Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு பம்லேஷ்வரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பம்லேஷ்வரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பம்லேஷ்வரி
  ஊர்: டோங்கர்கர்
  மாவட்டம்: ராஜ்நந்தகான்
  மாநிலம்: சட்டீஸ்கர்
 
 திருவிழா:
     
  நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  விக்கிரமாதித்தன் வழிபட்ட மிகப்பழமையான தலம் இது. அம்மனின் மிகப்புகழ்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பம்லேஷ்வரி திருக்கோயில் டோங்கர்கர், ராஜ்நந்தகான் மாவட்டம், சத்திஸ்கர் மாநிலம்.  
   
    
 பொது தகவல்:
     
  பம்லேஷ்வரி என்ற வித்தியாசமான திருப்பெயருடன், அம்பிகை அருளும் தலம், சத்திஸ்கர் மாநிலத்தில் டோங்கர்கர் என்ற இடத்தில் ஒரு குன்றின்மேல் அமைந்துள்ளது. இதன் புராதனம் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேற்பட்டது. ஆயிரத்து அறுநூறு அடி உயரம் உள்ள குன்றில் அமைந்துள்ளது மாதா பம்லேஷ்வரி ஆலயம். ஆயிரத்து நூறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். வயது முதிர்ந்தவர்களின் வழிபாட்டிற்கு வழிசெய்யும் வகையில், சோட்டி பம்லேஷ்வரி என பம்லேஷ்வரியின் சிறு ஆலயம் ஒன்றும் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. காமகந்தலா குதித்து உயிர் துறந்ததாகச் சொல்லப்படும் ஏரி இன்றும் அவள் நாமத்துடனேயே இங்கு காட்சி அளிக்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது பிராத்தனைகள் நிறைவேறவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்குள்ள தேவியை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து, புடவை சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  காளியாக பகுளாதேவி வடிவில் தோன்றிய தேவி பமலை, விமலா, என்ற நாமங்களுடன் வெவ்வேறு காலப் பகுதிகளில் அழைக்கப்பட்டு இன்று பம்லேஷ்வரியாக பக்தர்களுக்கு அருள்புரிய குன்றில் காட்சி தருகிறாள். அனுமனுக்காக இரண்டு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று அடிவாரத்தில் சோட்டி பம்லேஷ்வரி ஆலயம் அருகிலும் மற்றொன்று மலையில் ஏறிச் செல்லும் வழியிலும் உள்ளது. அதேபோல் படிகளில் ஏறிச் செல்லும்போது பம்லேஷ்வரி ஆலயத்தை அடையும் முன் சிவன் கோயிலையும் காணலாம். கோயிலில் அக்னிதேவனுக்கு என ஒரு யாகசாலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தினம்தோறும் காலை பத்து முதல் பன்னிரண்டு மணிவரை இங்கு யாகம் நடத்தப்படுகிறது. புராதனம், காவியம், தேவியின் அருள் ஆகியவை இந்த ஆலயத்தையும் நகரையும் சத்திஸ்கர் மாவட்டத்தின் ஒரு பெரியதீர்த்தத் தலமாக மாற்றியிருக்கின்றன. மங்கல் கரணி, சங்கட் ஹரணி என நல்லவைகளை ஈந்து கஷ்டங்களைப் போக்கும் சக்தியாக பம்லேஷ்வரி மாதாவைப் போற்றும் பக்தர்கள், சித் வரதாயினி ! எனவும் சித்திரித்து இந்தத் தலத்தினை ஒரு சித்த பீடமாகவும் கருதுகின்றனர்.  
     
  தல வரலாறு:
     
 

டோங்கர்கர் என்று இப்போது அழைக்கப்படும் இவ்விடத்தின் பழங்காலப் பெயர், காமாவதி நகர் என்பதாகும். டோங்கர் என்ற சொல் மலையை அல்லது குன்றைக் குறிப்பிடும். கர் என்ற சொல் இருப்பிடம் அல்லது வசிப்பிடத்தைக் குறிக்கும். இப்பகுதியை வீரசேனன் என்ற சீலம் மிக்க அரசன் ஆண்டுவந்தான். புத்திர பாக்கியம் இல்லாத அவன், பண்டிதர்களின் ஆலோசனைக்கேற்ப நர்மதைக்கரையில் இருந்த மண்டலா நகரில் சிவ பூஜைகள் செய்து ஒரு சிவாலயமும் எழுப்பினான். மண்டலா நகர் காசியை நிகர்த்த பெருமையைப் பெற்றது. மறுவருடமே ராணி கருவுற்று ஓர் ஆண் மகவை ஈன்றாள். இறைவனின் அருளைப் போற்றும் வண்ணம் வீரசேனன் காமாக்கிய நகர் குன்றில் பம்லேஷ்வரி கோயிலை நிர்மாணித்தான். வீரசேனனின் பேரன், காமசேனன். பராக்கிரமசாலியான அவனது பெயரை ஒட்டியே இந்நகர் காமாவதி அல்லது காமக்கியா என்றும் அழைக்கப்பட்டது. தேவி பம்லேஷ்வரியின் தீவிர பக்தன் காமசேனன் எனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காமசேனனின் அரசவையில் இருந்த கலைஞர்களுள் காமகந்தலா என்ற நர்த்தகியும் ஒருவள். அழகும் கலையும் பண்பும் அவளிடம் குடி கொண்டிருந்தன. அரசன் காமசேனனின் புத்திரன், மதனாதித்தன், பரம்பரை பரம்பரையாக வந்த சீலமும் பக்தியும் இளவரசனிடமிருந்து விலகியே இருந்தன. காமகந்தலாவைத் தன் தாசியாக்கும் குரூர எண்ணத்துடன் தக்க தருணத்திற்காகக் காத்திருந்தான்.


