அருள்மிகு நாதகிரி முருகன் திருக்கோயில் |
அருள்மிகு நாதகிரி முருகன் திருக்கோயில்,
ராயகிரி நகர், அத்துவானக்கட்டி மலை
நெல்லை. |
நெல்லை மாவட்டத்திலுள்ள சிவகிரி நகரின் நேர்கிழக்காய், ராயகிரி நகருக்கு அருகே, அத்துவானக்காட்டின் மலைமீது அமைந்துள்ளது நாதகிரி முருகன் கோயில். |
நாலுமறைப் பொருளோனே நாதகிரிப் பெருமானே! அருணகிரிநாதர் நாதகிரிப் பெருமானைப் போற்றிப்பாடிய பாடல் இது. உமாதேவியின் கணநாதனின் பார்வைபட்ட இடம் நாதகிரி முருகன் கோயில். நாதகிரி முருகனின் கோயிலில் நடக்கும் அதிசயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. கீரியும் பாம்பும் ஒன்றாக இணைந்துவந்து பாலருந்திச் செல்லும் அதிசயம் இங்கே தான் நடக்கிறது. தேவேந்திரனின் மகன் சேந்தன் என்பவன் அசுரர்களுக்கு அஞ்சி அலைந்து கொண்டிருந்த சமயம், அவன்முன் தோன்றிய சிவபெருமான் நாதகிரியில் தவம் செய்யும்படி கூறினார். சேந்தனும் நாதகிரி மலைக்கு வந்து கடுந்தவம் புரிந்தான். அசுரர்களை அழித்துவிட்டு நாதகிரி வந்த முருகப்பெருமான், அகத்தியர், அனுமன், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், வாமதேவன் உடனிருக்க சேந்தனுக்கு அருள்புரிந்தார் என்பது இத்தல வரலாறு. இதற்கு அடையாளம் இங்குள்ள உருவச் சிலைகளே. முருகப் பெருமானின் தரிசனம் கண்ட தேவர் கூட்டம், ஓம் நமச்சிவாய என முழங்க, அந்த நாதம் கயிலாயத்தை எட்டியது. அதன்காரணமாக நாதகிரி என்னும் பெயர் இத்தலத்திற்கு நிலைத்தது.
இமயம், விந்தம், நீலகிரி, சதுரகிரி, சிவகிரி, ராயகிரி சேர்ந்ததொரு நாதகிரி என்றவாறு, அஷ்டகிரிகளில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. அகத்தியரும் சந்திரனும் சூரியனும் வணங்கிய இந்த மலையில் பாம்பாட்டிச் சித்தர் உட்பட 18 சித்தர்களும் தவம் மேற்கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக முனிவர்களின் தவநிலைக் கோலமும், கமண்டலமும், ஆசனக்கற்களும், எலும்புக்கூடுகளும் இம்மலையின் குகைகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன. மனத்திட்பம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு செல்லமுடியும் என்று கூறுகின்றார்கள். இங்கே சப்தகன்னியர் நீராடிய சுனை உள்ளது. இந்த தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோயெல்லாம் தீர்ந்துபோகும் என்று சொல்லப்படுகிறது. இந்த சுனையின் அடியில் விநாயகப் பெருமானின் பீடம் உள்ளது. சுனையில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் பொடி, எலுமிச்சைப் பழம் ஆகியவை எப்போதும் காணப்படும். சுனையின் அடியிலிருக்கும் விநாயகப் பெருமானை தரிசிக்க லட்சுமி அம்மையாரும், நன்னி அம்மையாரும் தண்ணீரில் இறங்கும்போது, அவர்களுக்கு வசதியாக நீர் விலகி வழியமைத்துக் கொடுக்கும். அவர்கள் இருவரும் ஜீவசமாதி அடைந்தது அதனடியில்தான் என்பது வரலாறு.
சித்தர்களும் முனிவர்களும் நாதகிரி மலையில் தவம் மேற்கொண்டதால், அவர்களே மரமாகவும், செடியாகவும், மலையின்மீது பரவிக்கிடக்கும் கற்களாகவும் உள்ளனர் என்பர். அனைவரும் பகைமையை மறந்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்னும் தத்துவத்தை உணர்த்தும் பொருட்டு, சித்தர்களே பாம்பு, கீரி வடிவில் ஒன்றாக இணைந்து மலைக்குகையின் வழியே வந்து, வெள்ளிக்கிழமைதோறும் பாலும் பழமும் அருந்திச் செல்லுவது இன்றைய காலம்வரை தொடரும் அதிசயம். எனவே, இங்கேவரும் பக்தர்கள் முருகனை தரிசித்துவிட்டு மலைப்படிகளின் அருகிலுள்ள குகையில் பாலும் பழமும் வைத்துவிட்டுச் செல்வர். இம்மலையின் அருகிலுள்ள நெல்கட்டான் செவல் பாளையக்காரரான பூலித்தேவன், சங்கரன்கோவில் கோமதி அம்பிகை, சங்கரலிங்கப் பெருமானையும், நாதகிரி முருகனையும் வணங்குவதற்காக நெடிய குகை அமைத்து இவ்விரண்டு தலங்களையும் வழிபட்டு வந்திருக்கிறார். இதன் அருகிலுள்ள புளியங்குடி நகரிலுள்ள கற்பக நாச்சியாரின் திருமலை வெடித்தபோது, அதிலிருந்து கிளம்பி வந்ததுதான் நாதகிரி முருகனின் திருவுருவம் என்கிறார்கள். அந்த மூர்த்தியை உமையப்பதேவர் தன் தலையில் வைத்துக்கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். மாதக் கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், மகாசிவராத்திரி போன்ற காலங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆண்டான்-அடிமை, ஏழை- பணக்காரன் என்கிற வித்தியாசம் எள்ளளவுமின்றி, ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் ஒன்றுதான். என்பதை நாதகிரிமலை பறைசாற்றுகிறது. |
