளுவதையும் மாட்டார்கள். மற்றும் சில நேரங்களில் சிவபெருமான் கொண்டவனைப் போல் திருமேனி தாங்கி உயிர்களின் வினைகள் கெடுப்பான் என்பதையும் இவர்கள் உணரமாட்டார்கள். இவ்வாறு இறைவன் திருமேனி கொள்ளும் முறைமையினை ஆராய்ந்து வலிமை இல்லாதார் சிவபெருமானைத் தேவர்களில் ஒருவனாகக் கொள்ளுவார்.

சிவபெருமானே ஒப்பற்ற இறைவன் என்பதை அறியாதவர்கள் அவர்கள் மற்றைத் தேவர்களுடன் ஒருங்கு வைத்து எண்ணும் தவறினைச் செய்பவர்கள் என்பது கருத்து. வேகி- வேகம் உடையவன். வீட்டல்- அழித்தல்.

71. ஒன்றோடு ஒன்று ஒவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு  
நின்றலால் உலகம் நீங்கி நின்றனன் என்றும் ஓரார்;
அன்றி அவ்வேடம் எல்லாம் அருள்புரி தொழில் என்று ஓரார்
கொன்றது வினையைக் கொன்று நின்ற அக்குணம் என்று ஓரார்.

ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட போக வடிவம், யோக வடிவம், வடிவம் ஆகியவற்றை சிவபிரான் தானே தரித்துக் கொண்டு நிற்கிறார் அவன் உலகத்தினைக் கடந்தவன் என்பதனையும்  இல்லையோர் உணரமாட்டார்கள். அதுவும் அல்லாமல் வேகவடிவம் இறைவன்  சிலரை ஒறுத்தனன் என்பதற்குப் பொருள் அவர்களுடைய தீவினையை நீக்கி அவர்களுக்கு அருள்  பாலித்தான் என்பதுவே என இவர்கள் அறியார்.

அருளே வடிவமான சிவபெருமான் சிலர் மீது சினம் கொண்டு அவர்களைக் கொன்றான் என்பது பொருந்துமா என்ற வினாவிற்கு இப்பாடல் விடையளிக்கிறது. இறைவன் உயிர்களை ஒறுப்பதும் அவற்றின் வினையைக் கெடுப்பதற்கே என்று ஆசிரியர் விளக்கினார்.

72. நாயகன் கண்நயப்பால் நாயகி புதைப்ப, எங்கும்
பாய் இருள் ஆகிமூட, பரிந்து உலகினுக்கு நெற்றித்
தூயநேத்திரத்தினாலே சுடர் ஒளி கொடுத்த பண்பின்,
தேயம் ஆர் ஒளிகள் எல்லாம் சிவன் உருத் தேசது என்னார்.   

ஒரு சமயம் இறைவி தன் திருவுள்ள மகிழ்ச்சியினால் இறைவனது இரு கண்களையும் தனது இரு கரங்களால் மூடித் திருவிளையாட்டு அயர்ந்தாள். அப்போது உலகு எங்கும் இருள் பரந்து மூடியது. உலகத்தில் உள்ளார்களிடத்தில் கொண்ட பரிவினால் இறைவன் தனது தூய்மையான நெற்றிக் கண்ணைத் திறந்தனன். அப்பொழுதே உலகம் முழுவதும் ஒளி படர்ந்தது. இவ்வாறு அருளிய சிவபிரானுடைய திருமேனியே பேரொளிப் பிழம்பு என்று இவர்கள் அறிந்திலர்.

நயப்பு- மகிழ்ச்சி, பாய்தல்- பரந்தல், தேயம்- உலகம், தேசு- ஒளி.

73. கண்ணுதல் யோகு இருப்ப காமன் நின்றிடவேட் கைக்கு
விண்உறு தேவர் ஆதி மெலிந்தமை ஓரார்; மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித்து இமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து உயிர்க்குப் பேரின்பம் அளித்தது ஓரார்.

