மதுரை : ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நகைகளை கட்டிகளாக மாற்றும் தமிழக அரசு அறிவிப்புக்கு மதுரை மாவட்ட கிராம கோயில் பூஜாரிகள் பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இப்பேரவை நிர்வாகிகள் கூட்டம் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. பேரவை அமைப்பாளர் மலைச்சாமி முன்னிலை வகித்தார். வி.எச்.பி., மாநில பொது செயலாளர் சோமசுந்தரம், துணை தலைவர்கள் கணேசன், பெரியமருது, பொருளாளர் ரமேஷ்பாபு, மண்டல தலைவர் முருகன் பேசினர். பூஜாரி ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். ஹிந்து கோயில்களிலுள்ள தங்க, வெள்ளி நகைகள், நிலங்களை கோயில் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருக்க அனுமதிக்க வேண்டும். ஆக்கிரமிப்பிலுள்ள கோயில் நிலங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.