பதிவு செய்த நாள்
11
நவ
2019
12:11
பொள்ளாச்சி: வெட்சி வீரர்களால் கவர்ந்து சென்ற ஆநிரைகளை (பசுக்கள்) மீட்கும் கரந்தை வீரனின் நடுகல், பொள்ளாச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இது, 11ம் நுாற்றாண்டை சேர்ந்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சமத்துார் குறுஞ்சேரியில், ஏரிக்கரையோரம் ஒரு தோட்டத்தில், மண்ணில் புதைந்த நிலையில், புடைப்பு சிற்பமாக, ஒரு நடுகல்லை தொல்லியியல் ஆய்வாளர் தமிழ்மறவன் ரமஷே் கண்டறிந்துள்ளார்.
பழங்காலத்தில், கால்நடைகள் பெரும் செல்வமாகும். அப்போது, ஆநிரைகளை கவர்ந்து செல்வோரிடமிருந்து, அவற்றை மீட்கும் போரில், இறந்த வீரனின் நடுகல்லாக, இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.தொல்லியியல் ஆய்வாளர் கூறியதாவது:நடுகல், இரு வீரர்கள் சண்டையிடுவதாக அமைந்துள்ளது. அதில், வலதுபுறம் உள்ள வீரன், இடது புறம் உள்ள வீரனை காட்டிலும் சற்று உயரம். வீரன், இரு காதுகளிலும் பெரிய வளையங்கள் அணிந்துள்ளார். கழுத்தில் மாலையும் தென்படுகிறது. நீண்ட தலைமுடியை சுருட்டி கொண்டையிட்டுள்ளார். இந்த அமைப்பு, பந்து போல் காட்சியளிக்கிறது.இதில், வீரன் கரந்தை பூ சூடிய வீரனாக இருக்கலாம். தொல்காப்பிய புறத்திணையில் குறிப்பிட்டது போல், இவர் கரந்தை பூச்சூடியே போரிடுகிறார் என நம்புகிறேன். மேலும் இவ்வீரன், இடது புறம் உள்ள வீரனின் தலைமுடியை இடது கையால் பிடித்தவாறு, வலது கையில், குருவாளால் அவரது வயிற்று பகுதியில் குத்துவது போல அமைகிறது.இடது புறம் உள்ள வீரன், இரண்டு காதுகளில் பெரிய வளையங்களும் கழுத்தில் மாலையும் அணிந்துள்ளார். வலது கரம் ஒரு குத்து வாளுடன், தனது முடியை பிடித்துள்ள வீரனது கையை தடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இவ்வீரனின் தலைமுடிக் கொண்டையும் சற்று வித்தியாசப்பட்டுள்ளது.
தலையில் வெட்சிப்பூ சூடி போரில் ஈடுபட்டிருப்பார் என நினைக்கிறேன். வெச்சி பூ என்பது தற்சமயம் இட்டலி பூ என்கின்றனர். நடுகல்லின் இடதுபுற மேல் பகுதியில் வில்லும், அம்பும் செதுக்கப்பட்டுள்ளதால், இது வேடர்களை குறிப்பிடலாம். குறிஞ்சேரி நடுகல், வலது புறம் உள்ள வீரனை சற்று உயர்த்திக் காட்டியுள்ளதால், இது ஆநிரை மீட்டல் நடவடிக்கை என கருதுகிறேன். இவ்வாறு, அவர்கள் கூறினர். முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் பூங்குன்றன் கூறுகையில், இது, 11 அல்லது 12ம் நுாற்றாண்டுக்குரியது. கோவை மாவட்டத்தில், சில இடங்களில் காணப்படுகிறது, என்றார்.