ஒரு சமயம் நெற்றிக்கண்ணினை உடைய சிவபெருமான் யோகத்தில் இருந்தருளினன். அப்பொழுது இன்பச் சுவைக்கு அதிதெய்வமாகிய மன்மதன் இருந்த போதும் உலகில் இன்ப வேட்கை இல்லாது நலியலாயிற்று. இதைக் கண்ணுற்ற திருமால் மன்மதனை ஏவிச்சிவபெருமான் மீதுமலர்க்கணை தொடுக்குமாறு தூண்டினான். சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை நோக்க அவன் எரிந்து சாம்பலானான். அதன் பின்னர் சிவபெருமான் மலை அரையன் பெற்ற உமையம்மையைக் கூடி உலகத்து உயிர்களுக்கு இன்பச் சுவையை அளித்தருளினான். இந்த நிகழ்ச்சியினையும் இவர்கள் உணரார்.

இறைவன் உலகினுக்கு உயிராய் நின்றான் என்று 68-வது பாடலில் கூறப்பட்டது. அதனை இவ்விரண்டு நிகழ்ச்சிகளால் ஆசிரியர் விளக்கினார்.

74. படைப்பு ஆதித் தொழிலும் பத்தர்க்கு அருளும்பா வனையும் நூலும்
இடப்பாகம் மாத ராளோடு இயைந்து உயிர்க்கு இன்பம் என்றும்
அடைப்பானாம் அதுவும் முத்தி அளித்திடும் யோகும் பாசம்
துடைப்பானாம் தொழிலும் மேனி தொடக்கானேல் சொல் ஓணாதே,

படைப்பு முதலிய ஐந்தொழில்கள் இயற்றுவதற்கும், மெய்யடியார்க்கு அருளுதல் பொருட்டு இறைவன் செய்யும் பாவனையாகிய ஊன நடனம் இயற்றுவதற்கும் ஆரணம் ஆகமங்களாகிய நூற்களை இயற்றுவதற்கும் உயிர்களுக்கு இன்பம் தருவதற்காக உமையம்மையோடு இயைந்திருக்க வேண்டுதற்கும், உயிர்களுக்கு வீடுபேறு அளிக்க யோகத்தில் இருந்து காட்ட வேண்டுதற்கும், உயிர்களின் பாசத்தைத் துடைப்பதாகிய தொழிலுக்கும் இறைவனுக்கு உருவத் திருமேனி இன்றியமையாததாயிற்று.

மாதவச் சிவஞான முனிவர் படைப்பாகிய ஆதி தொழில் என்று வாதுள ஆகமத்தில் கூறிய செய்திகளையும் தமது உரையில் விரிவாகச் சொல்லுவது மிக்க நயமுடையது.

75. உருமேனி தரித்துக் கொண்டது என்றலும் உரு இறந்த
அருமேனி அதுவும் கண்டோம் அரு- உரு ஆன போது
திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு  காணே.

இறைவனுக்கு உருவத் திருமேனி உண்டு என்பதனையும், அதனை அவனாகவே எடுத்துக் கொள்ளுவான் என்பதையும் இதுவரையில் சொன்ன பாடல்களில் கண்டோம். உருவம் என்பது பருவடிவும், அருவம் என்பது அதனது நுட்பத்தையும் குறிப்பன. ஆதலால் உருவத் திருமேனி உண்டு என்ற அளவிலே உருவைக் கடந்த அருவத் திருமேனியும் இறைவனுக்கு உண்டு என்பதை அறிந்தோம். இவை இரண்டும் உள்ளனவாகையால் இரண்டுக்கும் பொதுவாகிய அருஉருவத் திருமேனியும் இறைவனுக்கு உண்டு என்பது பெறப்படும். எனவே இறைவன் இம்மூன்று திருமேனிகளும் உடையவன் என்பது விளங்கும். அவையும் மாயையினால் ஆகிய நம்முடைய கருமேனியைக் கழிக்க வந்த கருணையின் வடிவமே ஆகும்.

