இத்தலத்தின் வருட வைபவம் 15 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் தேர்த்திருவிழா உற்சவம் ஆகும். பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய் அன்று நோன்பு சாட்டுதலில் தொடங்கி கம்பம் நாட்டுதல், காமதேனு, யானை, ரிஷபம், அன்னம், சிங்கம், மயில் குதிரை ஆகிய வாகனங்களில் திருவீதி உலா, மாவிளக்கு வழிபாடு என தினசரி திருவிழா கோலம்தான். 15ம் நாள் திருக்கல்யாணமும் தேர்த்திருவிழாவும் சீருடனும் சிறப்புடனும் நடைபெறும்.
தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல்நாள் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கந்தசஷ்டி, தைப்பொங்கல், பங்குனி உத்திரம், பௌர்ணமி ஆகிய தினங்கள் இத்தலத்தின் விஷேச திருநாட்கள் ஆகும். பௌர்ணமி தினம் அம்பாளுக்கு உகந்த தினம். அன்று பூஜையில் கலந்து கொள்வது மிக்க பலனைத் தரும்.
தல சிறப்பு:
அம்மனுக்கு கூழும் முருங்கை கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
பெரியகடை வீதி, உடுமலை 642126.
திருப்பூர் மாவட்டம்.
போன்:
+91 4252 224755
பொது தகவல்:
கிழக்கு வாயிலில் நுழைந்து உள்ளே சென்றால் அழகிய நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மணிமண்டபம் உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் இலகுவாக நின்று தரிசனம் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் நீண்டுயர்ந்த கொடிமரம் கம்பீரமாய் நிற்கிறது. மகாமண்டபம், அர்த்த மண்படத்தை அடுத்துள்ள கருவறையில் உள்ள உயர்ந்த பீடத்தில் மாரியம்மன் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு வீற்றிருக்கிறாள். நான்கு கரங்களில் அங்குசம், டமருகம், கத்தி, கபாலம் ஏந்தி அக்னி கொழுந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் கிரீடத்துடன் நீல நிறப்புடவையில் அருளாட்சி புரியும் சாந்த சொரூபிணி. உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருப்பதால் கிழக்கு கோபுர வாசலில் நுழையும் போதே அம்மனை காணும்படி உள்ளது.
கருவறையின் பின்புறம் சக்தி விநாயகர் மற்றும் முருகன் செல்வ முத்து குமரனாக தனிச் சந்நதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் மிகவும் விசேசமாக விளங்கும் சந்நதி, வடக்கு வாசலை ஒட்டி தொன்மையான அரசமரத்தடியில் நேர்த்தியாக அமைக்கப்பட்ட அஷ்ட நாக பீடம் ஆகும். அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடன் பத்மன், சங்கபாலன், குளிகன் மற்றும் மகாபத்மன் என எண்மரும் எட்டு திக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் காமிக ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு காலசந்தி, முற்பகல் 11 மணிக்கு உச்சிக்காலம், இரவு 7.00 மணிக்கு அர்த்த ஜாமம் என தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகிறது. கோவில் கிழக்கு நோக்கி இருந்தாலும் வடக்கு நுழைவு வாயில் தனியே நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.
பிரார்த்தனை
மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் குணமாகாத, தீராத கண் சம்பந்தமான வியாதிகளுக்கு அம்மனின் அருட்தீர்த்தமே மாமருந்தாக அமைந்து நலம் தருவதாக பயனடைந்தோர் தெரிவிக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
நீண்ட நாள் தடைபட்ட விவாகங்கள், குழந்தை பேறு இன்மை, உடல் நலக்குறைவு போன்ற வேண்டுதல்களை கனிவோடு நிறைவேற்றி வைப்பதை அனைவரும் அறிவர். வேண்டுதல்கள் நிறைவேறிய பின் தனது சக்திக்கு ஏற்ப பூவோடு எடுத்தல், மாவிளக்கு படைத்தல், உப்பிடுதல் உருவமிடல், முளைபாலி கையிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தேர்த்திருவிழா சமயத்தில் அம்மனுக்குச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கொங்கு மண்டலத்தில் உடம்பே ஆலயம் என்னும் ஆகம விதிகட்கு உட்பட்டு அமைந்த சிறப்பு வாய்ந்த தலம். திருமூலர் அருளிய உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் எனும் பாடல் நினைவுக்கு வருகின்றது. மாரியம்மன் திருமேனி மிகப் பழமையானது. கருங்கல்லில் துல்லியமாகச் செதுக்கப்பட்ட சிற்பம் ஆகும். தோளில் நெளியும் சர்ப்பங்கள், வலது காதில் ஸ்ரீசக்ர வடிவ தாடகங்கள், இடது காதில் தோடு, திருமேனியில் பலவித ஆபரணங்கள் என அருள் வடிவமாக காட்சி தருகிறாள்.
மாரியம்மன் நட்சத்திரம் மகம். எனவேதான் மகமாரி என அழைக்கப்படுகிறாள். பொதுவாக மாரியம்மன் உக்கிரமான தோற்றத்துடன் இருப்பாள். பக்தியோடு தொழாதவரை பயமுறுத்தும் சுபாவம். ஆவேசமான நோக்குடன் தலைமட்டும் கருவறையில் இருக்கும் நிலையில் சில கோவில்களில் காணலாம். தலை மட்டும் தனித்திருக்க இந்த உலகமே அவளுக்கு உடம்பு. ஆனால் இங்கு ஆவேசம் அடங்கிய நிலையில் சாந்த ரூபினியாக முழு அளவில் அருள்பாலிக்கின்றார்.
தேர்திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அச்சமயத்தில் ஒருதாய், நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தழுவும் நிலையில் இருந்த ஏழு வயது மகனை கோவிலுக்கு எடுத்து வந்து ஆலய வளாகத்தில் கிடத்தினாள். தன் மகனுக்கு உயிர் பிச்சை கேட்டு அம்மனிடம் மன்றாடி கதறி அழுதாள். மூன்று நாட்கள் தன் மகனுடன் கோவிலிலேயே தங்கி சதா சர்வ காலமும் அம்மனை மனதில் வேண்டி துதித்துக் கொண்டே இருந்தாள். பரிவுடன் தாயுள்ளத்தோடு கருணை புரியும் அன்னையல்லவா மாரியம்மன்? மதங்களைத் தாண்டிய அன்புள்ளம் கொண்டவள் அல்லவா? மூன்று நாளும் தீர்த்தமும் பிரசாதமும் வழங்கப்பட்டன. அச்சிறுவன் பூரண குணம் அடைந்தான். தன் நன்றியை கண்ணீரால் சமர்ப்பித்து திரும்பினாள். இதில் ஆச்சரியமூட்டும் செய்தி என்னவென்றால் அத்தாய் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர் என்பது தான். இச்செய்தி தல வரலாற்றில் காணப்படுகிறது. அம்மனின் சந்நதியில் வழங்கப்படும் தீர்த்தம் தீராத நோய்களைத் தீர்க்கவல்ல அருமருந்து. ஏனைய தலங்களில் அபிஷேக காலங்களில் மட்டுமே தீர்த்தம் வழங்கப்படும். ஆனால் இங்கு எல்லா நேரங்களிலும் தரிசனம் முடித்தவுடன் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
நாக பூஜை செய்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும், பிரிந்த சொந்த பந்தங்கள் ஒன்று சேர்வர். சத்ருக்கள் உபாதை நீங்கும். நாக தோஷங்கள் நீங்கி விவாகப் பிராப்தி, சந்தான பிராப்தி கிடைக்கும். மாங்கல்ய பலம், சொத்து பாதுகாப்பு என ஏராளமான பலன்கள் கிட்டுகிறதாம். நாகர் பல சமூகத்தவர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது. ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதை நாகராஜாவாகும். பஞ்சமி திதியில் நாகதோஷமுள்ள ஆயில்ய நட்சத்திரக்குறியவர்கள் பரிகார பூஜை செய்தால் தோஷ நிவர்த்தி கிடைக்கிறது. நாக பஞ்சமி வழிபாடு நாடெங்கிலும் கொண்டாடப்படும் விழாவாகும். வளர்பிறை தேய்பிறை பஞ்சமி திதியில் நாக தேவதைகளுக்கு பூஜை செய்வது எல்லா சுபகர்மாக்களுக்கும் உத்தமமாகும்.
ஊர் கூடி சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றாகக் கலந்து தேரில் மாரியம்மன் ஆடி அசைந்து வரும் அருட்காட்சியைக் காண தேரோடும் வீதியெங்கும் அலைமோதும் மக்கள் வெள்ளம் இத்தலத்தின் உன்னதத்தை உணர்த்தும். திருத்தேர் உடுமலை நகரின் முத்திரைச் சின்னமாக விளங்குகிறது. இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறுபெற்ற ஸ்தலங்கள் பல உள்ளன. ஆனால் இங்கு பக்தர்கள் நாகங்களை வழிபட்டு பேறு பெருகின்றனர்.
தல வரலாறு:
மாராசூரன் என்ற அசுரன் ஆணவமும் அகங்காரமும் கொண்டு மூவுலகையும் துன்பப்படுத்தினான். தேவர்களும், மனிதர்களும் லோகமாதாவான அன்னை பராசக்தியிடம் முறையிட்டனர். இவர்களின் வேண்டுகோளுக்கு மனம் இறங்கிய அம்மன் கோபத்துடன் மாராசுரனின் இரு கால்களையும் பிடித்து மேலே துõக்கி அவனது தலையை பூமியில் அழுத்தி, அவன் பெற்ற வரத்தின் படி அழித்தாள். தேவர்களும் முனிவர்கள் பூமாரி பொழிந்து அம்மனுக்கு நன்றி கூறினர்.அன்று முதல் அம்மனுக்கு மாரியம்மன் என்ற திருநாமமும் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தீயவர்களை அழித்து நல்லவர்களை காக்க உடுமலை நகரில் இந்த மாரியம்மன் கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அம்மனுக்கு கூழும் முருங்கை கீரையும் வேதனமாகப் படைக்கப்படுவது சிறப்பு.
இருப்பிடம் : பொள்ளாச்சி- பழநி நெடுஞ்சாலையில் உள்ள உடுமலைப்பேட்டை நகரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது. பஸ் நிலையத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் திசையில் 1/2கி.மீ. தொலைவில் உள்ளது. நடை தூரம் தான். ஆட்டோ வசதி உண்டு.