திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் எழுந்தருளினார். அம்பாள் முன்பு வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. அரிசி, நெல், வெள்ளம், வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி, வேப்பிலை, மஞ்சள் கிழங்கு, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது. படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள் முன்பு மூன்று முறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனித நீர் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரமாகி அம்பாளுக்கு வளையல்கள் சாத்துப்படி செய்யப்பட்டு தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டது. அம்பாள் சிம்மாசனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.