76. அத்துவா மூர்த்தி ஆக அறைகுவது என்னை? என்னின்
நித்தனாய் நிறைந்து அவற்றின் நீங்கிடா நிலைமையானும்  
சித்துடன் அசித்திற்கு எல்லாம் சேட்டிதன் ஆதலானும்
வைத்ததாம் அத்துவாவும் வடிவுஎன மறைகள் எல்லாம்

இறைவனின் திருமேனி மாயையின் வடிவம் அன்று அருள் வடிவமே ஆகும் எனின் ஆகமங்கள் யாவும் இறைவனை அத்துவாமூர்த்தி என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும் என்று சிலர் வினவக்கூடும். இறைவன் என்றும் உள்ளவன். ஆயினும் ஆறு அத்துவாக்கள் உள்ளும்  நிறைந்து அவற்றை விட்டு நீங்காத நிலைமை உடையவன். அறிவுடைப் பொருள் அறிவற்ற பொருள் ஆகியவற்றையும் உடனாய் நின்று இயக்குபவன். இவ்வாறு ஒன்றாயும், உடனாயும், வேறாயும் நிற்கும் இறைவனை அத்துவாமூர்த்தி என்று ஆகமங்கள் ஏற்றுரையாகக் கூறின.

இறைவனுடைய அத்துவா மூர்த்தம் அவனுடைய உபசாரத் திருமேனி என்று வழங்கப்பெறும்.

77. மந்திரம் அத்து வாவின் மிகுத்து ஒரு வடிவம் ஆகத்
தந்தது என் அரனுக்கு? என்னின் சகத்தினுக்கு உபா தானங்கள்
விந்து மோ கினி மான் மூன்றாம்; இவற்றின் மேலாகி விந்துச்
சிந்தை ஆர் அதீதம் ஆன சிவசத்தி சேர்ந்து நிற்கும்.

இறைவனுக்கு அத்துவா வடிவம் உண்டு எனக் கூறுகின்ற அருள் நூல்கள் மந்திரங்களை அவற்றுள் சிறப்பானது என்று கூறுவது ஏன்? என்ற வினா எழும். உலகிற்கு முதற்காரணங்கள் தூய மாயை தூவா மாயை, பிரகிருதி மாயை என்று மூன்றாகக் கூறப்பெறும். இவற்றுள் தூய மாயையே மிக உயர்ந்ததாகும். சிந்தையைக் கடந்த சிவசத்தி தூயமாயையைப் பொருந்தி நிற்கும்.

உபாதானம்- முதற்காரணம். விந்து- தூயமாயை மோகினி- தூவா மாயை, மான்- பிருகிருதி மாயை.

78. சுத்தம் ஆம் விந்துத் தன்னில் தேரன்றிய ஆதலானும்
சத்திதான் பிரேரித் துப்பின் தான் அதிட்டித்துக் கொண்டே
அத்தினால் புத்தி முத்தி அளித்தலால் அரனுக்கு என்றே
வைத்த ஆம்- மந்திரங்கள் வடிவு என மறைகள் எல்லாம்.

மந்திரங்கள் என்பன தூயமாயையில் தோன்றியன. அவை சிவசத்தியால் செலுத்தப்படுவன. மந்திரங்களைக் கணித்தவர்களுக்கு அதன் பயனைக் கொடுத்தற் பொருட்டு அவற்றையே வாயிலாகக் கொண்டு உயிர்களுக்கு இன்பமும் வீடு பேறும் அளித்தலாகிய பயனைத் தருவன. இக்காரணங்களால் ஆகமங்கள் யாவும் சிவபெருமானுக்கு மந்திர வடிவம் சிறப்பு உரிமை உடையது என்று கூறுகின்றன.

மந்திரங்கள் பதினொன்று என்பர். அவற்றைப் பஞ்ச பிரமமந்திரம் என்றும் சடங்க மந்திரம் என்றும் வகைப்படுத்துவர். பிரேரித்தல்- செலுத்துதல், அதிட்டித்தல்- இடம் கொள்ளுதல்.

79. மந்திரம் அதனில் பஞ்ச வடிவமாகத்
தந்திரம் சொன்னவாறு இங்கு ஏன்? எனில் சாற்றக் கேள் நீ
முந்திய தோற்றத் தாலும் மந்திர மூலத்தாலும்
அந்தம் இல் சத்தி ஆதிக்கு இசைத்தலும் ஆகும் அன்றே.

மந்திரங்கள் யாவற்றுள்ளும் பஞ்சப் பிரம மந்திரங்களின் வடிவையே ஆகமங்கள் சிறந்து எடுத்துக் கூறுகின்றன. அது ஏனெனில் ஏனைய மந்திரங்களுக்கு எல்லாம் முற்பட்டுத் தோன்றியதனாலும், அவற்றுக்கு மூலம் ஆதலாலும், அழிவற்ற ஆதிசத்திக்கு இம்மந்திரங்கள் உபசார வடிவமாகக் கொள்ளப்படும்.

