Special supplement · Part 2 · page 36 · 60 / 159
வாசகர் பார்வையில் மீனாட்சி
மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக சிறப்பு மலருக்காக வாசகர்கள் அனுப்பிய கட்டுரைகள் இங்கு இடம் பெற்றுள்ளன.
தாயே... என்னைக் காப்பாற்று
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களின் தலைநகர் மதுரை. ‘மன்னா... உன் பாண்டிய நாடு நல்ல தமிழ் உடைத்து’ என்கிறார் அவ்வையார். மலையத் துவஜ பாண்டியனின் மகளாக மூன்று தனங்களுடன் யாக வேள்வியில் தோன்றியவள் மீனாட்சி. மீன் கொடியுடன் சிம்மாசனம் ஏறி மதுரையை ஆட்சி செய்த பட்டத்து ராணி. நீரில் நீந்தும் மீன்களின் கண்கள் திறந்திருப்பது போல, கண்களை மூடாமல் மதுரையை பாதுகாப்பதால் ‘மீனாட்சி’ எனப் பெயர் பெற்றாள். பாண்டிய மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட பங்காளிச் சண்டையால் காவல்காரன் இல்லாத பழத்தோட்டமாக மதுரை மாறியது. சேரர்கள், சோழர்கள், டில்லி சுல்தான்கள், மொகலாயர்களின் வேட்டைக்களமாக ஆனது. தமிழ் மணம் கமழ்ந்த தெருக்களில் மனிதனின் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்த காபாலிகர்களின் ரத்த வாடை வீசியது. 12ம் நூற்றாண்டில் விஜயநகரத்தில் இருந்து வந்த குமார கம்பணன் என்ற நாயக்க மன்னரின் ஆட்சி மதுரையில் நடந்தது. அவரது மனைவி கங்காதேவி எழுதிய ‘மதுரா விஜயம்’ தான் மதுரையின் வரலாறு சொல்லும் முதல் புத்தகம். 15ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியர்கள் வேண்டுகோளுக்காக, மதுரையில் நடந்த கலவரத்தை அடக்க விஜயநகரத்தைச் சேர்ந்த ‘நாகம நாயக்கன்’ என்ற தளபதி வந்தார். கலவரத்தை ஒடுக்கியதோடு, பாண்டியர்களிடம் மதுரையை ஒப்படைக்காமல் தானே ஆட்சி செய்தார். இவரை கைது செய்யுமாறு அவரது மகனான விசுவநாத நாயக்கரை, மதுரைக்கு அனுப்பியது விஜயநகரப்பேரரசு. 1529 முதல் 1565 வரை (36 ஆண்டுகள்) மதுரையின் மன்னராக விசுவநாத நாயக்கர் ஆட்சி செய்தார். பாண்டிய நாட்டை 11 நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களில் முக்கியமானவர் திருமலை நாயக்கர். இவர் முதலில் திருச்சியை தலைமையாக கொண்டு ஆட்சி செய்தார். ஒருமுறை இவர் மதுரைக்கு வரும் போது திண்டுக்கல்லுக்கு அருகில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது மீனாட்சியை நினைத்து, ‘தாயே... என்னைக் காப்பாற்று. இனி நான் திருச்சிக்கு செல்ல மாட்டேன். உன் அருகில் இருந்து மதுரையை ஆட்சி செய்கிறேன்’ என வேண்டினார். உடனே மூச்சுத்திணறல் சரியானது. மதுரைக்கு வந்த மன்னர் மீனாட்சி அம்மனையே குலதெய்வமாக ஏற்றார். சித்திரை திருவிழாவையும் இவர் உருவாக்கினார்.
— முகமது இஸ்மாயில், இடைய கோட்டை, திண்டுக்கல்.
