புராணத்தில் பாலா: லலிதாம்பிகையிடம் இருந்து அவதரித்தவள் பாலா. தாயைப்போல சிவந்தவளான இவளுக்குரிய மந்திரம் ஸ்ரீவித்யா. முருகப்பெருமான் தாயின் சம்பந்தமில்லாமல் பிறந்தது போல, தந்தையின் சம்பந்தம் இல்லாமல் தாயிடம் இருந்து பிறந்தவள் பாலா. ஸதா நவவர்ஷா என்ற பெயரும் இவளுக்கு உண்டு. எப்போதும் புதுமையாக (யாரும் எதிர்பாராத விதமாக அருளைப் பொழிபவள் என்பது இதற்குப் பொருள். அதனால் தானோ என்னவோ, இந்தக் கோயிலில் தற்கால நாகரீகத்திற்கேற்ப சாக்லெட் பிரசாதம் தருகிறார்கள். ஜபமாலையும், புத்தகமும் வைத்திருக்கிறாள்.
ஆற்றில் வந்தவள்: நெமிலியில் வசித்த வேதவித்தகர் சுப்பிரமண்ய அய்யர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கனவில் பாலா தோன்றினாள். அன்னை ராஜராஜேஸ்வரியின் கட்டளையை ஏற்று ஆற்றில் வருகிறேன். என்னை அழைத்து உன் வீட்டில் அமர்த்திக்கொள், என்றாள். அய்யர் ஆற்றுக்குச் சென்று இடுப்பளவு நீரில் இறங்கி சிலையைத் தேடினார். பயனில்லை. கவலையோடு வீட்டுக்கு வந்தார். மறுநாளும் தேடினார். ஏமாற்றம் தான். பித்துப்பிடித்தவர் போல ஆனார். மூன்றாம் காலையில் எழும்போது நீலவானமும், அதில் பறக்கும் பறவைக் கூட்டமும் நல்ல சகுனமாகத் தெரிந்தது. நம்பிக்கையுடன் ஆற்றுக்குச் சென்றார். நீரில் மூழ்கிப் பார்த்தார். அதுவரை அவருடன் கண்ணாமூச்சி ஆடிய பாலா, அவரது கைக்குள் தானாகவே வந்து கிடைத்தாள். அந்தச் சிலை சுண்டுவிரல் அளவே இருந்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
வீடே கோயிலானது: தன் வீட்டிலேயே பாலாவை பிரதிஷ்டை செய்தார். அய்யரின் வீடே கோயிலாக மாறியது. இந்த வீட்டை பாலா பீடம் என்று அழைக்கின்றனர். 800 ஆண்டுகளுக்கு முன் கருவூர்சித்தரின் பாடல்களில் பாலாவைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. கருவூர் சித்தர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் பாலாவின் சந்நிதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். காஞ்சிப்பெரியவர் இங்கு வந்து ஒருவாரம் தங்கி வழிபாடு செய்திருக்கிறார்.
சாக்லெட் பிரசாதம்: குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சரஸ்வதியின் அம்சமாக திகழ்வதால் மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இங்கு வழிபடுவதன் மூலம் கிரகிப்புத்திறன், ஞாபகசக்தி பெற்று கல்வியில் சிறந்து விளங்குவர். |