அதேகாலத்தில் காமாக்கிய நகரிலிருந்து சுமார் முந்நூறு கி.மீ. தொலைவில் இருந்த பிலஹாரி என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு கோவிந்தசந்திரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். (பிலஹாரி இப்போதைய மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டம்). அவனது புரோகிதர், சங்கர்தாஸ் என்பவர். அவரது புதல்வன் மாதவநல் என்ற இசைக்கலைஞன். அழகும் ஆண்மையும் மிகுந்த மாதவநல் வீணை வாசிப்பதிலும், வாய்ப்பாட்டிலும், இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றவன். அவனது இசை அனைவரையும் ஈர்த்து மயக்கவல்லது. ஒருநாள் அந்தப்புரத்தில் ராணி, அரசர் கோவிந்த சந்திரனுக்கு உணவு பரிமாறுகையில் மாதவநல் வீணையின் நாதம் அரசியின் காதில் விழ அவள் மெய் மறக்கிறாள். வெகுண்ட அரசன் மாதவநல்லை நாடு கடத்த உத்தரவிடுகிறான். அலைந்து திரிந்த மாதவநல் காமாக்கிய நகரை அடைகிறான். அந்த சமயம் ராஜநர்த்தகி காமகந்தலாவின் சிறப்பு நடனம் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆடல் பாடல் இசைக் கருவிகளின் ஒலி சங்கீத வித்வானாகிய மாதவநல்லை அரண்மனைப் பக்கம் விரைய வைக்கிறது. ஆனால், மன்னரின் கலை ரசனைக்கு இடையூறு வரும் எனக் கூறி காவலன், மாதவநல்லை உள்ளேவிட மறுக்கிறான். நகைத்த மாதவநல், நர்த்தகியின் கால் சலங்கையின் ஒரு பகுதியில் மணிகள் இல்லை ! கிழக்குப் புறம் அமர்ந்து மிருதங்கம் வாசிப்பவருக்கு இடதுகைப் பெருவிரலில் காயம்பட்டிருக்கிறது. அதனால் தாளம் தப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் என் வருகை மட்டும் எப்படி இடையூறு விளைவிக்கும்! எனக் கூறிவிட்டு நகர முற்படுகிறான். அரசவைக்குள் என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் ஆனால் உறுதியுடன் பேசிய மாதவநல் வாயிற்காப்போனைத் திகைக்க வைக்கிறான். உடனே காவலன் உள்ளே விரைந்து அரசருக்கு நடந்ததைத் தெரிவிக்கிறான். காமசேனன் அந்தக் கூற்றை ஆராய்ந்தபோது அது உண்மையெனத் தெரிகிறது. வியப்பில் ஆழ்ந்துபோன காமசேனன், மாதவநல்லை அரசவைக்குள் வரவழைத்து தன் கழுத்திலிருந்த முத்துமாலையை அவனுக்கு அணிவித்து மரியாதையும் செய்தான்.


