Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சடையப்பர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சடையப்பர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சடையப்பர்
  ஊர்: தென்செட்டி ஏந்தல்
  மாவட்டம்: விழுப்புரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாசித் திருவிழா  
     
 தல சிறப்பு:
     
  இங்கு வந்து குறைகளைச் சொல்லி பரிகாரம் கேட்கும் மக்கள், தாங்கள் வேண்டியது நிறைவேறியதும் சாமியிடம் சொன்ன பரிகாரத்தின்படி நிறைவேற்றாவிட்டால், தானே சென்று தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள் சடையப்பர்கள் என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சடையப்பர் திருக்கோயில் தென்செட்டி ஏந்தல், கல்வராயன் மலை விழுப்புரம் மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  விழுப்புரம் மாவட்டம், கல்வராயன் மலையை ஒட்டி உள்ளது தென்செட்டி ஏந்தல் கிராமம். கல்வராயன் மலைப்பகுதியானது தென்மேற்கே சேலம் மாவட்டத்தையும், வடக்கே திருவண்ணாமலை மாவட்டத்தையும், கிழக்கே விழுப்புரம் மாவட்டத்தையும் கொண்டது. இந்த மலைப்பகுதியை ஜாகீர்தார்கள் என்ற வம்சாவழியினர் பரம்பரையாக ஆண்டு வந்தனர். இப்பகுதி மலைவாழ் மக்களும், அதையொட்டி வாழ்ந்த கிராம மக்களும் ஜாகீர்தார்களை தங்கள் இனத்தின் முன்னோடிகளாகவும். தங்களை ஆளும் சிற்றரசர்களாகவும் எண்ணி மிகுந்த பயபக்தியோடும், மரியாதையோடும் அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். 1975-ல் இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதுதான் இந்த கல்வராயன் மலைப்பகுதி ஜாகீர்தார்கள் கட்டுப்பாட்டில் இருந்து அரசின் கட்டுபாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த ஜாகீர்தார் வம்சா வழியினரைச் சேர்ந்தவர்கள்தான் காலம் சென்ற பெரிய சடையப்பர், சின்ன சடையப்பர் மற்றும் அவர்களது தாயார் மஞ்சு நாச்சியம்மன் ஆகியோர். இவர்களையே தங்களைக் காக்கும் எல்லை தெய்வங்களாக வணங்கி வருகிறார்கள் இங்குள்ள கிராம மக்கள்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சடையப்பரை வேண்டிக் கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள சடையப்பருக்கு திருவிழாவின் போது பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பெரிய சடையப்பருக்கு யானை வாகனமும், சின்ன சடையப்பருக்கு குதிரை வாகனமும் உள்ளன. இவற்றின்மீது வேட்டைக்குப் போகும் இவர்களுக்கு ஆணிகள் பொருத்திய காலணிகள் உண்டு. இந்த தெய்வங்களை நம்பி வந்து தங்கள் குறைகளைச் சொல்லி தீர்வு வேண்டினால், அவற்றை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்கள். பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த ஒரு தம்பதிகள் இந்த தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டபோது குழந்தைப்பேறு கிடைத்தது. இதற்கு நன்றிக்கடனாக மூன்று பவுன் தாலிச் சங்கிலியை காணிக்கையாகக் கொண்டு வந்து செலுத்தினார்கள். இப்படிப்பட்ட சக்திமிக்க தெய்வங்களை சேலம், கடலுர், பெரம்பலூர், சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, கரூர், தம்மம்பட்டி, வயலூர், திருவண்ணாமலை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இவ்வூரில் உள்ள எல்லா மக்களும் இத்தெய்வங்களை மிகுந்த பக்தியோடும் கட்டுப்பாடுகளோடும் வழிபட்டு வருகின்றனர். முன்காலத்தில் இந்த ஊரில் பட்டுநூல் தயாரித்த செட்டியார் இன மக்கள் அதிகம்பேர் வாழ்ந்துள்ளனர். அதனால்தான் இந்த ஊருக்கு செட்டி ஏந்தல் என்ற பெயர் உருவானது. இதேபோல் சங்கராபுரம் அருகே ஒரு செட்டிஏந்தல் கிராமம் உள்ளது. அதனால் அந்த ஊருக்கு வடசெட்டிஏந்தல் என்றும், எங்கள் ஊரை தென்செட்டி ஏந்தல் என்றும் அழைக்கிறார்கள்.

