Special supplement · Part 3 · page 60 · 123 / 159
நல்ல சேதி தேடி வருது
மதுரை வைகை நதிக்கரை ஓரமாக வடக்குமாசி வீதியில் உள்ளது செல்லத்தம்மன் கோயில். இங்கு அருள்புரியும் கண்ணகிக்கு எலுமிச்சைமாலை சாத்தினால் நல்ல சேதி உங்கள் வீடு தேடி வரும். காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த தம்பதியான கண்ணகி, கோவலன் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தனர். வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி, அவர்களை மதுரையில் மாதரி என்பவளின் வீட்டில் தங்கச் செய்தாள். கோவலன் தன் மனைவி கண்ணகியின் சிலம்பை விற்று வியாபாரம் செய்யலாம் என நகருக்குள் அலைந்தான். அச்சமயத்தில் மதுரையை பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சி செய்து கொண்டிருந்தார். விதி தன் வேலையை ஆரம்பித்தது. ஆம். மகாராணி கோப்பெருந்தேவியின் சிலம்பை அபகரித்தார் அரண்மனை பணியாளர் ஒருவர். ஆனால் சிலம்பை விற்க வந்த கோவலன் மீது, அபாண்டமாக பழி சுமத்தினார். இதை விசாரிக்காமல் கோவலனுக்கு மரண தண்டனை விதித்தார் மன்னர். கணவரை இழந்த கண்ணகி கோபத்துடன் அரண்மனைக்கு தலைவிரி கோலமாக வந்தாள். ஆவேசத்துடன் நீதி கேட்டு முறையிட்டாள். தவறை உணர்ந்த மன்னரும், மகாராணியும் அந்த நிமிடமே உயிர் நீத்தனர். கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவள் தங்கிய இடத்திலேயே சிலை வடித்து கோயில் எழுப்பினர். இக்கோயில் கட்டிய போது, சுற்றியுள்ள பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. கண்ணகியின் சிலை உக்கிரமாக இருப்பதால் இப்படி நடப்பதாக மக்கள் நம்பினர். அப்போது ஆட்சி செய்த செண்பக பாண்டியன் இது பற்றி கவலைப்பட்டார். அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், ‘கண்ணகி கோயிலில் பார்வதியின் சிலையை பிரதிஷ்டை செய்’ என கட்டளையிட்டார். அதன்படி மன்னர் இங்கு அம்மனை பிரதிஷ்டை செய்து, அவளையே பிரதான தெய்வமாக்கினார். இவளே ‘செல்லத்தம்மன்’ ஆவாள். தினமும் இவளுக்கு பூஜை முடிந்த பின்பே, கண்ணகிக்கு பூஜை நடக்கும். அசுரனை வதம் செய்த கோலத்தில், கையில் கொன்றை மலர் ஏந்தி காட்சி தருகிறாள் செல்லத்தம்மன். எதிரில் பேச்சியம்மன் இருக்கிறாள். முன்மண்டபத்தில் கையில் சிலம்பு வைத்தபடி கண்ணகி இருக்கிறாள். அருகே அவளுக்கு ஆதரவு கொடுத்த மாதரி இருக்கிறாள். கண்ணகிக்கு எலுமிச்சை மாலை, தாலிப்பொட்டு அணிவித்து வழிபடுகின்றனர். கோபம் குறைய, கணவன் மீது அன்பு அதிகரிக்க, திருமண வரம் கிடைக்க இங்கு வேண்டுகின்றனர். பிரகாரத்தில் துர்கை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், அய்யனார், காலபைரவர் சன்னதிகள் உள்ளன. தை பிரம்மோற்ஸவத்தின் போது சிவன், அம்மன் திருக்கல்யாணம் நடக்கும். அன்று மீனாட்சியம்மன் கோயில், சிவன் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் அம்பிகை எழுந்தருள்கிறாள். சிவன் சன்னதியில் இருந்து பட்டு சேலை எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அணிவிப்பர். பின்பு திருமாங்கல்யம் சூட்டப்படும். மறுநாள் இவள் திருமணப்பட்டுடன் தேரில் பவனி வருவாள்.
- எப்படி செல்வது
- மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
- நேரம்
- காலை 6:00 – 11:30 மணி; மாலை 4:30 – 8:30 மணி
- தொடர்புக்கு
- 98655 82272
- விசேஷ நாள்
- தை, ஆடி வெள்ளி, நவராத்திரி, தை பிரம்மோற்ஸவம்