Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வாசீஸ்வரர், பசுபதிஸ்வரர்
  உற்சவர்: சோமாஸ்கந்தர்
  அம்மன்/தாயார்: மோகனாம்பாள், பசுபதி நாயகி
  தல விருட்சம்: மூங்கில்
  தீர்த்தம்: சோம, மங்கள தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காமீகம்
  ஊர்: திருப்பாசூர்
  மாவட்டம்: திருவள்ளூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

அப்பர், சுந்தரர், சம்பந்தர்


தேவாரப்பதிகம்


நாறு கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும் செஞ்சடை வைத்த அழகனார் காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர் பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே.


-அப்பர்


தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 16வது தலம்.


 
     
 திருவிழா:
     
  வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், மார்கழியில் திருவாதிரை, சிவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் இவருக்கு பாசுரநாதர் என்றொரு பெயரும் உண்டு. பாசு என்றால் மூங்கில் என்று பொருள்.சிவன் இங்கு லிங்க வடிவில், பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன் என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 249 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பாசூர் - 631 203, திருவள்ளூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 98944 - 86890 
    
 பொது தகவல்:
     
 

இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. இங்குள்ள தல விநாயகர் வலம்புரி விநாயகர். இங்குள்ள விமானம் கஜபிருஷ்டம்.


 
     
 
பிரார்த்தனை
    
  தடைபட்ட திருமணங்கள் நடக்கவும், தோஷங்கள் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியவுடன் விநாயகர் சபையில் 11, ஸ்ரீசக்கரத்தில் 5 நெய் தீபங்கள் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

சிவன் சன்னதிக்கு வலப்புறத்தில் அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறார். இதனை சிவன், அம்பாள் திருமணம் செய்த கோலம் என்பார்கள். இருவரது சன்னதிகளுக்கும் இடையே விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் அமைந்து சுப்பிரமணியர் என ஒரே வரிசையாக சிவ குடும்ப தெய்வங்கள் இருக்கிறது. இவ்வாறு கோயில்கள் அமைந்திருப்பது அபூர்வம்.


ராஜகோபுரத்திற்கு நேரே நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். மூலவர் விமானம் கஜபிருஷ்ட அமைப்பிலும், அம்பாள் விமானம், கோபுரம் போன்ற அமைப்பிலும் வித்தியாசமாக இருக்கிறது. கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையின் காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லாமல் காட்சி தருகிறாள்.


தாழம்பூ பூஜை : தனது தலை முடியைக் கண்டதாக பொய் சொன்ன (பிரம்மனுக்காக பொய் சொன்னதால்) தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோயிலில் சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். இந்த நேரத்தில் சிவனை தரிசித்தால் ஆணவம், பொய் சொல்லும் குணங்கள் மறையும் என்கிறார்கள்.


தங்காதலி அம்பாள் : தட்சனின் யாகத்திற்கு சென்றதால் பார்வதி தேவியை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும்படி சபித்தார் சிவன். சாபத்தால் பூலோகத்தில் இத்தலத்திற்கு வந்த அம்பாள், சிவனை வேண்டி தவம் செய்தாள். அவளுக்கு இரங்கிய சிவன், அம்பாளை "தன் காதலியே!' என்று சொல்லி அன்போடு அழைத்து அவளை மன்னித்து அருளினாராம். இதனால் இங்குள்ள அம்பாளை "தங்காதலி அம்பாள்' என்கின்றனர். இவளிடம் வேண்டிக்கொண்டால் தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. அம்பாளின் பெயரால் இவ்வூருக்கு "தங்காதலிபுரம்' என்ற பெயரும் உண்டு.


விநாயகர் சபை : விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு. இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை, "விநாயகர் சபை' என்கின்றனர். இதில் மூன்று விநாயகர்கள் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறத்தில் இருபுறமும் சிறிய விநாயகர்களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடப்புறத்தில் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர். அருகிலேயே கேது பகவான் தனியே இருக்கிறார்.


திரிபுராந்தகர்களை அழிக்கச் சென்ற சிவன் விநாயகரை வணங்காமல் செல்லவே அவரது தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார் விநாயகர். அவர் ஒரு சபை அமைத்து சிவனிடம், தன்னை வணங்காமல் சென்றது ஏன்? என கேட்டு விசாரணை செய்ததாகவும் விநாயகர் சபை உண்டானதற்கு மற்றொரு வரலாறு சொல்கின்றனர்.


சொர்ண காளி : இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தான். எனவே அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் ஒருவன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் சிவனிடம் தனக்கு உதவும்படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி காளியுடன் போரிட்டு அதனை வெற்றி பெற்றது. மேலும் காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். பின் மன்னன் இப்பகுதியை மீண்டும் கைப்பற்றினான்.


நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இக்கோயில் பிரகாரத்தில் நான்கு கைகளுடன் தனியே நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கால்களில் விலங்கு போடப்பட்டிருக்கிறது. பவுர்ணமி தோறும் மாலை வேளைகளில் இவளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


 
     
  தல வரலாறு:
     
 

பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து இங்கு ஒரு சிறு மேட்டின் மீது அடிக்கடி பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தான். மன்னன் மண்ணிற்கு அடியில் தோண்டி பார்க்க உத்தரவிட்டான்.


காவலர்கள் இவ்விடத்தில் வாசி எனும் கருவியால் தோண்டி பார்த்தனர். அப்போது மண்ணிற்கு அடியில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த மன்னன் அடியில் பார்த்தபோது சிவன், சுயம்பு லிங்கமாக இருந்தார். பயந்துபோன மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான்.


மறுநாள் மன்னனின் எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அன்றிரவில் தானே பாம்பாட்டியாக வந்ததையும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான். வாசி எனும் கருவியால் வெட்டுப்பட்ட சிவன் என்பதால் இவர், "வாசீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார்.


புராண வரலாறு : மது, கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலைசெய்யமுடியவில்லை. எனவே,  மகாவிஷ்ணு மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.