பதிவு செய்த நாள்
02
செப்
2020
05:09
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு, நேற்று பக்தர்கள் அதிகளவில் வந்து, அம்மனை வழிபட்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். ஒவ்வொரு வாரமும், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வந்து செல்வர். கொரோனா பிரச்னையால், ஐந்து மாதங்களுக்குப் பிறகு, நேற்று கோவில் நடை திறந்து, பக்தர்கள் பொது தரிசனத்திற்கு விடப்பட்டது. பக்தர்கள் வெயில் பாராது நீண்ட வரிசையில் நின்று, அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
இதுகுறித்து கோயில் உதவி கமிஷனர் ஹர்ஷினி கூறியதாவது: கோவில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இன்று (நேற்று) காலை நடை திறந்தவுடன், அம்மனுக்கு அபிஷேகம் செய்த பிறகு, பக்தர்கள் பொது தரிசனத்திற்கு விடப்பட்டது. கோவில் வளாகத்தில், ஆறு அடிக்கு ஒரு மார்க் செய்து, அதில் பக்தர்கள் வரிசையாக நிறுத்தும்படி, அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், பக்தர்கள் ஒவ்வொருவருக்கும், கிருமி நாசினி மருந்து தெளித்து, தெர்மல் ஸ்கேனர் வாயிலாக, அவர்களின் உடலின் வெப்பநிலையை குறிக்கப்படுகிறது. அம்மன் முன்பு வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு, பிரசாதமும், விபூதியும் தருவதில்லை. ஏற்கனவே பாக்கெட் செய்து, அங்கு வைத்துள்ள விபூதி பாக்கெட்டுகளை, எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் கோவில் சார்பில் பாக்கெட்டாக தயார் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வாறு உதவி கமிஷனர் ஹர்ஷினி கூறினார்.