பதிவு செய்த நாள்
06
ஜன
2022
03:01
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பண்ணைமூன்றடைப்பு பகுதியில், எஸ். பி.கே., கல்லூரியின், வரலாற்றுத் துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில், வரலாற்று மாணவர்கள் ராஜபாண்டி, சரத், பாலாஜி ஆகியோர் கள ஆய்வு செய்தனர். கி.பி., பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த, நாயக்கர்கால கல்வெட்டு ஒன்றைக் கண்டெடுத்தனர். அதில் இரண்டு அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட கல்வெட்டின் மேற்பகுதியில் அஷ்ட மங்கலச் சின்னமான ஸ்வஸ்திக் சின்னம், சூலாயுதம் கெண்டி போல அமைப்பும், கீழ்பகுதியில், பதினோரு வரிகள் கொண்ட கல்வெட்டும் காணப்படுகிறது.
கல்வெட்டின் வாசகத்தில், மதுரை நம்பிக்கு, அங்கு செட்டி கொடுத்த நிலக்கொடையாகும். இந்த நிலத்திற்கு தீங்கிழைப்பவர்கள், கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரை பற்றிய செப்பேடு, சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. ஊரின் பழைய பெயர் மூணடைப்பு எனவும், 1659 இல் திருச்சுழி வட்டத்திற்கு உட்பட்ட இருந்தது எனவும், அப்போது மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரும், கிழவன் சேதுபதியுமான ரகுநாத சேதுபதியும், இவ்வூருக்கு வந்துள்ளனர், எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமத்தில் திசை காவலரான பளுத் தாண்டிகொழுத்த குயிச்சி அம்பலக்காரன், மன்னரை சந்தித்து, பாத காணிக்கையாக சர்க்கரையை படைத்து, இந்த மூணடைப்பு கிராமத்தில், திசைக் காவலராக பணி செய்ய விரும்பியும், அதற்கு ஈடாக நன்செய், புன்செய் நிலங்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறான். அதற்கு மன்னரும் சம்மதிக்க, அந்த செய்தியை செப்புபட்டயமாக பொறித்து வழங்குமாறு வேண்டி கொள்கிறான். அதன்படி, கொடுக்கப்பட்ட செப்பு பட்டயத்தில், திருமலை நாயக்கரும் ரகுநாத சேதுபதியும் கையொப்பமிட்டு வழங்கியுள்ளனர், என்ற செய்தி உள்ளது. மதுரை வடக்கு வாசலை சேர்ந்த மீனாட்சி ஆசாரி என்பவர் இதை பதித்து கொடுத்தார் என்ற விபரமும் உள்ளது. காலப்போக்கில் இந்த ஊர் பெயர் மருவி பண்ணை மூன்றடைப்பு என ஆனது. அதனால், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள தானத்தை குறிப்பிடும் செப்பேடும் மாணவர்கள் கண்டெடுத்த கல்வெட்டும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருப்பதால், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.