பதிவு செய்த நாள்
11
ஜன
2017
03:01
அன்புள்ளம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் சாதகமான 3ம் இடத்திற்கு வந்துள்ளார். சுக்கிரன் ஜன.28ந் தேதி இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மையே தருவார். இதனால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். உடல் நலம் சிறப்படையும். சந்திரன் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். இதனால் பிற்போக்கான நிலை ஏற்படாது. மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதிலும் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். குரு பகவான் ஜன.16ல் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலை. அவரால் பொருள் விரயம் ஏற்படலாம். தொழில் வகையில் சில பிரச்னைகள் உருவாகலாம். வீண் அலைச்சல் ஏற்படும். இருப்பினும், மொத்த கிரகச்சூழல் அடிப்படையில் குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். நண்பர்களால் உதவி கிடைக்கும். ஜன.27க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும். ஜன.22,23,24ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். பெண்களால் பொருள் சேரும். ஜன.17,18,19ல் விருந்தினர்கள் வருகையும், அவர்களால் உபகாரமும் ஏற்படும்.
பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். புதனால் அலுவலகத்தில் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் கவலை முதலியன ஜன.30க்கு பிறகு மறையும். உங்கள் பொறுப்புகளை நீங்களே கவனிக்க வேண்டும். மற்றவர்களிடம் ஒப்படைத்தால் பிரச்னைகள் வருவதைத் தவிர்க்க இயலாது. ஜன.15,16 பிப்.11,12ல் சிறப்பான சலுகைகளை எதிர்நோக்கலாம். எதிலும் வெற்றி காணலாம். தனியார் துறை பணியாளர்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சூரியனால் பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். ஜன.30க்கு பிறகு போட்டியாளர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். ஜன. 20,21,25,26ல் சந்திரனால் விற்பனையில் சிறு தடைகள் வரலாம். பிப்.3,4ல் விற்பனை
பெருக்கத்தால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். போட்டியாளர்களின் இடையூறும் இத்துடன் முடிவுக்கு வரும்.
கலைஞர்கள் புகழ், பாராட்டு கிடைக்க பெறலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஜன.27க்கு பிறகு, சக கலைஞர்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்தைப் பெறலாம்.
அரசியல்வாதிகளுக்கு ஓரளவு பலன் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணபலன் விஷயத்தில் எதிர்பார்த்தது கிடைக்கும்.
மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அசட்டையாக இருந்து விட வேண்டாம். அதிக சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும்.
விவசாயிகள் சுமாரான வருமானத்தைக் காண்பர். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பசு, கன்றுகள் மூலம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும்.
பெண்கள் குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவார்கள். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வேலை பார்க்கும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். இருப்பினும் வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. ஜன.27,28, 29ல் நகை, புத்தாடை வாங்கலாம். பிப்.5,6ல் உல்லாசப்பயணம் செல்ல வாய்ப்புண்டு. சகோதரிகளால் பண உதவியும், பிற உதவிகளும் கிடைக்கும். குழந்தைகளின் நடத்தையை கண்காணிப்பது நல்லது. உடல்நலம் சிறப்படையும். கண் நோயால் அவதிப்பட்டவர்கள் குணம் அடைவர். ஜன.14 பிப்.1,2,9,10ல் மனக்குழப்பம் ஏற்படலாம். கவனமாக செயல்படவும்.
நல்ல நாள்: ஜன. 15,16,17,18,19,22,23,24,27,28,29, பிப். 3,4,5,6,11,12.
கவன நாள்: பிப். 7,8 சந்திராஷ்டமம். இந்தக் காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். சாப்பிடும் முன்பு காகத்திற்கு அன்னமிடுங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். நாகதேவதையை வணங்கி வாருங்கள்.