பூஜை நேரம்: - |
அருள்மிகு குமாரசாமித் திருக்கோயில் |
அருள்மிகு குமாரசாமித் திருக்கோயில்,
திருமலை அஞ்சல்,
வழி தென்காசி,
செங்கோட்டை வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்,
627811. |
+91 4633-237131, 237343, 9443506977, 9443087005 | தென்காசியிலிருந்து திருமலைப் பேருந்து மார்க்கத்தில் உள்ளது. குமாரசாமிக்கோயில் 626 படிகள் கொண்டது. இதில் சுமார் 300 படிகள் பாறையாகவும் மற்றொரு பாதை 225 படிகள் கொண்டு சாய்வாக அமைந்துள்ளது. வடகிழக்கே அறம் வளர்த்த நாயகி உடனுறை நகரீசுரமுடையார் கோயிலும் உள்ளது. |
மலை மேல் அமைந்த கோயில். சண்முகர் முத்தையன் என்பது உற்சவர். திருமலை என்கிற பெயரில் அருணகிரிநாதரும் திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியர் விஜயம் பத்திரிக்கையில் விசாக நட்சத்திரத்திற்கு உரிய தலமாகக் கூறப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வழிபட்ட தலம். நகரம் சங்கர பாண்டியனார் இயற்றிய திருமலைக் குமாரசுவாமி திருப்புகழ், செங்காட்டைப் பண்டாரத்தைய்யா இயற்றிய திருமலை முருகன் பிள்ளைத்தமிழ், சிவராமலிங்கப் பிள்ளை தந்த தல புராணம், வள்ளியப்பன் பாடிய ஷோடசபதிகம், அலங்காரப் பிரபந்தம், திருமணிமாலை ஆகியவை இந்தத் தலப்பெருமையைக் கூறுகின்றன. தென் கிழக்கே 1 கிமீ தூரத்தில் ஹனுமானாறு ஓடுகிறது. இதன் தென்கரையில் கோட்டைத் திரட்டி என்கிற இடத்தில் உள்ள கோட்டையிலிருந்தே இந்த தலத்திற்கு சுவாமி கொண்டுவரப்பட்டது என்பது வரலாறு. உற்சவ காலத்தில் மலையிலிருந்து நாகேஸ்வரர் கோயிலிற்கு முருகர் செல்கிறார். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை (8 கால பூஜை நடைபெறுகிறது.) |
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் |
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,
தட்ச நல்லூர்,
தச்சநல்லூர் (திருநெல்வேலி),
திருநெல்வேலி 627358,
திருநெல்வேலி வட்டம். |
+91 9442061598, 9443501215 | திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு வடக்கே 3 கிமீ தொலைவில் உள்ளது. |
நவநீதகிருஷ்ணன் மற்றும் பெருமாள் கோயில்களும் உள்ள தலம். இத்தலத்தில் முருகன் வள்ளி தெய்வயானையுடன் இரு கரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார். தலம் பற்றிய குறிப்பு சுவாமி வேதமூர்த்தி மடத்தில் ஓர் கல்வெட்டில் உள்ளது. தச்சநல்லூரில் உள்ள சிவன்கோயில் இருக்கும் இடத்தில் தான் நெல்லையப்பர் கோயிலிற்கான சிற்ப வேலைகள் நடந்ததாகவும் நெல்லையப்பரின் மாதிரி லிங்கம் இங்கே உள்ளதைக் கொண்டு அறிய முடிகிறது. தவமணிநாதர் என்னும் சித்தர் இக்கோயிலிற்கு வந்து தங்குவதற்கு முன் செண்பகாதேவி அருவி அருகே நெல்லையப்பரை நோக்கி தவமிருந்தார். அடியாருக்கு இந்த தலத்திற்கு வரும் போதே காட்சி கொடுத்தார் ஷாலிவாதீஸ்வரர் (நெல்லையப்பர்). |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை |
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
ஆதி திருமலை வேல்மலை,
கணக்கப்பிள்ளை வலசை,
வழி குத்துக்கல் வலசை,
செங்கோட்டை வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்,
627811. |
+91 9942305520 | மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் வழியில் திருமங்கலம் கடந்து தேசிய சாலையில் குத்துக்கல் வலசை முனையிலிருந்து திருமலை செல்ல வழி உள்ளது. இந்த பாதையில் கணக்கப்பிள்ளை வலசை என்கிற ஊரில் மலை மேல் கோயில் உள்ளது. |
முருகன் முதன் முதலில் இங்கு அமர்ந்ததால் ஆதிதிருமலை என்ற பெயர். 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலம். வேல் வடிவில் உள்ளது. முருகனின் திருவடி தீக்ஷைக்காக ஆதிநாதர் என்கிற சித்தர் பரம்பரையைச் சேர்ந்தவர் தவமிருந்த தலம். அமர்ந்த கோலத்தில் நேர் கீழ் முகமாக இடக்கரம் கீழ் நோக்கியும் வலக்கரம் மேல் நோக்கியும் இருகரங்களுடன் தெற்கு நோக்கிய மயில்மேல் அமர்ந்து உள்ளார். பின்புறம் சுனையும் கன்னிமாரியம்மன் கோயிலும் உள்ளது. சொர்ண ஆகர்ஷண பைரவர் ஈசான்ய மூலையில் இடப்புறம் அமுத கலசமும் வலப்புறம் கதாயுதத்துடனும் உள்ளார். (பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால பூஜை நடைபெறும்) |
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை |
|
|