இங்கு 23 அடி உயரத்தில் அஞ்சலிஹஸ்த நிலையில் (கைகூப்பிய நிலை) வீர ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்,
களம்பூர்-606 903,
திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:
+91- 97893 55114
பொது தகவல்:
மூலவர் வீர ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன், இறந்து போன குரங்கின் சமாதி அமைந்துள்ளது.
பிரார்த்தனை
மின்சாரம் சார்ந்த பணி செய்பவர்களுக்கு தொழிலில் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பாகவும், வீட்டில் மின் விபத்து நேராமல் இருக்கவும் மற்றும் கல்வி, செல்வம், நல்ல வியாபாரம், நீண்ட ஆயுள் வழங்க கோரியும் வழிபடுகின்றனர். மேலும் குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, திருமணத்தடை நிவர்த்திக்கும் வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சை மாலை சாத்தி பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
தலபெருமை:
நெசவு தொழிலாளர் பிரார்த்தனை: ஆரணியை சுற்றியுள்ள பட்டு நெசவு தொழிலாளர்கள் தைப்பொங்கல் அன்று தங்கள் தொழில் மேம்படுவதற்காக பட்டு துணிகளை நெய்து, முதன் முறையாக ஆஞ்சநேயருக்கு செலுத்துகின்றனர். இதன் மூலம் தங்கள் தொழிலில் இடையூறு ஏற்படாது என்றும், நெய்த துணிகளுக்கு உரிய விலை கிடைக்குமென்றும் நம்புகின்றனர். சிற்பிகளும், கல் உடைக்கும் தொழிலாளர்களும் தங்கள் தொழிலைத் துவங்குவதற்கு முன் ஆஞ்சநேயரிடம் தங்கள் தொழில் கருவிகளை கொண்டு சிறப்பு வழிபாடு செய்துவிட்டு தொழிலை துவக்குகின்றனர்.இதனால் கல்லுடைக்கும் இடங்களில் ஆபத்தின்றி பணி செய்யலாம் என்றும், செதுக்குகின்ற சிற்பம் சிறப்பாக அமையும் என்றும் நம்புகின்றனர்.
சமாதிக்கு பூஜை: மின்சாரம் தாக்கி இறந்த குரங்கின் சமாதி கோயிலில் மூலவருக்கு முன் சமாதியுள்ளது. மூலவர், உற்சவர் வீரஆஞ்சநேயர் சுவாமிக்கு பூஜை செய்வதற்கு முன் குரங்கு சமாதிக்கு பூஜை செய்யப்படுகிறது.
தல வரலாறு:
களம்பூர் கடைவீதியில் 55 ஆண்டுகளுக்கு முன் வைகுண்ட ஏகாதசி அன்று மின்சார கம்பியில் சிக்கி குரங்கு ஒன்று உயிரிழந்தது. அதை நாராயணசாமி என்பவர் சாலை ஓரத்தில் குழி தோண்டி புதைத்தார். அதன் அருகில் ஆஞ்சநேயர் கோயில் கட்டினார். காலப்போக்கில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து 23 அடி உயரத்தில் அஞ்சலிஹஸ்த நிலையில் (கைகூப்பிய நிலை) வீர ஆஞ்சநேயர் சிலை நிறுவினர். தற்போது அதற்கும் பூஜைகள் நடந்து வருகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு 23 அடி உயரத்தில் அஞ்சலிஹஸ்த நிலையில் (கைகூப்பிய நிலை) வீர ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
இருப்பிடம் : திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் 9 கி.மீ.,தூரத்தில் களம்பூர் உள்ளது. இங்குள்ள கடை வீதியில் சிறிய அளவிலான கோயில் இருக்கிறது.