பதிவு செய்த நாள்
11
நவ
2019
12:11
விஜயநகர பேரரசர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆதிசென்னமநாயக்கர். 1575ல் கோட்டைப்பட்டி கிராமத்தை உருவாக்கினார். அவர் அருகில் உள்ள பொன்மலையில் பசுக்களை மேய்த்த போது கன்று ஈனாத பசு மலை உச்சிக்குச் சென்று பகவானுக்கு தன் மடியில் பால் அருந்தச் செய்வது வழக்கமாக நடந்து வந்தது. இக்காட்சியை கண்ட சென்னமநாயக்கர் பகவானை வழிபட்டார். பகவான் அவரிடம், ‘எம்மை நீயுன் பதியுடன் பரிபாலனம் செய்எம்மையணுகிய அன்பர்களுக்கு அருள்’எனக் கூறி அருகில் இருந்த உசிலை மரத்தில் மறைந்தார். காலப்போக்கில் இத்தலம் பக்தர்களின் அருள் காணிக்கைகளால் பரிணாம வளர்ச்சி பெற்றது.
ஆதி சென்னம நாயக்கரின் வழித்தோன்றலில் 8 வது தலைமுறை சென்னமநாயக்கர் 1960ல் பரம்பரை பூசாரியானார். வேண்டிய வரங்கள் கிடைக்கப்பெற்ற பக்தர்களால் கற்களும், முட்களுமாக இருந்த கோயில் பாதை படிக்கட்டுகளாய் மாறியது. இப்படி உருவானவை 450 படிகள். 1992ம் ஆண்டு முதல் கும்பாபிேஷகம் நடந்தது. பொன்மலையின் அணிகலனாக சென்றாயப்பெருமாளும், காவல் தெய்வங்களாகவும், உற்சவ மூர்த்திகளாகவும் கம்பத்தடியார், யானைக்கருப்பு ஆகியோர் உள்ளனர். ஆண்டு தோறும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் யாக பூஜைகள், வருடாபிேஷகம் நடக்கிறது. தியானம் செய்ய 8 துாண்களுடன் மண்டபம்; அன்னதானத்திற்கு 16கால் மண்டபம்; அங்கபிரதட்சணம் செய்ய 48 கால் மண்டபம் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
பங்குனி திருவிழா: ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும். 21ம் நாள் வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாட்கள் நடக்கிறது. கோயில் நிர்வாகஸ்தர்கள், பரம்பரை பூசாரி கண்ணன் என்ற சென்னமநாயக்கரால் திருவிழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷ நாட்கள். ஆடிப்பெருக்கு, கார்த்திகை பவுர்ணமி, கார்த்திகை தை முதல் தேதியில் இரவு பூஜை, 2 ஆண்டுக்கு ஒரு முறை பங்குனித் திருவிழா நடைபெறும். அன்னதானம், சிறப்பு பூஜைக்கு பரம்பரை பூசாரி கண்ணன் என்ற சென்னமநாயக்கரிடம் 87605 98884ல் பேசலாம். வத்தலக்குண்டு நகரில் இருந்து 3 கி.மீ., ல் பெரியகுளம் ரோட்டில் பிரிந்து சென்றால் இக்கோயிலை அடையலாம்.