Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 34 · 51 / 159

கும்பாபிஷேகம் ஏன்

முருக பக்தரான கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவில் இருந்து.... ஒரு மனிதன் வாழவேண்டும் என்பதற்காக அவனுக்குக் கடவுள் எத்தனை எத்தனையோ உதவி செய்திருக்கிறார். இந்த வயிற்றை ஒரு சாணாக நிறுத்தியுள்ளார். ஆடுவதும் பாடுவதும், ஆளடிமை செய்வதுவும் ஓடுவதும் தேடுவதும் ஞானத்தங்கமே - ஒருசாண் வயிற்றுக்கடி. – சித்தர் பாடல். இந்த உலகம் எல்லாம் ஒருஜாண் வயிற்றுக்காகத்தான் பாடுபடுகிறது. இந்த வயிற்றை ஒன்றைரைச் ஜாணாகப் போட்டிருந்தால் எப்படியிருக்கும்? நினைத்துப் பாருங்கள். கடவுள் கருணைக்கடல். சிலபேர் இறந்து போனவர்களைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். உலகில் இருப்பது தான் ஆச்சரியம்.

எப்படி?

ஒரு மண்பானை அதில் 9 ஓட்டைகள் அதன் வழியாக தண்ணீர் வெளியே போனால் என்ன ஆச்சரியம்? இவ்வளவு பெரிய காது, மூக்கு, வாய் முதலிய ஓட்டைகள் வழியே காற்று அவ்வளவும் வெளியே போகாமல் உள்ளதே! அதுதானே ஆச்சரியம்! பால், டீ முதலியன குடிக்காமல் இருக்கலாம், நெய் இல்லாமல் இருக்கலாம்: ஆனால் புளி, மிளகாய் இல்லாமல் வாழ முடியாது. புளி மிகவும் பிசுபிசுப்பு உள்ளது. அது கீழே விழுந்தால் மண் முதலியன ஒட்டி ஒருவருக்கும் பயனில்லாமல் போய்விடுமே என்று அதற்கு ஒரு உறை (ஓடு) போட்டுள்ளார் கடவுள். மிளகாய் மிகவும் மினுமினு என்றிருக்கும் அதன்மேல் மண் ஒட்டாது. ஆனால் பிசுபிசுப்பான புளி ஒவ்வொன்றுக்கும் ஓடு உண்டு. விண்ணிலே காய்க்கின்ற தேங்காய்க்கு மேல் ஒரு கெட்டியான ஓடு. அதற்கு மேல் கெட்டியான நார் ஏன்? அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் உடையாமல் இருப்பதற்கு! இத்தனையும் எம்பெருமான் நமக்குப் படைத்துத் தருகின்றார். இதைவிட ஆச்சரியம்! உரலில் பருப்பு போட்டு தண்ணீர் விட்டு ஆட்டுவார்கள். நாம் சாப்பிடும்போது நமது உணவை வாயில் அரைப்பதற்கு நீர் எங்கிருந்து வருகிறது. உமிழ்நீர் ஊறி வருகிறது. இதனை உண்டாக்கித் தந்தவர் கடவுள். தண்ணீரை மொடமொடவென்று குடிக்கக் கூடாது. நமது அன்னியமாகிய தண்ணீரை சொந்த நீராகிய உமிழ்நீரோடு சேர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குடிக்கவேண்டும். அதுதான் உடலுக்கு நல்லது. ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் உண்ணவேண்டும். ஒரு முறை சாப்பிடுகிறவன் யோகி இரண்டு முறை சாப்பிடுகிறவன் போகி முன்று முறை சாப்பிடுகிறவன் ரோகி (மூன்று வேளை சாப்பிடுபவனுக்கு டாக்டர் பில் அதிகமாகும்) அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்குமாறு. என்கிறார் திருவள்ளுவர். கடவுள் உயிர்க்கு உயிராகியுள்ளவன். ‘உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரை சேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில்’ என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு. உடம்புக்குள்ளே உயிர். உயிருக்குள்ளே சிவம் எது போலே? டயர்க்குள்ளே டியூப், டியூபுக்குள்ளே காற்று. டயர் மாதிரி உடம்பு, டியூப் மாதிரி ஜீவாத்மா, காற்று மாதிரி பரமாத்மா. காற்று இல்லையெனில் வண்டி ஓடாது. கடவுள் இல்லை எனில் உயிர் ஓடாது. நமக்காக சுவாமி உயிர்க்குயிராக உள்ளார். அதனைத்தான் நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே என்கிறது திருவாசகம். காரை டிரைவர் செலுத்துகிறார், டிரைவரை முதலாளி செலுத்துகிறார் அல்லவா? (இங்கே போ அங்கே போ என்று) அதுபோலே உடம்பை உயிர் செலுத்துகிறது உயிரை கடவுள் செலுத்துகிறார், இந்த உடம்பு அசித்து, அசித்தும் சித்தும் சேர்ந்து ஒன்றாய் வாழ்கிறது. எம்பெருமான் நமக்காக திருக்கோயில் கொண்டு எழுந்தருளுகின்றான். கடவுளுக்கு வண்ணம் வடிவம் கிடையாது. "ஒருநாமம் ஒருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் சொல்லி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்கிறார் மாணிக்கவாசகர். இறைவன் ஜோதி வடிவானார். ‘திருவையாறு அகலாத செம்பொற்சோதி’ – தேவாரம் ‘சோதியே சுடரே சூழொளி விளக்கே’ – திருவாசகம் ‘அலகில் சோதியன்’ -– சேக்கிழார் ‘தீபமங்களா சோதி நமோநம’ - – திருப்புகழ் ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி' 'அருட்பெரும் சோதி' - – வள்ளலார். அந்தச் சோதியை இந்த சிவாக்கினியிலே விளையுமாறு செய்து அதைக் கும்பத்தில் சேர்த்து கும்பத்திலிருந்து பிம்பத்திற்குக் கொண்டு சேர்ப்பது தான் கும்பாபிஷேகம்.

  • அந்தக் கல்லிலே இந்த அருள்ஜோதி சேர்கிறது. கும்பாபிஷேகத்திற்கு முன் கல். (விக்ரகம்) கும்பாபிஷேகம் ஆன அடுத்த வினாடியே கடவுள். எதுபோலே? காகிதம் எங்கும் உள்ளது. அரசாங்கம் அந்தக் காகிதத்தை ரூபாய் நோட்டாக அச்சிட்டு மாற்றித் தருகிறார்களே அதைப்போல வேத ஆகம மந்திரங்களினாலே கல்லைக் கடவுளாக மாற்றினார்கள் நாயன்மார்கள். இரும்பை மைக்காக - மண் குடமாக - கல் கடவுளாக மாறுகிறது. அங்கே அருள் சைதன்யம் தங்குகிறது. அங்கே வணங்க உடனே அருள் கிடைக்கிறது. அவனை கீழ்க்கண்டவாறு கந்த புராணம் போற்றுகிறது. அருவமும் உருவமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்களாறும் கரங்கள்பன்னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம்உய்ய தண்ணீரை ஒரு கிளாசிலிட்டு பிரிட்ஜில் வைத்தால் ஐஸ் ஆக மாறுகிறது. தண்ணீரைக் கட்டியாக மாற்றுவதுபோல் மிகுந்த கருணையுள்ள கடவுள் நாம் உய்வதற்காக பல வடிவம் எடுத்துக் கொள்கிறார். அத்தகைய கடவுளை வழிபட்டு உய்வோமாக. உருவாய் அருவாய் உலதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
Advertisement
Advertisement
Top
Advertisement