அயோத்தி விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைப்பதாக சமீபத்தில் இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என அனுமதி அளித்தது. 3 மாதங்களில் டிரஸ்ட் அமைத்து, ராமர் கோயில் பணிகளை துவக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூறி இருந்தது.
இதனையடுத்து கோர்ட் வழிகாட்டுதலின் பேரில் டிரஸ்ட் அமைக்கும் பணியை மத்திய அரசு துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ராமர் கோயில் கட்டும் பணிகளையும் விரைவாக துவக்கவும், தாங்கள் வாக்குறுதி அளித்தபடி பிரம்மாண்ட ராமர் கோயில் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மகர சங்கராந்தி அன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2022ம் ஆண்டு உ.பி., தேர்தல் சமயத்தில் கோயில் பணிகளை முழுமையாக முடிக்க உ.பி., திட்டமிட்டுள்ளது. இதனால் ராமர் கோயில் அமைப்பதற்கு உள்ள அனைத்து தடைகளையும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நீக்கி வருவதாக கூறப்படுகிறது. 1989 ம் ஆண்டு முதல் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பு வடிவமைத்த வடிவிலேயே கோயிலை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் கட்டுவதற்கு தேவையான பொருட்களை சேகரிக்கும் பணியை விஷ்வ இந்து பரிஷித் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் இருந்து இந்து அமைப்புக்கள் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான செங்கல்கள், ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.