Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 57 · 116 / 159

மதுரையை மீட்டவர்

மதுரை நகரம் தென்னகத்தின் ஆன்மிக இதயம். மீனாட்சி அம்மன் கோயில் அதன் மையத்துடிப்பு. ஆனால் 1311ல் டில்லி சுல்தானான அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர் தென்னிந்தியாவின் செல்வங்களை கைப்பற்றும் நோக்கில் பாண்டிய நாட்டை நோக்கி முன்னேறிய போது, மதுரை நகரம் கடும் சோதனைக்கு உள்ளானது. பாண்டியரின் உள்நாட்டு குழப்பம், அந்நியப் படையின் வேகமான முன்னேற்றம், கோயில்களின் பேரழிவு என வரலாற்றில் மறக்க முடியாத அத்தியாயத்தை உருவாக்கின. அலாவுதீன் கில்ஜியின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பிய போது, படைத்தளபதி மாலிக்காபூரை அனுப்பினார். காகதீயப் பேரரசு, ஹோய்சாளப் பேரரசை முறியடித்து, பாண்டியப் பேரரசின் தலைநகரமான மதுரையை நோக்கி வந்தான். அப்போது புகழ்பெற்ற கோயில்களின் சொத்துக்கள், உற்ஸவர்கள், சிற்பங்கள் நாசம் செய்யப்பட்டன. காஞ்சிபுரம், சிதம்பரம், ஸ்ரீரங்கம் கோயில்கள் அழிக்கப்பட்டன. மதுரை நகரமே மாலிக்காபூர் படைகளால் சூழப்பட்டு எங்கும் ரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல் என கொடுமைகள் நடந்தன. 1310 – 1311ல் மாலிக்கபூர் வந்த போது, பாண்டிய நாட்டை வீரபாண்டியன் ஆட்சி செய்தார். பாண்டிய நாடு வங்காள விரிகுடாவில் உள்ள முத்து உற்பத்தி தளங்களின் மூலம் பெரும் செல்வங்களை குவித்திருந்தது. அந்த செல்வம் எல்லாம் மீனாட்சி அம்மன் கோயில் கருவூலத்தில் தான் இருந்தன. அந்த சொத்துக்கள் எல்லாம் மாலிக்கபூரால் கொள்ளையடித்து டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. கோயிலின் சிற்பங்களும் சிதைக்கப்பட்டன. மாலிக்காபூருடைய படையெடுப்பு முன்னதாக சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மதுரை கோவில்களில் இருந்த சிலைகள், அரிதான நகைகள், பொக்கிஷங்கள் தெற்கில் இருந்த நாஞ்சில்நாடு (கன்னியாகுமரி) நோக்கி எடுத்துச் செல்லப்பட்டன. எடுத்துக் கொண்டு போக முடியாத சிலைகளை அந்தந்த கோயிலைச் சுற்றி மண்ணுக்கடியில் புதைத்து வைத்தனர். இப்படி கொண்டு போன சிலைகளில் மீனாட்சி உற்ஸவர் சிலை பல ஆண்டுகளாக அங்கு பாதுகாக்கப்பட்டது. 1310 -– 1311 காலகட்டத்தில் பாண்டிய அரசை வீழ்த்தி, மீனாட்சி கோயிலை சூறையாடினர். நகைகள் கொள்ளை போனதுடன் கட்டமைப்பு சேதம் அடைந்தது. கருவறைகள் அழிக்கப்படாமல் தப்பிய போதிலும், நிர்வாகமும், சடங்கு, வழிபாடுகள் நின்று போயின. 1335 – 1378 ஆண்டுகளில் அரசியல் அமைதி இன்மையாலும், மத நெருக்கடியாலும் மதுரை பாதிக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசின் அரசர் குமார கம்பண்ணர், 1378ல் சுல்தான் ஆட்சியை முறியடித்து மதுரையை மீட்டார். இதன் நாஞ்சில் நாட்டில் இருந்து சிலைகள் கொண்டு வரப்பட்டு, 14ம் நூற்றாண்டின் இறுதியில், மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தென்னிந்திய கோயில்களின் மறுமலர்ச்சிக்கான திருப்புமுனையாக அமைந்தது. விஜயநகர ஆட்சியாளர்கள் கோயிலின் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினர். சிதிலமடைந்த கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டது. நாயக்க மன்னர்களின் பொற்காலம் (16 – 17ம் நூற்றாண்டு) விஜயநகரப் பேரரசின் கீழ்நிலை ஆட்சியாளர்களாக, மதுரையை ஆண்ட நாயக்கர் வம்சம், மீனாட்சி கோயிலின் பிரமாண்ட வடிவத்திற்கு அடித்தளம் இட்டது. ௧6ம் நூற்றாண்டில் நாகம நாயக்கரின் மகனும், கிருஷ்ண தேவராயரால் அனுப்பப்பட்டவருமான விஸ்வநாத நாயக்கர், மதுரையின் முதல் நாயக்கர் வம்ச மன்னராகி, கோயிலை விரிவுபடுத்தி அரண் அமைத்தார். அடுத்து புகழ் பெற்ற மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் (1623-1655) மீனாட்சி கோயில் இன்னும் விரிவு செய்யப்பட்டது. அம்மன் சன்னதியில் கிளிகளை வைத்திருக்கும் இடத்திற்கு தெற்கு வடக்காய் ஒரு மண்டபம் உள்ளது. இதை சங்கீத மண்டபம் அல்லது சங்கிலி மண்டபம் என்பர். இது முன்பு கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் சன்னதியில் இருந்தது. மாலிக்காப்பூர் படையெடுப்பில் அம்மண்டபத்தை இடித்து விட்டனர். அந்த மண்டபம் சிதைந்த நிலையில் நீண்ட காலமாக இருந்தது. திருமலை நாயக்க மன்னர் மதுரையைத் தலைநகரமாக மாற்றியதும், சிதைந்த அம்மண்டபத்தில் இருந்த தூண்களை சேர்த்து மீனாட்சி அம்மன் சன்னதியில் அமைத்தார். பெருமாள் கோயில்களில் காணக்கூடிய அனுமார், பஞ்ச பாண்டவர் உருவங்கள் இத்தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. மீனாட்சி சொக்கநாதரின் 64 திருவிளையாடல்களில் ஈடுபாடு கொண்ட திருமலை நாயக்கர், அதற்கு வேண்டிய ஆபரணங்களை செய்து மதுரையில் திருவிழா நடத்தினார். புது மண்டபம், ஆயிரம் கால் மண்டபம் இவரது காலத்தில் உருவாயின. சுற்றியுள்ள தெருக்களும் சாஸ்திர மரபுப்படி வடிவமைக்கப்பட்டன. சிற்பங்களும் ஓவியங்களும் புராணக் காட்சிகளையும், நாயக்க மன்னர்களின் வாழ்க்கையையும் சித்தரித்தன.

— பொ.பெருநாழித்தம்பி, மதுரை. 97918 76485

Advertisement
Top
Advertisement