பேரையூர்; பேரையூர் தாலுகா பழையூர் திருவேங்கட பெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 2 நாட்களாக நடந்தது. ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு இன்று நடந்தது. திருவேங்கட பெருமாள் கோவில் குதிரை மீது காட்சி தந்த கள்ளழகருக்கு பக்தர்கள் கொண்டு வந்த நெல்மணி மாலை, பணமாலை, துளசி மாலை, பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பழையூரில் இருந்து சாப்டூருக்கு அழகருக்கு பச்சை பட்டு அணிவிக்கப்பட்டு பக்தர்கள் அழகரை சுமந்து சென்றனர். அப்போது குடிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து மீனாட்சியம்மன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வடகரப்பட்டியில் கள்ளழகர், மீனாட்சி அம்மன் எதிர்சேவை நிகழ்வு நடைபெற்றது.சாப்டூர் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு மண்டகப்படி நடைபெற்றது. சாப்டூர் ஆற்றில் அழகர் எழுந்தருளினார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசங்கள் எழுப்பினர்.