பதிவு செய்த நாள்
15
டிச
2021
10:12
திருச்சி:நோய் தொற்று பரவும் வேகத்தை பொறுத்து, கோவில் விழாக்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, முதல்வர் நல்ல முடிவை எடுப்பார், என,ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்,நேற்று அதிகாலை 4:45 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.அதிகாலை 2:30 மணிக்கு கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு, சொர்க்கவாசல் திறக்கப்பட்ட பின், அதன் வழியாக சென்று, ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின், அவர் அளித்த பேட்டி வரும் தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், தைப்பூச தேர் திருநாள் முன்னதாக வருவதால், 19 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை, பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். கடந்த ஏழு மாதங்களில், அதிகமான அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாலும், முதல்வர் எல்லா சூழ்நிலையையும் சமாளிக்கும் உறுதியுடன், பக்தர்களும், கோவில் பணியாளர்களும் மகிழ்ச்சியடையும் வகையில், சொர்க்கவாசல் திறப்புக்கு அனுமதி அளித்துள்ளார். ஏற்கனவே உள்ள நோய் தொற்று மற்றும் புதிய நோய் தொற்று பரவும் வேகத்தை பொறுத்து, மற்ற கோவில் விழாக்களிலும் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.