தந்திரம்- ஆகமங்கள். அந்தமில் சத்தி ஆதிக்கு என்ற சொற்களை அந்தமில் ஆதி சத்திக்கு என்று மாற்றி வைத்துப் பொருள் கூற வேண்டும் என்று சிவஞான முனிவர் உரை வரைகிறார்.   

80. அயன் தனை ஆதி ஆக அரன் உரு என்பது என்னை?
பயந்திடும் சத்தி ஆதி பதிதலால் படைப்பு மூலம்
முயன்றனர் இவரே ஆயின் முன்னவன் தன்னை முற்றும்
நயந்திடும்; அவன் இவர்க்கு நண்ணுவது ஒரோவொன்று ஆமே.

நான்முகன் முதல் ஐந்து தனித்தனி தேவர்களை சிவபெருமானின் திருவருளால் மேற்கொண்ட வடிவங்களே என்று ஆகமங்களில் கூறப்படுகின்றமை எவ்வாறு பொருந்தும் என்று சிலர் கேட்பர். படைப்பு முதலிய ஐந்தொழில்களையும் செய்கின்ற ஐந்து சிவ சத்திகள் ஒவ்வொன்றும் நான்முகன் முதலிய ஒவ்வொருவரிடமும் பதிந்து நின்று அவர்களைச் செலுத்துகின்றனர். அந்த இயைபைக் கருதி இவ்வாறு ஆகமங்கள் ஏற்றுரையாகக் கூறுகின்றன. ஐந்தொழில்களையும் நான்முகன் முதலிய ஐவரே செய்திடுவார் என்னில் தலைவனாகிய இறைவன் வேண்டப்படான். முன்னவனாகிய சிவபெருமானே ஐந்தொழில்களையும் இயற்றுவான். நான்முகன் முதலியோர் ஒவ்வொரு தொழிலையே இயற்றுதற்கு உரியர்.

செனனி, ரோதயித்திரி, ஆரணி என்று சத்திகள் மூன்றாகக் கூறப்படும். இவற்றுள் செனனி உலகத்தைப் படைக்கும். ரோதயித்திரி உலகத்தைக் காத்திடும். ஆரணி என்பது உலகத்தை ஒடுக்கும்.

81. சத்திதான் பலவோ? என்னில் தான் ஒன்றே; அரேகமாக
வைத்திடும் காரியத்தால்; மந்திரி ஆதிக்கு எல்லாம்
உய்த்திடும் ஒருவன் சத்தி போல் அரனுடையதாகி;
புத்திமுத்திகளை எல்லாம் புரிந்து அவன் நினைத்த வாறு ஆம்.

அப்படியானால் சத்திகள் பல உளவோ எனக் கேட்பின் அவ்வாறு அன்று. சிவசத்தி ஒன்றே ஆகும். அரசனின் ஆற்றல் ஒன்றே அமைச்சர், படைத்தலைவர் முதலியோரிடத்து அவரவர் தொழிற் பாட்டுக்கு ஏற்ப வேறுபடுவது போல சிவசத்தி ஒன்றே, இறைவனை விட்டுப் பிரிதல் இன்றி உயிர்களுக்கு இம்மை மறுமைப் பயன்களையும் வீடுபேற்றையும் அளித்திடும். இறைவன் நினைந்தவாறே சிவசத்தி தொழிற்படும்.

82. சத்திதன் வடிவு ஏது? என்னில் தடை இலா ஞானம் ஆகும்;
உய்த்திடும் இச்சை செய்தி இவை ஞானத்து உள்வோ? என்னில்
எத்திறம் ஞானம் உள்ளது அத்திறம் இச்சை செய்தி
வைத்தலால் மறைப்பு இல்ஞானால் மருவிடும் கிரியை எல்லாம்.

