பதிவு செய்த நாள்
31
ஜூலை
2012
11:07
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் 9ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் நடந்தது. தொடர்ந்து அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு நிலையில் இருந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பகல் 12.05 மணியளவில் மீண்டும் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரில் கோமதிஅம்பாள் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்ட நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர்(பொறுப்பு) கண்ணன், சங்கரநாராயணசுவாமி கோயில் இணை ஆணையர் அன்புமணி, தாசில்தார் தாமோதரன், யூனியன் சேர்மன் அன்னலட்சுமி, கோயில் உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன், கண்காணிப்பாளர்கள் சுப்புலட்சுமி, முருகானந்தம், ஆய்வாளர் ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கம், நகராட்சி கவுன்சிலர் ஆனந்தகிருஷ்ணன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் வேல்சாமி, குமாரவேல், ஆறுமுகம், முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் டி.எஸ்.பி., கலிபுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், ஜெயக்குமார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்திற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரதவீதிகளில் வெப்பத்தை குறைக்கும் விதமாக தண்ணீர் தெளிக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி டாக்டர் செந்தில்சேகர் தலைமையில் மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான "தபசுக்காட்சி வரும் 1ம் தேதி மாலை 6 மணியளவில் நடக்கிறது.