பழநி,: பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று நடந்தது.பழநி கிழக்குரதவீதி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.,21ல் துவங்கியது.
பிப்.,25ல் திருக்கம்பம் சாட்டுதல், மார்ச் 3ல் கொடியேற்றம், மார்ச் 10 இரவு மாரியம்மன் திருக்கல்யாணம் நடந்தது.கோயிலில் பக்தர்கள் பலவகை நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். நேற்று (மார்ச் 11) மாரியம்மன் பாதிரிப்பிள்ளையார் கோயிலில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தலுக்குப் பின்னர், தேர்நிலையில் அம்மன் எழுந்தருளினார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 4.40 மணிக்கு துவங்கியது. திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, மேடான பகுதியில் கோயில் யானை கஸ்துாரி தேரை நகர்த்த உதவியது. நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்த தேர் மாலை 6:05 மணிக்கு நிலைக்கு வந்தது. இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இரவில் வண்டிக்கால் பார்த்தல், சக்திகரகம், தங்க பல்லாக்கு போன்றவை நடந்தது. அதிகாலை திருக்கம்பம் கங்கையில் சேர்க்கப்பட்டது.இன்று (மார்ச் 12) மாரியம்மன் நீராடல், இரவு வெள்ளிக்காமதேனு வாகனத்தில் அம்மன் திருவுலா நடைபெறும். அதன்பின் கொடி இறக்குதலுடன் மாசித்திருவிழா உற்ஸவம் நிறைவு பெறுகிறது.