சிவசத்தியின் வடிவம் யாது எனின் தடையும் வரம்பும் அற்ற ஞானமே சிவசத்தியின் வடிவமாகும். இதுவே பராசத்தி எனப்படும். இந்த ஞானம் உயிர்களின் மலநீக்கத்தின் பொருட்டு ஐந்தொழில் செய்யும் போது அதன் ஒரு கூறு திரோதான சத்தி எனப்படும். விழைவு ஆற்றலும், செயல் ஆற்றலும் என்னும் இவை இரண்டும் ஞானத்தில் தோன்றுவனவோ எனக் கேட்பின் ஞானம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே விழைவும், செயலும் நிகழும் ஆதலால் அவை ஞானத்தினின்றும் வேறுபட்டன அல்ல என்று அறிக.

83. ஒன்றதாய், இச்சா, ஞானக் கிரியைஎன்று ஒருமூன் றாகி
நின்றிடும், சத்தி; இச்சை உயிர்க்கு அருள் நேசம் ஆகும்;
நன்றுஎலாம், ஞான சத்தி யான், நயந்து அறிவன்; நாதன்
அன்று, அருட் கிரியை தன்னால் ஆக்குவன், அகிலம் எல்லாம்,

சத்தியின் வடிவு தடையிலா ஞானம் என்று முந்தியப் பாடலில் குறிக்கப் பட்ட பராசத்தி ஒன்றே ஆகும். ஆயினும் அதன் செயல்பாடு பற்றி அதனை மூன்று என்றும் வகைப்படுத்திக் கூறுவர். அவை முறையே விழைவு, அறிவு, ஆற்றல் என்று பெயர் பெறும். அதன் மேலும் பல திறப்படக் கூறுவதும் உண்டு. இவற்றுள் விழைவு ஆற்றல் என்பது இறைவன் உயிர்களைப் பற்றி நின்ற மலத்தை நீக்கிச் சிவத்தை அளிப்பதற்காகக் கொண்ட கருணையே ஆகும். இறைவனுடைய ஞானசத்தி என்பது உயிர்களை உய்விப்பதற்கு உரியனவற்றைத் திருவுளக் குறிப்பால் அறிதலாகும். அருளில் இருந்து மாறுபடாத தனது செயலாற்றலால் இறைவன் உயிர்களை உய்விப்பதற்கான யாவற்றையும் நினைந்த போதே நினைந்தவாறே செய்வான்.

நன்மை- நன்றெலாம் எனக் கூறப்பட்டது. அதாவது உயிர்களுக்கு நன்மை செய்யும் உத்தி.

84. சீவனும்,இச்சா ஞானக் கிரியையால், சிவனை யொப்பன்
ஆவன்என் றிடின், அ நாதி மலம்இவற் றினைம றைக்கும்;
காவலன் இவன்செய் கன்மத் தளவினில் கொடுப்பக் காண்பன்;
பாவிஆம் புத்தி முத்திப் பயன்கொளும் பண்பிற்று ஆகும்.

உயிர்களுக்கும் விழைவுஆற்றல், அறிவு ஆற்றல், செயல் ஆற்றல் என்ற மூன்றும் உள என்று கூறப்படுகிறது. ஆதலால் அம்மூன்று ஆற்றல்களும் உடைய சிவனை ஒத்தனவே உயிர்களும் என்று கொள்ளலாமோ என்று சிலர் வினவுவர். அவ்வாறு அன்று; உயிர்களுக்கும் இம்மூவகை ஆற்றலும் உளவேனும் அவற்றை உயிர்களைத் தோற்றமில் காலந்தொட்டே பற்றியுள்ள ஆணவ மலம் முற்றிலும் மறைத்து நிற்கும். இது உயிர்களின் கேவல நிலையில் நிகழ்வதாகும். உயிர்களின் வினைப்பயன்களுக்கு ஏற்ப உடல், கருவி முதலியவற்றை இறைவன் கொடுப்ப உயிர்கள் சகல நிலையை அடையும். அப்போது வினைப்பயனுக்கு ஏற்ற விழைவு, அறிவு, ஆற்றல் ஆகியவற்றை உயிர்கள் பெறும். இறைவன் திருவருளால் வீடு பேற்றையும் உயிர்கள் அடையும். எனவே சுத்த நிலையிலும் இறைவன் கொடுப்பவே உயிர்கள் கொள்ளும். இதுவே உயிரின் பண்பு ஆகும்.

85. ஞானமே ஆனபோது சிவன், தொழில் ஞானம், ஒக்கின்
ஈனம்இல் சதாசி வன்;பேர் ஈசன்ஆம், தொழிலது ஏறின்;
ஊனமேல் கிரியை வித்தை; உருத்திரன், இலயம் போகம்
ஆனபேர் அதிகா ரத்தோடு அதிகர ணத்தன் ஆமே.

