பதிவு செய்த நாள்
04
டிச
2019
02:12
உடுமலை:திருக்கார்த்திகை தீப விழாவிற்காக, மண் விளக்குகள் விற்பனை ’களை’ கட்டியு ள்ளது; இந்தாண்டு, லட்சுமி, பிள்ளையார் சிலையுடன் கூடிய, ஐந்து முக விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.தீப ஒளித்திருநாளாம், திருக்கார்த்திகை தீபம் வரும், 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில்களில், மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.
திருக்கார்த்திகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மண் விளக்குகள் விற்பனை ’களை’ கட்டியுள்ளது. சிறிய சுட்டி விளக்குகள், டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப, 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு ரூபாய் முதல், 300 ரூபாய் வரை மண் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.இந்தாண்டு, புதிதாக லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் சிலைகளுடன் கூடிய, ஐந்து முக மண் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது. முழுவதும் மண்ணால் செய்யப்பட்டு, இயற்கை சாயம் பூசப்பட்டுள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது: மண் விளக்கில் தீபம் ஏற்றுவது பாரம்பரிய முறையாகவும்; சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வழிபாட்டு முறையாகும். இதனால், மண் விளக்கு களில் தீபம் ஏற்றும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.அதனால், கார்த்திகை தீப விளக்குகள் விற்பனையும், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஒரு லட்சம் மண் விளக்குகள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.