காமகந்தலாவின் நாட்டிய சாதுர்யம் மாதவநல்லை அதிகம் ஈர்க்கிறது. ஒருவரையொருவர் விரும்பும் நிலைக்கு இருவரும் தள்ளப்படுகிறார்கள். ஒருமுறை அரசவையில் காமகந்தலாவின் நாட்டிய நேர்த்தியில் மயங்கிய மாதவநல் அவளைப் பாராட்டும் பொருட்டு தன் கழுத்திலிருந்த முத்துமாலையை (காமசேனன் அவனுக்கு அளித்திருந்த) அவளுக்கு அணிவித்து விடுகிறான். சினம்கொண்ட காமசேனன் மாதவநல்லை அந்த நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுகிறான். ஆனால் நாட்டைவிட்டு வெளியேறாமல் பம்லேஷ்வரி ஆலயம் அமைந்த குன்றின் கீழ்ப்புறம் இருந்த குகையில் மாதவநல் தங்குகிறான். சேடிப்பெண் உதவியுடன் மாதவநல், காமகந்தாலா ஆகிய இருவரின் சந்திப்பு இரவில் மூன்றாம் ஜாமத்தில் நீண்ட நாட்கள் தொடர்கிறது. காமகந்தலாவை தனது வசப்படுத்தும் எண்ணத்துடன் சுற்றி வந்த இளவரசன் மதனாதித்தனுக்கு இந்த விவரம் தெரிய வருகிறது. காமகந்தலா வெளியில் செல்ல முடியாதபடி அவள் இல்லத்திலேயே அவளை மதனாதித்தன் சிறை வைத்தான். நிராதரவான மாதவநல், காமகந்தலாவை மீட்க வழிதேடுகிறான். அந்த சமயத்தில் உஜ்ஜையினியை ஆண்டு கொண்டிருந்த விக்கிரமாதித்தியனின் வீரமும் சிறப்பும்தான் அவன் கண்கள் முன் தோன்றின. காலதாமதம் செய்யாமல் உஜ்ஜயினிக்கு மாதவநல் விரைந்தான். தினந்தோறும் சிவனை வழிபடும் வழக்கம் சக்கரவர்த்தி விக்கிர மாதித்தியனுக்கு உண்டு என்பதை மாதவநல் அறிந்துகொண்டான். ஆலயத்தின் மதிற்சுவர்களில் குணசீலனான மன்னனை ஈர்க்கும் பொருட்டு, பொருள் பொதிந்த செய்யுளைப் பொறித்து வைத்தான்.


மாதவநல்லின் நம்பிக்கை வீண் போகவில்லை! செய்யுள் மூலம் எழுதியவரின் புலமையை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தியன் தனது காவலர்களை அனுப்பி எழுதியவரை மரியாதையுடன் அழைத்து வரச் செய்தான். மாதவநல்லுக்கு அந்த சந்தர்ப்பம் போதுமானதாக இருந்தது. காமாக்கிய நகரில் அவன் நர்த்தகி காமகந்தலாவுடன் கருத்தொருமித்ததை விக்கிரமாதித்தியன் முன் வினயமுடன் உரைத்தான். மனம் நெகிழ்ந்த விக்கிரமாதித்தியன் காமகந்தலாவை மாதவநல்லிடம் ஒப்படைக்குமாறு வேண்டி காமசேனனுக்கு ஓலை அனுப்பினான். ஆனால் காமசேனனின் புத்திரனான மதனாதித்தியன் வெகுண்டு அந்த ஓலையை தீயிட்டாள். தூதர்கள் மூலம் தனக்கு ஏற்பட்ட அவமரியாதையைத் தெரிந்துகொண்ட விக்கிரமாதித்தியன் வேறு வழியின்றி காமாவதி நகர் மேல் படையெடுத்து இளவரசன் மதனாதித்தியனை வீழ்த்தி, காமகந்தலாவை மீட்டு வந்தான். வழியில், விக்ரமாதித்யன் மனதில் மாதவநல் காமகந்தலாவின் பிணைப்பு உண்மையானதா என்று சோதிக்க யோசனை எழுந்தது. போரில் மாதவநல் உயிர் துறந்துவிட்டான் என்று காமகந்தலாவிடம் தன் வீரர்களை அனுப்பிக் கூறச் செய்தான். அதுவே விபரீத விளைவாகியது. பெரும் துயரம் அடைந்த காமகந்தலா நகரில் இருந்த ஏரி ஒன்றில் குதித்து உயிர் துறந்தாள். காமகந்தலா இறந்த சேதியைக் கேட்ட மாதவநல்லும் தன்னை மாய்த்துக் கொண்டான். பெரும் வெற்றி முழுத்தோல்வியாக மாறியதை எண்ணி விக்கிரமாதித்தியன் மனம் வருந்தினான். பம்லேஷ்வரி ஆலயத்தில் இடைவிடாமல் கோரதவம் செய்தான். இறுதியில் தன் ஜீவனையும் தியாகம் செய்ய முயற்சி செய்தான். அவனைத் தடுத்தாட்கொண்ட தேவி அவன் முன்தோன்றி அவன் வேண்டியபடி மாதவநல். காமகந்தலாவை உயிருடன் எழச் செய்தாள். துர்க்கையின் உக்ர வடிவாகத் தோன்றிய தேவி, விக்கிரமாதித்தியனின் வேண்டுகோளுக்கிணங்க, பம்லேஷ்வரி என்ற நாமத்துடன் அக்குன்றில் வாசம் செய்ய ஒப்புதல் அளித்தாள்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: விக்கிரமாதித்தன் வழிபட்ட மிகப்பழமையான தலம் இது. அம்மனின் மிகப்புகழ்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.