பதிவு செய்த நாள்
15
மார்
2021
05:03
உத்திரமேரூர் : உத்திரமேரூர் பர்வதராஜ குல அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை உற்சவம், நேற்று, விமரிசையாக நடந்தது.
உத்திரமேரூர் பர்வதராஜ குல அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாத அமாவாசையன்று, மயான கொள்ளை உற்சவம் நடைபெறும்.அதன்படி, நடப்பாண்டு உற்சவம், மஹா சிவராத்திரியான நேற்று முன்தினம் துவங்கியது. அன்று, பூங்கரகம், சக்தி கரகம், அக்னி கரகம், பல வாத்திய இசைகளுடன் புஷ்ப விமானத்தில், அம்மன் வீதியுலா நடந்தது. மயான கொள்ளை உற்சவமான நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மலர் அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன், முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். பக்தர்கள் அலகு குத்தியும், பல்வேறு வேடமணிந்தும், அந்தரத்தில் தொங்கி பறவை காவடி எடுத்தும், கால்களில் கட்டை கட்டிக்கொண்டும், நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாலை, 6:00 மணிக்கு மயான கொள்ளை உற்சவம் நடந்தது. விழாவில், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.