அரசியல்வாதிகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அபூபக்கர். இவர் நேர்மையான ஆட்சியாளர், இறையச்சம் மிகுந்தவர். எளிமை, நேர்மை அவருடன் பிறந்தவை. ஆட்சிப்பொறுப்பேற்ற மறுநாளே தான் செய்த துணி வியாபாரத்தை கவனிக்க புறப்பட்டார். ‘‘அபூபக்கரே! நீங்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டால் ஆட்சியை கவனிப்பது யார்?’’ எனக்கேட்டார் உமர். ‘‘ஆட்சியில் இருந்தாலும் என் குடும்பத்தை கவனிக்காமல் இருக்க முடியுமா? துணி வியாபாரம் மூலம் கிடைப்பதை வைத்து தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்’’ என்றார் அபூபக்கர். தோழர்களுடன் ஆலோசித்த உமர், அரசு கஜானாவில் இருந்து மாதம் தோறும் குடும்பச் செலவுக்கு பணம் அளிக்கத் தொடங்கினார். ஆனால் அபூபக்கர் தன் இறுதிக்காலத்தில் குடும்பத்திற்காக வாங்கிய தொகையை அரசிடமே திருப்பிச் செலுத்தினார். இன்றும் அழியாப்புகழ் பெற்றவராக அவர் இருப்பதே நேர்மைக்கு கிடைத்த பரிசாகும்.