சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் பாலாபிஷேகத் திருவிழா நடந்தது.
200 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் குடும்பத்தில் பிறந்து, இடம்பெயர்ந்து சிங்கம்புணரியில் மக்களோடு வாழ்ந்து பல்வேறு சித்துக்கள் மூலம் நன்மை புரிந்தவர் சித்தர் முத்து வடுகநாதர். இவர் உயிரோடு ஜீவசமாதி அடைந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு நடக்கிறது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று பாலாபிஷேகத் திருவிழா நடந்தது. சிங்கம்புணரி வணிகர் நலச் சங்கம் சார்பில் காலை 8:00 மணிக்கு சீரணி அரங்கம் அருகே இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோயிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு மின்மோட்டார் மூலம் சித்தருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர். நள்ளிரவில் வான வேடிக்கைகள் முழங்க சுவாமி வீதி உலா நடந்தது. விழாவில் சித்தரின் வாரிசுதாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.