வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் சூரசம்ஹாரம் ஆகியவை இத்தலத்தின் முக்கிய விழாக்கள் ஆகும்.
இக்கோவிலின் வருடவைபவம் கொடியேற்றத்துடன் 11 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவாகும். தினசரி சிறப்பு அலங்கார ஆராதனைகளுடன் சுவாமி புறப்பாடு நடைபெறும். கோவிலைச் சுற்றி உள்ள 200 க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து காவடி மற்றும் பால் குடங்களை சுமந்து நடைபயணமாக வந்து சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்வர். ஒன்பதாம் நாள் திருக்கல்யாணமும் பத்தாம் நாள் தேரோட்டமும் தைப்பூசத்தின் தலையாய திருநாட்கள் ஆகும்.
தல சிறப்பு:
மூலவர் இடது பாகத்தில் மயில் பீலி இருப்பதும் அபூர்வமாகக் காணப்படுவதாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில்
கிளப் ரோட் அருகில், (சக்திமலை)
கோத்தகிரி - 643217. நீலகிரி மாவட்டம்.
முருகனுக்குகந்த செவ்வாய் கிழமைகளில் உடல்நலம் குன்றியவர்களையும், கால் நடைகளையும் இந்த மயில் பீலியால் தடவி பூஜித்த திருநீறு பூச விரைவில் உடல்நலம் தேறுகிறதாம். கோர்ட், வழக்குகள், குடும்ப பிரச்சனைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சத்ருசம்ஹார திரிசதி பூஜை அர்ச்சனை செய்ததால் நல்ல தீர்ப்பு கிடைத்ததாகத் தெரிவிக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
செவ்வாய், மற்றும் நாகதோஷம் உள்ளவர்களுக்கு இக்கோவில் ஒரு சிறந்த பரிகார தலமாக உள்ளது. கிருத்திகை, சண்டி, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்கள் சிறப்பு பூஜைக்குரியவை. சனி பிரதோஷத்தன்று 108 சங்காபிஷேகத்துடன் மகாந்யாஸ பாராயணமும் ருத்ர ஹோமமும் சிறப்புற நடைபெற்று வருகின்றது.
தலபெருமை:
இத்தலம் சோமாஸ் கந்த சொரூபத்தில் அமைந்துள்ளது மட்டுமல்லாமல் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு உள்ளது. பொதுவாக முருகன் தண்டாயுதத்துடன் நிற்பது போல் தான் சிலை வடிக்கப்பட்டிருக்கும் இங்கு மாறாக முருகன் வேலுடன் இருப்பதைப் போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது அபூர்வமானதும் கூட.
வேல் என்பது ஞானம், ஞானமாகிய வேல் எல்லாவற்றையும் வெல்கின்றது. எனவே அது வெற்றிவேல், அவ்வேலை தாங்கிய வெற்றிவேல் முருகனை இடையறாது வணங்குவோர்க்கு ஞானம் பெருகும். வினைகள் பட்டொழியும். இதைத் தான் வேலூண்டு வினையில்லை என்பர். இங்கு ஞான பண்டிதனாகிய முருகப்பெருமான் வேலை விடாது தாங்கியுள்ளார். ஞான சக்தியாக விளங்குவதால் இத்தலம் சக்திமலை எனப் பெயர் பெற்றது. இங்கு துதித்து தியானிப்பவர்களுக்கு மனத் தெளிவு பிறக்கிறது.
பள்ளி செல்லும் குழந்தைகள் இத்தலத்திற்கு வந்து துதித்து தியானத்தில் ஈடுபடுகின்றனர். மன அமைதிபெறுவதால் படிப்பில் முழு கவனம் செலுத்தி நன்கு கற்றிட ஏதுவாகிறது.