மஹாபெரியவரும், மீனாட்சி அம்மன் கோயிலும்
மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக இருந்தவர் சுந்தரம். மூன்று வேளை சாப்பாடுடன், ஒருநாள் சம்பளம் ஒரு ரூபாய். தினமும் மீனாட்சியை கும்பிடுவது அவரது வழக்கம். ‘என் வாழ்நாள் லட்சியமே காஞ்சி மஹாபெரியவரையும், மீனாட்சி அம்மனையும் ஒரே நாளில் தரிசிப்பது தான்’ என தன் நண்பரிடம் எப்போதும் சொல்வது வழக்கம். நாட்கள் நகர்ந்தன. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 1963ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் ஒருநாள் என்றும் இல்லாத உற்சாகத்தை விட கூடுதல் உற்சாகத்துடன் இருந்தார். அவரைக் கண்டதும் நண்பர், ‘‘ரொம்ப சந்தோஷமாக இருக்கியே... என்ன விஷயம்’’ எனக் கேட்டார். காஞ்சி மஹாபெரியவர் கும்பாபிஷேகத்துக்கு வரப் போறாரு’’ என்றார் சந்தோஷமாக. கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாளே மக்கள் கூட்டம் அலைமோதியது. அன்றிரவு கோயிலுக்குச் சென்ற சுந்தரமும், அவரது நண்பரும் பொற்றாமரைக் குளக்கரையில் தங்கினர். வெளியூர் பக்தர்கள் சிலரும் அங்கிருந்தனர். நாம் இங்கேயே தங்கி காலையில் பொற்றாமரைக் குளத்தில் குளித்து விட்டு கும்பாபிஷேகம் பார்க்கலாம் என கருதினர். கும்பாபிஷேக நாள். அதிகாலை நேரம். குளக்கரையில் தூங்கிக் கொண்டிருந்த சுந்தரம் கண்விழித்து பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தார். காரணம் அங்கே கையில் தண்டத்துடன் காஞ்சி மஹாபெரியவர் வந்திருப்பதை பார்த்தார். சிறிது நேரம் அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்த சுவாமிகள், ‘நீ என்ன வேலை பார்க்கிற?’ என சுந்தரத்திடம் கேட்டார். ‘‘பெரியவா... நான் சர்வர் வேலை பார்க்கிறேன்’’ என்றார். ‘‘நீ பார்க்கிற வேலை புனிதமானது. பசியோட வர்றவாளுக்கு சாப்பாடு போடற... இந்த புண்ணியமே உன்னை காப்பாத்தும்’’ என்றார். பொற்றாமரைக்குளம் அருகே சுவாமிகள் நின்றிருப்பதை பார்த்து கோவில் தலைவர் ஓடி வந்தார். ‘சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை தரவில்லையே’’ என வருந்தினார். அதற்கு சுவாமிகள், ‘‘சர்வமும் இங்கு அந்த மீனாட்சி தான். மத்த யாருக்கும் முக்கியத்துவம் கிடையாது’’ என்றார். கோபுரத்துக்கு போகலாம் என தலைவர் சொல்ல, அங்கிருந்தவர்களையும் தன்னுடன் வரச் சொன்னார் மஹாபெரியவர். சுந்தரமும், அவரது நண்பரும் உற்சாகமாக மஹாபெரியவரை பின்தொடர்ந்தனர். காவல்துறையினரும் அவர்களை தடுக்கவில்லை. கோபுரத்துக்கு செல்லும் பாதையில் ஒருத்தர் தான் செல்ல முடியும் அளவிற்கு பாதை குறுகலாக இருந்தது. அப்போது மஹாபெரியவர் தன்னுடன் வந்தவர்களை முன்னால் போகச் சொல்லி விட்டு, அவர்களது பின்னே சென்றார். அங்கிருந்த மூதாட்டி ஒருவர் தடுமாறிய நிலையில், தன் சீடர்களிடம், ‘‘பாட்டியை கவனமாக கூட்டிட்டு வாங்க’’ என்றார் மஹாபெரியவர். கும்பாபிஷேகம் முடிந்து கிளம்பும் போது கூட்டத்தினரை பார்த்து, ‘நீங்கள் செய்த புண்ணியத்தால் தான் கும்பாபிஷேகத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது’ என்றார் மஹாபெரியவர். பக்தனின் நியாயமான ஆசையை மஹாபெரியவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்பதை உணர்ந்த சர்வர் சுந்தரத்திற்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. 1963ல் நடந்த கும்பாபிஷேகத்தை தரிசித்தவர்கள் பாக்கியசாலிகள். ஏனென்றால் அவர்கள் கும்பாபிஷேகத்துடன் காஞ்சி மஹாபெரியவரையும் நேரில் தரிசித்தவர்கள் அல்லவா...
— ப.காருண்யா, ஸ்ரீவில்லிபுத்தூர்.
அம்மனை நல்லா வேண்டிக்கோ
சிறு வயதில் என் குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு முதல் முறையாக சென்ற அனுபவம் இன்றளவும் மனதில் பசுமையாக உள்ளது. ஆன்மிக உணர்வும், மறக்க முடியாத குடும்ப நினைவும் அன்று என் மனதில் பதிந்தது. பெற்றோரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, பிரம்மாண்டமான தெற்கு கோபுர வாசலின் வழியே கோயிலுக்குள் நுழைந்த காட்சி இன்னமும் என் கண்ணில் நிற்கிறது. என் தலையில் இருந்த தொப்பி கீழே விழுமோ என்ற பயத்தில் ஒரு கையில் பிடித்துக் கொண்டு அண்ணாந்தபடி கோபுரத்தையும், அதிலுள்ள சிலைகளையும் பார்த்தேன். பொற்றாமரைக் குளத்து நீரில் தெரிந்த கோபுர அழகை ரசித்தது மனஅமைதியைத் தந்தது. ஆயிரங்கால் மண்டபத்தில் ஓடிப் பிடித்து விளையாடிய நினைவு மறக்க முடியாதது. இசைத்தூணை தட்டிய போது ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. சந்தனத்தின் நறுமணமும், நெய் விளக்கின் ஒளியும், மரகதப் பச்சை நிறத்தில் ஜொலிக்கும் மீனாட்சியம்மனின் அருள்முகமும் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. ‘‘அம்மனை நல்லா வேண்டிக்கோ’’ என என் தந்தை என்னுடைய தோள்பட்டையை தொட்டுச் சொன்ன வார்த்தைகளும், தரிசனம் முடிந்த பின் பிரகாரத்தில் அமர்ந்து உண்ட பிரசாதமும் இன்றும் என் நினைவில் உள்ளது. ஆண்டுகள் பல ஓடினாலும், அன்று பார்த்த மீனாட்சி அம்மனின் தரிசனம் என் வாழ்நாள் முழுதும் நிலைத்திருக்கும். அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
— ஜோதிமணி பாண்டியன், காரைக்குடி · 94880 24913
கோபுர வாசலிலே...
நான் ஆட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு’ என்கிறாள் மதுரையின் பேரரசி. மதுரை என்றால் மீனாட்சித்தாயே நம் நினைவுக்கு வருவாள். அந்த உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழகு சேர்க்கும் வானை தொட எத்தனிக்கும் கோபுரங்கள் கலைக்கு மட்டுமல்ல, பக்திக்கும் சான்று. “ ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும் சேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றம்...” என மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையும், திருப்பரங்குன்றத்தையும் பரிபாடல் போற்றுகிறது. “ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம்ஆதியே’’ என திருஞானசம்பந்தர் இங்கு பாடியுள்ளார் 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டில்லி சுல்தான் படையெடுப்பின் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பேரழிவையும் கொள்ளையையும் சந்தித்தது. 1311ல் மாலிக்காபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் போது கோயிலின் பழைய கட்டட அமைப்பு மறைந்தது. பின்னர் விஜயநகரப் பேரரசின் ஆட்சியிலும், அதை தொடர்ந்து நாயக்கர் ஆட்சியிலும் கோயில் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. கோயிலின் இன்றைய கோபுரங்கள் பிற்கால விஜயநகர, நாயக்கர் கால கட்டடக் கலையின் பங்களிப்பாகும். 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர மன்னர்களால் மதுரை கைப்பற்றப்பட்ட பின், கோயிலைப் புனரமைக்கும் பணிகள் தொடங்கின. சுவாமி சன்னதியுடன் தொடர்புடைய கிழக்கு, மேற்கு கோபுரங்கள் முறையே 1372, 1374ம் ஆண்டுகளில் கட்டப்பட்டன. இதனால் மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுர வரலாற்றை ஒரு தொடர்ச்சியான வளர்ச்சியாகப் பார்க்கலாம். மீனாட்சி அம்மன் கோயிலில் வெளிப்புறக் கோபுரங்கள், உள்கோபுரங்கள் என பல நிலைகளில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. நான்கு பிரதான கோபுரங்களும் தலா ஒன்பது மாடி அடுக்குகளை கொண்டது. இக்கோயிலுக்கு ஐந்து நுழைவு வாயில்கள் உள்ளன.
கிழக்கு கோபுரம்
மிக பழமையானது. 1216 – 1238 ல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இக்கோபுரத்தை கட்டினார். உயரம் 153 அடி. இதில் 1011 சுதைகள் உள்ளன. சுந்தரபாண்டியன் கோபுரம் எனப்படுகிறது.
தெற்கு கோபுரம்
1559ல் இதை கட்டியவர் சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியார். உயரம் 160 அடி. இதில் 1511 சுதைச் சிலைகள் உள்ளன.
வடக்கு கோபுரம்
இது கிருஷ்ணப்பா நாயக்கரால் 1564 - 1572ல் ஆரம்பிக்கப்பட்டு, அமராவதி புதூர் வையப்ப செட்டியாரால் வேலை செய்து முடிக்கப்படாமல் மொட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் இங்கு சுதைகள் 404 மட்டும் உள்ளன. இங்கு காவல் தெய்வமாக முனீஸ்வரர் வீற்றிருக்கிறார்.
மேற்கு கோபுரம்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 1315- – 1347ல் 154 அடி உயரத்தில் கட்டப்பட்டது. இங்கு 1124 சுதைகள் உள்ளன. இந்த பிரதான கோபுரங்கள் தவிர, கிழக்கில் அம்மன் சன்னதிக்கு மூன்று அடுக்கு கோபுரம் கிளிக்கூண்டு மண்டபம் அருகே உள்ளது. ஏழு அடுக்குகள் கொண்ட அம்மன் சன்னதி கோபுரமும், மேற்கு கோபுரம் தாண்டி ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரமும் உள்ளன. இது பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னதியில் வடக்கு ஆடி வீதியில் ஐந்து அடுக்கு கோபுரமும், கீழ ஆடி வீதியில் ஐந்து அடுக்கு கோபுரமும் உள்ளன. நடுக்காட்டு கோபுரம் என்பது முக்குறுணி விநாயகர் சன்னதிக்கு எதிரே ஐந்து அடுக்குகளில் அமையப் பெற்றுள்ளது பிரம்மாண்ட ராய கோபுரத்தின் கட்டுமானம் திருமலை நாயக்கர் காலத்தில் 1623 – 1659 ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொடங்கப்பட்டது. இக்கோபுரம் புதுமண்டபத்திற்கு எதிரில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமானப் பணி முழுமை பெறும் முன்பே நிறுத்தப்பட்டது. இன்றும் அதன் பிரம்மாண்டமான கல் அடித்தளம் காணப்படுகிறது. இது கட்டி முடிக்கப்பட்டிருந்தால், தென்னிந்தியாவின் பிரம்மாண்டமான கோபுரங்களில் ஒன்றாக இருந்திருக்கும். இதில் 1963 கும்பாபிஷேகம் கோயிலின் திருப்புமுனையாகும். 1960 – 63ல் நடைபெற்ற திருப்பணிகள் கோயிலின் கட்டடக்கலை, கோபுரங்கள், விமானங்கள், சிற்பங்களின் பாதுகாப்பில் பெரும் பங்காற்றின. குறிப்பாக, மீனாட்சி அம்மன் சன்னதி விமானம் முழுவதும் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டது. இதற்காக 1,150 கிலோ செம்பும் 29 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் 1878, 1923, 1963, 1974, 1995, 2009ம் ஆண்டுகளில் நடந்தது. தற்போது 2026 செப்.17ல் நடக்கிறது. பக்தியும், கலையும், மாண்பும், தெய்வீகமும் ஒருங்கே கொண்ட மதுரை மீனாட்சி அம்மனை இந்த கும்பாபிஷேக நாளில் போற்றி வணங்குவோம்.
— எம்.விக்னேஷ், மதுரை, · 94427 66800
என் மனசு... என் மதுரை
ஹர ஹர சங்கர... மகாதேவா! மீனாட்சி சுந்தர... மகாதேவா! சோமசுந்தர... மகாதேவா! இந்த கோஷத்தை கேட்டாலே நான் பிறந்து வளர்ந்த மதுரை தெற்கு மாசி வீதியும், மீனாட்சி அம்மனின் கோபுரங்களும் என் நினைவில் வந்து நிற்கும். ஒவ்வொரு நாள் காலைப் பொழுது கோபுர தரிசனத்துடன்தான் துவங்கும். மீனாட்சியம்மன் கோயில் பிரகாரம், பொற்றாமரைக் குளக்கரையில் பொழுது போக்கிய காலங்கள்; என் வாழ்வில் என்றும் அழியாத கோலங்கள். சித்திரை மாதம் வந்தாலே எங்கள் வீதி எங்கும் விழாக்கோலம் தான். மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெய்வீக வீதியுலாவும், அங்கே கூடும் பக்த வெள்ளமும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். தேரோட்டத்தில் பக்தர்களுக்கு மோர், ரோஸ் மில்க் வழங்கியதும், மீனாட்சி திருக்கல்யாணத்தன்று மஞ்சள் கயிறு, குங்குமம் நான் வழங்கியதும் என்றும் இனிமையான நினைவுகள். என் கொள்ளுத் தாத்தா கே.வி. ராமச்சாரி மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக குழுவில் பணியாற்றியவர். அடுத்த தலைமுறையில், நான் அதே கோபுரத்தின் நிழலில் வளர்ந்தேன். 25 ஆண்டுகளாக சிட்னியில் (ஆஸ்திரேலியா) வாழ்ந்தாலும், என் மனம் மதுரையில் தான் இன்றும் இருக்கிறது. கும்பாபிஷேக விழா ஆன்மிக நிகழ்வு மட்டுமல்ல; அது நினைவுகளையும், வேர்களையும், தலைமுறையையும் இணைக்கும் பாலம். என் முகவரி சிட்னி ஆஸ்திரேலியா; ஆனால் என் மனசின் முகவரி மதுரை அனைவருக்கும் அன்னை மீனாட்சி அருள்பாலிக்கட்டும்!
— ஜனார்த்தனன் அனகன்பாபு, சிட்னி, ஆஸ்திரேலியா.