தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாயன்று திருவிளக்கு பூஜை, தை மாத கடைசி செவ்வாயில் புஷ்பாபிஷேகம், ஆனி உத்திரத்தில் வருஷாபிஷேகம் நடக்கிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு உச்சிக்கால பூஜை, ஆடி வெள்ளி, தை வெள்ளியில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
தல சிறப்பு:
சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பிரச்னையையே தீர்த்து வைத்தவள் இவள் என்பது பெருமைக்குரியதாகும்.
மூலவர் இசக்கியம்மன் அருகில் கல்யாணியம்மன் வீற்றிருக்கிறாள். விநாயகர், அவ்வையார், வைஷ்ணவி, பாலமுருகன், சுடலைமாட சுவாமி, பட்டவராயர் ஆகியோருக்கு இங்கு சன்னிதிகள் உள்ளன. அவ்வையார் அம்மனுக்கு பூஜை நடந்த பின்னரே இசக்கியம்மனுக்கு பூஜை செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பிரார்த்தனை
குழந்தைப்பேறு, நீண்ட நாள் நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், விபத்து, உடல் பலவீனம் போன்றவற்றால் நடக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
நீண்ட நாள் நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், விபத்து, உடல் பலவீனம் போன்றவற்றால் நடக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் முப்பந்தல் இசக்கியம்மனுக்கு பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களால் உடல் உருவம் செய்து செலுத்துவதாக பிரார்த்திக்கின்றனர். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மரத்தொட்டிலில் குழந்தை இருப்பது போல உருவம் செய்து காணிக்கையாகச் செலுத்தி நற்பலன் அடைகின்றனர்.
தல வரலாறு:
கிராமங்களில் ஆலமரத்தடியில் பெரியவர்கள் அமர்ந்து பஞ்சாயத்து கூடி பிரச்னைகளை தீர்ப்பது வழக்கம். அதே போல் மன்னர் காலத்திலும் பஞ்சாயத்து கூடி பிரச்னைகளைத் தீர்க்கும் நடைமுறை இருந்துள்ளது. குறிப்பாக சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களின் பிரச்னைகளை பேசி தீர்க்கும் கூட்டம் நடத்த, திருநெல்வேலி நாகர்கோவில் சாலையிலுள்ள காவல்கிணறு என்னும் ஊரில் மூன்று பந்தல்கள் அமைத்திருந்தனர். அந்தப் பந்தலுக்குள் இசக்கியம்மனையும், தமிழ்ப்புலவர் அவ்வையாரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அம்மன் முன்னிலையில் தங்கள் பிரச்னைகளைப் பேசி தீர்த்துக் கொண்டனர். காலப்போக்கில் பாண்டிய மன்னரால், இசக்கியம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. பந்தல் அமைத்து அம்மனை வழிபட்ட இடம் என்பதால் முப்பந்தல் என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள அவ்வையார் அம்மனும், இசக்கியம்மனும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக விளங்குகின்றனர். அவ்வையாரை வரவேற்க முந்நாட்டு மன்னர்களும் தனித்தனி பந்தல் அமைத்ததாலும் இவ்வூருக்கு முப்பந்தல் என்று பெயர் வந்ததாகச் சொல்வர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பிரச்னையையே தீர்த்து வைத்தவள் இவள் என்பது பெருமைக்குரியதாகும்.