Special supplement · Part 2 · page 47 · 97 / 159
நீலகண்ட தீட்சிதர்
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர் நீலகண்ட தீட்சிதர். புகழ் பெற்ற அப்பய்ய தீட்சிதரின் பேரன் இவர். வேங்கடமகி என்னும் குருநாதரிடம் தர்ம சாஸ்திரம், அத்வைத தத்துவங்களை கற்றார். தாத்தாவான அப்பய்ய தீட்சிதர் இறக்கும் போது தேவிமகாத்மியம், ரகுவம்சம் ஆகிய இரண்டு நூல்களை பேரன் நீலகண்ட தீட்சிதரிடம் கொடுத்து, ‘‘பராசக்தியின் அருளால் சிறந்த கவிஞனாக திகழ்வாய்’’ என வாழ்த்தினார். மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் அமைச்சராக முப்பதாண்டுகள் பணியாற்றினார். இவரைப் பற்றிய சுவாரஸ்யமான சம்பவங்கள் பல உண்டு. மதுரையில் வைகை ஆற்றின் கரையில் தீட்சிதர் தேவி மகாத்மியம் பற்றி மக்களுக்கு உபதேசம் செய்து வந்தார். மன்னர் திருமலைநாயக்கர் ஒருநாள் இதை மறைந்து நின்று கேட்டார். அதில் அவரது மனம் ஈடுபட்டதால் மறுநாள் சபையைக் கூட்டி புலவர்களிடம் கேள்வி ஒன்றைக் கேட்டார். ‘காக்காவை ‘காகம்’ என அழைப்பது ஏன்? அங்கிருந்த பண்டிதர் ஒருவர் எழுந்து விளக்கம் தர முன் வந்தார். ‘‘இந்திரனின் மகனான ஜெயந்தன் காக்கையின் வடிவத்தில் வந்து சீதையை காயப்படுத்தினான். இதைக் கண்ட ராமனுக்கு கோபம் வந்தது. ஆனால் சீதையோ பொறுமையுடன் ஜெயந்தனை மன்னிக்கும்படி வேண்டினாள். அதனால் கூடியிருந்த காக்கைகள் எல்லாம், ‘‘ஆகா... இந்த உலகத்தில் பொறுமைக்கும் மன்னிக்கும் கருணைக்கும் சீதைக்கு நிகரானவர் யார் (கா) என்றும், இவ்வுலகில் அன்புக்கு ராமனுக்கு சமமானவர் யார் (க) என்றும் பொருள்படும் விதத்தில் ‘காக’ என ஆர்ப்பரித்தன. இதன்பின் இதற்கு ‘காகம்’ எனப் பெயர் வந்தது என்றார். அவர் வேறு யாருமல்ல; நீலகண்ட தீட்சிதர்தான். ‘கா’ ‘க’ என்ற இரண்டு சொல்லுக்கும் சமஸ்கிருதத்தில் ‘யார்’ என்றே பொருள். ‘கா’ என்னும் நெடில் பெண்பாலையும், ‘க’ என்னும் குறில் ஆண்பாலையும் குறிக்கும். விளக்கம் கேட்டு சபையே அதிர்ந்தது. மகிழ்ந்த மன்னர் தீட்சிதருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நாட்டின் அமைச்சராக்கினார். அமைச்சர் பதவியை ஏற்ற தீட்சிதர் நிர்வாகத்தில் புதிய சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அன்றாட பூஜை, திருவிழாக்களை விமரிசையாக நடத்தினார். நிர்வாகப் பணியுடன் ஆன்மிக நூல்களையும் எழுதினார். குருநாதராக உபதேசம் செய்து பல சீடர்களையும் உருவாக்கினார். இவர் அமைச்சராகப் பணியாற்றிய போது தான், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதுமண்டபம் கட்டப்பட்டது. அங்கு சுமந்திர ஆசாரி எனும் சிற்பியின் மூலமாக திருமலை நாயக்கர், பட்டமகிஷியின் உருவத்தை வடிப்பதற்குக் காரணமாக இருந்தவர் இவரே! அதைப் பார்வையிட வந்த நீலகண்டர், அங்கிருந்த ராணி சிலையில் இடது தொடையின் மீது சில்லு லேசாகப் பெயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். சிற்பி அதை சரிசெய்ய முடியவில்லை எனத் தெரிவித்தார். சற்று நேரம் கண் மூடி யோசித்த நீலகண்ட தீட்சிதர், ‘அப்படியெனில் அந்த இடத்தில் மரு இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார். இதையறிந்த