மேலே கூறப்பட்ட இறைவனின் மூன்று சத்திகளுள்ளே இச்சாசக்தி என்னும் திருவருள் எப்போதும் எவ்விடத்தும் ஒரே தன்மை உடையதாய் விளங்கும். ஞான சத்தியும் கிரியா சத்தியும் என்னும் இவை இரண்டும் தனித்தும் ஒத்தும், கூடியும் குறைந்தும் விளங்குகின்ற நிலையில் ஒவ்வொன்றும் தனித்தனிப் பெயர் பெறும். முற்றிலும் அறிவே வடிவாக இறைவன் நிற்கின்ற நிலை சிவம் என்று பெயர் பெறும். முழுவதும் ஆற்றல் வடிவாகச் செயல்படும்போது சத்தி என்று பெயர் பெறும். ஞானமும் கிரியையும் ஆகிய இரண்டும் ஒத்து நிற்கின்ற  நிலை சதாசிவம் எனப்படும். செயல் ஆற்றல் மிகுந்துஞானம் குறைந்து செயல்படும் போது மகேசுவரம் என்ற பெயர் பெறும். செயலாற்றல் குறைந்து அறிவு ஆற்றல் மிகுந்த நிலை சுத்தவித்தை என்று பெயர் பெறும். இந்த நிலைவேறுபாடுகள் ஐந்தும் இலயம், போகம், அதிகாரம் என்று மூன்றாகக் கூறப்பெறும்.

இலயம், போகம், அதிகாரம் என்னும் மூன்றும் இறைவனின் செயல் வேறுபாட்டுக்கு ஏற்ப மூன்றாகக் கூறப்படும் எனினும் அதனால் அவன் விகாரம் அடைவான் அல்லன் என்பது பின்வரும் பாடல்களில் ஆசிரியரால் விளக்கப்படுகிறது.

86. வித்தையோடு, ஈசர், சாதாக் கியம், சத்தி, சிவங்கள் ஐந்தும்
சுத்ததத் துவம்;சி வன்தன் சுதந்திர வடிவம் ஆகும்;
நித்தம் என்று உரைப்பர்? காலம் நீங்கிய நிலைமை யாலே
வைத்திலர், முற்பிற் பாடு; வருவித்தார், கருமத்தாலே.

சுத்தவித்தை, மகேசுவரர், சதாசிவர், சத்தி, சிவம் ஆகிய இவ்வைந்தும் சுத்ததத்துவங்கள் என்றும் கூறப்பெறும். இவை யாவும் சிவபெருமான் தன்வயமாகவே நின்று ஏற்றுக் கொள்ளும் திருவடிவங்கள் ஆகும். அன்றியும் இவை என்றும் அழியாதவை என்றும் பெரியோர் கூறுவர். சுத்த தத்துவமாகிய இவை ஐந்தும் காலம் என்னும் தத்துவம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியனவாகும். எனவே அவை காலதத்துவத்தைக் கடந்தவை என்று கொள்ளப்பெறும். ஆதலால் இவற்றுக்குக் கால வயப்பட்ட முன் பின் என்று வரிசை முறை கூறப்படுவதில்லை. எனினும் ஞானம் கிரியை ஆக இரண்டு சத்திகளும் செயற்படும் முறைபற்றி முன்பின்னாகக் கூறினர்.

 
மேலும் சிவஞான சித்தியார் »
காப்பு - கணபதி வணக்கம்1. ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன்நால்வாய் ஐங்கரத்தன் ஆறுதரு கோட்டம் ... மேலும்
 
சாதாக்கியம்- சதாசிவம்.87. ஒருவனே, இராவ ண ஆதி பாவகம் உற்றாற் போலத்தருவன், இவ் உருவம் எல்லாம்; தன்மையும் ... மேலும்
 
245. அறிபொருள் அசித்தாய் வேறாம்; அறிவுறாப் பொருள் சத்து என்னின்அறிபவன் அறியானாகில் அது இன்று பயனும் ... மேலும்
 
ஒன்பதாவது நூற்பா292. பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலேநேசமொடும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar