|
குள்ள லிங்கம்: பாலாற்றின் வடகரையில் அமைந்த கோயில் இது. அகத்தியர் ஸ்தாபித்த லிங்கம் என்பதால், சிவலிங்கம் குள்ளமாக இருக்கிறது. பாணத்தில் கை ரேகைகள் தெரிகின்றன. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் திங்களன்று சந்திரஹோரை நேரத்தில், சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்கிறார்கள். சிவன் சந்நிதி எதிரில் அகத்தியர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சதயம் நட்சத்திர நாட்களில் இவருக்கு பூஜை நடக்கிறது. ஆவணி வளர்பிறை பஞ்சமியன்று இவருக்கு ரிஷி பூஜை நடத்தப்படும்.
ஆவுடை அம்பிகை: அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். நவராத்திரியின் போது இவளுக்கு ஹோமத்துடன் பூஜை நடக்கும். பவுர்ணமியன்று சப்தரிஷிகளான அகத்தியர், அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகியோர் இவளை பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சந்நிதி முன்பு, லகுசண்டி ஹோமம் நடத்துகின்றனர். சப்தரிஷிகளே இதை நடத்துவதாக ஐதீகம். இந்த பூஜை நடக்கும்போது 7 இலைகளில் ரிஷிகளுக்கு நைவேத்யம் படைப்பர்.
அஷ்டதிக்பாலகர்: கோயில் பிரகாரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் தங்களுக்குரிய திசையில் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். இவர்களில் வடக்கு திசைக்குரிய குபேரருக்கு, செல்வ விருத்திக்காக வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவர். வடமேற்கு திசைக்குரிய அக்னி பகவானுக்கு திருமணத்தடை நீங்க சிவப்பு வஸ்திரத்துடன் தக்காளி சாதம் படைப்பர். தெற்கு திசைக்குரிய எமனுக்கு விபத்தை தவிர்க்க பாலபிஷேகம் செய்வர்.
பாகற்காய் மாலை: ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர், சனீஸ்வரர் இருவரும் அடுத்தடுத்து உள்ளனர். வீடு, கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர் அது தடங்கலின்றி நடக்கவும், வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களில் மூழ்கியிருப்போர் அது நீங்கவும் இவர்களுக்கு பூஜை செய்வர். சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து எள் தீபமேற்றி வழிபட்டால் கசப்பை சனீஸ்வரர் ஏற்று நமக்கு விடுதலையளிப்பார் என்பது நம்பிக்கை.
முருகனுக்கு பீட்ரூட்: செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு இங்கு உள்ள முருகனுக்கு பீட்ரூட் சாதம் படைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை நீங்கி சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என நம்புகிறார்கள். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், சரபேஸ்வரர், காலபைரவர் ஆகியோருக்கும் சந்நிதி இருக்கிறது. பள்ளி திறக்கும் இந்த நேரத்தில் இங்குள்ள ஹயக்ரீவரை வழிபடுவது நல்லது. அகத்தியர் சிவபூஜை செய்யும் சுதை சிற்பமும் உள்ளது. வன்னிமர வனமாக இருந்ததால், வன்னிக்காடு என அழைக்கப்பெற்ற இத்தலம், பிற்காலத்தில் வன்னிவேடு என மருவியது. |
|