இங்கு வந்து குறைகளைச் சொல்லி பரிகாரம் கேட்கும் மக்கள், தாங்கள் வேண்டியது நிறைவேறியதும் சாமியிடம் சொன்ன பரிகாரத்தின்படி நிறைவேற்றாவிட்டால், தானே சென்று தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள் சடையப்பர்கள். ஆண்டாண்டுகாலமாக அக்கம் பக்கம் உள்ள எத்தனையோ ஊர்களில் காலரா பரவி பலர் இறந்துள்ளனர். ஆனால் சடையப்பர் கோவில் கொண்டுள்ள எங்கள் ஊரில் மட்டும் அன்று முதல் இன்று வரை யாருக்கும் காலரா வந்ததே இல்லை என்கிறார்கள் இவர்கள்.
 
     
  தல வரலாறு:
     
  ஆங்கிலேயர்கள் காலத்தில் இக்கோயில் பூசாரியாக இருந்தவர் மீது ஒரு திருட்டு வழக்கு ஏற்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அந்த திருட்டு வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பூசாரி புலம்பியபடியே இருந்தார். இதைக் கவனித்த நீதிபதி பூசாரியிடம் விசாரித்தார்.

அதற்கு பூசாரி, அய்யா! நான் பூஜை செய்யும் கோயில் சாமிகளுக்கு இன்றைக்கு மாசி மகத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இத்தெய்வங்களுக்கு மாசிமகத்தன்று நடைபெறும் திருவிழாதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட திருவிழாவில் சாமிகளுடன் உடனிருந்து அலங்காரம் செய்யவும், பூஜை செய்யவும் என்னால் போக முடியவில்லையே! அதை நினைத்துதான் புலம்புகிறேன். சக்தியுள்ள அந்த சாமிகள் என்னை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச்செல்ல வருவார்கள் என்று நம்பியுள்ளேன் என்றார். அதைக் கேட்ட நீதிபதி, அவ்வளவு சக்தியுள்ளதா உங்கள் சாமி? அப்படியானால் அந்த சாமிக்கு நான் ஒரு சோதனை வைக்கிறேன். அந்த சாமிக்கு சக்தி இருந்தால் அதைக் கண்டுபிடிக்கட்டும். அப்படி கண்டுபிடித்துவிட்டால் திருவிழா பணிக்கு உன்னை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். இந்த செய்தி ஊருக்குத் தெரிவிக்கப்பட்டது.

தென்செட்டி ஏந்தல் ஊரின் முக்கியஸ்தர்கள் எட்டு பேர் சடையப்ப சாமியை தோளில் சுமந்தபடி நீதிமன்றத்துக்குப் புறப்பட்டனர். இந்த நிலையில் நீதிபதி தனது உதவியாளர்களோடு விபூதி, குங்குமம், எலுமிச்சம்பழம் ஆகிய மூன்றையும் பொட்டலமாகக் கட்டி, அருகிலுள்ள கோமுகி ஆற்றுக்குச் சென்று அங்குள்ள மணலில் புதைத்து வைத்துவிட்டு வந்துவிட்டார். சாமியை சுமந்தபடி நீதிமன்றம் முன்பு வந்து நின்றார்கள் தென்செட்டி ஏந்தல் சாமிதூக்கிகள். அப்போது நீதிபதி அவர்களிடம், நான் மறைத்து வைத்துள்ள பொருட்களை உங்கள் சாமி கண்டு எடுக்கட்டும் என்றார். என்ன அதிசயம்! சாமிதூக்கிகள் தங்களையும் அறியாமலேயே சாமியை சுமந்தபடி கோமுகி ஆற்றின் மணல் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற சாமி ஒரு இடத்தில் மட்டும் கால்களை அழுத்தமாக ஊன்றி நிற்க, நீதிபதி புதைத்து வைத்த விபூதி, குங்குமம், எலுமிச்சம்பழம் அடங்கிய பொட்டலம் வெளியே வந்து விழுந்தது. இதைப் பார்த்து வியந்துபோன அந்த நீதிபதி திருட்டு வழக்கில் இருந்த அந்த பூசாரியை விடுதலை செய்து, மாசி மகத் திருவிழாவிற்கு பூஜை செய்ய அனுப்பி வைத்ததோடு, அவரும் சென்று அந்த தெய்வத் திருவிழாவில் கலந்துகொண்டு சாமிகளைத் தரிசனம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு வந்து குறைகளைச் சொல்லி பரிகாரம் கேட்கும் மக்கள், தாங்கள் வேண்டியது நிறைவேறியதும் சாமியிடம் சொன்ன பரிகாரத்தின்படி நிறைவேற்றாவிட்டால், தானே சென்று தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள் சடையப்பர்கள் என்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar