பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
04:07
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை செய்தனர். இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இந்து சமய உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், திருவண்ணாமலை மோகன் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ் மற்றும் அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். சென்னை, வேலூர், புதுச்சேரி, கடலூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.