Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பீமாசங்கரர்
  அம்மன்/தாயார்: கமலாட்சிபச்சிஷ்டா தேவி
  தீர்த்தம்: மோட்சகுண்டம், சர்வ தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம், பீமாநதி.
  ஊர்: பீமா சங்கர்
  மாவட்டம்: புனே
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, பிரதோஷம்  
     
 தல சிறப்பு:
     
  இது 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. மூலவர் கூம்புவடிவில் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு. அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பீமாசங்கரர் திருக்கோயில், சகியாத்திரி மலைத்தொடரில் பீமாசங்கரம், புனே மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம்.  
   
போன்:
   
  +91 410509 9421057723, 9970045972 
    
 பொது தகவல்:
     
  இங்கு விநாயகர், கவுரி, இராமர், இலக்குமணர் பரிவார மூர்த்திகள் உள்ளனர். பீமா சங்கரம் கோயில் மலைச்சாரலில் உள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழி மேலேயிருந்து கீழே பள்ளத்தாக்கு நோக்கிச் செல்கிறது. வழி நெடுகப் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. மூலத்தானத்தில் சிவலிங்கம் பூமிமட்டத்திலிருந்து கீழே உள்ளது. கோயில் கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது. கருங்கற்களால், பலவிதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மூலவருக்குப் பரிவார தேவதைகளாக மற்றுமொரு பீமேசலிங்கம், நந்தி, அம்மன் முதலியவர்கள் உள்ளனர். மேலே உள்ள கோபுரக் கலசத்தை நாம் அவசியம் தரிசிக்க வேண்டும். சிற்பங்கள் மிக அழகாக உள்ளன.

கர்ப்பக்கிரகத்தின் உள் சுவரில் பார்வதி தேவியின் அழகிய சிறிய திருச்சிலை ஒரு மாடத்தில் காணப்படுகிறது. கர்ப்பக்கிரகத்துக்குள் செல்லும் படிக்கட்டுத் தூண்களில் தேவ, மனித உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் எதிரில் கம்பீரமான நந்தி உயரத்திலிருந்து சிவனைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். சிவ சன்னிதியை அடுத்து, சபா மண்டபத்துக்கு எதிரில் சனி பகவானின் சன்னிதி தனியாக உள்ளது. காக்கை வாகனத்தின் மேல் அமர்ந்து சனிபகவான் அனுக்ரகம் செய்கிறார். இச்சன்னிதிக்கு எதிரில் இரண்டு தூண்களுக்கு மத்தியில் பெரிய அழகிய போர்த்துகீசிய மணி காணப்படுகிறது. பாஜிராவ் பேஷ்வாவின் சகோதரர் சிம்னாஜி அப்பா என்பவர் இதனைக் காணிக்கையாகச் சமர்ப்பித்துள்ளார். சிம்னாஜி அப்பா, போர்த்துகீசியர்களை, வாஸாய் கோட்டையில் வென்று இரண்டு பெரிய மணிகளை வெற்றியின் சின்னமாகக் கொண்டு வந்தார். ஒன்றை பீமாசங்கர் கோயிலுக்கும், மற்றொன்றை கிருஷ்ணா நதிக்கரையில் வாயி என்ற இடத்திலுள்ள மேநோ வாலி சிவன் கோயிலுக்கும் காணிக்கையாக அளித்துள்ளார்.
 
     
 
பிரார்த்தனை
    
  சந்திரபாகா நதியில் நீராடி, பீமசங்கரப் பெருமானை வழிப்பட்டால், மனிதர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுள்ளது. மோட்ச குண்டத்தில் நீராடினால் மோட்சம் கிடைக்கும். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, பூ, வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். பக்தர்கள் வளையல், மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி போன்றவற்றை பக்தியுடன் அம்பாளுக்கு சமர்ப்பித்து மகிழ்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

பீமன் என்னும் அரக்கனுக்காக, சிவபெருமான் இங்கே தோன்றி ஜோதிர்லிங்கமாக விளங்குவதால் பீமாசங்கரம் எனப் பெயர் பெற்றது. இந்த திருக்கோயில் ஒரு கானகத்தின் நடுவே அமைந்துள்ளது. புனேயிலுள்ள கேத் என்ற இடத்துக்கு வட மேற்கே முப்பது மைல் தொலைவில் போவாகிரி என்ற கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் புறத்தே இந்தக் கானகம் அமைந்திருக்கிறது. பீமா அல்லது சந்திரபாகா நதியின் தோற்று வாயில் இந்தக் கோயில் உள்ளது. நானாபட்னாவிஸ் என்ற பக்தர் இந்த ஆலயத்தைக் கட்டினார். புனேயிலிருந்து பஸ்ஸிலும் போகலாம். வெளிப்புறத் தரை மட்டத்துக்குக் கீழே, ஒரு முழ உயரத்தில் கருப்பக்கிருகத்தில் இந்த லிங்கம் அமைந்திருக்கிறது. அமைதியான, மனதுக்கு இதம் அளிக்கும் சூழ்நிலை.


கோயில் மிகவும் பழமையானது. முக்கிய சாலையிலிருந்து மூன்று கி.மீ. தூரம் கீழே படிக்கட்டு மூலம் இறங்க வேண்டும். மலைச்சரிவுப் பள்ளத்தாக்கில் கோயில் உள்ளது. கோயில் தனியே உள்ளது. பக்கத்தில் எதுவும் இல்லை. போகும் வழியில் படிக்கட்டில் உள்ள கடைகள்தாம். மலைக் காட்டுப்பகுதி. கோயிலின் வலதுபக்கம் பீமாநதி, சிறு ஓடைபோல ஓடுகிறது. சிறு தொட்டியில் நீரைத் தேக்கிவைத்து பக்தர்கள் நீராடுகின்றனர். மேலும் மோட்ச குண்டம், சர்வ தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம் உள்ளன. கோயில் கோபுரம் வாழைப்பூ போன்று, கூம்பு வடிவில் மிக உயரமாக உள்ளது. மிகவும் அழகிய, மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கோயில் திகழ்கின்றது. போவாகிரி என்ற சிற்றூர் இதன் அருகே உள்ளது. தற்போது கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ராமர்கோயில் கட்டப்பட்டுள்ளது. சலவைக் கல்லினாலான இராமர், சீதை முதலானோர் விக்கிரகங்கள் உள்ளன. இந்துக்களின் புனித யாத்திரைத்தலம். பீமாசங்கரம் கோயில் முன்மண்டபம் விசாலமாகவுள்ளது. கர்ப்பகிரகத்தின் உள்ளேயும் மூலத்தான இடம் பூமி மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ளது. *படிக்கட்டிறங்க வேண்டும் - விசாலமாக உள்ளது. பூமியை ஒட்டியே சிவலிங்க ஆவுடையார் வட்டமாக உள்ளது. சிவலிங்கம் சுமார் ஓர் அடி உயரமே உள்ளது. பக்தர்கள் சிவலிங்கத்தைச் சுற்றிலும் வட்டமாக அமர்ந்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்ய முடியும். ஆண், பெண் அனைவரும் உள்ளே செல்லலாம். ஆனால் ஆண்கள் சட்டைபோடாமல் செல்ல வேண்டும். இம்மலையில் மூலிகைகளின் காற்று வீசுகிறது. வழிக்கடைகளில் மூலிகை மருந்து விற்கிறார்கள்.


இம்மலைத் தொடரில் பீமா நதி உற்பத்தியாகி, தென்கிழக்காகப் பாய்ந்து ராய்ச்சூர் அருகில் கிருஷ்ணா நதியில் கலக்கிறது. பீமா நதி உற்பத்தியாகுமிடம் குப்தபீமா என்றழைக்கப்படுகிறது. பீமாசுரனுடன் நடந்த போரின்போது சிவனாரின் மேனியிலிருந்து வழிந்த வியர்வையே பீமா நதியாகப் பாய்வதாக ஐதீகம். அனைத்துச் சிவத் தலங்களைப் போலவே பீமாசங்கர் திருத்தல கர்ப்ப கிரகமும் உள்ளாழ்ந்து தாழ்வாகக் காணப்படுகிறது. சிவலிங்கத்துக்கும் ஆவுடையாருக்கும் வெள்ளிக் காப்பிடப்பட்டுள்ளது. கர்ப்பக் கிருகத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மூலம் மிகத் தெளிவாக வெளியில் இருந்தவாறே சிவபெருமானை தரிசிக்க முடிகிறது. தவிர, பக்தர்கள் தாங்களே சிவலிங்கத்தைத் தொட்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். சஹ்யாத்ரி மலைத் தொடரின் முடிவில் அமைந்துள்ளதால் இவ்விடத்திலிருந்து பார்க்கும்போது நதிகளும் மலைகளும் காடுகளும் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன. இயற்கையை ரசிப்பவர்களுக்கு, டிரெக்கிங் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் பிரதேசமாகவும் இது விளங்குகிறது. பக்தர்கள் வாகனங்களை விட்டிறங்கி படிக்கட்டுகள் வழியாக சிறிது தூரம் நடந்து கீழிறங்கி கோயிலைச் சென்றடைய வேண்டும். மக்கள் சந்தடியிலிருந்து விலகி, இயற்கை அழகு கொஞ்சும் மலைத்தொடரில், பசுமையான அடர்ந்த காடுகளின் இடையே அமைந்துள்ள இக்கோயில் யாத்ரீகர்களின் சுவர்க்கமாக விளங்குகிறது.


 
     
  தல வரலாறு:
     
 

மூன்று அரக்கர்கள் பிரம்மாவைக் குறித்துத் தவம் இருந்தனர். அவருடைய அருளினால் இணையற்ற பலத்தைப் பெற்றனர். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்குச் செல்லும் ஆற்றலையும் பெற்றனர். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இடையூறு விளை வித்தனர். தாங்கொணாத துன்பம் அனுபவித்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அந்த மூன்று அரக்கர்களையும் அழிக்கச் சிவபெருமான் மாபெரும் உருத்தாங்கி, பல ஆயுதங்களுடன் போரிட்டார். சிவபெருமான் எடுத்த உருவம் அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. அதனால் தான் டாகினி என்றும் இந்தத் தலத்தைச் சொல்லுவார்கள். அதனால் இறைவனுக்குப் பீமசங்கரர் என்ற திருநாமம் உண்டாயிற்று. தேவர்களும் முனிவர்களும் வேண்ட அங்கேயே தங்கி அருள் புரியத் தொடங்கினார் இறைவன். கும்பகர்ணனுக்கும் கற்கபி என்ற அரக்கிக்கும் பிறந்த பீமன், தன் தாய் வழிப் பாட்டனை சுதீக்ஷ்ணன் என்ற முனிவரும், பெரிய தந்தை ராவணனை ராமனும் கொன்றனர் என்பதை அறிந்து, அந்தணர்களையும் அரசர்களையும் அழிக்க எண்ணி, நான்முகனை நோக்கித் தவம் செய்து, அவன் அருளால் வலிமை பெற்றான்.


தன்னிகர் இல்லாத பலம் பெற்றதும் மன்னர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். காமரூபத்து இந்தத் தம்பதி சிறந்த சிவ பக்தர்கள். சிறையிலும் இவர்கள் சிவபூஜை செய்தார்கள். இப்படிப் பூஜை செய்ய அனுமதித்தால் சிவபெருமான் அருளால், தன்னையே, அழிக்கக்கூடும் என்று உணர்ந்து, பூஜையை நிறுத்தும்படி கட்டளை யிட்டான் பீமன். அவர்கள் அவன் சொல்லைக் கேட்கவில்லை. அதனால் கோபம் கொண்ட பீமன், அவர்களை வெட்ட வாளை உருவினான். அவர்கள் வழிபட்டுவந்த லிங்கத்திலிருந்து சிவ பெருமான் தோன்றிப் பீமனைச் சங்கரித்தார். அந்த அரச தம்பதிகளின் வேண்டுகோளின்படி அங்கேயே கோயில் கொண்டார். பீமனைச் சங்கரித்ததால் பீம சங்காரம் என்ற திருநாமம் உண்டாயிற்று.


மகாராஷ்டிரா மாநிலம், மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரைச் சேர்ந்த சஹ்யாத்ரி பர்வதத்தில் உள்ளது பீமாசங்கர் திருக்கோயில். இது துவாதச ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. மூலவர் சுயம்புலிங்கம். இக்கோயில் கடல் மட்டத்திலிருந்து 2,750 அடி உயரத்தில் உள்ளது. நகாரா வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள இக்கோயில், பழைமையும் புதுமையும் கலந்த அழகிய சிற்பக் கலைநயத்துடன் விளங்குகிறது. தாக்கினி மலைக் காட்டில் பீமா என்ற அசுரன், தன் தாய் கர்க்கடி என்பவளுடன் வசித்து வந்தான். கருணை, தயை போன்ற நற்குணங்கள் அவனைக் கண்டு அஞ்சி நடுங்கின. அவன் மனிதர்களை மட்டுமின்றி, தேவர்களையும் ஒருசேர பயமுறுத்தினான். தாங்கள் மட்டும் ஏன் இக்காட்டில் வசிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் தினமும் <உதித்தது. ராவணனின் சகோதரன் கும்பகர்ணனே தனது தந்தை என்பதையும், ஸ்ரீமகா விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தது தனது தந்தை கும்பகர்ணனையும், பெரிய தந்தை ராவணனையும் வதைத்தார் என்பதையும் தன் தாயிடம் கேட்டறிந்த பீமாசுரன், ஸ்ரீமகா விஷ்ணுவை பழி தீர்க்க எண்ணினான். இதற்காக பிரம்மாவைக் குறித்து கடும் தவம் புரிந்தான். பிரம்மாவிடம் பெற்ற வரத்தால் மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். இந்திரனை வென்று தேவலோகத்தைக் கைப்பற்றினான். முனிவர்களையும் சாதுக்களையும் துன்புறுத்தினான். தேவர்கள், சிவனிடம் அபயம் வேண்டி நின்றனர். ஒருசமயம் காமரூபேஸ்வரர் என்ற பக்தர் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தபோது அவரைத் தடுத்து சிவனுக்குப் பதில் தன்னை வணங்கும் படி வற்புறுத்தினான் பீமாசுரன். மறுத்த அவரைக் கொல்வதற்கு வாளை ஓங்கினான். உடனே மகாதேவர் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பீமாசுரனுடன் யுத்தம் புரிந்தார். இருவருக்குமிடையே கடும் யுத்தம் நிகழ்ந்தது. நாரதர் வந்து போரை முடிக்கும்படி சிவனை வேண்ட, பீமாசுரன் சாம்பலாக்கப்பட்டான். தேவர்கள் மற்றும் முனிவர்களின் வேண்டுதலின்படி அவ்விடத்திலேயே ஜோதிர்லிங்கமாக மகாதேவர் ஐக்கியமாகி, பீமாசங்கர் எனத் திருப்பெயர் பெற்றார். பீமா சங்கர் திருக்கோயில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சபா மண்டபமும், கோபுரச் சிகரமும் 18ம் நூற்றாண்டில் நானா பட்னிவாஸ் என்பவரால் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மராட்டிய சக்கரவர்த்தி சிவாஜி இக்கோயிலில் வழிபாடுகளுக்குத் தேவையான மானியங்களை வழங்கி உள்ளார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இது 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. மூலவர் கூம்புவடிவில் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar