எகிப்து நாட்டைச் சேர்ந்த அறிஞர் லுக்மானிடம் தத்துவங்களைக் கற்றவர் தத்துவ ஞானி பிதாகரஸ். பின்னர் கிரேக்கத்திற்குச் சென்று தாம் கற்றதை மக்களுக்கு எடுத்துரைத்தார். பிதாகரசின் தத்துவங்களால் கவரப்பட்டவர்களே சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள். இவரது தத்துவங்கள் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தின. தத்துவ மேதையான லுக்மான் அந்தக் கால மரபுப்படி மன்னரிடம் ராஜகுருவாகவோ, தலைமை அமைச்சராகவோ இருந்து நாட்டையே ஆட்டி வைத்திருப்பாரோ என நினைக்க வேண்டாம். அவர் எகிப்தைச் சேர்ந்த கறுப்பு இனத்தவர். தடித்த உதடுகள் உடைய அடிமை அவர். அப்படிப்பட்டவருக்கே இறைவனால் ஞானம் வழங்கப்பட்டது. லுக்மான் மகனுக்குச் சொன்ன அறிவுரைகளும் குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. லுக்மான் தொடர்பாகச் சொல்லப்படும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. ஒருநாள் லுக்மானை அழைத்த எஜமானர், ‘‘ஆட்டிறைச்சியில் நல்ல சதைத் துண்டுகளைக் கொண்டு வா’’ என்றார். நாக்கு, இதயத்தை எடுத்து வந்தார். சற்று நேரத்தில் இறைச்சியில் மோசமான சதைத் துண்டுகளைக் கொண்டுவருமாறு ஆணையிட்ட போதும் அவற்றையே கொண்டு வந்தார். ‘‘நல்ல சதைத் துண்டுகள் கேட்ட போதும் இவற்றையே கொண்டு வந்தாய். மோசமானதைக் கேட்டாலும் அதையே எடுத்து வருகிறாயே ஏன்’’ எனக் கேட்டார். அதற்கு அறிஞர் லுக்மான் ‘‘நாக்கு, இதயம் சீராக இருந்தால் வாழ்வில் அதை விடச் சிறந்தது வேறில்லை. அவை மோசமாகி விட்டால் அதைவிடக் கேடு வேறில்லை.’’ என்றார். எஜமானர் திகைத்து நின்றுவிட்டார்.