திருப்புவனம்; ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் ஆடி வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் முன்புறம், கோயில் வாசல் உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தடுப்புகளில் உள்ள பக்தர்கள் தாகம் தீர்க்க பல இடங்களில் சுத்திகர்க்கப்பட்ட குடிநீர் வசதி, வெயில் காலம் என்பதால் பக்தர்கள் நடக்க ரப்பர் விரிப்புகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் கூறுகையில் :
ஆடி வெள்ளிகிழமை வர உள்ள நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள், தற்காலிக உண்டியல்கள் உள்ளிட்டவைகள் அமைத்து வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே இல்லை. அம்மன் முன்புறம் உள்ள சிலைகள் சேதமடைந்த நிலையில் அவற்றை சரி செய்ய பாலாலயம் நடந்து ஆறு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை பணிகள் மேற்கொள்ளப்படாமல் சேதமடைந்த சிலைகளின் மீது வேட்டி, சேலையை அலங்காரமாக சுற்றி வைத்துள்ளனர். கடந்த ஜூன் 28ல் கோயில் அருகே உள்ள கோசாலையில் அஜித்குமார் என்ற வாலிபரை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார், கோயில் அருகே சம்பவம் நடந்து 12 நாட்கள் ஆகியும் இன்று வரை பரிகார பூஜைகள் செய்யவே இல்லை. இளம் வயது கொடூர மரணம் என்ற நிலையில் பரிகார பூஜைகள் செய்திருக்க வேண்டும், உண்டியல் வருவாயை மட்டும் நினைக்கும் நிர்வாகம், பரிகார பூஜைகள் விரைந்து நடத்த வேண்டும், என்றனர்.