நாம் ஒவ்வொரு கோயிலாக ஏறும்போது போது மனதில் உள்ள பாரத்தை கடவுளிடம் இறக்கி வைக்கிறோம். அதோடு நம் வேண்டுதல் நிற்கிறதா என்றால்... இல்லை. சாமி.. நீ தான் பொறுப்பு. என் பொண்ணு கல்யாணத்தை நீ தான் நல்லபடியாக நடத்தி வைக்கணும். என் மகனுக்கு நல்ல வேலை வாங்கித்தரணும் என பல விண்ணப்பங்களை வைக்கிறோம். இதெல்லாம் எதைக் காட்டுகிறது. நம்பிக்கையின்மை. ஆம்! கடவுள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் இந்த வேண்டுதல் எதுவும் நம் மனதில் உதிக்காது. சரி. இந்த நம்பிக்கையை யாரிடம் பெறுவது என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம். அதற்கு திருவண்ணாமலைக்கு வாருங்கள். அங்கு கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோயிலுக்குள் நுழைந்தால், ‘எல்லாம் அவன் செயல்’ என்ற பூரண நம்பிக்கை தோன்றிவிடும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி, இறுகிப் போயிருக்கும் மலை. காலம் காலமாக வேரும், விழுதுமாகப் படர்ந்த மரங்கள் இருக்கும் மலை. தெய்வீகத் தென்றல் கமழ்ந்தபடி இருக்கும் மலை. பல சித்தர்களின் பாதம் பட்ட மலை. பல நல்ல ஆன்மாக்கள் சுற்றி வரும் மலை என பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கும் மலைதான் திருவண்ணாமலை. அந்த மலையின் மகத்துவத்தை சொல்ல இந்த பக்கம் போதாது. வாருங்கள் திருநேர் அண்ணாமலையாரை தரிசனம் செய்வோம்.
குளிர் காற்றும், வெண்பஞ்சு மேகமும் தவழும் மலையின் அடிவாரத்தில் உள்ள கோயில் அது. அடர்ந்த மரங்கள். குரங்குகள் தன் குட்டிகளோடு கொஞ்சி விளையாடும் காட்சி என செழிப்போடு இருக்கும் அந்த இடத்தில் நடுவே எளிமையாக உள்ளார் அண்ணாமலையார். அவரது தரிசனம் நமக்கு நிச்சயம் நலம்தரும். சின்ன சின்ன விளக்குகளின் தீப வெளிச்சங்கள் இடையே, ‘வருத்தப்படாதே... நான் இருக்கிறேன்’ என்று சொல்வார். அந்த நிமிடம் நம் மனதில் உள்ள பாரம் அனைத்தும் இறங்கிவிடும். இவருக்கு எதிரே மலையின் உச்சியை காண முடியும். ஆம்! இவர் மலை உச்சியின் நேராக இருப்பதால் கார்த்திகை தீபத்திற்கும் மூலவருக்கும் ஒரே இடத்தில் தீபாராதனை நடக்கும்.
பிரார்த்தனை
அனைத்து வேண்டுதலும் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
உண்ணாமுலை அம்மன் தவம் செய்தும் காட்சி தராத அண்ணாமலையார், அம்மை இத்திருமலையை சுற்றி வரும்போது இவ்விடத்தில் காட்சி தந்தார். ஆகையால் கிரி பிரதட்சனைக்கு காரணமாக அமைந்த இடம். இவ்விடத்தில் மண்டபம் பிரமிட் வடிவத்தில் அமைந்து உள்ளது. இந்த மலையின் முழுவடிவமும் கண்டு ஜபம் செய்து இறைவன் அருள் பெற கூடிய இடம். இங்கு மூலவர் மலை உச்சியின் நேராக இருப்பதால் கார்த்திகை தீபத்திற்கும் மூலவருக்கும் ஒரே இடத்தில் நின்று தீபாராதனை நடக்கும் என்பது ஒரு அரிய சிறப்பு. திரு அண்ணாமலையார் இளமை தங்கிய ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வந்து உண்ணாமுலை அம்மனுக்கு தரிசனம் கொடுத்து மறைந்து அருளினார். இக்குறிப்பு அருணாசலாப்புராணத்தில் பாடல் 392ல் உள்ளது. திருநேர் அண்ணாமலையில் இருந்து மலையை தரிசிப்பது சோமாஸ் கந்த தரிசனம் ஆகும்.
தல வரலாறு:
நமக்கெல்லாம் தாயான பார்வதிதேவிக்கு ஒரு ஆசை தோன்றியது. சிவபெருமான் எப்போதும் தன்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும் என்பதுதான் அது. அதற்கு சிவனது இடப்பாகத்தை தனக்கு தந்தருள வேண்டும் என அவரிடம் முறையிட்டாள். அதற்கு அவர், ‘அண்ணாமலைக்கு சென்று தவம் செய்தால், உன் விருப்பம் நிறைவேறும்’ என தெரிவித்தார். அவ்வாறு தவம் செய்தும் பார்வதிக்கு காட்சி தர வில்லை சிவன். அப்போது எழுந்த ஒரு அசரீரி, ‘மலையை இடது புறமாக சுற்றிவா’ என்றது. அதன்படி பார்வதி மலையை சுற்றி வரும்போது இவ்விடத்தில்தான் அண்ணாமலையார் காட்சி தந்தார். ஒருமுறை இக்கோயிலுக்கு வாருங்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.