சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று நிறைவடைந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில், யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில், 64ம் திவ்யதேசமான இந்த தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தோசித பெருமாள் கோவிலில் கடந்த 9ம் தேதி, கோடை உத்சவம் துவங்கியது. தினமும் மாலை 5:00 மணிக்கு சுவாமி உள்புறப்பாடு எழுந்தருளினார். தாழம்பூ, செண்பக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமானை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மூன்று நாட்களாக நடைபெற்று வந்த கோடை உத்சவம், இன்று நிறைவடைந்தது.