மன்னர் அதிர்ந்தார். தீட்சிதரின் மீது சந்தேகப்பட்டு அரண்மனைக்கு வரவழைக்க ஆள் அனுப்பினார். ஆனால் தீட்சிதரோ எரியும் கற்பூரத்தை தன் கண்களில் வைத்து பார்வையை பொசுக்கி கொண்டார். எல்லோரும் பதறிப்போய் விசாரித்த போது சாமுத்திரிகா லட்சணப்படி ராணியின் சிலை அப்படித்தான் அமையும் என தீட்சிதர் விவரித்தார். தீட்சிதரின் திறமையைக் கண்ட மன்னர் மன்னிப்பு கேட்டார். அதையடுத்து மீனாட்சியம்மன் மீது ஸ்ரீஆனந்த சாகரஸ்தவம் என்னும் ஸ்தோத்திரம் பாடினார். இதில் 60ம் பாடல் பாடும் போது இழந்த பார்வையை மீண்டும் பெற்றார். இதன் பிறகு அரசுப்பணியைத் துறந்து, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பாலாமடை கிராமத்தில் இறுதிக் காலத்தில் வாழ்ந்தார். அந்த கிராமத்தை மானியமாக தானம் அளித்தார் மன்னர். அப்பகுதி தீட்சிதரின் பெயராலேயே ‘நீலகண்ட சமுத்திரம்’ எனப்படுகிறது. இங்குள்ள அதிஷ்டானத்தில் மார்கழி வளர்பிறை அஷ்டமியில் ஆராதனை நடக்கிறது. தீட்சிதர் பல நூல்களை எழுதினாலும் அதில் சிறந்த படைப்பாக இருப்பது ‘சிவ லீலார்ணவம்’. மதுரையில் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் பற்றி விளக்கும் நூல் இது. 22 காண்டங்களில் உள்ள இரண்டாயிரம் பாடல்களில் அமைந்த காவியம். இதில் மீனாட்சியம்மனின் பிறப்பு, வளர்ப்பு, திக்கு விஜயம், திருக்கல்யாணம் உள்ளிட்ட விளையாடல்களை பாடியுள்ளார். இவர் எழுதிய ‘கலி விடம்பனம்’ என்னும் நூல் 102 பாடல்களைக் கொண்டது. கலிகாலத்தின் தீயபழக்க வழக்கங்களைப் பட்டியல் இடும் நையாண்டி நூல் இது. கலிகாலத்தில் மக்களின் குணம் எப்படி இருக்கும் என தீட்சிதர் சொல்கிறார் பாருங்கள். குருட்டுத் தைரியம், வெட்கமின்மை, எதிரியிடம் அலட்சியம், இகழ்ச்சிப் பார்வை, கேலி, வெறும் கூச்சல், எதிரியின் கருத்தைக் கேட்பதோ, புரிந்து கொள்வதோ கிடையாது, எதிரி சாதுவாக இருந்தால் தன் கட்சி ஜெயித்ததாக ஆர்ப்பரித்தல், எதிராளி படித்தவனாக இருந்தால் அவன் பாரபட்சமாக நடப்பதாகச் சொல்லுதல், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவரை ‘இந்திரனே... சந்திரனே...’ என வாயாரப் புகழ்தல் என்ன ஒரு தீர்க்க தரிசனம்! 400 ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்ட விஷயங்கள் இன்றைக்கும் அளவெடுத்தது போல எப்படி பொருந்துகிறது பாருங்கள். ‘ஆனந்த சாகர ஸ்தவம்’ என்னும் நூலில் அம்பிகையைப் பற்றி பரவசமாக பாடுகிறார். அர்த்தநாரீஸ்வரான சிவபெருமானிடம் சாதுர்யமாக ஒரு கேள்வி எழுப்புகிறார். ‘‘நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்ததில் பாதி பங்குதான் உண்டு. ஆனால் அந்தப்புகழை சிவபெருமானே முழுவதும் வைத்துக் கொள்ளட்டும். ஆனால் இடது பாதத்தால் யமனை உதைத்து வென்றதில் அவருக்கு என்ன சம்பந்தம். அது பார்வதிக்கு அல்லவா சொந்தமானது?’’ எனக் கேட்கிறார். வள்ளலார் என்னென்ன வேண்டும் என கேட்பது போல எது வேண்டாம் என தீட்சிதர் பட்டியல் இடுகிறார்.
உன்னைப் பற்றிப் பேசாத வித்தையை நான் வேண்டேன்
உந்தன் திருவடியைப் போற்றாத வம்சத்தை நான் வேண்டேன்
உன்னைப் பற்றி நினைக்காத வாழ்க்கையை நான் வேண்டேன்