ஒருமுறை வாரியார் சுவாமிகள் இக்கோவிலுக்கு விஜயம் செய்தார். அச்சமயத்தில் கருவறையில் முருகன் சிலை மட்டுமே இருந்தது. வேறு மண்டபங்களோ அல்லது பிற சந்நதிகளோ இல்லை. வாரியார் சுவாமிகள் வெளியூர் செல்லும் போது தினமும் தான் பூஜிக்கும் முருகனை ஒரு பெட்டியில் வைத்து தன்னுடன் எடுத்துச் செல்வார். தங்கும் இடங்களில் தினசரி அம்முருகனுக்கு அபிஷேகம் ஆராதனைகளைச் செய்வது வழக்கம். அந்த முருகனை இக்கோவிலில் வைத்து பூஜித்து வழிபட்டார். வெற்றிவேல் முருகன் வாரியார் சுவாமிகளை ஆட்கொண்டார். மனமுருகி தொழுதபின் இக்கோவில் சான்னித்யம் உள்ள தலம். நிச்சயம் பெரிய கோவிலாக உருவாகும் தங்கத் தேர் ஓடும் அளவிற்கு முன்னேற்றம் அடையும். என வாழ்த்தினார். சுவாமிகள் இன்று நம்மிடையே இல்லை. அவர் வாக்கு பொய்க்கவில்லை. அவர் வாழ்த்திய படியே வெற்றிவேல் முருகன் கோவில் பலதுணைச் சந்நதிகளுடன் சிறப்புடன் விளங்கி, தைப்பூச திருவிழாவின் போது மரத்திலான தேர் ஓடுகிறது.
இத்தலம் மலைப்பிரதேசத்தில் உள்ளதால் நம் நாட்டவர் கோடை விடுமுறை சமயத்தில் மட்டுமே பெருந்திரளாக வருவர். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள், ஒருமுறை இத்தலத்திற்கு வந்தால், தொடர்ந்து கோத்தகிரிக்கு வரும் போதெல்லாம் வரத்தவறுவதில்லை. காரணம் இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளும், கிடைக்கும் மன அமைதியும் தான். இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரும் இங்கு வந்து முருகனைத் துதித்து, நீண்ட நேரம் தியானத்தில் ஆழ்ந்து மன அமைதியுடன் திரும்புகின்றனர். வெளிநாட்டவர் கோடை காலத்தில் மட்டுமல்லாது வருட முழுவதும் வருகின்றனர்.
தல வரலாறு:
திட்டமலைக்கு தென்கிழக்கில் கெட்டிச் செலியூர் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஓர் உயர்ந்த குன்று கோத்தகிரி. அந்த குன்றில் நெடிதுயர்ந்த அடர்த்தியான செழிப்பான மரங்கள் வளர்ந்திருந்தன.
ஒரு மரத்தின் கீழே ஒரு சுயம்பு மூர்த்தம் இருந்தது. இந்த சுயம்பு மூர்த்தத்தை தினமும் ஒரு நாகமும் மயிலும் வந்து பூஜிப்பதை மாடு மேய்க்கும் சிறுவர்கள் மற்றும் காய்ந்த இலைகளை சேகரிக்கும் நபர்கள் கண்டுள்ளனர். தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் இது நிகழ்ந்துள்ளது. இச் செய்தியை ஊர் பெரியவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்களைச் சிறுவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு கூட்டிச் சென்றனர். தூரத்தில் நின்று நாகமும் மயிலும் பூஜிப்பதைப் பார்த்தனர். அவை அவ்விடத்தைவிட்டு அகன்ற பின்பு. அருகில் சென்று அந்த சுயம்பு மூர்த்தத்தைப் பார்த்துத் தொழுதனர். நாகமும் மயிலும் பூஜித்ததால் அந்த சுயம்பு மூர்த்தம் முருகனாகத் தான் இருக்கும் என உறுதி செய்தனர்.
பின்னர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி முருகனுக்கு அந்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்து சிறிய அளவிலான கோவிலைக் கட்டி சுயம்பு மூர்த்தத்தை வைத்து பூஜித்து வந்தனர். பின்னர் கற்சிலைக்கு ஏற்பாடு செய்து, சுயம்பு மூர்த்தத்திற்கு பின்னால் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தனர். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் பெருகி வந்தது. பக்தர்களின் ஒத்துழைப்புடனும், நிதியுதவியுடனும் அர்த்த மண்டபம், மகாமண்டபம் என விரிவாக்கமும் பிற சந்நதிகளும் கட்டப்பெற்றன. தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் இடது பாகத்தில் மயில் பீலி இருப்பதும் அபூர்வமாகக் காணப்படுவதாகும்.
இருப்பிடம் : கோத்தகிரி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது. ஆட்டோ, டாக்ஸி மூலம் செல்லலாம். பேரகனி செல்லும் பஸ் மூலம் கிளப் ரோட்டில் இறங்கி படிகட்டுகள் மூலம் கோவிலை அடையலாம். கோத்தகிரி கிளப் ரோட்டில் இருந்து 96 படிக்கட்டுகள் மூலமாக கோவிலை அடையலாம் கோவில் வரை மலைப்பாதை வழியாக வாகனத்திலும் செல்லலாம்.