Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சோழீஸ்வரர்
  அம்மன்/தாயார்: தில்லைநாயகி
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: கிணற்று நீர்
  ஆகமம்/பூஜை : காமிக ஆகமப்படி மூன்று கால பூஜைகள்
  ஊர்: சாமளாபுரம்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இக்கோயிலில் பிரதோஷம், அமாவாசை, கார்த்திகை, பவுர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் உண்டு. மகாசிவராத்திரியும், ஆருத்ரா தரிசனமும் வருட முக்கிய பெருவிழாக்கள். அதுதவிர ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகமும், மாசி அமாவாசையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  பிப்ரவரி 16,17 மற்றும் 18-ம் தேதிகளில் மாலை 5.30 முதல் 6 மணி வரை சூரிய ஒளி ஈசன் மீது படர்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில், சாமளாபுரம், பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 98422-87461, 90470-87461 
    
 பொது தகவல்:
     
  சாமளாபுரத்தின் வடக்கு எல்லையாகத் திகழ்வது நொய்யல் ஆறு. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது பழமொழி. சாமளாபுரம் ஊருக்கு அழகூட்டி வளம் தந்த நொய்யல் ஆறு தற்போது வறண்டு காணப்படுகிறது. கரிகாலனுக்குப் பின்னர் முறையான பராமரிப்பு இல்லாமலும், இயற்கைச் சீர்கேடாலும் கோயில் சிறிது சிறிதாக சிதிலமடைந்தது. இந்நிலையில் ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடிப் பேசி கோயிலை புனர்நிர்மாணம் செய்ய முடிவெடுத்தனர். அதற்கென ஒரு குழுவும் அமைத்தனர். பாலாலயம் அமைக்கப்பட்டு பூஜைகள் தொடர்ந்து நடந்து வந்தன. 1999-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் நாள் அன்று திருப்பணி துவக்கப்பட்டது. முன்பிருந்த கோயிலில் 63 நாயன்மார்கள் சன்னிதி, சனிபகவான் சன்னிதி மற்றும் ராஜகோபுரம் இல்லை. எனவே, அவற்றை அமைக்க முடிவு செய்தனர்.

14 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த திருப்பணிகள் செவ்வனே நிறைவடைந்து 2013-ம் வருடம் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேற்கு நோக்கி அமைந்த கோயில். பொதுவாக மேற்கு நோக்கிய சிவன்கோயில்களுக்கு ஆற்றல் அதிகம் என்பர். வெளியே மண்டபத்துடன் கூடிய நெடிதுயர்ந்த விளக்குத் தூண் உள்ளது. அடுத்து ஐந்து நிலை ராஜகோபுரமும், தொடர்ந்து 16 தூண்களைக் கொண்ட மகா மண்டபமும் உள்ளது. நான்காயிரம் சதுர அடி பரப்பளவில் சித்திர மண்டபம் போல் காட்சிதரும் மகா மண்டபம் சோழீஸ்வரர், தில்லைநாயகி சன்னிதிகளை இணைத்து ஒரே மண்டபமாகத் திகழ்கிறது. கருவறையில் சோழீஸ்வரர் என்ற திருநாமத்தில் இறைவன் எழுந்தருள, கோஷ்டத்தில் சிவதுர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி மற்றும் நர்த்தன விநாயகர் அருள்கின்றனர். தேவி நாற்கரங்களுடன் நின்ற கோலத்தில் தில்லைநாயகி என்னும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.

திருவாச்சியுடன் ஒரே கல்லினாலான சிலாரூபம். திருச்சுற்றில் வராகி, பிராம்மி, வைஷ்ணவி அருள்கின்றனர். மகாமண்டபத்தில் நந்திகேஸ்வரர் இறைவனை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார். உட்பிராகாரத்தில் சூரியன், சந்திரன், தண்டாயுதபாணி, வள்ளி - தேவசேனா சமேத சுப்ரமணியர், பைரவர், சனிபகவான், நவகிரகம், சண்டிகேஸ்வரர், பஞ்சலிங்கம், அறுபத்துமூவர் ஆகியோர் தனிச்சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளனர். கன்னிமூலையிலும், அர்த்த மண்டபத்திலும், கோஷ்டத்திலும் விநாயகர் அருள்பாலிக்கின்றார். நொய்யல் நதிவற்றிவிட்டதால் கிணற்று நீர் தீர்த்தமாக உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  மனசஞ்சலம் நீங்கவும், குழந்தைபேறுக்காகவும் இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  ஈசனுக்கு சோமவாரத்தில் இளநீர் அபிஷேகமும், கமல தீபமும் (சுவாமிக்கு பின்னால் உள்ள தீபம்) ஏற்றி 12 வாரங்கள் வழிபட்டால் மனசஞ்சலம் நீங்கும். அம்பாளுக்கு சஷ்டி மற்றும் பவுர்ணமியன்று பால், தேன், அபிஷேகம் செய்து வழிபடும் தம்பதியருக்கு புத்திரபாக்யம் கிடைக்கும் என்று பலன் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். 
    
  தல வரலாறு:
     
  முற்கால  மன்னர்கள் வனத்தை சீர்படுத்தி நாடாக்கி, குளம் வெட்டி, வளம் பெருக்கி, கோயில் நிர்மாணித்து குடிகளை அமர்த்தினர். அப்படி அமைக்கப்பட்ட கோயில்களுள் சாமளாபுரம் சோழீஸ்வரர் கோயிலும் ஒன்று. ஊரும், கோயிலும் மன்னன் கரிகாலன் காலத்தில் உருவானது என்பதை சோழன் பூர்வ பட்டயம் உறுதி செய்கிறது. சோழ மன்னர் மரபில் வந்த உத்தம சோழனின் மகன், உறையூர் சோழன். அவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டபோது அங்கு சமய முதலி, கஸ்தூரி ரங்கப்ப செட்டியார், திருவெண்ணெய் நல்லூர் சடையப்பன் ஆகியோர் சமயத் தலைவர்களாக இருந்தனர். சோழனின் ஆட்சியில் அநீதி தலையெடுத்து மக்களை வாட்டியதால் நாட்டில் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் நலிவுற்றனர். எனவே, தங்களைக் காத்திட அம்மனை வேண்டினர். உறையூரில் இருந்தால் தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் தேவியால் பாதிப்பு வரும் என பயந்துபோன சோழன், கர்ப்பிணியான மூத்த மனைவி சிங்கம்மாளையும், இளைய மனைவி சாமளாம்மாளையும் கொங்கு நாட்டிற்கு அனுப்பி வைத்தான். பின்னர் குதிரை மீதேறி அவன் தப்பிச் செல்லும் போது, நெற்றிக்கண்ணைத் திறந்து சோழனை அழித்தாள், தேவி. கொங்கு நாடு வந்தடைந்த அரசியர் இருவரும் அக்ரஹாரம் ஒன்றில் தங்கினர். உரிய நாளில் சிங்கம்மாள் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அவன் வளர்ந்து கல்வி, கலைகளில் வல்லவன் ஆனான்.

இந்நிலையில் உறையூரில் சமூகத் தலைவர்கள் மூவரும் நாட்டுக்கு ஓர் அரசர் இல்லையே என வருந்தினர். காசிக்குச் சென்று விசாலாட்சி அம்மனைத் தொழுது, அங்கிருந்த வெள்ளை யானையை அழைத்துக் கொண்டு திருவாரூர் வந்தடைந்தனர். தியாகராஜரை வணங்கி, அவர் கழுத்தில் இருந்த மாலையைப் பெற்று வெள்ளையானையின் துதிக்கையில் கொடுத்து, நீ யாரைத் தேர்வு செய்தாலும் அவர்தான் எங்கள் மன்னர் எனக் கூறி அனுப்பி வைத்தனர். வெள்ளை யானை ஒவ்வொரு இடமாகச் சென்று கொங்கு நாட்டிற்கு வந்தது. குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிங்கம்மாளின் 12 வயதுச் சிறுவனுக்கு மாலையைப் போட்டு, தன் மீது ஏற்றிக்கொண்டு சோழநாடு புறப்பட்டது. செய்தியறிந்த சிங்கம்மாளும், சாமளாம்மாவும் அங்கு வந்து யானையை வணங்கினர். மண்ணால் மகனுக்குத் திலகமிட்டு, கரிகாலன் எனப் பெயர் சூட்டி, வாழ்த்தினர். பின்னர் யானையிடம், உனது ராஜாவை கூட்டிச் செல் என்றனர். தங்களை அவ்வளவு காலம் பாதுகாத்த இராமபட்டருக்கு சிங்கம்மாள் சிங்காநல்லூர் என்ற அக்ரஹாரத்தையும், சந்திரபட்டருக்கு சாமளம்மாள், சாமளாபுரம் என்ற அக்ரஹாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். வெள்ளை யானை கரிகாலனை ஏற்றிக் கொண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் முன் வந்து நின்றது.

சமூகத் தலைவர்கள் மிகவும் மகிழ்ந்தனர். மனுநீதிச்சோழன் என பெயர் சூட்டி, வேளாளர் குடியில் சிறந்த பெண்ணைத் தேர்வு செய்து அவனுக்குத் திருமணம் செய்வித்தனர். அரசனுக்கு ஒரு மகன் பிறந்தான். இளவரசன் சிறுதேரை சாலையில் ஓட்டி விளையாடியபோது பசுங்கன்று ஒன்று அதன் சக்கரத்தில் சிக்கி மாண்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியடிக்க, விபரம் அறிந்த கரிகாலன், தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்றான். அதனால் பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. மனநலமும் அவனை பாதித்தது. சமயத் தலைவர்கள் ஏகாம்பரநாதரை வேண்டினர். அவர் காமாட்சியன்னையிடம் , நீ குறத்தி வடிவில் சென்று ஆருடம் சொல்லி, அவன் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவாயாக எனக் கூறினார். குறத்தியாக வந்த காமாட்சி, கரூர் முதல் வெள்ளியங்கிரி முட்டம் வரை கொங்கு நாட்டில் பல சிவன்கோயில் கட்டி, மக்களைக் குடியேற்றி மானியங்களை ஏற்படுத்தினால் உமது பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று அரசரிடம் கூறினாள். அவ்வாறே செய்வதாக வாக்களித்தவுடன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அதன்படி அவன் அமைத்த சிவன்கோயில்களுள் ஒன்றுதான் சோழீஸ்வரர் கோயில்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பிப்ரவரி 16,17 மற்றும் 18-ம் தேதிகளில் மாலை 5.30 முதல் 6 மணி வரை சூரிய ஒளி ஈசன் மீது படர்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.